Sunday, April 2, 2023
முகப்புஉலகம்ஐரோப்பாஇளவரசர் ஹாரிக்கு அரசராகும் விருப்பம் இல்லையாம் !

இளவரசர் ஹாரிக்கு அரசராகும் விருப்பம் இல்லையாம் !

-

பிரிட்டனின் இளவரசர் ஹாரி

ரமசிவம் கழுத்திலிருந்து கொண்டு “கருடா சௌக்கியமா” என்று பாம்பு கேட்டது நம்மூர் பழமொழி. பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு எதிரியை நலம் விசாரிக்கும் இந்த தந்திரத்தை மேன்மக்களுக்கு பொருத்தினால்?

எல்லா ஆடம்பர-நவீன வசதிகளையும் கொண்டிருக்கும் மாளிகைகள் தம்மை எளிமையாக “வில்லா” – குடிசைகள் என்று அழைத்துக் கொள்கின்றன. போலவே பிரிட்டனின் இளவரசர் ஹாரியும் “எங்களது அரச குடும்பத்திலிருந்து யாராவது அரசராகவோ, இராணியாகவோ விரும்புகிறார்களா என்ன? நான் அப்படி நினைக்கவில்லை” என்கிறார். மேலும் அரச குடும்பத்தினர் அனைவரும் மக்கள் நலனுக்காக பணியாற்றுவதாகவும் கூறுகிறார்.

ஒருவேளை 1952 முதல் ஜிப்ரால்டர் நீரிணையில் போடப்பட்ட நங்கூரம் போன்று பேரரசியாக குந்தியிருக்கும் இரண்டாவது எலிசபத் இருக்கும் போது எவனாவது பட்டம் சூட்ட முடியுமா என்று அவரது ஆழ்மனது யோசித்திருக்க கூடும். எலிசபத் அலெக்சாண்ட்ரா மேரி எனப்படும் பேரரசி 1926-ல் பிறந்தவர். இன்னும் ஒன்பது வருடங்கள் கடந்தால் அவருக்கு நூற்றாண்டு. அவர் ஐக்கியப் பேரரசு எனப்படும் பிரிட்டனுக்கு மட்டுமல்ல கனடா, ஆஸ்த்ரேலியா, நியூஸ்லாண்டு நாடுகளையும் அரசியாக இருக்கிறார். இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளின் “காமன்வெல்த் கூட்டமை”பிற்கும் தலையாக இருக்கிறார். மேற்கு இந்தியத் தீவுகளின் 12 நாடுகளுக்கும் அவரே அரசி.

அரசியின் மகனான வேல்ஸ் இளவரசர் சார்லஸுக்கே வயது 69 எனும் போது பேரனான இளவரசர் ஹாரிக்கு வயது இப்போதே 33 ஆகிறது. பாட்டியும் அப்பாவும் இன்னும் சில பல வருடங்கள் வாழும் வாய்ப்பிருப்பதால் ஹாரியும் அவரது அண்ணான வில்லியமும் இப்படித்தான் காலந்தள்ள வேண்டும்.

ஆனால் ஹாரியின் அரச பதவி அலுப்புக்கு காரணம் அதுவல்லவாம். அவரது அம்மா டயானா இறந்த போது அவருக்கு வயது 11 மட்டுமே. டயானாவின் இறுதிச் சடங்கு 1997-ம் ஆண்டு நடந்த போது அவர் அண்ணன் வில்லியம், அப்பா சார்லஸ், தாத்தா எடின்பர்க் கோமகனோடு லண்டன் நகரத்து வீதிகளில் ஊர்வலமாக சென்றது ஒரு துர்கனவாக ஹாரியை இன்றும் அலைக்கழிக்கிறதாம். பாரிஸ் விபத்தில் டயானா காலமானதால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்திற்கு சமீபத்தில் கூட அவர் கவுன்சிலிங் எடுத்துக் கொண்டு வழமையாக செயல்படுகிறார்.

இளவரசர் ஹாரி டயானாவின் சடங்கில் அவரது சகோதரர் மற்றும் தந்தைக்கு இடையே நிற்கிறார்

“அம்மாவின் சவப்பெட்டிக்கு பின்னே நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாகவும், இலட்சக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியிலும் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு நிலை எந்த சூழ்நிலையிலும் எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.” என்கிறார் ஹாரி.

உலகம் முழுவதும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி அமைத்த ஒரு நாடு. அதன் அரச குடும்பம். இன்றும் பெருமளவு சொத்தும், அரசு மரியாதைகளும் – சலுகைகளும், ஊடக பிரபலமும், மக்கள் கவர்ச்சியும் இருந்தும் அவருக்கு அம்மாவின் இறுதி ஊர்வலக் காட்சி நெஞ்சில் முள்ளாய் குத்துகிறது. இழப்பதற்கு நிறைய இருப்பதால் அந்த சோகம் இன்னும் காவியத் துயரமாய் அவரை படுத்துகிறது.

வளர்ந்த நாடுகளில் அனாதைகள் – ஆதரவற்றோர் என்ற பதமே அதிகம் பயன்படுத்தும் வாய்ப்பில்லை. பெற்றோர் இறந்தாலும் அங்கே ஒரு குழந்தைக்கு கிடைக்கும் அரவணைப்புகள் அதிகம். ஏழை நாடுகளில் வாழும் போதே அந்த அரவணைப்பு ஏழ்மை காரணமாக இல்லை என்பதால் பெற்றோர் மரணம் என்பது இங்கே குழந்தைகளுக்கு ஒரு ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறது.

போர், நோய், இதர அழிவுகளினால் இந்நாடுகளில் ஆதரவற்ற குழந்தைகள் அதிகம். அமெரிக்க – ரசியா ஆக்கிரமிப்பினால் 30 ஆண்டுகள் போரில் கழித்த ஆப்கானிஸ்தானில் இருபது இலட்சம் குழந்தைகள் அனாதைகளாக இருக்கின்றனர். அதில் ஆறு இலட்சம் பேர் வீதிகளில்தான் உறங்குகின்றனர். பத்து இலட்சம் குழந்தைகளுக்கு போர் ஏற்படுத்தியிருக்கும் மன அழுத்தம் இருக்கிறது. ஐந்து வயது அடைவதற்குள் கால் பங்கு ஆப்கான் குழந்தைகள் இறந்து போவதாக யுனிசெப் அறிக்கைகள் கூறுகின்றன. ஆப்பிரிக்காவில் போர் மற்றும் எய்ட்சினால் 3.4 கோடி குழந்தைகள் அனாதைகளாக காலம் தள்ளுகின்றன. இன்னும் ஈழம், காஷ்மீர், ஈராக், சிரியா என்று ஆதரவற்ற குழந்தைகள் ஆளுக்கொரு கதைகளுடன் ஏராளமாய் அணிவகுக்கின்றனர்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பிரபலங்கள் இத்தகைய குழந்தைகளுக்காக வாழ்வில் ஒரிரு மணி நேரங்களும், ஓரிரு நாள் வருமானத்தையும் தியாகம் செய்து ஊடகங்களில் மனிதாபிமானிகளாக வலம் வருகின்றனர். டயானா கூட கண்ணிவெடிக்கு எதிராக பயணமும், பிரச்சாரமும் செய்தார். இளவரசர் சார்லஸும் இந்தியா வந்தால் தாராவி போன்ற குடிசைப் பகுதிக்கு செல்ல மறப்பதில்லை.

இருப்பினும் இளவரசர் ஹாரியின் சோகத்திற்குத்தான் ஊடகங்களும், வார்த்தைகளும், காட்சிகளும், சிந்தனைகளும் மனமிறங்கி வருகின்றன. அந்த நேரத்தில் ஈராக்கிலோ, ஆப்கானிலோ, காஷ்மீரிலோ ஒரு குழந்தை தனது இடிக்கப்பட்ட வீட்டில்  கொல்லப்பட்ட பெற்றோருக்காக அழுது கொண்டிருக்க கூடும்.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க