privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்என்னக்கி தலைக்கி குளிக்கிறனோ அன்னக்கிதான் பொங்கலும் தீபாவளியும் !

என்னக்கி தலைக்கி குளிக்கிறனோ அன்னக்கிதான் பொங்கலும் தீபாவளியும் !

-

தருமபுரி தண்ணீர்  பஞ்சம் – நேரடி ரிப்போர்ட் 4 – இறுதிப் பகுதி

பென்னாகரத்திலிருந்து தாசம்பட்டி போகும் வழியில் 3-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது இந்த பூனைக்குண்டு-காட்டுக்கொட்டாய் சிறு மலைக்கிராமம். வனப்பகுதியின் எல்லையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலேயே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆடு, மாடுகள் மேய்ப்பது, சிறு விவசாயம் இங்குள்ளவர்களின் பிரதான தொழில். ரேசன், மருத்துவம் மற்ற இதர அனைத்திற்கும் பென்னாகரத்தையே நம்பியுள்ளனர் இப்பகுதி மக்கள். பெரும்பாலான இடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். பரம்பரை பரம்பரையாக இங்கு தான் வசித்து வருகின்றனர். கடும் வெயில் மற்றும் வறட்சியின் தாக்கம் இங்குள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது தெரிகிறது. கோடைவெயில் அதிகமாக இருக்கும் பகற்பொழுதில் யாரும் வெளியே வரவேண்டாம் என்று பொது நலன் கருதி நகர்ப்புறங்களில் வானொலி, தொலைக்காட்சிச் செய்தி மற்றும் நாளிதழ்களில் அறிவிப்புக்கள் அவ்வப்போது வெளிவரும். ஆனால் இவை எதுவுமே இவர்களுக்குப் பொருந்தாது. சிறு குழந்தைகள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை ஏறக்குறைய நாள் முழுவதுமே குடமும் கையுமாகத் தான் அலைந்த வண்ணம் உள்ளனர்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தினால் இந்த மக்களுக்குப் பெரிய பயனில்லை. குழாய்களில் காற்று கூட வரவில்லை. பலமுறை PWD ஆபிசில் மனு கொடுத்தும் இவர்களுக்குத் தண்ணீர் வரவில்லை. அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.500 வசூல் செய்து போர் போட்டுள்ளனர். அதுவும் அவ்வப்போது நின்று போய்விடுவதால் மேலும் ஆழப்படுத்த முடியாமல், பக்கத்திலுள்ள சிலரது ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீரை அடி குழாய் மூலம் எடுக்கின்றனர். மனிதர்கள் தங்களுடைய குடிநீர்த் தேவைக்காக எந்த அளவுக்குத் துன்பப்படுகிறார்களோ அதைவிட இரு மடங்கு தாங்கள் வளர்க்கும் ஆடு மாடுகளுக்காகத் துன்பப்படுகின்றனர். ஆறுகள், சிற்றோடை, கிணறு என்று எல்லாமே வறண்டு போய்விட்டதால் ஆடு, மாடுகள் மனிதர்களை மட்டுமே நம்பியிருக்கின்றன.

குட்டி, வயது 45

வருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் மகன் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு வரையில் 100 மாடுகளுக்கும் மேல் வளர்த்து வந்துள்ளனர். இவற்றில் சில பட்டி மாடுகள். இவைகள் காட்டுக்குள் சென்றுவிட்டால் திரும்பிவர பல மாதங்கள் ஆகும்; அப்படி வரும்போது நல்ல ஊட்டமாக இருக்கும். அதை விற்று குடும்பச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடந்த 2 வருடங்களாக மழை பொய்த்துப் போனதால் ஏறக்குறைய 60 மாடுகள் வரை விற்று விட்டனர். இப்போது இருப்பதோ 35 மாடுகள் வரை தான். இவற்றில் சில பட்டி மாடுகள். மீதம் 30 மாடுகள் வரை வீட்டில் இருக்கின்றன.

சாவின் விளிம்பில் குட்டியின் மாடுகள்

ஆறு, கிணறுகள் வற்றிவிட்டதால் ஆடு மாடுகளுக்குப் போதிய மேய்ச்சல் இல்லை; 30 மாடுகளுக்கும் தீவனம் வாங்குவதற்கோ அல்லது வைக்கோல் வாங்கிப் போடுவதற்கோ வசதியில்லை(வைக்கோல் விலை 1 லோடு 13,000 ரூபாய். 30 மாடுகளுக்கும் ஒரு வாரம் கூட தாங்காது ). காலையில் வீட்டில் தண்ணீர் குடித்துச் சென்றால் பிறகு மாலையில் திரும்பி வரும்போது தான் தண்ணீர் குடிக்க முடியும். இதனிடையே சரியான மேய்ச்சல் இல்லாததாலும், தண்ணீரின்றி ஆறுகள் வறண்டு போய்விட்டதாலும் 3 மாடுகள் காட்டிலும் 2 மாடுகள் வீட்டிலும் இறந்து விட்டன. 2 மாடுகளை வீட்டிலேயே புதைத்து விட்டார். மீதமுள்ள 3 மாடுகளும் காட்டில் உள்ள விலங்குகள் சாப்பிட்டதுபோக அப்படியே அழுகிவிட்டன.

வினவு செய்தியாளர்கள் இப்பகுதிக்குச் சென்றபோது 2 மாடுகளைத் தவிர மற்ற மாடுகள் காட்டுப் பகுதிக்குள் மேய்ச்சலுக்குச் சென்றிருந்தன. வீட்டிலிருக்கும் 2 மாடுகளும் இன்றோ, நாளையோ என்றுள்ளன. இவையிரண்டும் கன்றுகளை ஈன்று ஓரிரு மாதங்கள் தான் ஆகின்றது. கன்றுக் குட்டிகளுக்காக இவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை. தீவனமில்லாததால் தண்ணீரும், கழனித் தண்ணீருமே இவைகளின் உணவு. இத்தனைக்கும் கன்றுக்குட்டி ஈன்றதிலிருந்து இவைகளிடம் பால் கறப்பதேயில்லை. அப்படிப்பட்ட நிலையில் கன்றுக்குட்டிகள் மொழு மொழுவென்று இருக்கும். ஆனால் இந்தக் கன்றுக்குட்டிகள் அப்படியிருக்கவில்லை.

குட்டி இவைகளை விற்றுவிடலாம் என்று எண்ணியபோது ஒரு பசுமாடும் அதன் கன்றுக்குட்டியும் ரூ.5000 விலை கூட விற்காததால் குட்டிக்கு இவற்றை விற்க விருப்பமில்லை.

மாட்டிற்காக பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்துள்ளார் குட்டி

மாடுகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காகவே 750 அடி ஆழத்திற்கு போர் போட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வரை 350 ஆடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்துள்ளது. கடந்த வருடம் நிலத்தடி நீர் வற்றி விட்டதால், கூடுதல் செலவு செய்து போர் ஆழத்தை அதிகரித்த பின்பே தண்ணீர் கிடைத்துள்ளது. இவர்களின் உறவினர்கள் சிலருக்கு 1000 அடி வரை போர் போட்டும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் மாடுகள் முழுவதையுமே இழந்து வாழ்வாதாரத்தைத் தொலைத்து இறுதியில் தாங்கள் வாழ்ந்த பூர்வீக இடத்தையே காலி செய்யும் நிலை வரலாம் என்கிறார்.

வீட்டில் மொத்தம் 6 -பேர் இருப்பதால் வாங்குகின்ற ரேசன் அரிசி முழுவதும் இவர்களுக்கே சரியாக உள்ளது. குழந்தைகள் அனைவருமே சிறு வயதினர். மெக்கானிக்கல் கடை ஒன்று வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்து ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முனுசாமி – தங்கப்பொண்ணு தம்பதியினர்

குடமும் கையுமாக தண்ணீர் தூக்கப் புறப்பட்டதங்கப்பொண்ணுவைப் பார்த்து பேச ஆரம்பித்ததும் அப்படியே மர நிழலில் நின்று விட்டார்.

நான் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்து 35 வருசம் கிட்ட ஆயிடுச்சு.தண்ணிக்கு கஷ்டமா?? ரொம்ப ரொம்ப கஷ்டமுங்க. ரெண்டு பொம்பளப் புள்ளங்களக் கட்டிக் கொடுத்துட்டோம், ஒரே மவன் வெளியில வேலைக்குப் போயிருக்கான், வர ராத்திரி ஆகும்.

மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் குடங்களுடன் நீருக்காக செல்லும் தங்கப் பொண்ணு

போட்ட வெள்ளாமையெல்லாம் பாழாப் போச்சுங்க! கடலைக்காயெல்லாம் பூ பூத்ததோட வாடிப்போச்சு; அதுக்கு போட்ட காசும் போச்சு; ரெண்டு வருசமாவே நெலம ஒன்னும் சரிப்பட்டு வரலங்க. நாளு முழுசா தண்ணி புடிக்கிறதுக்கே நேரம் சரியாயிருக்கு. நம்ம கிட்ட 30 வெள்ளாடு  1 சீம மாடு நிக்கிது. இதுகளுக்கும் சேத்து தண்ணி புடிக்கிறதுக்குள்ள இடுப்பெலும்பே ஒடையுற மாதிரியாயிடும். எங்கையுமே பைப் கனெக்சனே குடுக்கல.  அவிங்கள நம்புனா வேலைக்காவாதுன்னு நாங்களே வூட்டுக்கு 500 வசூல் பண்ணி மோட்டர் போட்டோம், அதுவும் கை கொடுக்கல, எல்லா ஆபிசருங்களையும் பாத்தாச்சு, ஒருத்தரும் கண்டுக்கலை. 5000லிட்டரு 750 ரூபாய்க்கு வண்டில கொண்டாராங்க. ஆனா அவ்ளோ தண்ணிய புடிச்சி வக்கிற அளவுக்கு வீட்டுல வசதியில்ல. அஞ்சாறு குடும்பங்களா சேந்து வாங்குனாத்தான் உண்டு.

இடுப்பொடிய அடிகுழாயில் நீர்பிடித்து வரும் பெண்கள்

எத்தனை குடம் தண்ணீர் தூக்குவீங்க?

ஒரு நாளக்கின்னு பாத்தா எங்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் சேத்து 50 குடம் தண்ணி தேவப்படுது. அதோ அங்க தெரியுது பாருங்க ஒரு பெரிய பாறை(1 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கின்றது) அங்க தான் தண்ணிய பைப்ல அடிச்சு எடுத்துட்டு வரணும். காலையில ஆறு மணிக்கு தண்ணி தூக்க ஆரம்பிச்சா சாயந்திரம் வரைக்கும் தண்ணி தூக்குன கதியாத்தான் கெடப்போம். முன்னெல்லாம் கெணத்துல தண்ணி கெடக்கும், ஆடு மாடுகளும் மேவுக்குப் போற எடத்துல தண்ணி குடுச்சிட்டு வரும். இப்பல்லாம் தண்ணியில்லாததுனால சிக்கிரமே திரும்பி வந்துடுதுங்க; வந்தவுடனே அதுக தண்ணிக்கு அலயுறதபாத்தா மனசுக்கே சங்கடமாயிருக்கும்; பாவம் வாயில்லாத ஜீவனுங்க… நம்மளவிட்டா யாருதான் அவுங்களுக்கு கெதி!

மாட்டுக்காக வாங்கிவைக்கப்பட்டுள்ள வைக்கோல்

மாட்டுக்குத் தீவனமெல்லாம் வாங்குறீங்களா?

புல்லுக்கட்டு(வைக்கோல்) வாங்கிப்போடவே காசு இருக்க மாட்டேங்குது. இதுல தீவனத்த எங்க போடுறது. முன்னாடி மாதிரி இப்போ நெறயா மாடெல்லாம் இல்லங்க! ஒரேயொரு சீமப் பசு தான் இருக்குது. அங்க பாருங்க புல்லுக்கட்டு வாங்கிப் போட்ருக்கோம், வெல என்னான்னு தெரியுமா, 13,000/- ரூவாங்க! நாலு வாரம் கூட வராது. ஆனா என்னத்த பண்றது, இருக்குறத வித்தாவது இதுகள காப்பாத்தனும். மாட்ட வித்தாக்கூட எங்களுக்கு லாபமேயில்ல; அதனால நாங்களே வெச்சுக்கலாமுன்னு தான் இத்தன செரமத்துலயும் காவுந்து பண்ணிட்டிருக்கோம். இதுல வாயில்லா ஜீவனுங்கதா பாவம், வெயிலுக்கு குளுப்பாட்ரதேயில்லை. மனுஷனுக்கே தண்ணியில்லை இதுல அதுங்களை எங்க நாங்க குளுப்பாட்டுறது.

அரை மூடி தேங்காய் தான் இவருக்கு மதிய உணவு

சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்றீங்க?

முன்னெல்லாம் நெலத்துல வெளயிற கேவூரு, கடலக்காய், சோளம் இதத்தான் சாப்டுவோம். இப்போ வெளச்சலேயில்லாததுனால ரேசன் அரிசி தான். இதுல கேவூர் வெலயெல்லாம் எங்கேயோ போச்சு(மூடை ரூ.4000). ஆனா களி, கூழ் தான் நாங்க விரும்பி சாப்புடுவோம்; வேற என்னத்த பெருசா செலவு பண்றோமுன்னு இப்பதான் கொஞ்சம் வாங்கிப்போட்டுருக்கோம்;

தண்ணியெல்லாம் சிக்கனமா செலவு பண்ணுவீங்களா?

இல்லயா பின்ன! கெடைக்கிற தண்ணிய வெச்சு எவ்ளோ சிக்கனமா இருக்க முடியுமோ அவ்ளோ இருக்கோம். அதுக்காக பாத்திரத்தெல்லாம் கழுவித்தானே ஆகனும்; வீடு கழுவி விடுறது, வாசலுக்குத் தண்ணி தெளிக்கிறது, மாடுகள குளுப்பாட்டுறது இப்படி எதுக்குமே தண்ணிய வீணடிக்க மாட்டோம்.

செய்யுற வேலைக்கு ஒடம்புக்கெல்லாம் ஒன்னும் ஆவாதுங்க

நீங்க நோய்வாய்ப்பட்டா யாரு பாத்துக்குவா?

செய்யிற வேலையில ஒடம்புக்கு எதும் ஆகாதுங்க! அதுக்கெல்லாம் இன்னும் நாளு இருக்கு. நோவு பத்தி நெனச்சுக்கூட பாக்கமுடியாது; இருக்குற வேலயில இதப்பத்தியெல்லாம் எங்க நெனக்கிறது.

எத்தன நாளுக்கு ஒரு முறை தலை குளிப்பீங்க?

தண்ணி எடுக்க போறப்ப வெயிலு தாங்காம அப்புடியே கொஞ்சத்த ஒடம்போட ஊத்திட்டா வீடு வர்றதுக்குள்ள காஞ்சுடும். மத்தபடி தலைக்கு ஊத்தி ஊத்தி குளிச்ச காலமெல்லாம் போச்சுங்க.

பண்டிகையெல்லாம் கொண்டாடுவீங்களா?

அதெல்லாம் உண்டுதானுங்க! ஆனா எனக்கு உண்மையான தீபாவளி, பொங்கல்-னா எதுன்னா, என்னக்கி நல்லா தலைக்கி ஊத்தி குளிக்க முடியுதோ அன்னக்கி தானுங்க பொங்கலும் தீபாவளியும்.

தங்கப்பொண்ணின் கணவர் முனுசாமி

நான் சின்னப்புள்ளயா இருக்கப்பெல்லாம் எங்கப்பா ஆத்துக்கு கூட்டிட்டு போவாரு; ஆத்துல குளிச்ச கதியாவே இருப்போம்; இப்பல்லாம் நெலமையே தலைகீழா மாறிடுச்சு

சின்னப்புள்ளயா இருக்கப்பல்லாம் யானைய பாத்தாலே பெருசா இருக்குங்க! பாக்கவே பயமா இருக்கும்; மெரண்டு ஓடிருவோம்; இப்ப பாத்தீங்கன்னா சதையெல்லாம் வத்திப்போயி வெறும் தோலோட மட்டுந்தா இருக்கு. அதுகள பாத்தா பயத்துக்குப் பதிலா பரிதாவமா இருக்குங்க.

தங்கப் பொண்ணுவுடன் அவரது கனவர் முனுசாமி

இந்த தண்ணிப் பிரச்சினையினாலேயே என்னோட ரெண்டு பொண்ணுங்களும் ஊருக்கு வரவே பயப்புடுறாங்க! இதுக்கு மேல என்னத்த சொல்ல.

சுந்தரம்மாள் :

72 வயதான பெண்மணி சுந்தரம்மாள்; தெளிவான கண்பார்வைத் திறன் உள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளும் திறன்படைத்த தைரியசாலி. சற்றும் பயமறியாத இவர் மிகவும் இயல்பாகவும் எதார்த்தமாகவும் பழகுகிறார். வெயிலில் வந்த எங்களுக்கு உணவு தரும் நிலையிலில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டார்.

சுந்தரம்மாள்

எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லேருந்து இந்த மாதிரி பஞ்சத்த பாத்ததேயில்ல கண்ணு. முன்னல்லாம் அந்த தூரத்துல இருக்குற வீடே தெரியாது அந்த அளவுக்கு காடிருக்கும். இப்போ எல்லாம் தெரியுது. கேவூருக்கும், சோளத்துக்கும் காட்டுப்பன்னி, மயில், யானைன்னு எல்லாமே வருங்க…ஒரு முறை யானை ஒன்னு வந்துருச்சு..தெய்வமே நீ பாதி சாப்டுக்கோ, எனக்குப் பாதிய கொடுத்துருன்னு வேண்டிக்கிட்டேன். யான சாப்பிட்டது போக 16 மூட்ட கேவூரு கெடச்சுச்சு. இப்ப எனக்கும் ஒன்னுமில்ல; அதுகளுக்கும் ஒன்னுமில்ல; ஒருவேள ஒலகம்தான் அழியப்போவுதோ என்னவோ. ஆனா ஒலகம் அழியிற அளவுக்கு நாங்க என்ன தப்பு பன்னோம்னுதாம்பா வெளங்கலை.

ஏதோ ரேசன் இருக்கதுனால ஓடுது. அதுக்கு நாங்க பென்னாகரம் வரை நடக்க வேண்டிருக்குப்பா. எனக்கு 2 புள்ளங்க, எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணிவெச்சு பேரன் பேத்தி பாத்துட்டோம், இப்போ இந்த குடிசைல தண்ணிக்கு அல்லல் பட்டுட்டு கெடக்கோம். அவுங்க வூட்ல மாதிரிதா புல்லுக்கட்டு வெலைக்கு வாங்கி போடுறோம் 3 மாட்டுக்கு. ரெண்டு வருஷமா நிலத்துல எதுவு போடமுடிலை. கடுமையான வறட்சினால தென்ன மரம் 15 பக்கம் பட்டுபோச்சுய்யா. முன்னல்லாம் கேவுரு வீட்டுக்கு வந்த ஆள சும்மா அனுப்புனதா பழக்கமேயில்லய்யா, இப்ப நிலமைய பாத்தியாய்யா. நிவாரண கிவாரணும்னு ஒன்னையும் காணோம். கேட்ட புருஃப் பூரா குடுத்தோம் ஆனா ஒரு பைசாகூட வரலைப்பா. நான் வார்டு மெம்பராக்கூட நின்னுருக்கேன், அப்புடி செல்வாக்கு, என்ன இருந்து என்ன பன்ன ஒரு நாளைக்கு மாட்டுக்கு வீட்டுக்கு சேத்து 20 குடம் தூக்க வேண்டிக்கிடக்கே. பூச்சிகடி எதாவதுனாக்கூட பென்னாகரம் ஆசுபத்திரிக்குத்தான் ஓட வேண்டிக்கிடக்கு.

கடைக்காரிசி கொட்டாய்

பென்னாகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஊர். மற்ற ஊர்களைப்போன்றே கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போய் மக்கள் குடிநீருக்காக ஏங்கி அலைகின்றனர்.

சாலையோரத்தில் பதிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்க்குழாயில் ஏற்பட்ட சிறிய கசிவுகளிலிருந்து தண்ணீர் வெளியேற அதில் ஒரு சிறிய குழிபறித்து அதில் தேங்கியிருக்கும் தண்ணீரைச் சேர்த்துக் கொண்டிருந்தார் கவிதா என்ற பெண்மணி.

அவரிடம் பேசுகையில்…

எங்க கெணறு வெத்திப் போச்சுங்க! எங்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் குடிக்கத் தண்ணியில்ல! பக்கத்துல கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய் பைப் இருக்குது ஆனா அது இன்னொருத்தவங்க எடத்து வழியா போறதுனால எங்களப் புடிக்க விடமாட்றாங்க!

இந்த தண்ணி தான் ஒரே கெதி, இதக்குடிச்சி புள்ளக்கி அப்பப்ப காய்ச்சலும் பேதியுமா வருது…ஏன்னா ரோட்ல ஒரே புழுதி, அப்புறம் இங்க மேவுற ஆடு மாடுங்களும் இதுல தான் தண்ணி குடிக்கிதுங்க. அதான் தண்ணி கெட்டுப்போயிருது. ஆனா இத விட்டா வேறவழியில்லங்க! வீட்டுல வேற 1½ வயசுக் கொழந்த இருக்குது; அதனால தொலவுல போயி தண்ணியெல்லாம் புடிக்க முடியாதுங்க! வெட்ட வெயிலில் வாடி வதங்கிப்போயிருந்த அந்தப் பெண்ணையும் அவருடைய குழந்தையையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அருகிலிருந்த உள்ளூர் தோழர் ஒருவர் ஆறுதல் கூறி தைரியமூட்டினார். இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இங்கே வரவேண்டும்; மாறாக பக்கத்து இடத்தில் உள்ள குழாயில் தண்ணீர் விடச்சொல்லி அவர்களிடம் உரிமையாகக் கேட்கவேண்டியது தானே என்று தோழர் சொல்ல, அந்தப் பெண்மணி பயந்த சுபாவத்துடன் எப்படிங்க கேக்குறது? என்று அச்சப்பட்டார். உடனே தோழர் ‘அழுவுற புள்ளக்கி தாங்க பால் கெடைக்கும், நீங்க போயி கேட்டாதான் தண்ணிய விடுவாங்க! இல்லன்னா கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேண்ணு சொல்லுங்க! கண்டிப்பா தண்ணி தருவாங்க” என்று சொன்னவுடன் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயதான பெண்மனி “ நீ சொல்றதுதாம்மா சரி, கெவர்மெண்ட் தர்ற தண்ணிய அவுங்க எப்பிடி தரமாட்டேன்னு சொல்லலாம்? நீ போயி தைரியமா கேளும்மா நானும் வர்றேன்” என்று சொன்னார்.

சக்கல் நத்தம் :

மலைக்கிராமமான இந்த ஊரில் பொருளாதாரத்தில் சற்று முன்னேறியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்புக்களில் மற்ற ஊர்களைக் காட்டிலும் முன்னேறியுள்ளனர். வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வரை இங்கு வாழ்கின்றனர். ஆனால் தண்ணீரின்றி கிணறுகள் வறண்டுவிட்டன. விவசாயம் நடக்கவில்லை;

நாம் பார்த்த சின்னப்பொண்ணு-வின்(வயது 67) நிலத்தில் ஏறத்தாழ 15 தென்னை மரங்கள் நீரின்றி பட்டுப்போய்விட்டன. 3 மாடுகள் வைத்திருக்கின்றனர். குடும்பத்திற்கும் மாடுகளுக்கும் என தண்ணீரை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றனர். தான் பிறந்ததும் இந்த ஊர் தான் என்றும் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படி ஒரு வறட்சியைப் பார்த்ததேயில்லை என்றும் கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புகைப்படங்கள், நேர்காணல் : வினவு செய்தியாளர் குழு.