Thursday, August 6, 2020
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் - அனைவரும் வருக !

தடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக !

-

விவசாயிகளை வாழவிடு என்ற தலைப்பில் சீர்காழியில் கூட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பலமுறை அனுமதி கோரியும் காவல்துறை மறுத்திருந்தது. மறுப்பிற்காக அவர்கள் கூறிய காரணம் தான் வேடிக்கையானது, அதாவது விவசாயிகளது பிரச்சினையை பேசினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம். தமிழகத்தில் என்றுமில்லாத அளவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரிப் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகளுக்காக போராடி வருகின்றனர் விவசாயிகள். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மோடி அரசின் விவசாயிகளை அழிக்கும் கொள்கைக்கு எதிராக போராட்டம் போர்க்குணத்தோடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்கு கூட தமிழகத்தில் தடை என்றால் இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் அருகதை. கடைசியில் சீர்காழி காவல்துறை பொதுக்கூட்டத்திற்கு அனுமதியை அளித்திருக்கிறது. இதுவும் கடைசி நேரம் வரை உண்மையாக இருக்க வேண்டும்.

தடை பல தாண்டி நாளை சீர்காழியில் பொதுக்கூட்டம் – அனைவரும் வருக!

விவசாயியை வாழவிடு… சீர்காழியில் பொதுக்கூட்டம் !

நாள் : ஜூன் 17, 2017.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : பழைய பேருந்து நிலையம்.

மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஷேல்கேஸ் திட்டம் எத்தனை திட்டங்கள் விவசாயிகளை கொலை செய்ய?

தேசபக்த வேடமிடும் மோடி அரசே! கையாலாகாத தமிழக அரசே! மீத்தேன் திட்டத்தால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், நியூட்ரினோ திட்டத்தால், ஷேல்கேஸ் திட்டத்தால், தண்ணியில்லாமல் காய்ந்து பிளந்து கிடக்கும் எங்கள் அன்னை பூமியை பசுமையாக திருப்பி தர முடியுமா? விவசாயம் அழிந்து கடனாளியாகி தினம் தினம் நெஞ்சு வெடித்தும், தூக்கு போட்டும் சாகும் விவசாயிகளின் உயிரை திருப்பி தரமுடியுமா ? அல்லது தடுக்கத்தான் முடியமா?

நாட்டு மக்களுக்கு உணவு கொடுத்து உயிர் கொடுக்கிறவன் விவசாயி. தேசத்தின் ரத்த நாளங்கள் விவசாயமும், விவசாய நிலமும். அதை கொன்றால் அந்த தேசத்தின் அழிவு எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? தேசத்தின் உயிரை காப்பாற்ற, விவசாயத்தை காப்பாற்ற போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்கிறாயே! அதை அழிக்க நினைக்கும் நீ யார்?

விவசாயி பாதித்தால் கூலி விவசாயியும் பாதிக்கிறான். விவசாயி உயிரை விடுகிறான் கூலி விவசாயி நாடோடியாக, சொந்த நாட்டில் அகதியாக மாறுகிறான். விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!

கார்பரேட் முதலாளிகளுக்கு 2015 -ம் ஆண்டு – 5,OO,823 கோடி, 2016-ல் 5,51,OOO கோடி கொடுத்தாயே விவசாயிகளுக்கு எத்தனை கோடிகொடுத்தீர்கள்? இல்லை, விவசாயிகளின் கழுத்தைதானே அறுதத்தீர்கள்.  வறட்சிக்குக் காரணம்? வானம் பொய்த்ததென்று இயற்கை மேலே பழி போடுகிறீர்களே, அந்தக் காலத்தில் ஏரி, குளம், கம்மாய் வெட்டி தண்ணியை தேக்கி வைத்து மழையில்லாத காலத்திலே பயன்படுத்ததானே? அதை பராமரிக்காம விட்டவன் எவன்? அதை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் போட்டு விற்று அழித்தவன் எவன் நீதானே?

தப்பித் தவறி தண்ணிர் வரும் காலத்தில் கடலில் கலக்கும் நீரை கூட தடுத்து நிறுத்த தடுப்பணைகள் கட்டாத சதிகாரன் நீதானே! தண்ணிரை உறிஞ்சி எடுத்து, ஆற்று மணலை அதள பாதாளத்துக்கு தோண்டி கொள்ளையடித்து நிலத்தடி நீரை அழித்தவன் எவன் நீதானே?

போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் சொல்ல துப்பில்லாமல் போராடுகிறவர்கள் யாரும் விவசாயிகளே இல்லையென்று நாக்கு கூசாமல் கொச்சைப்படுத்துகிறீர்களே, பிறகு அவர்கள் என்ன தொழில் அதிபர்களா? அல்லது வேற்றுகிரக வாசிகளா? அல்லது அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? சொந்த நாட்டு மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க மறுக்கும் உங்களுக்கு இந்த நாட்டை ஆளும் தகுதி என்ன இருக்கு? மக்களை காப்பாற்ற வக்கற்ற உங்களுக்கு அதிகாரம் எதற்கு?

இது எங்கள் நிலம்! எங்கள் ஆறு! எங்கள் உரிமை! எங்களை வாழவிடு! இதுவே மக்கள் அதிகாரம்!

மக்களே!

இது வெறும் விவசாயிகள் பிரச்சினை இல்லை!  நம் அனைவரின் பிரச்சினை நாட்டின் பிரச்சினை! மக்களை காப்பாற்றும் அதிகாரத்தை பற்றிய பிரச்சினை! மக்கள் அதிகாரத்தில் இணைவோம்! எழுச்சியை உண்டாக்குவோம்! விவசாயத்தையும் நாட்டையும் காப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, கடலூர் – விழுப்புரம் மண்டலம்.
98434 80587, 81108 15963, 99441 17320.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இந்தியாவில் எல்லாமே கை நழுவிப் போய்விட்டது!
    தமிழ் நாடும்/தமிழ் இனமும் குறி வைத்து
    நசுக்கப்படுகிறது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க