privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஜி -20 மாநாடு : ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !

ஜி -20 மாநாடு : ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !

-

மெரிக்க – ஐரோப்பிய ஒன்றியக் கூட்டின் தலைமையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜி-20 மாநாடு இந்த ஆண்டு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்தப்பட இருக்கிறது. பருவநிலை மாற்றம், போர்ச் சூழல் மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவை குறித்து முக்கியமாக இந்த மாநாட்டில் விவாதிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

இம்மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரசியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, தென் கொரியா, துருக்கி, சவுதி அரேபியா, இந்தியா, பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் அதிபர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அதோடு உலகவங்கி, சர்வதேசிய நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் போன்ற சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இம்மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜூலை 4ம் தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் ஜெர்மனியில் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெர்மனி போலீசு வழங்கிய தகவலின் படியே இந்த வாரத்தில் ஹாம்பெர்க் நகரத்தில் மட்டும் இம்மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்படவிருக்கும் ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகும். பல்வேறு தரப்பினரும் இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் இருந்து, இம்மாநாட்டின் ஏகாதிபத்திய நோக்கங்களை அம்பலப்படுத்துவது வரை பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.

ஹாம்பெர்க் நகரத்தின் வெளிபகுதியில் கடந்த ஜூலை 4 அன்று நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க போலீசு மிளகு தூவலையும், தண்ணீர் பீரங்கியையும் உபயோகித்தது. அதே போல பல்வேறு இடங்களிலும் மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கண்மூடித்தனமாக ஒடுக்கி வருகின்றது.

“நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற முழக்கத்தோடு தீவிர இடதுசாரிப் பிரிவைச் சேர்ந்த அமைப்புகள் இந்த ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்கும் இந்த மாநாட்டின் நோக்கத்தை அம்பலப்படுத்தவே இப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “ஹாம்பெர்க்கை, பழைய மற்றும் புதிய முதலாளித்துவ ஆணையர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வின் குவிமையமாகச் செய்வதற்கு இவ்வுலக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்” என ஒரு போராட்டக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர். “நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற முழக்கத்தின் கீழ் இடதுசாரிகளின் அணிதிரட்டலின் கீழ் நடைபெறும் இப்போராட்டங்களைக் கண்டு தான் அச்சத்தின் உச்சியில் இருக்கிறது ஜெர்மானியப் போலீசு.

சுமார் 8,000 முதல் 10000 பேர் வரை தீவிர இடதுசாரிகள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்கலாம் என போலீசு எதிர்பார்க்கிறது. ஸ்கேண்டிநேவிய நாடுகள் மற்றும் இத்தாலியில் இருந்தும் இன்னமும் கூடுதலாக தீவிர இடதுசாரிப் பிரிவினர் வந்து இப்போராட்டங்களில் கலந்து கொள்ளலாம் எனவும் போலீசு எதிர்பார்க்கிறது. அதன் காரணமாக இந்நாடுகளில் உள்ள அறியப்பட்ட போராளிகளைக் கண்காணித்து வருகிறது. போராட்டக்கார்ர்களின் திடீர்ப் போராட்டங்களைச் சமாளிப்பதற்காகவும் ஹாம்பர்க் நகரில், சுமார் 20000 போலீசைக் குவித்துள்ளது ஜெர்மனி. ஆனால் ஊடக செய்திகளின் படி இப்போராட்டங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் பேர் அணிதிரளலாம் என்று தெரிகிறது.

அதே போல, இம்மாநாட்டிற்கு வரும் முக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தனது தீவிரவாத எதிர்ப்புப்படையான ஜிஎஸ்ஜி9 மற்றும் ஆஸ்திரியாவின் கோப்ரா படை மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் நிபுணர்களின் உதவியோடு ஏற்பாடு செய்துள்ளது ஜெர்மனி.

கடந்த ஜூலை 5 அன்று நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உடலில் களிமண் போன்ற வர்ணத்தைப் பூசிக் கொண்டு ‘ஷோம்பிகளைப்’ போல் நடந்து ஏகாதிபத்தியம் ஏற்படுத்தப் போகும் நிலைமை குறித்து குறியீடாக நடித்துக் காட்டினர். இத்தகைய முதலாளித்துவ எதிர்ப்புப் போராளிகளை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்கும் பொருட்டு, ஹாம்பெர்க் நகரிலேயே உள்ள ஒரு பழைய மொத்த விலை சிறப்பங்காடியை 400 பேரை அடைக்கத் தகுந்த சிறையாக மாற்றவும், அங்கு விசாரித்து தீர்ப்பு சொல்ல நீதிபதிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது ஜெர்மன் அரசு.

போலீசைக் கொண்டு தாக்கினாலும், சிறையில் அடைத்தாலும், உலகம் முழுவதும் போராடும் மக்கள் தங்களது பிரச்சினைகளின் அடிப்படை ஏகாதிபத்தியச் சுரண்டல் தான் என புரிந்துணர்ந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடும் சூழல் மார்க்ஸ் பிறந்த மண்ணில் முத்தாய்ப்பாக வெளிப்பட்டுள்ளது!