privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதருமபுரியில் திரண்ட விவசாயிகள் - மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

தருமபுரியில் திரண்ட விவசாயிகள் – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

-

விவசாயத்தின்  அழிவு,  மொத்த  சமூகத்தின்  பேரழிவு என்பதை  அனைவரும்  மனதிலும்  பதியும் படி  மக்கள்  அதிகாரம்  சார்பாக  தமிழகம்  முழுவதும் வீச்சான  பிரச்சாரம்  நடந்து வருகிறது. விவசாயத்தை  பாதுகாக்க   அனைத்து  மக்களும்  ஒன்று  திரளவேண்டும்  என்பதை  வலியுறுத்தி   வருகிற  ஆகஸ்ட்  5  தஞ்சை  மாநாட்டின்  நோக்கம்  குறித்தும் தமிழகம்  முழுவதும்   மாநாட்டு  விளக்க  பொதுக்கூட்டங்களும் நடந்து வருகிறது.

தோழர் முத்துக்குமார்

அதனுடைய  ஒரு பகுதியாக   02.07.2017  அன்று   தருமபுரியில்  பொதுக்கூட்டம் நடந்தது. மக்கள் அதிகாரத்தின் தருமபுரி  மண்டல  ஒருங்கிணைப்பாளர்   தோழர்  முத்துக்குமார்  தலைமை  தாங்கி பேசுகையில், “விவசாயியை  வாழவிடு  என்பது  ஏதோ  விவசாயி  பிரச்சினை  மட்டுமல்ல  அதை  சார்ந்த  துணைத்தொழில்களும்   அழிந்து  வருகிறது.  விவசாயி  விளைவித்த  பொருளுக்கு   விலையை  நிர்ணயம்   செய்வதில்லை,  எனவே  எந்த  விதத்திலும்  விவசாயிகளை  பாதுக்காமல்   விவசாயிகளை  சாகடிக்கும்  வேலையை  இந்த அரசை  செய்து வருகிறது. எனவே  இந்த  அரசு கட்டமைப்பே   விவசாயிகளுக்கு எதிராக  இருக்கிறது. எல்லாவற்றிற்கும்  ஆதாரமாக  இருக்கும்  விவசாயத்தை   பாதுகாக்கும்   நோக்கத்தோடுதான்   இந்த  மாநாடு  நடக்க இருக்கிறது.” அனைவரும்  மாநாட்டில்  கலந்து கொள்ள வேண்டும் என்று  அறைகூவல்  விடுத்தார்.

திரு சின்னச்சாமி

அனைத்து  விவசாயிகள்  சங்க  ஒருங்கிணைப்புக் குழு திரு சின்னசாமி  பேசுகையில், “விவசாயியை வாழவிடு என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கத்தைக் கண்டு  காவல்துறையும் அரசும் அச்சப்படுகின்றது. மக்கள்  அதிகாரம் பெயரை கேட்டாலே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. வறட்சியின் பிடியில்  இருக்கும்  தர்மபுரியில் 800 செ.மி  மழை பதிவாகி இருக்கிறது. அதனை காரணம் காட்டி வறட்சி நிவாரணம் தருவதை மறுக்கிறார்கள். இதற்கு 1000 தடவை மனுக்கொடுத்து பார்த்தும் ஒன்றும்  நடக்கவில்லை, மாவட்ட நிர்வாகமே செத்துபோச்சு. வங்கி  கடனுக்கு அடியாளை  வைத்து மிரட்டுவது,  டிராக்டர் கடனை கட்டவில்லை என்றால் அடியாள் மூலம் பறிப்பதற்கு ஒருவருக்கு 20,000 முதல் 40,000 வரை கொடுக்கிறார்கள். இதைக்  கேட்டால்  தீவிரவாதி,  குண்டு போடுபவன் என்று  பேசுகிறார்கள். எனவே  ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியதை  போல்  விவசாயி  பிரச்சினைக்கு  போராடினால்தான்  விவசாயிகள்  தன்னிறைவு அடைவார்கள்” என்றார்.

திரு உஸ்மான்

இயற்கை   வேளாண்மை  ஆர்வலர்  திரு. உஸ்மான்  பேசுகையில், “எல்லோருக்கும்  அடிப்படையானது  உணவு   இதனை  இன்றைக்கு  நஞ்சாக்கி  விட்டார்கள்.  அமெரிக்காவை விட  250 மடங்கு  பூச்சு  மருந்து  அடிக்கபடுகிறது. இன்னொரு  பக்கம்  நதிநீர்  இணைப்பை  கையிலெடுத்து விட்டால்  இந்தியா  வல்லரசு  ஆகிவிடும்   என்று  அமெரிக்கா  பயப்படுகிறது. பாதிக்கபட்ட  விவசாயிகள்  டெல்லி  வரை  சென்று  போராடினார்கள்  எந்த  அமைச்சரும்  வந்து  பார்க்கவில்லை. பிரியங்கா  சோப்ராவை  பார்த்துவிட்டு  வருகிறார்  மோடி. தாய் மண்ணை, விதையை, பாதுகாக்கமால்  எப்படி  வளத்தை  பெருக்கமுடியும்?” என்றார்.

தோழர் பரசுராமன்

புதிய  ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் பரசுராமன்  பேசுகையில்     “விவசாயத்தை  அழித்து தொழிற்துறையாக மாற்றுவது என்று  1950க்கு பிறகு கொண்டு வந்தார்கள். அதனுடைய உச்சக்கட்டம்தான் இன்றைக்கு நிலத்தை பிடுங்குவது நடக்கிறது. எனவே விவசாயம் கைவிட்டு போய்விட்டால் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. ஜல்லிகட்டு தடை வந்த உடன் இது நமது பாரம்பரியம் என்று படித்த இளைஞர்களும், மாணவர்களும்  எச்சரிக்கை அடைந்தது போல  விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்கிற ஆதரவு மனநிலையை இளைஞர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.  எனவே விவசாயத்தை பாதுகாக்க அனைவரும்  வீதியில்  இறங்க  வேண்டும்” என்றார்.

பிஸியோதெரபி மருத்துவர் டாக்டர்  திருநாவுகரசு  பேசுகையில், இந்தியா 75 % விவசாய  நாடு. இங்குதான் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் உயிர்நாடியே விதைதான் அதனை பசுமை புரட்சி என்கிற பெயரில் விவசாயத்தின் சுயசார்பை அரசாங்கமே திட்டமிட்டு அழித்து விட்டது. எனவே  விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள்  அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

தோழர் மருது

மக்கள்  அதிகாரம்  தலைமை குழு தோழர் மருது  சிறப்புரை ஆற்றினர். பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு  90% விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாத நிலையை பார்க்கமுடிகிறது. இந்நிலையில் நெல்லுக்கு காப்பீடு வேண்டும் என்று கேட்டால் பட்டு பூச்சி போடுங்கள்  இன்சூரன்ஸ் போடுகிறோம் என்கிறார்கள். பயிர்  காப்பீடு இழப்பீடு திட்டம்  கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுப்பதற்காக 412 கோடியை ஒதுக்கி பொதுத்துறை  வங்கிகள் மூலம்  கொடுக்காமல்  காப்பீட்டு  நிறுவனங்கள்  கையில் கொடுக்கிறார்கள். விவசாயிகளை எப்படி அழிப்பது என்பதைதான் ஒரே நோக்கமாக வைத்து செயல்படுகிறார்கள்.

மக்கள் அதிகாரம்    கடந்த  ஆண்டு  டாஸ்மாக்  மாநாடு நடத்தியது. அதன் விளைவாக இன்றைக்கு  மக்களே  கையிலெடுத்து  போராடுகிறார்கள்.  அதேபோல  விவசாயியை  வாழவிடு  மாநாடும்  மக்கள் மத்தியில் பற்றிப் பரவும். எனவே  அனைவரும்  மாநாட்டிற்கு   அலை அலையாக  வருங்கள்” என்று அழைத்தார்.

தோழர் மாறன்

விவசாயிகள்  விடுதலை முன்னணி  தேனி  மாவட்டம்  தோழர் மாறன்  பேசுகையில், “இந்தியா  முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு  வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள  பஞ்சாப்பில் 1000 கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு  இருக்கிறார்கள். விளைவித்த  பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதில்லை, நாடு முழுவதும் வறட்சியினால்  மட்டும் இறப்பதில்லை. கடன் தொல்லையாலும் உரிய விலையின்மையினாலும் தான் இறக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். எனவே விவசாயிகளை தற்கொலைக்கு  தள்ளுவது  அரசுதான்.  மூடு டாஸ்மாக் முழக்கத்தை போல விவசாயியை வாழவிடு இந்திய மக்கள் முழக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின்  அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும். விவசாயியை வாழவிடு முழக்கம் எதிரிகளின் நெஞ்சை பிளக்கும்”. என்று  கூறினார்.

இப்பொதுக்கூட்டத்தில்  ஏராளமான  பொதுமக்களும், விவசாயிகளும்  கலந்து கொண்டனர். விவசாயி இல்லை என்றால்  நாம்  உயிர்வாழ முடியாது  என்பதை  உணர்த்தும்  விதமாக இக்கூட்டம்  அமைந்தது.

தகவல் :
மக்கள்  அதிகாரம்
தருமபுரி, தொடர்புக்கு :  81485 73417   

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க