Tuesday, January 26, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா கனவான்களின் ஜெர்மனியில் ஒரு கருப்பன் படும் பாடு

கனவான்களின் ஜெர்மனியில் ஒரு கருப்பன் படும் பாடு

-

“-  ய்! கருப்பா தள்ளிப்போ!”
 -“ஏய்! வெள்ளை!”
-“ஏய்… என்ன வெள்ளை? உனது எஜமானைப் பார்த்து அப்படி சொல்ல மாட்டாய்.”
-“நான் வெள்ளை என்று மட்டுமே சொன்னேன்.”
“-வெள்ளை என்றால் ஜெர்மன் என்று அர்த்தம், நண்பா”
“-அப்படி என்றால் என்ன? விளங்கப்படுத்து.”
“எனது ….. “
 (முதுகைத் திருப்பி வளைந்து பிட்டத்தைக் காட்டுகிறான்.)

நிலைமை மோசமடையும் போலத் தெரிகின்றது. சுற்றவிருக்கும் உதைப்பந்தாட்ட வெறியர்கள் குடித்து விட்டு சண்டைக்கு வருவார்கள் போல் தெரிகின்றது. அவர்களது சட்டையில் காணப்படும் ஹிட்லரையும், நாஜிகளையும் நினைவு கூறும் வாசகங்கள் வேறு பயமுறுத்துகின்றன.

ஜெர்மனியில் டிரெஸ்டென் நகர உதைப்பந்தாட்ட அரங்கத்திற்கு முன்னால் நடந்த சம்பவம். இருபது வயது மதிக்கத்தக்க வெள்ளையின உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு மத்தியில், தன்னந்தனியாக ஒரு கருப்பன் நின்றிருந்த பொழுது இடம்பெற்ற வாக்குவாதம் அது. அந்தக் கருப்பன் உண்மையில் ஒரு வெள்ளையின ஜெர்மானியர்! பிரபல எழுத்தாளர் Günter Wallraff“உன்னதமான நாகரீகத்தைக் கொண்ட” ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர். இம்முறை அவர் எடுத்துக் கொண்ட விஷயம் “நிறவாதம்”. சாமானியர்களான “அப்பாவி” ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இதற்காக தனது மேனியின் நிறத்தையே கருப்பாக மாற்றிக் கொண்டு, ஒரு ஆப்பிரிக்க கருப்பனாக வாழ்ந்து பார்த்திருக்கிறார்.

வெள்ளை நிறத்தோலை கறுப்பு நிறமாக்குவது நடைமுறைச் சாத்தியமல்ல. 1959 ம் ஆண்டு, John Howard Griffin என்ற எழுத்தாளர் அமெரிக்காவில் “ஒரு கருப்பனாக” பயணம் செய்து கறுப்பினத்தவர்களின் அவலங்களை Black Like Me என்ற நூலில் பதிவு செய்தார். தனது தோலை கறுக்க வைக்க அவர் பாவித்த மாத்திரைகள் இறுதியில் அவருக்கு எமனாக மாறின. குய்ந்தர் வல்ராப் அது போன்ற ஆபத்தான பரிசோதனையை செய்யவில்லை. பெண்களுக்கு மேக்கப் போடும் ஒரு நிபுணரை அணுகியுள்ளார். விசேஷ ஸ்ப்ரே மூலம் அவரது தோலை கறுக்க வைத்துள்ளார். தலையில் சுருட்டைமுடி விக் அணிந்து கொண்டார். பார்ப்பதற்கு அசல் ஆப்பிரிக்க கருப்பன் போல இருந்த அவரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.

வல்ராப் தன்னோடு சில நடிகர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கறுப்பனைப் பற்றி சாதாரண வெள்ளையர்கள் தமக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அறியும் ஒற்றர்கள். தேவைப்பட்டால் சம்பாஷணைகளை கமெராவில் அல்லது ஒலிவாங்கி மூலம் பதிவு செய்து கொண்டு வருவார்கள். வால்ராப் “கருப்பனாக” வாழ்ந்து பார்த்த அனுபவங்களை, “அற்புதமான புது உலகம்” (Aus der schönen neuen Welt) என்ற நூலில் எழுதியுள்ளார். அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறேன். வால்ராபின் பயணம் கிழக்கு ஜெர்மனியில் அரசர் காலத்து மாளிகைகளையும், பூந்தோட்டங்களையும் கொண்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற வெர்லிட்ஸ் எனுமிடத்தில் ஆரம்பிக்கின்றது.

சாமானியர்களான “அப்பாவி” ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார் பிரபல எழுத்தாளர் Günter Wallraff

ஜெர்மன் உல்லாசப்பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஆற்றில் மிதந்து சென்று கொண்டிருக்கிறது. வழிகாட்டி ஜெர்மன் சரித்திரக் கதைகளை சொல்லிக் கொண்டு வருகிறார். “….. அன்று இளவரசர் Franz விரும்பிய பெண்ணை மணம் முடிக்க, பிரசிய நாட்டு அரசனான அவரது தந்தை விடவில்லை. பிரன்ஸ் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் வாழ விரும்பினார். ஆனால் அரசன் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இறுதியில் இளவரசர் மாமன் மகளை கலியாணம் செய்து கொண்டு ஜெர்மனியிலேயே தங்கிவிட்டார்.” கேட்டுக் கொண்டிருந்த வால்ராபினால் சும்மா இருக்க முடியவில்லை. “(முறைப் பெண்ணை மணம் முடிப்பது) தடை செய்யப்பட்டுள்ளது அல்லவா? இதையெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட (பெற்றோர் நிச்சயித்த) திருமணங்கள் என்றல்லவா சொல்வார்கள்?”

ஜெர்மனியில் வாழும் இஸ்லாமிய, இந்து சமூகங்கள் மத்தியில் உறவுக்குள் திருமண ஒப்பந்தங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த “காட்டுமிராண்டி கால” வழக்கத்தை ஜெர்மன் அரசாங்கமும், ஊடகங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. “ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணங்கள்” பிற்போக்கு கலாச்சாரம் கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம் எனக் கூறி வருகின்றன. (தமிழ் வாசகர்களுக்கு ஜெர்மன் சமூக கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தும் எனது சிறு விளக்கம். தமிழ்க் கலாச்சாரத்தில் “பெற்றோர் நிச்சயித்ததாக” கூறுவதை, அவர்கள் “நிறுவனமயப் படுத்தலாக” புரிந்து கொள்கின்றனர். நூலில் இல்லை.) இன்றைய ஜெர்மானியர்கள் கருதுவதைப்போல “ஆதி காலம் தொட்டு நாகரீகமடைந்த சமூகமாக” இருக்கவில்லை. ஜெர்மனிய சமூகமும் பல “பிற்போக்கு அம்சங்களை” கொண்டிருந்தது. இதைத் தான் அன்று அந்தப் படகுப் பயணத்தில், சக ஜெர்மானியர்களுக்கு வல்ராப் தெளிவுபடுத்தியுள்ளார்.

வல்ராபின் விமர்சனம் பலரை புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. படகுப் பயணம் முடிவடையும் தருணம் இவரருகில் வந்த ஜெர்மன்காரர் கேட்கிறார்:
– ” நீ எப்படி இவ்வளவு சரளமாக ஜெர்மன் பேசுகிறாய்? “
– ” தான்சானியாவில் கோதே (ஜெர்மன் மொழிக்) கல்லூரியில் கற்றேன்.”
ஒருவருக்கொருவர் தெரியாத மற்ற பயணிகள் “நீங்கள்” என்று பன்மை விகுதியில் அழைக்கின்றனர். இவர் மட்டும் “நீ” என்கிறார். பொதுவாகவே மேற்கு ஜெர்மானியர்களை விட கிழக்கு ஜெர்மானியர்கள் “நீங்கள்” பாவிப்பது குறிப்பிடத்தக்கது.
-” வேலை செய்கிறாயா?” 
“- இல்லை”
-“இங்கே படகு வலிக்கும் வேலை கிடைக்கலாம்” (சைகை செய்து காட்டுகிறார்.)
நான் ஒரு கருப்பன் என்பதால் கூலி வேலைக்கு தான் லாயக்கு என்று அவர் கருதுவது புரிகின்றது.

வேறு பல சந்தர்ப்பங்களிலும், தனக்கு ஜெர்மன் புரியாது என நினைத்துக் கொண்டு தன் முன்னிலையில் ஜெர்மன் மொழியில் பேசி சிரித்தவர்கள், பற்றி வல்ராப் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டவரை கேலிப்பொருளாக கருதுவது நவீன நிறவாதம். ஜெர்மனியில் மட்டுமல்ல, வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற சிறுமைப்படுத்தும் ஏளனப் பேச்சுகள் சகஜம். இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் போல தோற்றமளிப்பவர்களிடம் எடுத்தவுடன் ஆங்கிலத்தில் பேசுவது கூட அதற்குள் அடக்கம்! (அதாவது உங்களுக்கு “ஆங்கிலம் போன்ற இலகுவான மொழிகளை” மட்டுமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் உண்டு.) மொழியறிவு குறைந்த வெள்ளையின ஐரோப்பியர்களுடன், அப்படி (ஆங்கிலத்தில் பேசுவது) நடந்து கொள்ள மாட்டார்கள்.

மேற்கு ஜெர்மனியில் கெல்ன் நகரத்தில், வல்ராப் பத்திரிகையில் வீடு வாடகைக்கு விளம்பரத்தை பார்த்து விட்டு தொலைபேசியில் அழைக்கிறார். வீட்டைப் பார்வையிட நேரம் கணித்து விட்டு அங்கே செல்கிறார். வீட்டை சுற்றிக் காட்டும் வயதான ஜெர்மன் மாது, “படிகளை சுத்தப்படுத்த மாதம் 26 யூரோ” மேலதிகமாக கேட்கிறார். வல்ராப் சென்று மறைய, அவர் அனுப்பிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். என்ன அதிசயம்! அவர்கள் 26 யூரோ கொடுப்பதற்கு பதிலாக, படிகளை தாமே சுத்தப்படுத்திக் கொள்வதாக கூற அதற்கு அந்த மூதாட்டி சம்மதிக்கிறார். மேலும் சற்று முன்னர் வந்து விட்டுப் போன கறுப்பனைப் பற்றி முறைப்பாடு செய்கிறார். “அவன் இங்கிருக்க வேண்டிய ஆள் இல்லை. வீடு வாடகைக்கு எடுக்க வந்தான். தொலைபேசியில் பேசிய பொழுது சரளமாக ஜெர்மன் பேசினான். வருபவன் கருப்பா, வெள்ளையா என்று தொலைபேசியில் மணந்து பார்க்க முடியுமா?”

காட்டில் வேட்டையாடும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் வெள்ளை ஜெர்மானியர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். வல்ராப் அதையும் ஒரு கை பார்த்து விடுவது என்று களத்தில் இறங்குகிறார். தென் ஜெர்மன் மாநிலமான Beieren இல், தனது ஆப்பிரிக்க நண்பனையும் சேர்த்துக் கொண்டு, “வேட்டை அனுமதிப் பத்திரம்” பெறுவதற்காக அரசாங்க அலுவலகம் செல்கிறார். அலுவலக வரவேற்பறையில் நின்றிருந்த பெண் “இரண்டு கறுப்பன்கள் வருவதைக் கண்டவுடன்” தனது மேலதிகாரியை கூப்பிடுகிறார். மேலதிகாரி இருவரையும் மேலும் கீழும் பார்த்து விட்டு: “இதற்கெல்லாம் அடையாள அட்டை வேண்டும்” என்கிறார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அரச அலுவலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்வார்களா? என்ற யோசனையே இல்லாமல் பேசுகிறார். தாம் இருவரும் ஜெர்மன் பிரஜைகள் என்றும், விண்ணப்ப பத்திரத்தை கொடுக்குமாறும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கூறுமாறும், வல்ராப் கேட்கிறார். உடனே பொறுமையிழந்த மேலதிகாரி சத்தம் போடுகின்றார்: “இடத்தைக் காலி பண்ணுங்கள். இல்லாவிட்டால் போலீசைக் கூப்பிடுவேன்.”

ஜெர்மனியில் வாழும் கருநிற மேனியர்கள் தினசரி அனுபவிக்கும் நிறவாதம் இது போன்றது. அவர்களின் தோலின் நிறத்திற்காக அரசாங்கம் அவர்களை சந்தேகிக்கின்றது. பொது இடங்களில் போலீஸ் அவர்களிடம் மட்டும் தான் அடையாள அட்டை கேட்கின்றது. Charles Friedek ஒரு பிரபலமான கறுப்பின ஜெர்மன்காரர். உலகக் கிண்ணத்தை கைப்பற்றி ஜெர்மனிக்கு பெருமை தேடித்தந்த தடகள விளையாட்டு வீரர். அவர் ஒரு முறை பத்திரிகை பேட்டியில் அரச நிறவாதம் குறித்து முறைப்பாடு செய்தார். “நான் தற்போது ஒரு வயதான நபர். அண்மையில் கூட விமான நிலையத்தில் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டார்கள். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் பாஸ்போர்ட் சோதனை இன்றி செல்ல முடிந்தது. என்னை மட்டும் மறித்து வைத்திருந்தார்கள். ஏன்? நான் தான் ஒரேயொரு கருப்பன்!” (இந்த குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கும் வேறு பலருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் அத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.)

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரிந்திருந்த ஜெர்மன் ஜனநாயக குடியரசும் (கிழக்கு ஜெர்மனி), ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும் (மேற்கு ஜெர்மனி) “கருப்பர்களை” வெள்ளையின சமூகத்துடன் சேர விடாமல் தனிமைப்படுத்தி வைத்திருந்தன. கிழக்கு ஜெர்மனி ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஷலிச நாடுகளில் இருந்து மாணவர்களையும், தொழில் பயிலுனர்களையும் அழைத்து வைத்திருந்தது. ஆனால் விருந்தாளிகள் என்ற அந்தஸ்தில் ஜெர்மன் சமூகத்துடன் சேர விடாமல் முகாம்களில் வைத்திருந்தனர். மேற்கு ஜெர்மனி துருக்கியில் இருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளிகளை அவ்வாறு முகாம்களில் வைத்திருந்தது. பிற்காலத்தில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்கவே கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இன்று கிழக்கு ஜெர்மனியில் நிறவாதம் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்கின்றது. ஆனால் மேற்கு ஜெர்மனியில் அது மறைபொருளாக வேறு வழிகளில் காண்பிக்கப்படுகின்றது. அது இன்று நவீன நிறவாதமாக பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. “நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர்கள் இங்கே இருக்க வேண்டியவர்கள் அல்ல!” புராதன நிறவாதம் வெள்ளயினத்தவர்களின் நாட்டினுள் வாழத் துணியும் அந்நியர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. ஆனால் நவீன நிறவாதம் அப்படியல்ல. அந்நியர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, அவர்களை எட்டத்தில் வைத்திருக்க விரும்புகிறது.

பெர்லினைச் சேர்ந்த “நிற வெறிக்கு எதிரான அமைப்பு” தொண்ணூறுகளின் பின்னர் இனவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஆவணப்படுத்தியுள்ளது. 1993 இல் இருந்து 761 அகதிகள் தாக்கப்பட்டுள்ளனர். முகாம்களுக்கு நெருப்பு வைத்த அசம்பாவிதத்தில் அகப்பட்டு மரணமுற்றவர்கள் 67 பேர். தெருவில் அகப்பட்டு கும்பல் வன்முறைக்கு இலக்காகி 15 அகதிகள் இறந்துள்ளனர்.

“மொட்டைத் தலையர்கள்”(ஸ்கின் ஹெட்ஸ்), ஹிட்லரையும், நாஜிசத்தையும் ஆராதிக்கும் நிறவெறிக் காடையர்களே வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சாதாரண உதைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடக்கும் இடங்களில் அவர்களைக் காணலாம். 88 அல்லது 18 போன்ற இலக்கங்களைக் கொண்ட சட்டை போட்டிருப்பார்கள். அந்த இலக்கத்தில் என்ன இருக்கிறது? “Heil Hitler” – இந்த ஜெர்மன் சொற்களில் வரும் முதல் எழுத்தான “H” அரிச்சுவடியில் எட்டாவது இடத்தில் வருகின்றது! அதே போன்றது தான் Adolf Hitler (18). அதற்கடுத்ததாக ஒரு பிரிட்டிஷ் பாஷன் கம்பெனி தயாரிக்கும் “Lonsdale” பிராண்ட் ஆடைகளும் நாஜி ஆதரவாளர்களிடையே பிரபலம். நாஜிக் கட்சியின் பெயரின் சுருக்கமான NSDA அதற்குள் மறைந்துள்ளது! ஜெர்மனியில் மேற்குறிப்பிட்ட சொற்களை நேரடியாக பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனிக்குள் கருப்பனாக சுற்றிக் கொண்டிருந்த வல்ராப், ஒரே ஒரு இடத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டார். கிழக்கு ஜெர்மனியில் மாக்டபூர்க் என்ற நகரில் ஒரு வாகன வர்த்தகர் இவரை சரியாக இனங்கண்டு கொண்டார். ஆயினும் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை. இருந்தாலும் “பொதுவாகவே கிழக்கு ஜெர்மானியர்கள் நிறவெறியர்கள் என்பதைப் போல (மேற்கு) ஜெர்மன் ஊடகங்கள் ஒரு பக்க சார்பான கருத்துகளை பரப்பி வருவதாக” விசனமுற்றார். அதற்கு பதிலளித்த வல்ராப், தான் இரண்டு பக்க ஜெர்மனியிலும் நிலவும் நிறவாதம் பற்றியே ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். பின்னர் ஒரு நேரம் வல்ராபை நேர்காணல் செய்த மாக்டபூர்க் பத்திரிகையாளர், இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். “உங்களது அரிய செயல், எமது நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இல்லாதொழிப்பதில் பங்காற்றுமாகில், அதற்கு நான் துணை நிற்கிறேன்.” என்று வாழ்த்தி அனுப்பினார்.

நன்றி: தோழர் கலையரசன் – கலையகம்

________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க