மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை-20.
தொடர்புக்கு – 9865348163 ================================================================================
வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் நாள்:06.07.2017
பத்திரிக்கைச் செய்தி
மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி திருமதி.பத்மா க/பெ.விவேக் அவர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திய ஆந்திர போலீசார்!
போலி மோதல் எனக் கொல்ல முயற்சியா? தமிழக அரசின் பதில் என்ன?
வன்மையான கண்டனம்! உடனே விடுதலை செய்!
மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லி திருமதி பத்மா என்பவரை கடந்த 03.07.2017 அன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் இரயில் நிலையத்தில் வைத்து ஆந்திர மாநில நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கடத்தப்பட்ட திருமதி.பத்மா அவர்களின் கணவர் திரு.விவேக் தெரிவித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் பலரும் கடத்தலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். சில பத்திரிக்கைகளில் திருமதி பத்மா கைது எனச் செய்தி வந்துள்ளது. ஆனால் தமிழக போலீசார் கைதை மறுத்துள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணையும்,ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு சுமார் 72 மணிநேரம் ஆகியும், எந்தத் தகவலும் இல்லை.
திருமதி பத்மா அவர்கள் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து என்ன குற்றச் செயலில் ஈடுபட்டார் என்பது போலீசால் தெளிவுபடுத்தப்படவில்லை. இதற்கு முன்பும் திருமதி பத்மா அவர்கள் மீது தமிழக, கேரள, ஆந்திர போலீசார் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து, சித்திரவதை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரசு மற்றும் காவல்துறையின் தொடர் சித்திரவதையால் ஏற்கனவே மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் திருமதி பத்மா. இக்கடத்தலால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் திருமதி பத்மாவைப் போல் மாவோயிஸ்ட் என்று கைது செய்யப்பட்ட பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான சித்திரவதைக்குப் பின் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநில நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசார் ரகசியமாகக் கடத்திக் கொலை செய்வதில் கைதேர்ந்தவர்கள்.
குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்வதற்கான வழிமுறைகளை டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக வகுத்துள்ளது. இதன்படி கைது செய்யப்படுபவரிடம், கைதுக்கான காரணம், கைது செய்யும் அதிகாரி பெயரைத் தெரிவிக்க வேண்டும். சீருடை அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தினர், உறவினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டப்படி, கைது செய்யப்பட்ட ஒருவரை 24 மணி நேரத்தில் அருகிலுள்ள நீதித்துறை நடுவரிடம் ஆஜர்படுத்த வேண்டும். பெண்களைக் கைது செய்தால், பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும்.
திருமதி பத்மா அவர்கள் கைதில், மேற்கண்ட உச்சநீதிமன்ற உத்தரவோ, குற்றவியல் நடைமுறைச் சட்டமோ பின்பற்றப்படவில்லை. எனவேதான் இது கைது இல்லை, கடத்தல் என்கிறோம். சட்டத்தின் ஆட்சி என்பதன் லட்சணம் இதுவாகத்தான் உள்ளது. மேலும் ஆந்திர மாநில போலீசார், தமிழ்நாட்டில் வந்து தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்யும்போது, தமிழ்நாடு அரசுக்கும், சம்மந்தப்பட்ட மாவட்ட போலீசுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இக்கைது குறித்து தமிழக அரசும், போலீசும் மவுனம் சாதிக்கிறது. தகவல் தெரியாது என்கிறார்கள். தகவல் இல்லை என்றால், உண்மையில் வந்தது போலீசா? இல்லையா? வேறு யாரும் கூடக் கடத்தலாம் என்ற நிலையில் கடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாமா? தமிழக அரசின் பதில் என்ன?
மாவோயிஸ்ட் அமைப்பில் இருப்பதாலே ஒருவரைக் கைது செய்ய முடியாது, அவ்வாறு தவறாகக் கைது செய்ததற்கு அரசு இழப்பீடு தரவேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருந்தபோதிலும் மாவோயிஸ்ட் என்று சந்தேகப்பட்டாலே, கைது செய்யலாம், கடத்தலாம், கொள்ளலாம் என்பதுதான் காவல்துறையின் அணுகுமுறையாக உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் எல்லாம் குப்பைக் கூடையில் எறியப்படுகிறது.
ஆனால் இதே காவல்துறை வெளிப்படையாக ஆயுதப் பயிற்சியளிக்கும், பலமுறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இதுவரை எங்காவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர் போலீசால் கடத்தப்பட்டார், மோதலில் கொல்லப்பட்டார், என்ற செய்தி வந்துள்ளதா? இத்தனைக்கும் அவர்களின் தொழிலே கலவரம் செய்வது, கொலை செய்வது, பெண்களை வல்லுறவு செய்வதுதான். குஜராத் படுகொலையும், பசுப் பாதுகாப்பு பயங்கரவாதிகளின் நடவடிக்கையும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
எனவே எப்போதும் சட்டத்தைக் காவல்துறை கடைபிடிப்பதில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மதிப்பதில்லை.நடவடிக்கைகளிலும் பாரபட்சம்தான். இவை அனைத்தையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றால், காவல்துறையே பரவாயில்லை என்ற நிலைதான் உள்ளது. திருமதி பத்மாவை ஒப்பபடைக்கச் சொல்லித் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு 05.07.2017-ல் விசாரணைக்கு வந்து 17.07.207 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. அடுத்த வாய்தா தேதிக்குள் கடத்தப்பட்ட பத்மா அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் யார் பொறுப்பேற்பது?
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள். மாவோயிஸ்டுகள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணம், மத்திய இந்தியாவில் உள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள தாதுப்பொருட்களை இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்வதே. இதற்கு மாவோயிஸ்டுகள் தடையாக இருப்பதே, அரசும் போலீசும் அவர்கள் மீது இத்தகைய அடக்குமுறையை ஏவுவதற்குக் காரணம்.
கடந்த பல ஆண்டுகளாக, மாவோயிஸ்ட் அமைப்பினர் மீதான நடவடிக்கைகளில் சட்டத்தின் ஆட்சி நடத்தி வருவதாகச் சொல்லும் அரசும், போலீசும்தான், சட்டத்தை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மாவோயிஸ்ட் அமைப்பினரின் செயல் சட்டப்படி குற்றம் என்றால் கைது செய்து சிறையில் அடைத்து, நீதிமன்ற விசாரணைக்கு காவல்துறை முயற்சிப்பதே சட்ட முறை. கடத்துவது, கொல்வது கடுமையான குற்றம். அரசியல் சட்டத்தின் காவலன் எனப்படும் நீதித்துறையும் இதனைக் கண்டுகொள்வதில்லை. எனவே மக்கள்தான் இத்தகைய அநீதிகள் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும்.
திருமதி பத்மா அவர்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டதை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு கடத்திய ஆந்திர போலீசு மீது கடத்தல் வழக்குப் பதிய வேண்டும். கடத்தல், பாலியல் வன்முறை, போலி மோதல் செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் ஆந்திர மாநில நக்சல் ஒழிப்பு உளவுப் போலீசுப் பிரிவு கலைக்கப்பட வேண்டும்.
இவண்
சே.வாஞ்சி நாதன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்துசேர்த்து வைத்துஇருக்கும்
விஜேபாஸ்கரன் மனைவி அலுங்காமல் குலுங்காமல் போலீஸ் நிலையத்துக்கும் ,வருமானவரி அலுவலத்துக்கும் வந்து செல்கிறார்கள் , அதை அரசும் போலீம் வேடிக்கைபார்க்கிறது ,
நாட்டையே கூறுபோடும் கும்பலின் தலைவி சசிகலாவை A/C ரூம் போட்டு பாதுக்காக்கிறார்கள் .
மக்களுக்காக உழைத்த தோழர் பத்மாவை கைது செய்து கொலை செய்ய நினைக்கிறார்கள் – என்ன கொடுமை ,
மக்களால். வெகுவிரைவில் காவல்துறை , அரசாங்கம் போன்றவை அழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை .