Monday, September 27, 2021
முகப்பு செய்தி கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம்

கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம்

-

அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே,

வாழ்வதா சாவதா என்று தத்தளிக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். பிற பகுதி விவசாயிகளும் அதே நிலைக்கு வேகமாக தள்ளப்படுகிறார்கள். இதைக்கண்டும் காணாமல் யாரும் இருந்துவிட முடியுமா? விவசாயத்தின் அழிவு மொத்த சமுகத்தின் பேரழிவு இந்த அழிவை இனியும் சகித்து கொள்ளலாமா?

விவசாயியின் சாவுக்கும், விவசாயத்தின் அழிவுக்கும் அவர்களின் தலைவிதியின் மீதோ, அறியாமையின் மீதோ இயற்கையின் மீதோ சிலர் பழி போடுவது கொஞ்சமும் நியாயமில்லை. விவசாயியின் கோவணத்தையும் உருவிக்கொண்டு உயிரையும் பறிப்பதற்கு வரிசைக்கட்டி நிற்கும் எதிரிகளைப்பட்டியலிட்டுப் பாருங்கள் விவசாயிகளின் எதிரிகள், அனைத்து மக்களின் எதிரிகளாக நிற்கிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கை, கடன் தள்ளுபடி, விளை பொருளுக்கு ஆதார விலை. இதற்காக போராடிய மத்திய பிரதேச விவசாயிகள் மீது பி.ஜே.பி. அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ஆறு விவசாயிகள் பலியாகியுள்ளனர். ஆறுதல் சொல்ல சென்ற கலெக்டரையும் அதிகாரிகளையும் கிராம மக்கள் விரட்டியுள்ளனர். ஒட்டு மொத்த விவசாயிகளிடையே இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தை கவனிக்கும் பொது மக்கள்

லாபத்தை எதிர்பாராமல் மண்ணை தாயாக நேசித்து பயிர் செய்தது விவசாயிகள் குற்றமா? மாடு, கோமாதா மூத்திரம் புனிதமானது என பாதுகாக்க சட்டம் போடும் மோடி பி.ஜே.பி. அரசு, விவசாயிகள் மீது கோழைத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. என்ன பயிரிட வேண்டும்? எப்படி பயிரிட வேண்டும்? என்று வேளாண் பல்கலை முதல் வேளாண்துறை அதிகாரிகள் வரை சொன்ன அறிவுரைகளைத்தான் விவசாயிகள் அமல்படுத்தினார்கள்.

பசுமைப்புரட்சி அதிக விளைச்சலை தரும் என்று ரசாயன உரம் போட்டு மண்ணை நாசமாக்கினார்கள் பாரம்பரிய விதைகளை அழித்தார்கள். நமது ஆறுகளின் மணலைக் கொள்ளையடித்தும், கழிவுகளைக் கொட்டியும் நாசமாக்கினார்கள். ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுகளாக மாற்றினார்கள். இவ்வாறு விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன் சாக வேண்டும்?

காவிரி நீர் உரிமையை மறுத்த மோடி அரசு, டெல்டாவை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் என அழிவுத் திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் தமிழக மக்கள் மீது திணிக்கிறது. வாழ விடு என விவசாயிகள் எதிர்த்து போராடினால் தேச துரோகி, தீவிரவாதி என ஒடுக்குகிறது. இடு பொருள் மான்யம் ரத்து, விலைப்பொருளுக்கு ஆதார விலை இல்லை. கடன் தள்ளுபடி இல்லை, இழப்பிடு இல்லை, கொள்முதல் இல்லை, அனைத்திலும் தனியார் முதலீடு.

உங்களை யார் விவசாயம் செய்ய சொன்னது? என்ற நிலையில் முழுமையாக விவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது. ஊரில் இருந்தால் சிக்கி கொள்வோம் என இளைய தலைமுறை கிராமத்தை விட்டு ஓடுகிறது. நாடு முழுவதும் கடந்த 16 ஆண்டுகளில் சுமார் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்றும் தொடர்கிறது.

அம்பானி, அதானி மல்லையாவுக்கு ஏழு லட்சம் கோடிகள் கடன் தள்ளுபடி, பல லட்சம் கோடிகள் வரித் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. உலக வங்கி உத்திரவுப்படி ரேசன் கடை, இலவசக் கல்வி, அரசு மருத்துவனை விவசாயம் ஆகியவற்றிற்கு ஒதுக்கும் மான்யத்தை ரத்து செய்து மொத்த மக்களையும் கார்ப்ரேட் சந்தையில் தள்ளுகிறது.

காசுள்ளவன் வாழலாம், இல்லாதவன் செத்து போகட்டும். எதிர்த்து போராடுபவன் தீவிரவாதி, இதுதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கை முடிவு. இரக்கமற்ற பேயாக மாறிய இந்த அரசிடம் வாழவிடு என கெஞ்சி பயனில்லை. விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அவர்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். விவசாயிகள் பயிர் செய்வதால்தான் அனைத்து மக்களுக்கும் சோறு கிடைக்கிறது. கார்ப்ரேட் கம்பெனிகள் பயிர் செய்தால், வெளிநாட்டை நம்பியிருந்தால் பட்டினிச் சாவுதான் நடக்கும். அதுதான் வரலாறு.

விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு. என்ன செய்ய போகிறோம்? டி.வி. சினிமா, சீரியல், செல்போன் நமக்கு சோறு போடாது. பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் குடும்பத்தோடு வாரீர். உங்களையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

மணல் குவாரியை மூடு ! ஆர்ப்பாட்டம்

இடம் : கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிலையம்.
நாள் : 25.06.17, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 4:00 மணி.

தலைமை :
தோழர் தங்கராசு, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், கருவேப்பிலங்குறிச்சி.

கண்டன உரை :

தோழர் முருகானந்தம், மக்கள் அதிகாரம் விருத்தாசலம் வட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.நந்தகுமார், விவசாய சங்க தலைவர்
திரு. பஞ்சமூர்த்தி, வெள்ளாற்று பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்
திரு. தெய்வக்கண்ணு, வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
திரு. புஷ்பதேவன், வழக்கறிஞர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
திரு. செல்வகுமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தோழர் மணிவாசகன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாசலம் வட்டார செயலாளர்
திரு. க. அன்பழகன் கரும்பு விவசாய சங்கத் தலைவர்
திரு.K சக்கரவர்த்தி, திரு.பழனிவேல், திரு. குணசேகரன், திரு. வேல்முருகன், திரு. வீரமணி, திரு. க. அன்பழகன்

சிறப்புரை : தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

நன்றியுரை : திரு. இளங்கோவன், கே.கே. நகர், கருவேப்பிலங்குறிச்சி

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
கருவேப்பிலங்குறிச்சி – 9795 37050

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க