குடிப்பது ஒரு தனிமனித உரிமை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் ஆவணப்படத்தை ( வினவு தளத்தின் “அம்மாவின் மரண தேசம்”) பார்த்த பிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டேன் என்றார் ஒரு வாசகர்.
நியூஸ் 18 தமிழ் சானல் வெளியிட்டிருக்கும் இந்த “டாஸ்மாக் | ஏன் இந்தக் கோபம்?” எனும் ஆவணப் படம் சமீபத்திய பெண்கள் போராட்டங்களினூடாக அதே கருத்தை பதிவு செய்கிறது.
முதல் காட்சியிலேயே தள்ளாத வயதில் படியேறும் ஒரு பெண் தனது மகனின் குடிப்பழக்கத்தை விவரிக்கையில் நெஞ்சு என்று ஒன்று இருப்போருக்கு பதறும். அடுத்த காட்சிகளில் தமிழகத்து பெண்கள் கிடைத்ததை எடுத்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளை நொறுக்க போருக்கு கிளம்புவது போல விரைகிறார்கள். நொறுக்குகிறார்கள். முந்தை அவலத்திற்கு மருந்தாக தெரிகிறது இந்தக் காட்சி.
திருவள்ளூர் அருகே ரதி எனும் பெண் தனது தகரக் கொட்டகை குடிசையில் இருந்து கொண்டு கணவன் குடித்து இறந்த கதையை சொல்கிறார். அருகே அப்பா இல்லாத சிறுவன். எவ்வளவு நாட்கள் என் பெற்றோர் என்னை பார்க்க முடியும்? என்று கரையும் ரதிக்கு இனி யார் ஆதரவளிப்பார்கள்?
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று பேசும் ரதி டாஸ்மாக் கடைகளை நொறுக்க கூடாது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்கிறார். ரதி மட்டுமல்ல அவரது கிராமத்தில் 30 வயதுள்ள பெண்களுக்கு கணவனை காட்டுங்கள் என்று கேட்கிறார் மற்றொரு பெண். குடியால் சாவும், விதவைக் கோலமும், அனாதையான குழந்தைகளும் அங்கே மற்ற தமிழக கிராமங்களைப் போல சகஜம்.
ஆண்களைப் பார்த்து சிறுவர்களும் குடிக்கு பழகும் வாய்ப்பு இருப்பதை தெரிவிக்கும் பெண்கள், அரசின் வருமானம் குடியை வைத்தா நடக்கிறது என்று தாம் செலுத்தும் இதர வரிகளை பட்டியலிடுகிறார்கள்.
அனாதைப் பிணங்களை பிதைக்கும் ஒரு தன்னார்வ நிறுவனத்தின் பெண்மணியான ஆனந்தியம்மாள் தான் புதைக்கும் பிணங்களில் டாஸ்மாக்கினால் மரணித்தவர்களே அதிகம் என்கிறார். தமிழகத்தில் நரகமாக இருக்கும் டாஸ்மாக் கிராமங்களை பட்டியலிடுகிறார் அவர்.
தமிழகத்தில் பெண்கள் எழுச்சியுடன் போராடி வரும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் ஏதோ மாலை நேர தொலைக்காட்சி டி.ஆர்.பி விவகாரமல்ல. குடும்பங்களின் நிம்மதியை இழந்து அனாதைகளாகி வரும் பெண்களின் கதை இது.
முழுப்படத்தையும் பாருங்கள்.