Sunday, August 1, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் விவசாயிகள் ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்

ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்

-

உழவன் வேதனை கவர்மெண்டுக்குத் தெரியுமா? கலகம் செய்யாமல் விவசாயிகளுக்கு கௌரவம் கிடைக்குமா? ஊர் உலகை திரட்டுவோம்! ஏர்கலகம் செய்வோம்! – என்ற முழக்கத்தின் கீழ் மதுரை மாவட்டம், திருப்பறங்குன்றம் தாலுகா, செக்கானூரணியில் முருகவிலாஸ் மகாலில் கடந்த 14.05.2017 அன்று மாலை 5:00 மணியளவில். விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

வி.வி.மு தோழர் ஆசை   தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பாளர் தோழர் மோகன், 58 கால்வாய் கிராம விவசாய சங்க செயலர் பச்சைத்துண்டு பெருமாள், கூட்டுறவு வீட்டு வசதி பணியாளர் சங்கம் எம்.பி.லட்சுமணன், விவிமு உசிலை வட்ட செயலாளர் தோழர் போஸ், விவிமு திருமங்கலம் அமைப்பாளர் தோழர் வீரணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

இந்த கருத்தரங்கத்திற்கு செக்கானூரணியைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய நேசர்கள், மாணவர்கள்,  இளைஞர்கள் என அனைவரும் திரண்டு வந்திருந்தனர்.

தோழர் ஆசை தனது தலைமை உரையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை இந்த அரசு உதாசீனப்படுத்தும் நிலையில் விவசாயிகள் தம்மை இழிவு படுத்திக் கொண்டும், வருத்திக்கொண்டும் போராடும் முறையை மாற்றிக் கொண்டு மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர்களை இணைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அரசின் தோளில் துண்டைப் போட்டு இழக்கும் போராட்டமாக முன்னெடுக்க  வேண்டும் என்று பேசினார்.

எம்.பி.லட்சுமணன் தனது சிறப்புரையில் விவசாயிகளின் அனைத்து தேசிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மல்லையாவுக்கும் அம்பானிக்கும் வழங்கும் தள்ளுபடியை,விவசாயிகளுக்கு ஏன் செய்யச்கூடாது என்று மத்திய, மாநில அரசை சாடினார். மேலும் விவசாய சங்கங்களை அனைத்து கிராமங்களிலும் கட்டுவதன் வாயிலாகத்தான் விவசயிகள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறினார்.

அய்யா பச்சைத்துண்டு பெருமாள் தனது சிறப்புரையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த 58 கிராம மக்கள்  பயன்படுத்தும் தொட்டி பாலத்தை நிறைவேற்ற 28 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு அது இல்லை இது இல்லை என்று காரணம் சொல்லி இழுத்து கொண்டே  இருக்கிறது, கேட்பதற்கு நாதியில்லா நிலையில் விவசாயிகளின் மீது உண்மையான அக்கறையுடன் இது போன்ற கருத்தரங்கு நடவடிக்கைளை விவசாசாயிகள்  விடுதலை முன்னணி செயல்படுத்தும் போது நம்பிக்கை வந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

தோழர் மோகன் தனது சிறப்புரையில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறிக்காகவிவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு மிச்சமான ஆயுத மூலப்பொருட்களைக் கொண்டு வந்து உரமாக நம்ம மண்னில் இறக்கி எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றவர்கள் மூலமாக விவசாயம் அழிக்கப்பட்டது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகம் உயரமாக இருந்தது. அந்தப் பயிர் அடியில் மண்ணுக்கும், மேல்பகுதி மாட்டுக்கும், நுனிப் பகுதி மனிதர்களுக்கும் என்ற விவசாயமுறை அழிந்து,  மாட்டுக்கு தீவனமும் குறைந்து போனது. இதுதான் மாடு வளர்க்க முடியாமல் போனதற்கு காரணம். ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் விவசாயத்தின் அழிவுக்கு காரணமான பன்னாட்டு கம்பெனிகளை எதிர்த்து விவசாயிகள் பேராடவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

கருத்தரங்ககு முடிந்து விவசாயிகள் கலைந்து செல்லும் போது இந்த கருத்தரங்கை பொதுக்கூட்டமாக நடத்தியிருந்தால்  இன்னும் நிறைய விவசாயிகள் வந்திருப்பார்கள். இந்த விசயங்களையெல்லாம் அறிந்திருப்பார்கள் என்று கூறினார்கள். விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.

மேலும் கூட்டத்திற்கு வராத விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தோம். என்ன தீர்மானம் போட்டீர்கள் என்று ஆர்வமாக விசாரித்தனர். விவசாயிகளின் குரலை அலட்சியப்படுத்தி நிர்வாணமாக்கும் அரசுக்கு எப்படி தெரியும் நமது உள்ளக் குமுறல். அதை கேளாத அந்த செவிகளை கேட்க வைக்கப் போராடுவோம் என இப்பகுதி விவசாயிகளிடம் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது, விவசாயிகள் விடுதலை முன்னணி.

-புதிய ஜனநாயகம் செய்தியாளர், உசிலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க