Tuesday, June 28, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் விவசாயிகள் சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது - கள ஆய்வு

சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு

-

சொறியாங்கல்லுக்கு சொறி புடிச்சதும் சந்தன கட்டைக்கி சளி புடிச்சதும் சரித்திரத்தில் கிடையாது. இப்படி ஒரு சொலவடை தஞ்சை மாவட்டத்தில் உண்டு. ஆனால் அப்படியான இயற்கைக்கு எதிர் மறையான மாற்றங்களை சந்தித்து வருகிறது தஞ்சை மாவட்ட காவிரி விவசாயப் பகுதிகள்.

தஞ்சையின் சிறப்பே தட்டுப்பாடற்ற தண்ணியும் மண்மணம் மாறாத பசுமையும்தான். இன்று தப்பிப் பிழைத்த மீதமிருக்கும் பயிர் பச்சையும் ஊட்டச்சத்தற்ற நோஞ்சான் குழந்தை போல் பசுமையை இழந்துவிட்டு உயிர் தண்ணீருக்காக ஊசலாடுகிறது. காலால் மடைமாற்றும் செழிப்பு மிக்க தஞ்சை கிராமங்கள் நோய் வாய்ப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

தஞ்சை ஒரத்தநாட்டிற்கு அருகே இருக்கும் தென்னமண்நாடு.

டெல்டா பகுதி என்பது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையின் ஒரு பகுதியும், கடலூரின் ஒரு பகுதியும்  உள்ளடக்கியது. இதில் புது ஆற்றுப் பாசனம் பழைய ஆற்றுப் பாசனம் என இரு டெல்டா பிரிவுகள் உள்ளன. திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, நாகப்பட்டினம், கடலூர், சிதம்பரம் அதை ஒட்டிய ஊர்கள் பழைய ஆற்றுப் பாசன பகுதி. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை இதை ஒட்டிய ஊர்கள் புது ஆற்றுப் பாசனப் பகுதி.

மலைப் பிரேதேசங்களில் உருவாகும் தண்ணீர் கடலை நோக்கி வரும் போது கடலுக்கு முன் உள்ள சமவெளிதான் டெல்டா பகுதி. தண்ணீர் வந்து சேரும் கடைமடை பகுதி என்பதால் வண்டல்மண் பரவிய நஞ்சை நிலம் அதிகமாகவும் தண்ணீர் செழிப்பான பகுதியாகவும் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மழை ஆரம்பமாகி பருவ மழையும் காவேரி ஆற்றுத் தண்ணீரும் ஒருங்கிணைந்து டெல்டா பகுதிக்கு வந்து சேரும். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய தண்ணீரின் அளவு மிதமிஞ்சி இருக்குமென்பதால் நெல் சாகுபடி மட்டுமே இங்கு பிரதானம்.

குருவை, சம்பா என இரண்டு போக நெல்லும் பிறகு ஒரு போக உளுந்து, பயறு, எள்ளு, கடலை போன்ற தண்ணீர் அதிகம் தேவைப் படாத மானாவாரி பயிர் இதுதான் இங்கே வழமையான விவசாயம். விவசாயத்துக்கும் விளைநிலத்துக்கும் இரண்டு மாதம் கோடை விடுமுறை கொடுப்பது வழக்கம். மறு வருடம் ஜூன் மாதம் வந்ததும் பழையபடி குருவை சம்பா என தொடங்கி விடுவார்கள். இப்படித்தான் இங்கே விவசாயிகளின் வாழ்க்கை இயங்குகியது.

காவிரி டெல்டா பகுதியை பொருத்தவரை பாசன ஆற்றைப்போல் வடிகால் ஆறு கூட மதகுக் குழாய் பாலம் என்ற அமைப்பில் தான் இருக்கும். ஏனென்றால் மிதம்மிஞ்சிய தண்ணீரை வயல்களில் இருந்து வடிய வைக்கத்தான். தண்ணீர் செழிப்பான பகுதி என்பதால் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட இழப்பீடு அதற்க்கான நிவாரணம் பற்றிய கணக்கெடுப்புகள் தான் இங்கு அதிகம். வறட்சிக்கான கணக்கெடுப்பு அதுக்கான நிவாரணம் என்பது சமீப காலங்களில் டெல்டா பகுதி சந்தித்து வரும் புதுப் பிரச்சனை.

முழுக்க முழுக்க ஆற்றுத் தண்ணீரையும் கிராம்பபுற விவசாய வாழ்க்கை முறையையும் நம்பி இருந்த மக்கள் காவிரி பிரச்சனை தலை தூக்கியதும் போர்வெல் எனப்படும் ஆழ்குழாய் பாசன முறைக்கு மாறத் தொடங்கினர். மனிதனைப் போல் நிலங்களுக்கும் ஓய்வு கொடுத்து வந்தவர்கள் போர்வெலும், விவசாய இயந்திரமும் வந்தவுடன் நிலத்தை இளைப்பாற விடுவதில்லை. முதலாளித்துவ வழிமுறையிலான இந்த மாற்றம் பெருந்தனக்கார்களை மாற்றி விட்டது.

ஆரம்பத்தில் நிலங்கள் அதிகம் உள்ள பணக்கார விவசாயிகள் தண்ணீர் பாயாத மேட்டுப் பகுதிக்கும், புஞ்சை நிலமான தரிசு நிலத்துக்கும் தண்ணீர் வசதியை ஏற்படுத்த போர்வல் முறையை கொண்டு வந்தார்கள். அதுவும் பேர் சொல்லும் அளவுக்கே குறைவாக இருந்தது. காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதும் போர்வெல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. போர்வெல் முறை வந்ததும்  இரண்டு போக நெல் விவசாயம் மூன்று போகமாக மாறியது.

தஞ்சை ஒரத்தநாடு.

பழைய காவிரி ஆற்றுப் பாசன பகுதியான திருவாரூர் மன்னார்குடி நாகப்பட்டினம் பகுதியில் இந்த வருடம் விவசாயம் அடியோடு இல்லை. வரலாறு காணாத அதிக வறட்சிக்கு காரணம் ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய்கள் பதிப்புதான் என்று அங்கே உள்ள விவசாயத்துறை அரசு அதிகாரிகளே எம்மிடம் கூறினர். முப்பது வருடங்களுக்கு முன் எரிவாயு குழாய்களின் பிரச்சனை எப்படி இருக்கும் என்பதை அப்பகுதி மக்கள் உணரவில்லை. பத்து பதினைந்து வருடம் கடந்ததும் அப்பகுதி மீள முடியாத நிலத்தடி நீர் சீர்கேட்டை சந்தித்தது.

காவிரியில் தண்ணீர் பிரச்சனை 2000 ஆண்டு வாக்கில் படுமோசமானது. அப்பபோது அப்பகுதியில் போர்வெல் போட முடியவில்லை. ஏற்கனவே போடப்பட்ட போர்வெலும் விவசாயத்துக்கு பயன்படவில்லை. நிலப் பகுதி வலுவிழந்தும் நிலத்தடி நீர் கடல் நீர் மட்டத்தை விட கீழிறங்கி விட்டதால் கடல்நீர் நிலப்பகுதிக்குள் ஊடுருவி விட்டது. 150 அடிக்கு கீழே போனாலே கடல் நீர் வருகிறது. கடல் நீர் ஊடுறுவலால் குடிநீருக்குக் கூட அவதிபடும் நிலை அப்பகுதியில் ஏற்பட்டிருக்கிறது. அதனால் முழுக்க முழுக்க காவிரியை நம்பி மட்டுமே அவர்கள் விவசாயம் உள்ளது.

புது ஆற்றுப் பாசனப் பகுதியில் ஒப்பீட்டளவு பாதிப்பு சற்று குறைவு எனலாம். இப்பகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை இல்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பசுமையை பார்க்க முடிகிறது. காரணம் இப்பகுதியில் போர்வெல் விவசாயம் அதிகம்.

இப்பகுதியில் போர்வெல் போடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நூறு நூற்றியைம்பது அடி ஆழம்தான் போடப்பட்டது. அதற்க்கே குழாயில் வரும் தண்ணீரின் அளவு அதிவேகமாக இருக்கும். தண்ணீர் வரும் வேகத்தில் எருமை மாடு கூட எதிர்த்து நிற்க முடியாது. குளிக்கலாம் என்று தண்ணீர் ஊற்றும் இடத்தில் நின்றால் அலேக்காகப் பத்தடி தூரம் தூக்கிப் போட்டுவிடும். மழைக்காலம் முடியும் வரை மோட்டாரே தேவையில்லை. ஆர்டிசியன் ஊற்றுப் போல ( சுடுநீரல்ல) தானாகப் பொங்கி வழியும். பருவ மழையும், போர்வெலில் பொங்கும் நீருமே அந்த நிலங்களுக்கு போதுமானதாக இருந்தது. கோடை காலத்தில் மட்டுமே மோட்டார் ஓடும்.

அப்படி ஒரு வேகத்தில் பீச்சி அடித்த போர்வல்கள் இன்று விளக்கெண்ணை போல் வழிகிறது. 150 அடி வரை இறக்கிய குழாய்கள் 450 – 500 அடி போய்விட்டது. காவிரியில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் போர்வல் இல்லாமல் விவசாயம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆரம்ப காலகட்டத்தில் பத்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் போர்வெல் போட்டனர். 2000-வது ஆண்டுக்கு பிறகு மூணு ஏக்கர் இருந்தாலே போர்வல் போட தொடங்கி விட்டனர். காரணம் தண்ணீர் தட்டுப்பாட்டால் கைவிடும் நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டதுதான்

வடக்கு, மேற்கு மாவட்ட பகுதியில் போர்வெல் போடும்போது 300 அடியில் ஈரப்பசை வந்தாலே பெரிய விசயம். தஞ்சை பகுதியை பொருத்தவரை 150 அடியிலேயே தண்ணி கிடைத்துவிடும். மற்ற பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் போடப்படும் போர்வெலுக்கு தஞ்சையில் 4 அல்லது 5 லட்சம் தேவைப்படுகிறது. மற்ற பகுதியில் போர்வெல் போடும் போது காற்றை உள்ளே செலுத்தி பூமியை குடைந்து குழாயை இறக்க வேண்டும்.

தஞ்சை பகுதியில் பத்தடிக்கு கீழ போனாலே தண்ணீர் பிசுபிசுப்பு வந்துவிடும். அதனால் காற்றை உள்ளே செலுத்த முடியாது. தண்ணீரை உள்ளே செலுத்தி சகதியாக வெளியேற்றிதான் போர்வெல் போட முடியும். மற்ற இடங்களில் போர்வெல் குழாய் மட்டும் இறக்கினால் போதும். டெல்டாவில் குழாயைச் சுற்றி கூழாங்கற்கள், சல்லி, மணல், மக்கு மண் எல்லாம் போட வேண்டும். அதனால்தான் மற்ற பகுதியை விட போர்வெல் போட அதிக செலவு இங்கே ஆகிறது.

தஞ்சை ஒரத்தநாட்டிற்கு அருகே இருக்கும் தென்னமண்நாடு.

காவிரி கைவிட்டாலும், மழை இல்லை என்றாலும் போர்வல் வைத்துள்ளவர்கள் ஓரிரு மூட்டை குறைவாக அறுவடை செய்தாலும் விவசாயத்தை கை விடவில்லை. அதற்காக காவிரியோ மழையோ இல்லாமல் போர்வெலை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய முடியாது. ஒரிரு ஆண்டுகள் தான் தாக்குப் பிடிக்க முடியும். இதே நிலை நீடித்தால் வரும் காலம் டெல்டா பகுதி நினைத்துப் பார்க்க முடியாத அழிவை சந்தித்து, விவசாயத்தை முற்றிலுமாக கைவிடும் நிலை ஏற்படும்.

போர்வல் வைத்து விவசாயம் செய்வதிலும் அதிக பிரச்சனை உள்ளது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் விட்டு விட்டு வரும். அடிக்கடி இணைப்பு பழுதடையும். தண்ணீர் மட்டம் இறங்கியதால் கூடுதலாக குழாயை இறக்க வேண்டும். கோடை காலங்களில் மோட்டார் பழுது அடிக்கடி நடக்கிறது. 2-பேஸ் கரண்டை 3-பேசாக மாத்த 6 – 7 ஆயிரம் செலவு. ஒரு தடவை மோட்டாரை வெளியே எடுத்து காயில் கட்டி உள்ளே இறக்க 10,000 செலவாகிறது. மோட்டார் ஸ்டாட்டர் பழுதடைந்தால் அதற்கு 2,000 ரூவாய். ஒரு முறை மெக்கானிக் வந்தால் 300 ரூபாய். மோட்டாரின் இழுவைச் சக்தி போதாது என்றால் புது மோட்டார் போட 45 ஆயிரம் ஆகிறது. இப்படியாக செலவு கணக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.

பணக்கார விவசாயிகள் போர்வெல் போட்டு விவசாயத்தை பெருக்க நினைத்தார்கள். காலங்காலமாக விவசாயத்த மட்டுமே நம்பி இருந்த சிறு விவசாயிகள் எப்படியோ வெளிநாடு சென்று நாயாப் பேயாய் பாடுபட்டு பொருள் ஈட்டி போர்வல் போடுகிறார்கள். விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாதவர்கள் லாபம் இல்லை என்றாலும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் பிள்ளைகள் நகர்புறத்தில் ஈட்டும் வருமானத்தையும் போட்டுதான் விவசாயத்தை விட்டுவிடாமல் இழுத்துப் பிடித்து ஓட்டுகிறார்கள்.

இதல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவு நிலம் வைத்துள்ளவர்களின் பிரச்சனை. ஒரு ஏக்கர், அதுக்கும் குறைவு அல்லது நிலமற்ற விவசாயிகளின் நிலை வேறு. வயதானவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் நிலை தடுமாறுகின்றனர். கிராமத்து இளைஞர்களோ முழுவதும் விவசாயத்தை கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கி விவசாயம் அல்லாத வேறு வேலைக்கு செல்கின்றனர்.

தஞ்சை ஒரத்தநாட்டுக்கு அருகே இருக்கும் சேதுராயன்குடிகாடு.

ஏதோ கொஞ்சம் நடக்கும் விவசாயத்துக்கு கூட ஆள் கிடைப்பதில்லை. வரும் காலங்களில் விவசாயத்துக்கு எதிர் காலம் இல்லை என்பதால் கொத்தனார், சித்தாள், கம்பிகட்டுதல், பெயிண்டர், மெக்கானிக், லாரி கீளினர் போன்ற நகர்ப்புற வேலையை பெரிதும் விரும்புகிறார்கள். ஒரு நாள் விவசாய கூலியாளுக்கு ஒரு நாள் சம்பளம் 400-லிருந்து 500 வரை. வேலை தொடர்ச்சியாக இருக்காது. நகரத்தில் ஆரம்ப அடிப்படை சம்பளம் குறைவாக இருந்தாலும் இரண்டு வருடத்தில் எதிர் காலம் உள்ள ஒரு தொழிலை கற்றுக்கொண்டு முழு தொழிலாளியாகிவிடலாம் என்பது அவர்கள் கருத்து.

தண்ணீர் இல்லாததால் விவசாயம் மட்டும் பாதிக்கவில்லை. மாட்டுக்கு மேச்சல், வைக்கோல் இல்லை. விவசாய இயந்திரங்களுக்கு வாடிக்கையாளர் இல்லை. நன்னீர் மீன் வளர்ப்புக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் மீன்கள் செத்து மிதக்கின்றன. டீக்கடையில் வியாபாரம் இல்லை. மண்பாண்டம் செய்ய களிமண் இல்லை. சலவை தொழிலாளிக்கு ஆறு குளங்களில்லை. இது போல கிராமங்களில் உள்ள மற்ற சிறு தொழில்களும் பாதித்துள்ளன.

தண்ணீர் பிரச்சனையில் கடந்து வந்த வருடங்களை வைத்து பார்த்தால் காவிரியில் தண்ணீர் வருமா மழை பெய்யுமா என்பது சந்தேகமே. இதே நிலை நீடித்தால் போர்வல் வைத்துள்ளவர்கள் மட்டும் ஓரிரு வருடங்கள் விவசாயத்தை மேற்கொண்டு செய்வார்கள். அதன் பிறகு அவர்களாலும் செய்ய முடியாது.

இப்படியே தொடர்ச்சியாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து நிலத்தடி நீரை போர்வெல் மூலம் உறிஞ்சிக் கொண்டே இருந்தால் நான்கு வருடத்துக்குக்குள்ளேயே தஞ்சை புதுப் பாசன டெல்டாவும் திருவாரூர் பகுதியைப் போல் வறண்டுவிடும் அபாயம் உள்ளது.

முப்போகம் விளைந்த தஞ்சை தரணியின் காவிரிப் பகுதி விரைவிலேயே புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டம் போல் வறண்ட பாலைவனமாகிவிடும் அபாயத்தை எப்படி தடுக்கப் போகிறோம்?

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க