privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை - ஏன் ?

பெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் ?

-

எங்களை ஆண் கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடாதீர்கள் – இந்திய பெண்கள் அணித் தலைவர் மிதாலி ராஜ் !

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை லண்டனில் நடக்கவிருக்கிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. அணியின் நிலவரம், யுத்திகள் குறித்து தெரிவிக்க நடந்த ஆரம்ப விருந்து மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அணித் தலைவர் (கேப்டன்) மிதாலி ராஜ் கலந்து கொண்டார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அணியின் பயிற்சியாளருடன்

அப்போது மித்தாலியிடம் ஒரு பத்திரிகையாளர் “இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மித்தாலி “இதே கேள்வியை ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் கேட்பீர்களா? உங்களுக்குப் பிடித்த பெண் விளையாட்டு வீரர் யார் என்று அவர்களைக் கேட்பீர்களா?” என்று வெறுப்புடன் பதில் அளித்தார்.

கார்ப்பரேட் விளையாட்டாகவும், ரசிகர்களை நுகர்வோராகவும் கருதும் கிரிக்கெட்டில் ஆண் என்ன, பெண் என்ன என்று நமக்குத் தோன்றலாம். கிரிக்கெட்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் கவர்ச்சி உடையில் ஒரு பெண் நெறியாளரைக் கண்டிப்பாக காணலாம். இதன் நோக்கம் பார்வையாளர்களின் விளையாட்டு குறித்த ரசனையை மேம்படுத்துவதல்ல. அதே போன்று இடைவெளிகளில் தோன்றும் விளம்பரங்களிலும் எல்லாம் பொருட்களையும் வாங்குமாறு ஒரு ‘அழகான’ பெண்தான் கோருவார்.

பி.வி. சிந்து, சாக்ஷி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் போன்று பிற விளையாட்டுக்களில் சாதனைகள் நிகழ்த்தினால் பெண் விளையாட்டு வீரர்கள் சிறிது காலத்திற்கு கொண்டாடப்படுவார்கள். சிலசமயம் அதுவும் இல்லை. இந்திய பெண்கள் கிரிக்கெட்டிலேயே கூட கடந்த மே மாதம், வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒரு நாள் போட்டிகளில் 181 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். அது நம்மில் பலருக்கு தெரியாது.

உலகில் கிரிக்கெட்டுக்கு அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால் இங்கு ஆண் கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திர வீரர்களாக, சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகின்றனர்.  பெண் வீரர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், போட்டிகளில் சாதனை படைத்தாலும் ரசிகர்களின் கவனம் இவர்கள் மீது திரும்புவதில்லை. ஆண் வீரர்கள் போல பெண் வீரர்கள் விளையாடுவதில்லை என்று சிலர் கருதக் கூடும். ஆனால் கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ், தடகளம் போன்ற விளையாட்டுக்களில் ஆண்களுக்கு நிகரான அங்கீகாரம் பெண்களுக்கும் உலக அளவில் ஓரளவு உண்டு எனலாம். கிரிக்கெட்டைப் பொறுத்த வரை அது வெற்றி பெற்றிருப்பதே ஆணாத்திக்கத்தை உரம் போட்டு வளர்த்த பார்ப்பனியம் மற்றும் இசுலாத்தின் செல்வாக்கு நிறைந்த தெற்காசிய நாடுகளில்தான். இந்த பிற்போக்குடன் கார்ப்பரேட் வர்த்தகம் இணையும் போது அங்கே விளையாட்டை விட விற்பனையே பிரதானம் என்றாகிறது.

தொலைக்காட்சிகள் பெண்கள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. செய்தி மீடியாக்கள் பெண்கள் போட்டி விவரங்களை செய்தியாகச் சொல்வதே இல்லை. பெண்கள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பாததற்கு அவற்றுக்கு அதிக வரவேற்பில்லாததும், அதனால் விளம்பர வருவாய் இல்லாததுமே காரணம் என்கிறார்கள். ஆகவே  பெண்ணுரிமை கூட வர்த்தகத்தின் அருளில்தான் தழைக்க வேண்டுமென்றால் அது என்றுமே சாத்தியமில்லை.

சில சமயம் பெண் வீரர்கள் பொது வெளியில் ரசிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் ‘கவர்ச்சி – அழகுடன்’ இருக்க வேண்டும். ஆக பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு ‘சாமுத்திரிகா இலட்சணத்தோடும்’ இருக்க வேண்டும். இது வெறும் ஆணாதிக்கம் சார்ந்து மட்டுமல்ல. வர்க்கம், சாதி, இனம் பார்த்தும் நடக்கிறது. டென்டுல்கருக்கு நிகரகாவோ அதிகமாகவோ திறன் படைத்த தன்ராஜ் பிள்ளை இந்திய ஹாக்கி விளையாட்டு வரலாற்றில் ஒரு சூப்பர் ஸ்டார்தான். ஆனால் அவரை ஊடகங்களோ, கார்ப்பரேட் விளம்பரங்களோ, இல்லை பொதுவான ரசிகர்களோ அண்டுவதே இல்லை.

மிதாலி ராஜ் போன்ற கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் உள்ள ஆணாதிக்கத்தை மட்டும் பேசுவதால் தீர்வு வந்துவிடாது. ஒரு விளையாட்டை நேசிப்பதற்கும், ரசிப்பதற்கும் உரிய விளையாட்டை போற்றும் தேசமாக நம்நாடு இல்லை. அதற்கு பார்ப்பனியம், பன்னாட்டு நிறுவனங்கள், விளம்பரங்களை வைத்து நடக்கும் ஊடகங்கள் அனைத்தோடும் நாம் ஒரு பெரும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது.

செய்தி ஆதாரம் :