Monday, January 13, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்மாட்டிறைச்சி தடையால் காலாண்டில் இறைச்சி விலை 45% உயர்வு !

மாட்டிறைச்சி தடையால் காலாண்டில் இறைச்சி விலை 45% உயர்வு !

-

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

–    குறள் 551

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

பாரதத்தின் சக்கரவர்த்தி மோடியின் ஆசியால் பணமதிப்பழிப்பு, விவசாயிகள் பிரச்சினை, மாட்டிறைச்சி தடை மூன்றும் தொழில், உணவு, வாழ்வு மூன்றையும்  சின்னாப்பின்னமாக்கியிருக்கிறது.

விவசாயிகள் மரக்கறியைத்தான் உற்பத்தி செய்கின்றனர். அதிலும் அவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. சென்னையில் தக்காளி தங்கத்தோடு போட்டி போடுகிறது. சரி மலிவான புரதச்சத்து அளிக்கும் மாட்டுக்கறியாவது மக்களுக்கு கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை.

இதைத்தான் திருவள்ளுவர் கச்சிதமாக வரையறுத்திருக்கிறார்.

கடந்த 2017 மே மாதம் மாடு விற்பனை தடை மூலம் மாட்டிறைச்சிக்கு மறைமுக தடை விதித்தது மோடி அரசு. சில வாரங்களிலேயே இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு சப்ளை 75% சரிந்தது. இந்த செயற்கைத் தட்டுப்பாடு மூலம் பிற இறைச்சிகளான மீன், கோழி, ஆடு, பன்றி போன்றவற்றின் விலை இடத்தைப் பொறுத்து 30 முதல் 45% அதிகரித்து விட்டது.

இது ஒருபுறமிருக்க சாதாரண மக்களுக்கான முனியாண்டி விலாஸ் முதல் வசதியானவர்களுக்கான அஞ்சப்பர், அதற்கு மேல் நட்சத்திர விடுதிகளில் இந்த தடை காலத்தில் அனைத்து வித இறைச்சிகளையும் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருந்தது. அதே நேரம் மெனுவில் எந்த விலையையும் அவர்களால் ஏற்ற முடியவில்லை. ஆகவே இந்த அசைவ உணவு விடுதிகள் தமது இலாபத்தைக் குறைத்துக் கொண்டன.

அதே போல இறைச்சிகளை மொத்தமாக சப்ளை செய்யும் வணிகர்களும் நீண்ட கால ஒப்பந்தம் போட்டிருப்பதால் விலையை கொஞ்சம்தான் உயர்த்த முடிந்தது. ஆக இறைச்சி அளிப்போரோ இல்லை வாங்குபவோர இருவரில் ஒருவர் அதிகமாகவும், மற்றவர் குறைவாகவும் இந்த சுமையை சுமக்க வேண்டியிருந்தது.

இயற்கையான தட்டுப்பாடு இல்லாமல் ஒரு துக்ளக் மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்த செயற்கையான தட்டுப்பாட்டால் உணவு விடுதிகள் திணறிவிட்டன. விலையையும் உயர்த்த முடியாமல், இறைச்சியை மலிவாக வாங்கவும் முடியாமல் இருபுறமும் அடிவாங்கினர். சாப்பிடும் மக்களும் இக்காலத்தில் அதிகம் சாப்பிடவில்லை என்பதால் விடுதிகளின் இலாபம் பெரிதும் குறைந்தது.

ஏற்கனவே பணமதிப்பழிப்பு காலத்தில் விற்பனை பாதிக்கப்பட்டது, தற்போது மாட்டிறைச்சி ரூபத்தில் வர்த்தகம் அடி வாங்கியது. இறுதியில் ஜி.எஸ்.டி ரூபத்தில் மூன்றாவது அடி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் இறைச்சி அளிப்போர் மற்றும் இறைச்சி உணவு விடுதிகள் நடத்துவோர் ஒரு சேர இப்படித்தான் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கில் வேலை, கருப்புப் பணத்தை கைப்பற்றி வங்கியில் அளிப்பேன் என்று தேனும் பாலும் ஒடும் என்று உதார் விட்ட மோடி இறுதியில் நம் கையில் இருந்த ஒரு தம்மாத்துண்டு சிக்கன் 65 பீசைக் கூட பிடுங்கி விட்டார்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க