privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககைப்பிள்ளைகளோடு கம்பு சுழற்றும் கலைஞானி கமல் !

கைப்பிள்ளைகளோடு கம்பு சுழற்றும் கலைஞானி கமல் !

-

“ஆழ்வார் பேட்டை ஆண்டவா, வேட்டியைப் போட்டுத் தாண்டவா” புகழ் உலக நாயகனை கலைஞானி என்று அழைப்பதே தமிழக மக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதில் அவரை அரசியல் ஞானி என்று அழைக்கும் காலத்தின் அரசியல் அஞ்ஞானத்தை கொஞ்சம் பார்ப்போம்.

கைப்பிள்ளை சண்டைக்கு கிளம்பினால் இன்று எத்தனை தலை உருளுகிறதோ என்ற வாசகத்தை கமலஹாசனுக்கும் அதிமுக அடிமை அமைச்சர்களுக்கும் நடக்கும் போரை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.

பிக்பாஸ் முன்னோட்டத்தில் பணம் வாங்கி ஓட்டுப் போடும் மக்களை விட நான் பெரிய நடிகனல்ல என்று அநியாயத்திற்கு நியாயம் பேசினார் கமல். பிறகு பிக்பாஸ் வார இறுதி தொகுப்புரையிலும் சரி டவிட்டரிலும் சரி அல்லது அவரது அறிக்கைகளிலும் சரி விஜய் டிவியில் இருந்து அவர் வாங்கும் பணத்தை எப்படி நியாயப்படுத்துகிறார்?

அவருக்கும் வீடு, சம்பாத்தியம், தொழில் இருப்பதால் அந்தப்பணம் தேவைப்படுகிறதாம். இதன்படி கமலின் தத்துவம் என்னவென்றால் பணம் வாங்கிக் கொண்டு நல்ல காரியங்களில் ஈடுபடலாம். அந்த நல்ல காரியங்கள் எவை என்று கலைஞானியே தீர்மானிப்பார்.

ஜெயா ஆண்ட போதும், மோடி இவரை “ஸ்வச்ச பாரத்” தூதராக நியமித்த போதும் கமலின் முதுகை மட்டுமே நாம் பார்த்தோம். தற்போது எடப்பாடி ஆட்சியில் அவரது வீரம் செறிந்த “பான் கேக்”முகத்தை பார்க்கிறோம். என்ன இருந்தாலும் எடப்பாடி வகையறாக்களோடு சண்டை போடுவதற்கு தனி வீரம் வேண்டுமல்லவா?

டவிட்டரில் இருக்கும் சினிமா பிரபலமான கமல், மெரினா எழுச்சிக்கு பிறகு கொஞ்சம் தைரியம் அடைந்து அரசியல் கீச்ச ஆரம்பித்தார். அந்த தைரியத் தருணங்களின் நல்வாய்ப்பாக புரட்சித் தலைவி அதே மெரினாவில் சமாதியானது தற்செயல் என்றாலும் கமல், ஓபிஎஸ்-ஐ ஆதரித்தார். மறு தேர்தல் வருமென்றார். தற்போது தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று பொத்தாம் பொதுவாக போட்டுப் பார்த்தார்.

அவர் டிவிட்டரில் பேசும் போதே அதிமுக அடிமை அமைச்சர்கள் கமலுக்கு தனி மரியாதை கொடுத்து பேசினார்கள். தமிழகத்தில் விவசாயி போராடுகிறார், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறார்கள், பெண்கள் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுகிறார்கள்… சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறிப்போனது.

அந்த போராட்டக் களத்தின் மக்களையோ இல்லை அவர்கள்து கேள்விகளுக்கோ பதில் சொல்லத் துப்பற்ற இந்த அஞ்சப்பர் பிரியாணி வாடிக்கையாளர்கள் கமலின் தும்மலுக்கு மட்டும் உடனே கைத்துண்டால் பிடித்து ஏந்தி மறு தும்மல் போட்டு காற்றில் பறக்க விட்டார்கள். ஊரெங்கும் இப்போது அஞ்ஞான சளி!

தமிழக அரசில் ஊழல் மலிந்திருந்தால் கமல் கோர்ட்டுக்கு போகவேண்டியது தானே என்கிறார் துணை சபாநாயகரும், இந்தியா முழுவதும் சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் முதலாளியுமான தம்பித்துரை. என்ன இருந்தாலும் வாய்தா ராணியின் நீதிமன்ற போங்காட்டத்தை அணு அணுவாக செய்த கும்பலைச் சேர்ந்தவராயிற்றே!

தமிழக அரசை கமல் தொடர்ந்து குறை கூறிப் பேசினால் அவர் மீது அவதூறு வழக்கு போடுவோம், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நாங்களும் பேசுவோம் என்கிறார் அமைச்சர் வேலுமணி. என்ன இருந்தாலும் தமிழகத்திலேயே ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மீது நூற்றுக்கணக்கான அவதூறு வழக்கு போட்டு சாதனை படைத்த தலைவியின் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே! இதில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருதரப்பும் பேசினால் அது தமிழக மக்களுக்கு பிக்பாஸையே விஞ்சும் ரியாலிட்டி தொடர் கிடைப்பது நிச்சயம்.

சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் இப்போது மூன்றாம் தர நடிகராக கமல் பேசிவருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழவுபடுத்தியிருப்பதால் அவரை வன்கொடுமை சட்டத்தில்  கைது செய்ய வேண்டும் என்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். உடுமலைப் பேட்டை சங்கர், தருமபுரி இளவரசன் ஆகியோரை மேலே அனுப்பிய ஆதிக்க சாதிவெறியின் கோட்டையான கொங்கு மண்டலத்தை கையில் வைத்திருக்கும் நாக்கு அப்படிப் பேசுகிறது. கமலும் தனது கவிதை கிடங்கிலிருந்து தலித் மக்களை சிலாகித்து வடித்த இரண்டு கவிதைகளை எடுத்து விட்டால் பிறகு அவரும் தலித் போராளிதான்.

கமலின் முதுகில் ஆயிரத்தெட்டு புளுகு மூட்டை உள்ளது. எங்களப் பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. தைரியமிருந்தால் அரசியலுக்கு வந்து பேசட்டும் என்கிறார் கார் டயரை வளைந்து நெளிந்து கும்பிடும் அமைச்சர் ஜெயக்குமார். சரி அருகதை உள்ள நம்மைப் போன்றோர் பேசியதால் அவர் அதை காது கொடுத்து கேட்பாரா? இல்லை கோவனை கைது செய்தது போல, திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் போட்டது போல செய்வாரா? கமல் அரசியலுக்கு வந்து ஊர் ஊராக சுற்றி, பூத் கமிட்டி போட்டு இந்த கடுமுழைப்பு வேலைக்கெல்லாம் அவர் கனவிலும் வரமாட்டார் என்ற தைரியத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார். ஆனால் சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு நாலு வரியில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டலே அதை சிலாகிக்க இங்கு ஒரு பெரும் கூட்டம் உள்ளது என்பது கமலுக்குத் தெரியாதா என்ன?

ஏதோ விளம்பரத்திற்காக இப்படிப் பேசுகிறார், பொத்தாம் பொதுவாக நான்காம் தரப் பேச்சாளர் போல கமல் பேசக்கூடாது என்று கடிகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. இவர் நாகரிகமாக பேசியதைக் கேட்டு காதைப் பொத்திக் கொண்டு பால்கனியில் டாட்டா காட்டும் அம்மணி தீபாவே புதிய தலைமுறையில் இருந்து விவாதம் ஒன்றில் வெளியேறினார். பிறகு தெர்மாக் கோல் போன்ற  குறிப்பான அறிவியல் கண்டுபிடிப்புகளின் நாயகனான செல்லூர் ராஜுவெல்லாம் கமலுக்கு உபதேசிப்பதைப் பார்த்தால் இனி அரசியல் நகைச்சுவைக்கு நாம் டி.ஆரை தேடக்கூடாது. கலைஞானி  கையிலிருக்கும் போது ராஜேந்திரின் தாடி வெடியெல்லாம் வெறும் நமத்துப் போன பட்டாசுதான்.

கமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தோடு அவர் நிறுத்தா விட்டால் அரசு சார்பில் அவர் மீது வழக்குப் போடுவோம் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. ஒரு வேளை புழலில் களி தின்ன வைத்தால் கலைப்புலி வளை எலியாகிவிடும் என்று நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் சசிகலா ஷாப்பிங் வசதிகளெல்லாம் கமலுக்கு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

இப்படி ஆள் மாத்தி ஆள் கமலின் தும்மல், விம்மல், பொறுமல், அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்த கமல் நாமும்  கொஞ்ச நாள் அரசியல் ஞானியாக நடிப்போமே என்று நினைத்து விட்டார் போலும். என்ன இருந்தாலும் நாலு சோப்ளாங்கி அடிமைகளோடு சண்டை போடும் போது பான் கேக்கால் தனது சோப்ளாங்கித்தனத்தை மறைக்கும் வித்தை தெரிந்த ஒரு நடிகருக்கு வீரம் வரலாம் அல்லவா?

மேலும் மற்ற எதிர்கட்சி தலைவர்கள் அவர்கள் மு.க ஸ்டாலினோ இல்லை கம்யூனிஸ்டு தலைவர்களோ அனைவரும் கலைஞானியின் பாதுகாப்பிற்காக வரிந்து கொண்டு வருகிறார்கள். மோடி அரசையும், எடப்பாடி அரசையம் விமரிசித்து ஒரு நோட்டிஸ் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் போட்டார்கள் அல்லவா! அதை கண்டித்தும் ஒரு அறிக்கை! கமலை ஆதரித்தும் ஒரு அறிக்கை! முடிந்தது ஜனநாயகக் கடமை!

இப்படி ஒன்றுமில்லாத தனது தும்மல்கள் ஆளும் அடிமைகளால் தலைப்புச் செய்திகளாக அன்றாடம் பத்து அணிவகுப்பதைப் பார்த்த கமல், ரஜனி ஃபார்முலாவில் இதோ, இந்தா, பாரேன் நானும் வாரேன் என்று ஒன்றை கொளுத்திப் போட்டார். காசா பணமா எல்லாம் டிவிட்டர் நறுக்குதானே?

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை, தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர், விரைவில் ஒரு விளி கேட்கும், புரியாதோர்க்கு நாளை  வரும் சேதி என்று படையாப்பாவின் இரண்டாவது வெர்ஷனை எடுத்து விட்டார். அதற்கு அச்சு – மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பொழிப்புரை, மர்ம விளக்குரை, மறைபொருள் உரை என்று மாறி மாறி ஒரே விசயத்தை விளக்கும் பொருட்டு அடித்துக் கொள்கிறார்கள்.

கமலுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நடிகையான கஸ்தூரியெல்லாம் வந்து கம்பு சுற்றுகிறார். அதிலும் ஜெயா ஆட்சியின் போது இந்த அமைச்சர்களெல்லாம் முதுகெலும்பு இல்லாமல் இருந்தவர்கள் இப்போது கமலை கண்டிப்பது ஏன் என்றெல்லாம் பேசுகிறார். இதையே கமலுக்கும் பொருத்தலாம் என்பது கூட அந்த அம்மையாருக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும்  கமல் முதுகு மட்டும் தங்க முதுகில்லையா?

இடையில் பந்தி முடிந்து விடும் என்று தமிழிசையும் எச்.ராஜாவும் இந்த சென்சேஷன் அல்ப விளம்பரத்தில் சுருட்டும் பொருட்டு கமலை செல்லமாக வைகிறார்கள். இதற்கு உடனே மோடிக்கு ஃபோன் போட்டால் நடப்பதே வேறு என்று கமலுக்குத் தெரியாதா என்ன? ரஜினியை ஒரு ஃபார்முக்கு கொண்டு வருவதற்குள் இந்த உத்தம வில்லன் வந்தால் உத்தம புத்திரர்களான பாஜக லோக்கல் தாதாக்களுக்கு கோபம் வராதா என்ன? என்ன கமலே பெரிய பாஜக தாதாக்களின் திண்ணையில் பேசக்கூடியவர் என்றாலும் லோக்கல் ஆட்டம் தனியில்லையா?

இந்தியாவில் பணமதிப்பிழப்பு, மாட்டு இறைச்சி தடை, ஜி.எஸ்.டி கொள்ளை, நீட் சதி என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் மக்கள் சிக்கி வதைபடுகிறார்கள். அதிலெல்லாம் அறச்சீற்றம் அடையாத கமல் தனது பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டுக்காக அதிமுக அமைச்சர்களோடு மகாபாரதயுத்தமே நடத்துகிறார்.

இதுதான் தமிழகத்தின் சாபக்கேடா?
_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி