Sunday, February 5, 2023
முகப்புகட்சிகள்பா.ஜ.கமாடு விற்கத் தடை : மரணத்தின் விளிம்பில் மராத்வாடா விவசாயிகள் !

மாடு விற்கத் தடை : மரணத்தின் விளிம்பில் மராத்வாடா விவசாயிகள் !

-

காராஷ்டிராவில் மாட்டிறைச்சியின் மீதான தடையானது, கால்நடை வர்த்தகத்தை அழித்து, மாரத்வாடாவின் விவசாய நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

தகிக்கும் 45 டிகிரி வெயிலில், கால்நடைகளை விற்பனை செய்ய  ஒரு சந்தையிலிருந்து மற்றொன்றுக்கு நடையாய் நடக்கிறார்கள் விவசாயிகள். வாங்க விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள். பின்னர் அவற்றை விற்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினால் வாங்கத் தயங்குகிறார்கள்.

அப்பாசாஹிப் கோதுலே (45) தனது காளைகள் இரண்டினை விற்க விரும்புகிறார்.  ஆனால் முடியவில்லை. க்வலீம் குரேஷி (28) காளைகளை வாங்க விரும்புகிறார்.  அவராலும் முடியவில்லை.

மகாராஷ்டிரா மாநிலம், மாரத்வாடா பிராந்தியத்தின் ஔரங்கபாத் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள தேவ்கான் தான் கோதுலேயின் கிராமம். அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கிராமத்தைச் சுற்றி நடக்கும் வாராந்திர சந்தைகள் அனைத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.

அதுல் என்ற ஊரில் நடக்கும் செவ்வாய்க்கிழமை சந்தை

இது அதுல் என்ற ஊரில் நடக்கும் செவ்வாய்க்கிழமை சந்தை. எங்கும் மக்கள் கூட்டம். வெயிலுக்காக தலையில் வெள்ளைத் துணி ஒன்றைக் கட்டியபடி நின்று கொண்டிருக்கிறார் கோதுலே. “என் பையன் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் வேணும். இந்த ஜோடி மாட்டுக்கு பத்தாயிரத்துக்கு மேல யாரும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு பதினஞ்சாயிரமாவது வேணும்” என்கிறார் கோதுலே.

இன்னொருபுறம், ஔரங்கபாத் நகரின் சில்லக்கானா பகுதியில் வேலையின்றி அமந்திருக்கிறார் க்வலீம் குரேஷி. நாள்தோறும் நலிந்து வரும் தனது வியாபாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்ற ஆழ்ந்த கவலையிலிருக்கிறார்.  “ஒரு நாளைக்கு இருபதாயிரத்துக்கு வியாபாரம் செஞ்சிட்டிருந்தேன்.  (மாத வருமானம் ரூ.70,000/- முதல் ரு.80,000/- வரை)”  “போன இரண்டு வருசத்துல  இது கால் பங்கா கொறஞ்சிருச்சு” என்கிறார்.

“இந்த மாடுகளை விக்கிறதுக்கு சந்தை சந்தையா அலையிறேன். இதுக்கே ஆயிரக்கணக்குல செலவாகுது. எல்லா விவசாயிகளும் இப்படித்தான், மாட்டை விக்கிறதுக்கு சக்திக்கு மீறி செலவு செய்யிறாங்க” என்றார்  கோதுலே.

மகாராட்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சித்தடை கொண்டு வரப்பட்டு இரண்டு வருடங்களாகிறது.  2014 ல் பா.ஜ.க. வின் தேவேந்திர ஃபட்னாவிஸ்,  மகாராஷ்டிராவின்  முதலமைச்சராக பதவியேற்றார். முந்தைய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சிகளிலேயே விவசாயம் ஆழ்ந்த நெருக்கடிக்குள்ளாயிருந்தது.  இடுபொருட்களின் விலையேற்றம்,  விளை பொருட்களுக்கு கிடைக்கும் விலையில் ஏற்றத்தாழ்வு, தவறான நீர் மேலாண்மை போன்ற பிற காரணிகளும் ஒன்று சேர்ந்து, கொடிய ஆயுதங்களைப் போல விவசாயிகளைத் தாக்கியது. பத்தாயிரக் கணக்கான விவசாயிகளை தற்கொலைகளுக்குத் தள்ளியது. மார்ச் 2015 ல், ஃபட்னாவிஸ், ஏற்கனவே இருந்த பசுவதைத் தடையை காளை மற்றும் எருதுகளுக்கும் நீட்டித்து சட்டம் போட்டார். விவசாயிகளின் நெருக்கடி தீவிரமானது.

இந்த மாடுகளை விக்கிறதுக்கு சந்தை சந்தையா அலையிறேன். இதுக்கே ஆயிரக்கணக்குல செலவாகுது. எல்லா விவசாயிகளும் இப்படித்தான், மாட்டை விக்கிறதுக்கு சக்திக்கு மீறி செலவு செய்யிறாங்க என்கிறார் அப்பாசாஹிப் கோதுலே

மாடுகள் கிராமப்புறப் பொருளாதாரத்தின் மையமாக இருப்பதால், இத்தடையானது கால்நடைகள் சார்ந்த அனைத்து வியாபாரங்களிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியது. திருமணம், மருத்துவம், அல்லது வரவிருக்கும் பயிரிடும் பருவத்தேவைகள் போன்றவற்றிற்கு கால்நடைகளை விற்றுப் பணத்தைப் புரட்டுவது விவசாயிகளின் பழக்கம். இப்படி பன்னெடுங்காலமாக கால்நடைகளை ஒருவகை காப்பீடு போல் பயன்படுத்தி வரும் விவசாயிகளை இது பெரிதும் பாதித்தது.

ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி மற்றும் கோதுமை பயிரிட்டிருக்கிறார் கோதுலே. அவரது பொருளாதார கணக்கீடுகள் பாஜக அரசு விதித்துள்ள தடையால் பாதிப்படைந்திருப்பதாகக் கூறுகிறார். “இந்த ரெண்டு காளைகளுக்கும் நாலு வயசு தான் ஆகுது. “காளைகள் பத்து வயசு வரை  விவசாய வேலைக்குப்  பயன்படும்.”  “சில வருசம்  முன்ன வரைக்கும்  எந்த விவசாயியும்  இதுங்கள  இருபத்தஞ்சாயிரத்துக்கு முழு மனசா வாங்கிருப்பான்”  என்கிறார் .

தற்போது கால்நடைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், வாங்கத் தயங்குகிறார்கள்.  பின்னாளில் அவற்றை விற்க இயலாமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறார்கள். “என் வீட்டிலிருந்து காளைகளை பல்வேறு சந்தைகளுக்கு கொண்டுபோகவே  சில ஆயிரங்கள செலவு செஞ்சிட்டேன். அதுல், நாலு கி.மீ. தூரத்தில இருக்கறதால இன்னிக்கு மாடுகளோட நடந்து வந்துட்டேன்.  மற்ற வாரச் சந்தைகள் 25 கி.மீ. சுற்றுவட்டாரத்தில இருக்கு, அங்கயெல்லாம் போறதுக்கு மாட்டு வண்டிய வாடகைக்கு எடுக்கணும். எனக்கு ஏற்கனவே நெறைய கடன் இருக்கு. எப்பிடியாவது வித்தாகணும்” என்கிறார் கோதுலே.

பேசிக்கொண்டிருக்கையில், யாராவது வாங்க வரமாட்டார்களா  என்ற ஏக்கப்பார்வை கோதுலேயின் கண்களில் தெரிகிறது. அவர் காலை 9 மணிக்கு சந்தைக்கு வந்து  மதியம் 1 மணி வரை கடும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறார். “நான் வந்ததுல இருந்து இதுவரை தண்ணி கூடக் குடிக்கல. தண்ணி குடிக்கப் போனா, அதுக்குள்ள யாராவது மாடு வாங்க வர்ற ஒரு ஆள  தவற விட்டுருவேனோங்குற பயந்தான் காரணம்” என்கிறார்.

113 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது.  மைதானம் பரபரப்பாக இருக்கிறது.  பல்வேறு விவசாயிகளும் எப்படியாவது விற்று விட வேண்டும் என்று முனைகிறார்கள்.  இந்த அதுல் சந்தையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள வாகுல்னி என்ற ஊரிலிருந்து வந்திருக்கும் 65 வயதான ஜனார்தன் கீதே,  தனது மாடுகளை வசீகரமாக காட்டும் முயற்சியாக அவற்றுக்கு கொம்பு சீவ வைக்கிறார். அதற்கு ஒரு மாட்டுக்கு 200 ரூபாய் செலவு. “நான் இந்த மாடுகளை அறுவத்தஞ்சாயிரத்துக்கு வாங்கினேன். இப்ப நாப்பதாயிரத்துக்கு வித்துட்டாலே திருப்தி தான்” என்கிறார்.

மாரத்வாடாவில் அதிகரித்து வரும் தண்ணீர்ப்பஞ்சம், உயர்ந்து வரும் மாட்டுத்தீவனங்களின் விலை, மாடுகளை பராமரிக்க போதிய இட வசதியின்மை போன்ற காரணிகள் மாடு வளர்ப்பை கடும் சிரமத்துக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறுகிறார் கோதுலே.  ஃபட்னாவிஸ், மாட்டிறைச்சித் தடையை அமலாக்கும்போது, பயன்தராத மாடுகளின் மீதான செலவினங்களைக் குறைக்கும் விதமாக அவற்றுக்கான காப்பிடம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.  அது நிறைவேற்றப் படாததால், கால்நடைகளை விற்று பணமாக்க முடியாதது மட்டுமின்றி,  பயன்தராத விலங்குகளுடன் தளையிடப்பட்டு  இரட்டைச் சுமைக்கு ஆளானார்கள் விவசாயிகள்.

“ஒரு மாட்டுக்கு, தீவனத்துக்கும் தண்ணிக்குமா வாரத்துக்கு ஆயிரம் ரூவா  செலவாகுது.  எங்க பிள்ள குட்டிகளுக்கே சரியான சாப்பாடு குடுக்க முடியாதப்ப, வயசான  மாடுகள  நாங்க எப்புடி பராமரிக்க முடியும்” என்று கேட்கிறார் கோதுலே.

கிராமப்புறப் பொருளாதாரத்தின்  அங்கமாக இருக்கும் தலித்துக்களான தோல் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், இறைச்சி வியாபாரிகள், எலும்பிலிருந்து மருந்து தயாரிப்பவர்கள் போன்றோரும் மாட்டிறைச்சித்தடை எனும் இந்த சட்டத்தால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தடைக்கு முன்னர், மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 3,00,000 காளைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வந்தன.  தற்போது அனைத்து வெட்டுக்கூடங்களும் வேலையிழந்து, ஒட்டு மொத்த சமூகமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.

கால்நடைகளை வெட்டுதல் மற்றும் கால்நடை வியாபாரத்தில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ள குரேஷி என்ற சாதியைச் சார்ந்த சுமார் 10,000 முஸ்லிம்கள் வசிக்கும் சில்லக்கானாவில் இந்த பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது.  தன்னுடைய தொழிலாளர்கள் சிலரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டார் கறிக்கடை உரிமையாளர் க்வலீம். “நானும் என் குடும்பத்துக்கு சாப்பாடு போட வேண்டியிருக்கு; வேறென்ன செய்யிறது?” என்று கேட்கிறார்.

“ஒரு நாளைக்கு 500 ரூவாயாவது சம்பாதிச்சுட்டிருந்தேன். இப்ப  கெடச்ச வேலையச் செய்யிறேன். வருமானத்துக்கு உத்தரவாதமில்ல. வேலையே இல்லாத நாட்களும் இருக்கு” என்கிறார்  அனீஸ் குரேஷி (41).

அதிகரித்து வரும் விவசாய நெருக்கடியின் காரணமாக மாட்டிறைச்சித்தடைக்கு முன்னரே இறைச்சி  வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தது. வேலை தேடி கிராமப்புற மக்கள்  பெருமளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக உள்ளூரில் மாட்டிறைச்சியின் நுகர்வு கணிசமாகக் குறைந்து விட்டது என்கிறார் க்வலீம்.

கொள்ளுத்தாத்தாவின் காலம் முதல் இந்தக் கறிக்கடை தான் க்வலீமின் ஒரே சொத்து, ஒரே தொழில். “வேறு வேலைக்கு மாறிக்கிற அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு படிப்பறிவு இல்ல. இப்ப நாங்க  எருமை மாட்டுக் கறிய விக்கிறோம். அது மக்களுக்கு அவ்வளவா  பிடிக்கல. அது மட்டுமில்ல, மத்த இறைச்சிப் பொருட்களோட போட்டியும் கடுமையா இருக்கு” என்கிறார்.

குரேஷிகள் மற்றும் தலித் உள்ளிட்ட மற்ற சமூகத்தினரது உணவிலும் மாட்டிறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.  அது ஒப்பீட்டளவில் மலிவான புரதமாகவும் உள்ளது. “மாட்டுக்கறிக்கு பதிலா  கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறின்னா மூணு  மடங்கு செலவாகும்” என்கிறார் க்வலீம்.

அதுல் சந்தையிலிருந்து புன்னகையுடன் வீடு திரும்பியவர்கள் வெகு சிலரே. அவர்களில் தன் மாடுகளுக்கு கொம்பு சீவிய கீதேயும் ஒருவர். அவரது மாடுகளை வாங்க விவசாயி ஒருவரை அவர் பிடித்து விட்டார். தியான்தியோ கோரே என்ற இன்னொரு விவசாயி அவரைப் பொறாமையுடன் பார்க்கிறார்.

கோரே தனது காளையுடன் அதுல் சந்தைக்கு  7 கி.மீ. தூரம் நடந்தே வந்திருக்கிறார். அதுதான் அவரிடம் இருந்த 7 மாடுகளில் இன்று மிச்சமிருப்பது. மற்ற ஆறும் விற்றாகிவிட்டது. இதுதான் கடைசி மாடு.

ஆறு லட்சமாய் இருந்த அவரது கடன், 5 வருடங்களில் பன்மடங்காக பெருகி விட்டது. இந்த மாட்டை விற்றால்தான் அடுத்த பருவத்துக்கு அவர் பயிர் வைக்க முடியும். “இயற்கை எங்களுக்கு ஆதரவா இல்ல. அரசாங்கமும் எங்களுக்கு ஆதரவா இல்ல. பணக்காரன் யாரும் தற்கொலை செஞ்சுக்கிறது இல்ல. என்னப்போல கடன்பட்ட விவசாயிகதான் தற்கொலை பண்ணிக்கிறோம். எனக்குத் தெரிஞ்சி, தன் பிள்ளை விவசாயியா இருக்கணும்னு நெனக்கிற ஒரு விவசாயியைக் கூட நான் பார்த்ததில்லை” என்கிறார் கோரே.

மாட்டை வண்டியில் கொண்டு செல்ல அவரிடம் பணமில்லை. கொதிக்கும் 113 டிகிரி வெயிலில், 60 வயதில், ஒரு சந்தையிலிருந்து இன்னொன்றுக்கு சந்தைக்கு தனது மாட்டுடன் நடந்தே போகிறார் கோரே என்ற அந்த 60 வயது விவசாயி. “இன்னிக்கு விக்க முடியாட்டி, வியாழக்கிழமை வேறொரு சந்தைக்கு போவேன்” என்றார் கோரே.

“அந்த சந்தை இங்கிருந்து எத்தனை தூரம்?” என்று கேட்டேன்.

“30 கிலோ மீட்டர்” என்று பதிலளிக்கிறார் கோரே.

People’s Archive of Rural India இணைய தளத்தில் ஜூன் 1 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருக்கும் Not quite a cash cow என்ற Parth.M.N எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம் : சங்கரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க