privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஸ்ரேஷ்தா தாக்கூர் : பாஜக ரவுடிகளுக்கு பயப்படாத ஒரு பெண் போலீசு

ஸ்ரேஷ்தா தாக்கூர் : பாஜக ரவுடிகளுக்கு பயப்படாத ஒரு பெண் போலீசு

-

த்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியிலமர்ந்த பிறகு உ.பி.க்காகவே தனியாக ஒரு இணையதளமே நடத்த வேண்டிய அளவிற்கு, அங்கு அன்றாடம் பாஜக, ஹிந்து யுவ வாஹினி மற்றும் சங்க பரிவாரக் கிரிமினல்களின் வன்புணர்வு, கொள்ளை, கொலை, ஆள்கடத்தல் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்த செய்திகள் வந்து குவிகின்றன.

உ.பி. மாநிலம் புலாந்த்சர்ரில், பாஜக ‘அடி’மட்ட பஞ்சாயத்துத் தொண்டரான ப்ரமோத் குமார், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதியன்று நம்பர் பிளேட் இல்லாத தமது இருசக்கர வாகனத்தில், லைசன்ஸ் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல் சென்றுள்ளார். இடையில் தடுத்து நிறுத்தி அபராதம் கட்டக்கூறிய போலீசிடம், தாம் பாஜகவைச் சேர்ந்தவன் என்றும், அபராதம் கட்ட முடியாது என்று மிரட்டியுள்ளார். உடனடியாக நகர பாஜக தலைவர் முகேஷ் பரத்வாஜ்ஜையும், அப்பகுதியைச் சேர்ந்த மற்ற பாஜக ‘அடி’மட்ட தொண்டர்களையும் அலைபேசியில் சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அடிமட்டத் தொண்டர்கள் புடைசூழ முகேஷ் பரத்வாஜ்ஜும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த போலீசாருடன் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த துணை எஸ்.பி. ஸ்ரேஸ்தா தாக்கூரிடம் போலீசால் நிறுத்தி வைக்கப்பட்ட வண்டியை ப்ரமோத்திடம் ஒப்படைக்குமாறு கூறி முகேஷ் பரத்வாஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதத்தை அங்கிருந்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய அது ‘வைரலாகப்’ பரவியிருக்கிறது.

இந்த வீடியோவில், முகேஷ் பரத்வாஜ்ஜிடம் போலீசு அதிகாரி ஸ்ரேஷ்தா, உரிய அபராதத்தைச் செலுத்திவிட்டு வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார். ஆனால் முகேஷ் பரத்வாஜ் கும்பல் அவரிடம் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட்து. அதில் ஒரு நபர் இடையில் நீங்கள் காசு வாங்கியிருக்கிறீர்கள் என்று ஸ்ரேஸ்தாவைப் பார்த்து கத்துகிறார். அதனை மறுக்கும் ஸ்ரேஷ்தா அபராதத்தைக் கட்டிவிட்டுச் செல்லுமாறு கூறுகிறார். உடனே பாஜக கும்பல் “போலீசு அராஜகம் ஒழிக” எனக் கோஷம் போடுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தாங்கள் பாஜக என்பதாலேயே தங்களை போலீசு குறி வைப்பதாகவும், தங்களை இடைநிறுத்தி அபராதம் போட்டது தவறு என்றும் முகேஷ் பரத்வாஜ் கூறுகிறார். அதனை மறுத்து ஸ்ரேஷ்தா பேசுகையில், “அப்படியென்றால் முதலமைச்சரிடம் போய், ‘பாஜக தொண்டர்களை வாகன சோதனயின் போது நிறுத்தக் கூடாது’ என கடிதம் வாங்கி வாருங்கள்” என்று கூறி மூக்குடைக்கிறார்.

அதோடு அக்கும்பலிலிருந்து பல்வேறு நபர்களும் முன் வந்து காலிகளைப் போல் மிரட்டலாகப் பேச, “நீங்கள் தான் ஹிந்துக்களுக்கு முஸ்லீகளுக்கு இடையில் கலவரத்தை உண்டாக்கக் கூடிய வகையினர்” எனக் கடுமையாகச் சாடுகிறார். மேலும் “இப்படி குண்டர்களைப் போல நடந்து கொள்வது, நீங்கள் உண்மையிலேயே பாஜகவின் அடியாட்கள் என்பதாகவே மக்கள் மத்தியில் ஒரு கருத்தை ஏற்படுத்தும்” என்றும் சாடுகிறார். அதன் பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஐவர் மீது “அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தது” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளார்.

இந்த வீடியோ பெருமளவில் பரவத் தொடங்கியதையடுத்து, அப்பகுதி பாஜக எம்.எல்.ஏ,க்களும், எம்.பிக்களும் உ.பி. முதல்வர் சாமியார் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து இது குறித்து உடனடியாக அந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஸ்ரேஷ்தா தாக்கூர் நேபாள எல்லையில் உள்ள ‘பஹ்ரைச்’ மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஷ்ரேஷ்தா, ”நேபாள எல்லையிலுள்ள பஹ்ரைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்; கவலைப்பட வேண்டாம் என் நண்பர்களே, நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இதனை எனது சிறப்பான பணிக்கான வெகுமதியாக ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் பஹ்ரைச்சிற்கு வரவேற்கிறேன்”. என்கிறார்.

ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்த பின்னர் அதிகாரிகளை மிரட்டுவதும், ஒத்துவராத அதிகாரிகளை தூக்கியடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன

மேலும் உருது மொழியில் “விளக்கிற்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது, அது எங்கு வைக்கப்பட்டாலும், ஒளியைப் பரப்பும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஷ்ரேஷ்தாவின் இந்தப் பதிவும், வீடியோவும் வெகுவாய்ப் பரவ சமூக வலைத்தளங்கள் அவரைப் “பெண் சிங்கம்” என கொண்டாடுகின்றன.

ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்த பின்னர் இவ்வாறு அதிகாரிகளை மிரட்டுவதும், ஒத்து வராத அதிகாரிகளை தூக்கியடிப்பதும் ஷ்ரேஷ்தா தாக்கூரிலிருந்து தொடங்கவில்லை. மாறாக ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்ததும், குற்றச் செயலில் ஈடுபட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விசுவஹிந்து பரிசத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்களையும் தலைவர்களையும் கைது செய்த காரணத்தால் ஏற்கனவே சஹரான்பூர் மற்றும் ஆக்ரா மாவட்டத்தில் பணியிலிருந்த இரண்டு எஸ்.பி,க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாஜக எம்.பி ராகவ் லக்கன்பால், சஹரான்பூரில் வகுப்புவாதப் பிரச்சினை மிக்கப் பகுதிகளில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற குற்றத்திற்காக சஹரான்பூர் எஸ்.பி. லோவெ குமாரால் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ராகவ் லக்கன்பால், லோவெ குமாரின் வீட்டைத் தாக்கவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தவும் பாஜகவினரைத் தூண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே போல, கடந்த ஏப்ரல் 22 அன்று சடார் பஜார் போலீசு நிலையத்தில் உட்புகுந்து போலீசு நிலையத்தையும், போலீசாரையும் பஜ்ரங்தள், விசுவ ஹிந்து பரிசத் குண்டர்கள் தாக்கிய வழக்கில் ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களைக் கைது செய்த காரணத்திற்காகவே ப்ரித்திந்தர் சிங் ஆக்ராவிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டார். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்த பின்னர், மேற்கு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக, எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்களும் இவர்கள் இருவர் குறித்து அளித்த புகாரின் தொடர்ச்சியாகவே இந்தப் பணியிட மாற்றம் நடைபெற்றிருக்கிறது. தற்போது ஷ்ரேஷ்தா தாக்கூரின் பணியிட மாற்றமும் அவ்வாறே நடந்தேறியுள்ளது.

கிரிமினல்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, அடிபொடிகளின் கைகள் ஓங்கி தான் இருக்கும். அதுவும் சங்க பரிவாரக் கிரிமினல்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், குடிமக்களின் நிலைமை அதோ கதி தான். இதற்கு பாஜக கிரிமினல்கள் ஆளும் மாநிலங்களே சாட்சி!!

செய்தி ஆதாரம்: