மலம் கழிப்போரை ஃபோட்டோ எடுக்கும் வக்கிரம் பிடித்த பா.ஜ.க அரசு

3
3

டந்த 16-ம் தேதி, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தின் வீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த பதிமூன்று குடும்பங்களுக்கு மொத்தம் 4.8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து செயல் அலுவலர் ரீமா அன்சாரி அதிகாலை நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு ‘குற்றவாளிகளைக்’ கையும் சொம்புமாக பிடித்துள்ளார்.

பிடிபட்ட கிரிமினல்கள் பல மாதங்களாக குற்றச் செயலில் ஈடுபட்டதை கண்டு பிடித்த ரீமா அன்சாரி, அக்குடும்பங்களில் உள்ள நபர் ஒன்றுக்கு ஒரு நாளுக்கு 250 ரூபாய் வீதம் ஒரு மாத காலத்துக்கு அபராதம் விதித்துள்ளார். அதிகபட்சமாக இரண்டு குடும்பங்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; பதிமூன்று குடும்பங்களுக்குமான மொத்த அபராதம் 4.8 லட்சம் ரூபாய்.

பிடிபட்ட குற்றவாளிகள் ஈடுபட்ட கிரிமினல் நடவடிக்கை, மலம் கழிக்கப் போனது தான்!

சொம்பும் கையுமாக பிடிக்கப்பட்ட குற்றவாளிகள்

இதற்கிடையே கடந்த 17 -ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் திறந்தவெளியில் ஆய் போகிறவர்களை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் படை ஒன்று களமிறங்கியுள்ளது. ஆதாரத்துடன் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்படக் கருவிகளையும் கையோடு கொண்டு சென்றுள்ளது. அதிகாலை நேரம் பெண்கள் ஒதுங்கும் இடங்களில் மறைந்து நின்ற அரசு அதிகாரிகள், அவர்கள் வெளிக்குப் போவதைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அரசு அதிகாரிகளின் பாலியல் அத்துமீறல் அயோக்கியத்தனத்தை அறிந்த சி.பி.எம்(எம்.எல்) கட்சியைச் சேர்ந்த பகுதித் தோழர் ஹுசைன் ஜாபர், இதனை தட்டிக் கேட்டுள்ளார். பெண்களின் கழிவறைச் செயல்பாடுகளைக் கூட படமெடுக்கும் வக்கிரத்தை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த அரசு அலுவலர்கள் அதே இடத்தில் தோழர் ஹுசைன் ஜாபரைத் தாக்கிக் கொன்றுள்ளனர்.

ஏற்கனவே தோழர் ஜாபர் அப்பகுதியில் பொதுக் கழிவறைகள் அமைக்க வேண்டும் என்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தரமற்ற கழிவறைகளைச் சீரமைக்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளார். “தூய்மை இந்தியா” வரியின் மூலம் 2015-2016 நிதியாண்டில் மட்டும் சுமார் 3,901 கோடி வசூலித்துள்ள மத்திய அரசு, பெரு நகரங்களில் உள்ள மேட்டுக்குடியினரின் அக்கிரகாரத்தை மட்டும் அழகுபடுத்த முனைப்பு கொண்டுள்ளது.

அதிகாரிகளால் அடித்தே கொல்லப்பட்ட ஹுசைன் ஜாபர்

மறுபுறம், தீப்பெட்டி முதற்கொண்டு தாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் தூய்மை இந்தியாவுக்காக வரியைக் கட்டும் சாதாரண மக்களின் தலையிலேயே தூய்மையைச் சுமத்துகின்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மானியம் வழங்கிக் கட்டப்படும் கழிவறைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்ற நிலையில் உள்ளது.
அரசின் இந்த ஓரவஞ்சனையை தோழர் ஜாபரின் மனுக்களுக்கும், பகுதிச் செயல்பாடுகளும் அம்பலப்படுத்திய நிலையில் அவரைத் தாக்கிய சம்பவம் எதேச்சையாக நடந்திருக்க வாய்ப்பில்லை.

பாலியல் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட்தைத் தடுத்து நிறுத்தியதை முகாந்திரமாக வைத்து திட்டமிட்டுக் கொன்றுள்ளது ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா அரசு. சம்பவத்தை அடுத்து கொலைகார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் மேல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு திறந்தவெளிக் கழிவறைகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இரண்டு லட்சம் கிராமங்களில் சுமார் 25 சதவீத கிராமங்களில் இன்னமும் கழிவறை இல்லாத வீடுகள் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆவணங்களே அம்பலப்படுத்துகின்றன.

பொய்யான வளர்ச்சி கோசங்களை முன்வைத்து அதிகாரத்தைப் பிடித்த மோடி, ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாக சீரழிவுக்குள் இழுத்து விட்டுள்ளார். வேலை இழப்புகள், விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினிச் சாவு என சாதாரணா மக்கள் பாதிப்படைவது ஒருபக்கம் என்றால், மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீடு வீழ்ச்சியடைந்துள்ளதும், வளர்முக நாடுகளின் பட்டியலில் இந்தியா பின் தங்கி வருவதும் முதலாளிகளின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இதற்கிடையே அறிவிக்கப்பட்ட பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை வங்கித்துறையை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது.

சகல துறைகளிலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள மோடி அரசு, ஏதாவது சாதனையை உற்பத்தி செய்து காட்டியே தீர வேண்டிய கொலை வெறியில் உள்ளது. இதற்காக தூய்மை இந்தியா போன்ற மேக்கப் திட்டங்களை தீவிரமாக அமல்படுத்த மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் அரசு நிர்வாகம், ஏறக்குறைய தாலிபான்களைப் போல் மோடிக்காக களமாடி வருகின்றனர்.

மக்களுக்கான சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த வேண்டிய அரசே திறந்த வெளிக் கழிவறையைப் பயன்படுத்துகிறவர்களை ஒளிந்திருந்து படம் பிடிப்பதும், தடுப்பவர்களைத் தாக்கிக் கொல்வதுமாக இந்தியா மெல்ல மெல்ல பாசிசத்தின் பிடியில் விழுந்து வருகின்றது.

செய்தி ஆதாரம் :

3 மறுமொழிகள்

  1. மணிகண்டன், இராமன் வகையறாக்கள் இந்தப் பதிவிற்கு மட்டும் அனைத்துப் புலன்களையும் அடக்கி ஒடுக்கி பம்மி இருப்பது ஏன் ?.

    • அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உங்களை போன்ற (வினவு கூட்டங்கள்) ஆட்கள் என்ன சொல்விர்கள், மோடியின் ஆட்சியில் இந்தியாவே நாறுகிறது என்று சொல்விர்கள், நடவடிக்கை எடுத்தால் உடனே அராஜகம் அக்கரமம் அநியாயம் பொதுவெளியில் மக்கள் நிம்மதியாக மலம் கூட கழிக்க முடியவில்லை என்று சொல்விர்கள்.

      இந்த கிராமத்தை பார்த்தால் கூட ஓரளவுக்கு வசதியானர்வகளாக தான் தெரிகிறார்கள். அரசு கழிப்பிடம் கட்டி கொடுத்தால் அதை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவர்களின் கடமை… அதை செய்யாமல் அரசை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

  2. படம் மட்டும் எப்படி போதுமான சாட்சியமாகும்? கழித்த மலத்தையும் அரச அதிகாரிகளே கைகளால அள்ளிப் போய் நீதிபதிகள் முன் சாட்சியமாக வைக்க வேண்டும் அதனை அரச டாக்டர்கள் மரபணு சோதனை செய்து அவை சநத்தேக நபர்களால் கழிக்கப் பட்ட மலம் என உறுதி செய்து அவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் குற்றவாளிகளை சட்டப் படி தண்டிக்க வேண்டாமா?

    இன்கிறெடிபிள் இந்தியா இப்படி எல்லாம் செய்து தனது தனித்துவத்தை உறுதி அசய்யுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க