பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர் !

1
8

“எனக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஹிந்து கலாச்சாரம் பற்றி என்ன தெரியும்?” என்று கொந்தளிக்கிறார் ஆத்மாராம் பார்மர். இவர் குஜராத் மாநிலத்தின் சமூக நீதித் துறை அமைச்சர்.

இவர் தனது சக அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமாவுடன் ‘ஆன்மீக நிகழ்ச்சி’ ஒன்றில் கலந்து கொண்டதை எதிர்த்து தலித் மக்கள் போராடி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். பூபேந்திர சிங் குஜராத் மாநில கல்வி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர். இவ்விரு அமைச்சர்களும் கலந்து கொண்ட ‘ஆன்மீக’ நிகழ்ச்சி பேயோட்டிகளுக்கான பாராட்டு விழா.

“இவர்கள் தெய்வீக ஆற்றல் கொண்ட புனிதப் பிறவிகள். ஒன்றிரண்டு பேர் தவறானவர்களாக இருக்கலாம். அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்லி விட முடியுமா?” எனப் பேயோட்டிகளுக்காக பேயாடியிருக்கிறார் அமைச்சர்.

அரசின் அமைச்சர்களே பேயோட்டிகளின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான தலித்துகள் கடந்த 11-ம் தேதி, சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள வாத்வான் நகரில் கூடி பார்மரின் உருவபொம்மையை எரித்துப் போராடியுள்ளனர். குஜராத் மாநிலம் இந்துத்துவத்தின் விளைநிலம் மட்டுமல்ல; பல நூற்றாண்டுகளாக ஆகப் பிற்போக்கான மூடநம்பிக்கைகளில் ஊறிக் கிடக்கும் களர் நிலமும் கூட. படிப்பறிவற்ற ஏழை குஜராத்திகளின் சீரழிந்த வாழ்கையை பேயோட்டிகள் மேலும் மோசமாக்குகின்றனர்.

பேயோட்டும் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஜராத் பா.ஜ.க அமைச்சர்கள்

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின் படி சுமார் அம்மாநிலம் முழுக்க சுமார் 30 ஆயிரம் பேயோட்டிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. கிராமப்புரங்களில் சிறியளவில் நிலம் வைத்திருக்கும் ஏழைப் பெண்களை சூனியக்காரிகள் என அவதூறு கிளப்பி அவர்களை ஊரை விட்டே விரட்டியடிப்பது, பின்னர் அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வது என பேயோட்டிகளால் ஏழை மக்கள் ஏமாற்றப்படுவது குஜராத்தில் வாடிக்கை. குறிப்பாக தலித்துகள் மற்றும் ஆதிவாசி மக்கள் தான் பேயோட்டிகளால் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தி ‘மேல்’சாதியினர் எந்தளவுக்கு பார்ப்பன இந்து வெறியேறிய மூடர்கள் என்பதையும் அவர்களின் மூடநம்பிக்கை நெருப்புக்கு எண்ணை வார்க்கும் பேயோட்டிகள் எந்தளவுக்கு ஆபத்தானவர்கள் என்பதையும் லால்ஜியின் கொடூர மரணம் நமக்குப் புரியவைக்கும்..

செப்டெம்பர் 2012-ம் ஆண்டு ஊனா மாவட்டத்தில் உள்ள அங்கோலி கிராமத்தைச் சேர்ந்த இடைநிலைச் சாதியை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போகிறார். உடனே அவரது உறவினர்கள் பேயோட்டி கும்பல் ஒன்றை வரவழைத்து குறி கேட்டுள்ளனர். பேயோட்டிகள் சடங்கு ஒன்றைச் செய்து விட்டு தலித் குடியிருப்புப் பகுதியில் உள்ள லால்ஜி சர்வைய்யா என்பவரின் வீட்டை காட்டி அங்கே தான் அந்தப் பெண் ஒளிந்து கொண்டிருந்ததாக சொல்லியுள்ளனர். சாதி வெறியேறிய பெண்ணின் உறவினர்கள், அது உண்மையா என்று சோதித்துக் கூட பாராமல் லால்ஜியை உயிரோடு அந்த வீட்டுக்குள் விட்டுப் பூட்டி மொத்தமாக கொளுத்தி சாம்பலாக்கியுள்ளனர். லால்ஜியின் உறவினர்களையும் அந்த கிராமத்தை விட்டே விரட்டியடித்துள்ளனர்.

தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் பிணையில் வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அதே போல் விசாரணையின் போது லால்ஜியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் என அவரது உறவினர்களால் குறிப்பிடப்பட்ட பேயோட்டிகளின் மீது வழக்கு கூட பதிவு செய்யவில்லை. இந்நிலையில் அமைச்சரே பேயோட்டிகளின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பதை எதிர்த்து தலித் மக்கள் போராடியுள்ளனர்.

சமீபத்தில் தமிழகம் வந்த ஒரு மேற்கு வங்க பாஜக பெண் தலைவர் ஒருவர் சாமியாடியதை பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்டம் பாஜக இருக்கும் எல்லா மாநிலங்களிலும் இருக்குமென்பது இப்போது தெரிகிறது.

இது தான் மோடியின் ஆட்சியின் கீழ் எவரெஸ்டு சிகரத்தை விட உயரமாக வளர்ந்ததாக முதலாளித்துவ ஊடகங்களால் விதந்தோதப்பட்ட குஜராத்தின் யோக்கியதை. இதே போன்ற ஒரு ஆட்சியைத் தான் நமது தமிழகத்திலும் ஏற்படுத்தப் போவதாகவும், காவிக் கொடியை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப் போவதாகவும் சூளுரைத்துள்ளார் தமிழிசை.

நாம் இப்போதே இந்துத்துவ பேய்களை ஓட்டவில்லை என்றால், எதிர்காலத்தில் குஜராத்திகளைப் போல் பேயோட்டிகளை நாட வேண்டிய நிலை தான் ஏற்படும்.

செய்தி ஆதாரம் :

சந்தா