privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாபாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

-

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

ந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரப்பிடாது, நானும் வர மாட்டேன்… பேச்சு பேச்சாத்தான் இருக்கட்டும்” என்று சீனாவிடம் கட்டன் ரைட்டாக சொல்லி விட்டது இந்தியா. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றால், இரு நாடுகளும் தங்களது துருப்புக்களை தோக்லம் பகுதியில் இருந்து பின் வாங்கிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிக்கிம், பூட்டான் மற்றும் சீனாவின் எல்லைக் கோடுகள் சந்திக்கும் பகுதியில் சீன இராணுவம் புதிதாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதாக கூறி இந்தியா தனது துருப்புக்களை எல்லையில் குவித்தது. கடந்த ஒரு மாத்ததிற்கும் மேலாக இந்நாடுகளிடையே நிலவும் முறுகல் நிலையில் சீனாவின் அரசு சார்புள்ள பத்திரிகைகள் இந்தியாவின் மேல் வன்மத்தைக் கக்கி எழுதி வந்தன. இந்தியத் துருப்புக்கள் பூட்டானை முக்காடாகப் போட்டுக் கொண்டு தனது எல்லைப் பகுதியில் அத்துமீறிப் பிரவேசித்துள்ளதாகவும், ஒழுங்கு மரியாதையாக ஓடிப் போகாவிட்டால் அடித்துப் பத்தி விட்டு விடுவோம் என்றும் சீனப் பத்திரிகைகள் படு கேவலமாக இந்தியாவை ஏசி வருகின்றன.

இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்துடன் கடுமையாக போர் புரிந்த டைம்ஸ் நௌ தொலைக்காட்சி, #Boycotpakmatch, #NaMoSnubSharif, #pakTerrorState, #PakDalalTwist உள்ளிட்டு சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ஹேஷ்டாக் ரக ஏவுகணைகளை பாகிஸ்தான் தலைநகரை நோக்கி ஏவியது. ரிப்பப்ளிக் தொலைக்காட்சியும் ஜீ தொலைக்காட்சியும் டைம்ஸ் நவ்வுக்கு சற்றும் சளைக்காமல் தங்கள் சொந்த தயாரிப்பான ஹேஷ்டாக் ரக போர் விமானங்களின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளில் குண்டு மழை பொழிந்தன.

இந்திய இராணுவத்துக்கு ஒரு இழுக்கு என்றால் கும்பலாக வந்து கும்மியடித்துச் செல்லும் தேசிய பத்திரிகைகள் சீன விவகாரத்தில் மட்டும் அநியாயத்துக்கு அமைதிகாத்தன. இந்திய தேசிய ஊடகங்களின் மேஜர் ஜெனரெல் அர்னாப் கோஸ்வாமி (ரிப்பப்ளிக் டி.வி), காப்டன் ராகுல் சிவசங்கர் (டைம்ஸ் நௌ) துவங்கி பூபேந்திர சௌபே (நியூஸ் 18) வரையிலான போர் வீரர்கள் சீன டிராகனின் முதுகை வருடிக் கொண்டிருப்பதைப் பார்த்து தேஷ பக்தாள் சமூகம் மனம் புழுங்கிக் கொண்டிருக்கின்றது.

எனினும், சண்டை என்று வந்து விட்ட பின் ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? எனவே காங்கிரசு கட்சித் தலைவர்களில் யார் யாரெல்லாம் சீன உணவகங்களில் மோமோ தின்றார்கள் என்ற விவரத்தை புலனாய்வு செய்து கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் வேலையை மேற்படி ஊடகங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. கண்ணாடியைத் திருப்பி வைத்தால் எப்படி ஆட்டோ ஓடும் என்பது இன்னமும் ஹெச்.ராஜா உள்ளிட்ட நாக்பூர் தயாரிப்புகளுக்கு புரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருப்பதாக கேள்வி.

போகட்டும்.

56 இன்சு மார்பகத்தோன் சீன சவளைப் பிள்ளையை பொடனியில் ஒரே போடாக போட்டு விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமே? ஏன் அது முடியவில்லை? பாரத மாதாவுக்கு பேராபத்தை ஏற்படுத்தியிருக்கும் சீனாவோடு தேச பக்தாள் துவந்தம் செய்திருக்க வேண்டாமோ? அட குறைந்தபட்சம் இந்தியாவுக்கு விரோதமான சீனத்தின் பொருட்களுக்கு தடையாவது விதித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி, சீனா என்றவுடன் பம்மிப் பதுங்குவதேன்?

முதலாளித்துவ அறிவுஜீவிகள் இதற்கு வேறு காரணங்கள் சொல்கின்றனர். அதாவது, சீனாவின் இராணுவம் இந்திய இராணுவத்தை விட படைபலத்திலும், ஆயுத பலத்திலும் பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது என்கின்றனர். இந்நிலையில் சீனாவுடன் இந்தியா போரில் இறங்கினால், 1962 போரில் இந்தியாவுக்கு கிடைத்த தோல்வியை விட படுமோசமான தோல்வியை இந்தியா சந்திக்க நேரிடும் என போரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளில் ஓரளவுக்கு உண்மை இருக்கலாம். எனினும், கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவை ஆண்டவர்கள் இந்த நாட்டை படிப்படியாக அமெரிக்காவின் அடியாளாக மாற்றி வைத்துள்ளனர். சீனாவுடன் ஒரு போரைத் துவங்குவது தற்போதைய சர்வதேச அரசியல் நிலைமைகளில் அமெரிக்க நலனுக்கு உகந்ததாக இல்லை. வட கொரியா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சீனாவின் தயவை அமெரிக்கா நாடி நிற்கும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு போர் ஏற்பட்டால் அதில் இந்தியாவுக்கு சாதமான ஒரு நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்காது.

இவையெல்லாம் 56 இன்சு மார்பகத்தோனுக்கு மட்டுமல்ல, அவரின் துதிபாடிகளான தேசிய ஊடகங்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். எனவே தான் மொத்தமாக அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், எல்லையில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பதற்ற நிலையை தக்கவைத்துக் கொள்வது உள்நாட்டில் தேசிய வெறியை தூண்டுவிடும் என்பதால், சீன டிராகனைக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தான் விவகாரம் முற்றிலும் வேறானது.

படைபலத்திலோ, இராணுவ ஆயுத பலத்திலோ பாகிஸ்தான் நம்மை விடப் பின் தங்கியுள்ளது என்பதோடு, அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் தேவை மெல்ல மெல்லக் குறைந்து வருகின்றது. எனினும், முற்றாக தேவையற்ற நாடாக மாறி விடவில்லை. எனவே பாகிஸ்தானுடனான முறுகல் நிலையை முழு அளவிலான போர் எனும் அளவுக்கு இல்லாவிட்டாலும், மேலும் பதற்றமான நிலைகளுக்கு எடுத்துச் செல்வதில் இந்தியாவுக்குத் தடையில்லை. சீனாவுடனான பதற்ற நிலையைக் காட்டிலும் பாக்கிஸ்தானுடனான பதற்ற நிலையை மேலும் அடர்த்தியான – அதே நேரம் அமெரிக்க நலன்களுக்கு முரண்படாத – தொலைவுக்கு இந்தியா எடுத்துச் செல்லலாம்.

அதே நேரம், பாகிஸ்தானுடனான பதற்ற நிலையை முன்னிறுத்தி இந்தியாவுக்குள் இருக்கும் இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பரசியலை தொடர்ந்து சூடாக வைத்திருக்கவும் இந்துத்துவ அரசியலுக்கு சாத்தியமாகின்றது. எனவே தான் கட்டதுரை சீனாவிடம் பம்மும் இந்திய கைப்பிள்ளை, பூச்சிப்பாண்டி பாகிஸ்தானிடம் விரைத்துக் கொண்டு நிற்கிறது.

இந்த மொத்த தேசபக்த கபட நாடகத்தில் காவி டவுசர்களின் முகமூடி படுகேவலமாக கிழிந்து தொங்குகின்றது. எனவே தான் சீனப் பொருட்களுக்கு தடை விதிக்க மறுக்கும் காவிகள், வாட்சப் குறுஞ்செய்திகளின் மூலம் சீனப் பொருட்களை வாங்கும் இந்தியர்களை தேச விரோதிகளாக சித்தரித்துக் கொண்டுள்ளனர்.

செய்தி ஆதாரம்:

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி