privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்துப் போராட்டம்

தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்துப் போராட்டம்

-

” ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை “ என்ற கவர்ச்சிகரமான வாசகத்தோடு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜி.எஸ்.டி.) வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தவிருக்கிறது மத்திய அரசு. இப்புதிய வரிவிதிப்பால் பொருட்களின் விலை உயர்ந்து சந்தையில் தங்களது பொருட்கள் விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்றும், உள்நாட்டுத் தொழில்களும், ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று உற்பத்தியாளர்களும், வியாபாரிகள் கூறுகின்றனர். தங்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் வரிச்சுமையைக் குறைக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவிலேயே பட்டாசு உற்பத்தியில் தமிழகம் முன்ன்ணியில் இருந்து வருகிறது. இதுவரை பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டு வந்த 12% வரிவிதிப்பானது, தற்போது ஜி.எஸ்.டி. வரியின் கீழ் 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த ஜூன் 26 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 8 இலட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பணிபுரியும் பட்டாசுத் தொழிற்துறையில், தற்போதைய வரி உயர்வு, ஏற்றுமதியை முடக்கி, உள்ளூர் வியாபாரத்தையும் முடக்கும் என்று கூறியுள்ளது.

மேலும், ஜி.எஸ்.டி. வரியை 12% ஆக குறைத்தால் தான் தங்களால் இயல்பாக வியாபாரம் செய்ய முடியும் என்றும், மத்திய அரசைக் கண்டித்து, ஜூன் 30, 2017 முதல் 811 பட்டாசு நிறுவனங்கள், காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளது.

பட்டாசுத் தொழிலைக் காட்டிலும், மேலதிகமான பேருக்கு வாழ்வாதாரமாகத் திகழும் நெசவு மற்றும் ஜவுளித் துறையிலும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், கடந்த ஜூன் 27, 2017 முதல் ஜூன் 29, 2017 வரை மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும், இதுவரையில் ஜவுளி மற்றும் நெசவுத் துறையினருக்கு அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கை முழுமையாக இரத்து செய்து சுமார் 5% முதல் 18% வரை ஜி.எஸ்.டி வரியை மோடி அரசு விதித்துள்ளது.
சேலத்தில் மட்டும், சுமார் 600 ஜவுளிக் கடைகளும், 1.5 இலட்சம் விசைத்தறிக் கூடங்களும் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் – 75 இலட்சம் பேர் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளும் இப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

சேலம் கைத்தறி மொத்த ஜவுளிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் இது குறித்துக் கூறுகையில் ஜவுளி உற்பத்தி செய்யும் தறித் தொழிலாளர்கள் பெரும்பாலும் குடிசைத் தொழிலாகவே இதனைச் செய்து வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை சிறுவியாபாரிகள் மூலம் விற்பனை செய்யும் போது ஜி.எஸ்.டி வரி அதோடு சேர்க்கப்படுமானால், விசைத் தறியாளர்களிடம் அவர்கள் கொண்டுள்ள வியாபாரம் பாதிக்கப்படும் என்றும், இதனால் பெரும்பான்மை நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும் என்று கூறினார்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் இந்தப் போராட்ட்த்தைப் போன்றே விசைத்தறி உரிமையாளர்களும் 5% வரி விதிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 27 முதல் 29-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 18 அன்று சென்னையில் மாற்றுத்திறனாளிகள், ”டிசம்பர் 3” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஜி.எஸ்.டி.க்கு எதிரான பேரணி ஒன்றை நடத்தினர். அப்பேரணியில், மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கும், ப்ரெய்லி நூல்களுக்கும் இதுவரை வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கை இரத்து செய்து விட்டு அவற்றிற்கு 5% முதல் 18% வரை ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மத்திய அரசு திணித்திருக்கும் ஜி.எஸ்.டி என்பது, உள்ளூர் முதலாளிகளுக்கும், சாதாரணக் குடிமக்களுக்கும் மிகப்பெரும் சுமையாக இருக்கவே அவர்கள் அதனை எதிர்த்துக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வால்மார்ட்டின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அதிகாரி கிருஸ் ஐயரும், இந்திய உள்நாட்டு தரகு முதலாளிகளான டாட்டா, அம்பானி, அதானி ஆகியோரும் ஜி.எஸ்.டி வரியை வரவேற்றுப் பாராட்டுகின்றனர். இதிலிருந்தே புரியவில்லையா, இந்த ஜி.எஸ்.டி வரி யாருக்கு நலன் பயக்கக் கூடியது என்று?

http://www.business-standard.com/article/economy-policy/walmart-to-benefit-from-gst-says-india-ceo-krish-iyer-117062600945_1.html
http://www.thehansindia.com/posts/index/Business/2017-06-26/GST-Textile-industry-calls-for-3-day-bandh/308728
http://www.india.com/news/agencies/28gst-levyfireworks-units-to-begin-indefinite-stir-on-jun-30-2271698/