Friday, February 3, 2023
முகப்புசெய்திமோடியின் பொய்களும் புரட்டுகளும் - மாதவராஜ்

மோடியின் பொய்களும் புரட்டுகளும் – மாதவராஜ்

-

வாய்க்கு வந்தபடி உளறுவதில் கின்னஸ் சாதனை வைத்தால் மோடியை அடிக்க ஆளில்லை என்ற நிலைமைதான் இருக்கிறது. Bluff Master Modi என குஜராத்திலிருந்து வெளியிடப்பட்ட புத்தகம் இப்போது பரபரப்பாக விற்பனையில் இருக்கிறது. ஆராய்ந்து பார்த்ததில், பிரதமரான இந்த மூன்று வருடங்களில் மோடி இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொய்களையும், உளறல்களையும் 56 இஞ்ச் மார் தட்டி பேசி இருப்பதாக இணையதளத்தில் ஒரு ஆவணக் குறிப்பு இருக்கிறது.

அந்த உளறல்களையும் அண்டப்புளுகுகளையும் கொஞ்சம் தொகுத்துப் பார்க்கத் தோன்றியது. ஆரம்பிப்போம்.

மோடியின் பொய்களும் புரட்டுகளும்

டெல்லியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாயின் இல்லம்

1. “பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்து ஆட்சி நடத்தி இருந்தாலும், வாஜ்பாய் அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது” என பாஜக தலைவர்களின் எளிமையான வாழ்க்கையை குறிப்பிட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஜனவரி, 12, 2014ல் கோவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார்.

ஆனால் 2004ல் பாராளுமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த மனுவில் வாஜ்பாயே தனக்கு multi-storeyed apartment in East of Kailash, New Delhi இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

***

2. குஜராத்தில் குடிக்கும் தண்ணீருக்கான ஏற்பாடுகளில் முக்கியமானவை சர்தார் சரோவர் கால்வாயும், மஹி குழாய்களும் ஆகும். அதன் ஒருபகுதி தான் கட்ச் பகுதிக்கான குடிநீர் குழாய்கள் திட்டமும் ஆகும்.

1985 -ல் ராஜீவ் காந்தி பிரதமாராய் இருந்தபோது ஒரு தொழில் நுட்பக் குழுவை குஜராத்திற்கு அனுப்பி, ஆராய்ந்து, இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

சர்தார் சரோவர் கால்வாய்

படிப்படியாக நர்மதா நதியின் தண்ணீர் குஜராத்தின் கிராமப்புறங்களுக்கு, முக்கிய பகுதிகளுக்கும் கிடைத்துக்கொண்டு வருகிறது. மார்ச் 1999-ல் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, வாஜ்பாய் அமைச்சரவையில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு.பாபகவுடா பட்டீல், கட்ச் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் இந்த திட்டம் பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

2001 அக்டோபரில் முதலமைச்சராகிறார் மோடி.

2003ம் வருடம் மார்ச் 18 -ம் தேதி கட்ச் பகுதிக்கும் தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அந்த நாளின் கொண்டாட்டத்தின்போது மோடி இந்த திட்டத்தை துவக்கி வைத்த மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியை மிகவும் பாராட்டுகிறார்.

இவையெல்லாம் 1985 – 2003 வரையிலான இந்த குடிநீர்த் திட்டத்தின் வரலாறு.

பத்து வருடம் கழித்து, பாஜவின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுகிறார். அதைத் தொடர்ந்து 2013 செப்டம்பர் 15 -ல் ரேவரியில் நடந்த பெரும் கூட்டத்தில் மோடி அவிழ்த்து விட்ட புளுகைப் பாருங்கள்.

“சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னரும், நம் சிப்பாய்களுக்கு ஓட்டகங்கள் சுமந்து தண்ணீர் கொடுக்கும் நிலைமையே இருக்கிறது. நான் சிப்பாய்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது படும் வேதனையை என் கண்களால் பார்த்தேன். நண்பர்களே! நான் கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ தொலைவுக்கு குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதியின் தூய்மையான தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையாலும், அன்பாலும் இதனை நான் செய்தேன்.”

***

3. குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்த போது காந்திநகரில் இரண்டு நாட்கள் நடந்த Vibrant Gujarat Global Investment Summit-ன் போது 450 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டிற்கு 7,936 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அதன் மூலம் குறைந்த பட்சம் 52 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என 2011, ஜனவரி 13 -ம் தேதி அளந்துவிட்டார். அவரது வலைப்பக்கத்திலும் இந்த செய்தி வெளியிடப்பட்டது.

உண்மை என்ன தெரியுமா. 2011 -ம் வருடத்தில் இந்தியாவுக்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவே 30.38 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குத்தான். இதில் குஜராத்தின் பங்கு 2.38 சதவீதமே.

சரி, 450 பில்லியன் அமெரிக்க டாலர் என்றால் எவ்வளவு தெரியுமா? இந்தியாவின் மொத்த GDPயில் மூன்றில் ஒரு பங்கு!

சிறிய அளவிலான வித்தியாசங்களோடும், கவனக்குறைவாகவும் மோடி பொய் சொல்லுவதே இல்லை.

***

4. மோடியின் பிரசித்தி பெற்ற பொய்யும் புரட்டும் இது. குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 2001, 2002, 2007, 2012 தேர்தல்களின் போது, விண்ணப்ப படிவத்தில் அவருடைய marital status குறித்த விபரங்களில் எதுவும் நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். தனது திருமண விபரங்கள் குறித்து கூற எதுவுமில்லை என்பதுதான் அதன் அர்த்தம். இதன் அர்த்தம் புரிந்துகொள்ள சட்டநுணுக்கங்கள் தேவையில்லை.

திருமணம் குறித்த விபரங்களை வெளியிடாத நிலையில் அவர் “நான் தனி ஆள். எனக்கு குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்? என் உடல் உயிர் எல்லாமே மக்களுக்கு சேவகம் செய்யத்தான்!” என தொடர்ந்து பேசி வருகிறார். இதன் அர்த்தத்தை புரிந்துகொள்வதற்கு ஞானப்பால் குடித்திருக்க வேண்டிய அவசியமுமில்லை.

ஆனால் ஊர்வாயை மூட முடியவில்லை. பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு நபரின் பொய் குறித்து வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது. நீதிமன்றம் இதில் தேர்தல் கமிஷனே முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்கிறது. தேர்தல் கமிஷனும் பழைய கதைகளை ஆராய விரும்பாமல், “இனி தேர்தலில் நிற்பவர்கள் எதையும் காலியாக விடக் கூடாது, கேட்கப்பட்ட அனைத்து விபரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்” என்கிறது.

யசோதாபென் – மோடி

சரியாக இந்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. பாஜகவின் பிரதம வேட்பாளராக நிற்கும் மோடி, தனக்கு திருமணம் ஆகிவிட்டதென்பதையும், அவரது மனைவியின் பெயர் யசோதாபென் எனவும் குறிப்பிடுகிறார்.

ஆக, தனது பிரதம வேட்பாளர் தகுதி இழக்க நேரிடுமே என்னும் அச்சத்தில்தான் மோடி உண்மையைச் சொல்ல வேண்டியிருந்திருக்கிறது. அதே நேரம் கடந்த பதினான்கு வருடங்களாக இந்த தேசத்திற்கு அவர் சொல்லியது பொய் என்பதும் அந்த உண்மையோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து விவாதங்களும், மோடியின் மீது கண்டனங்களும் எழுகின்றன. “BJP ‘bachelor’ Modi admits marriage” என பிபிசி மானபங்கபடுத்தியது.

பாஜக என்னும் ‘தூய்மையான கட்சி’ மோடியின் பொய்யையும், புரட்டையும் காப்பாற்றுவதற்கு செய்த அலப்பறைகள் இருக்கிறதே, அவைகளின் நாற்றம் தாங்க முடியாதது.

“மோடி திருமண விபரத்தை சொல்லவில்லை. அவ்வளவுதானே. திருமணம் ஆகவில்லை எனச் சொல்லி இருக்கிறாரா? இது எப்படி பொய்யாகும், குற்றமாகும்” என சாணக்கியத்தனமாக பேச ஆரம்பித்தார்கள்.

“மோடியின் திருமணமா இங்கு முக்கியம்?. நாட்டின் முன் ஊழல் முதற்கொண்டு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பேச வக்கில்லை.” என கொதித்தார்கள்.

இதில் நிர்மலா சீதாராமன் பேசியவைகளை மறந்துவிடவேக் கூடாது. முடியாது.

“மோடி அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம். அதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டுமா?”

“மோடியின் மனைவியே இதுகுறித்து கவலைப்படாதபோது, சம்பந்தமில்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்”

பதில் சொல்ல வேண்டிய மோடியோ, குஜராத் சட்டசபைத் தேர்தல் விண்ணப்பங்களின் போது தேவையான விபரங்களைக் கூறாமல் மௌனம் சாதித்தது போலவே, இவை யாவற்றுக்கும் பதில் சொல்லாமல் விமானங்களில் பறந்து பறந்து பெரும் கூட்டத்தினிடையே கைகளை விரித்து பேசிக்கொண்டு இருந்தார். அவர் வேறு பல பொய்களை அங்கு சொல்ல வேண்டி இருந்தது.

***

5. தங்களின் ‘இந்து ராஷ்டிரா’ கனவை பின்னுக்குத் தள்ளியதிலும், மக்களிடம் நெருங்க முடியாமல் தங்களை தள்ளி வைத்ததிலும் காந்திக்கும், நேருவுக்கும் பெரும் பங்கு இருந்ததை சங் பரிவாரங்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். காந்தியின் மதச்சார்பின்மைக் கொள்கைகளும் நேருவின் காலத்தின் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டமும் இன்றைக்கும் அவர்களது பாசிச நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. பொதுத்துறைகளை பிரம்மாண்டமாய் வளர்த்தெடுத்த இந்திய முதல் பிரதமர் நேருவை அவர்கள் விரும்புவதே இல்லை.

மக்களிடம் இந்த தலைவர்களுக்கு இருந்த செல்வாக்கை குலைக்காமல் தங்களின் வெறிகொண்ட லட்சியங்கள் நிறைவேறாது என்பதால் இவர்கள் மீது தனிப்பட்ட முறையில் அவதூறுகளையும், இந்த தேசத்தை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியவர்கள் என்ற ரீதியில் கருத்துக்களையும் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.

மோடியும் தன் பங்குக்கு நேருவின் மீது வரலாற்றுக்குப் புறம்பான செய்தியொன்றை அவிழ்த்து விட்டார்.

நேரு – வல்லபாய் படேல்

காந்திக்கு மிக நெருக்கமானவர்களாய் நேருவும் வல்லபாய் பட்டேலும் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் இருந்தன என்பது இந்திய வரலாற்றுச் செய்தி. நேரு பிரதமராகவும், பட்டேல் துணைப்பிரதமராகவும் இருந்த போது முக்கிய அரசு நடவடிக்கைகளில் இருவரும் மாறுபட்ட பார்வைகள் கொண்டிருந்தனர் என்பது இந்திய அரசியல் செய்தியாகும். அதே நேரம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் மரியாதை கொண்டு இருந்தனர். பிரதமர் நேரு குறித்து தன் சுயசரிதையில் பட்டேல் எழுதியிருப்பவைகளைப் படித்தால் அது புரியும்.

அப்படி வாழ்ந்த காலத்தில் அந்த தலைவர்களிடம் ஒருவருக்கொருவர் இல்லாத மனக்கசப்பையெல்லாம், அவர்கள் மறைந்த பிறகு மோடி தனது பொய்யால் விதைத்து அறுவடை செய்யத் தயாரானார்.

பட்டேல் மீது மதிப்பும், தங்கள் மண்ணைச் சேர்ந்தவர் என்னும் மரியாதையும் குஜராத் மக்களுக்கு இருப்பது இயல்பானது. பட்டேலை நினைவுகூறும் நிகழ்ச்சியொன்றில் 2013 அக்டோபர் மாதத்தில், “இந்தியாவின் பிரதமராக நேருவுக்குப் பதிலாக, பட்டேல் ஆகியிருந்தால் இந்தியாவின் வரலாறும் கதையும் மகோன்னதம் கொண்டிருக்கும்” என்றார். காந்தியும், காங்கிரஸும் அதன்மூலம் நாட்டுக்கும், குஜராத்துக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நிறுவ முயன்றார். அத்தோடு நிற்காமல், “பட்டேலின் இறுதிச் சடங்கில் கூட நேரு பங்கேற்கவில்லை” என தனக்கே உரித்தான பொய்யை வெடிகுண்டாக தூக்கிப் போட்டார். குஜராத் மக்களுக்கு நேருவின் மீது ‘இனம்’ புரியாத துவேஷத்தை உருவாக்கும் நுட்பமான புரட்டு அது.

நல்லவேளை. பட்டேலின் இறுதிச்சடங்கில் நேரு கலந்துகொண்டதற்கான ஆதாரங்கள் இருந்தன. மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருந்தார். அந்தப் பக்கங்களை வரலாற்றாசிரியர்கள் மேற்கோள் காட்டினர். பட்டேலின் இறுதிச்சடங்கின் போது, 1950 -ல் எடுக்கப்பட்ட வீடியோவே இருந்தது. அதையும் வெளியிட்டார்கள்.

அதன் பிறகு அந்தப் பொய்யை மீண்டும் மோடி சொல்லவில்லை.

***

6. “நாக்லா ஃபடேலா கிராமம் ஒன்றும் தொலைவில் இல்லை. இந்த நாட்டின் தலைநகரிலிருந்து மூன்று மணி நேரத்தில் சென்றடையலாம். ஆனால் அந்த கிராமத்திற்கு மின்சாரம் சென்றடைவதற்கு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன.” ஆகஸ்ட் 15, 2016, திங்கட்கிழமையன்று, அதாவது சென்ற வருடம் சுதந்திர தினத்தன்று மோடி டெல்லி செங்கோட்டையில் நின்று மார் தட்டி உணர்ச்சிகரமாகப் பேசிய விஷயங்களில் ஒன்று இது.

2015 -ல், முந்தைய சுதந்திர தினத்தன்று அதே இடத்தில் நின்று, இந்த தேசத்தில் இன்னும் 18,000 கிராமங்களுக்கு மேல் மின்சார வசதி இல்லை. அவைகளுக்கு மின்சார வசதி ஏற்பாடு செய்து தருவதுதான் தனது முதற்பணி என கூவி முழக்கமிட்டு இருந்தார்.

இந்த ஒரு வருடத்தில் தான் சொன்னதை செய்து காட்டி விட்டதாகவும், இந்த நாட்டில் இதுவரை இருந்த அரசுகள், ஆட்சிகள் எல்லாம் அக்கறை காட்டாத மிக அடிப்படையான வசதியை, மோடியாகிய தானே ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் அவரது தொனியில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

நாக்லா ஃபடேலா கிராம மக்கள் டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவை முதன்முறையாக டிவியில் பார்க்கும் படம் ஒன்றை PMO (Prime Miniter Office) தனது டுவிட்டரில் வெளியிடவும் செய்தது.

மோடியின் இந்தப் பேச்சு தவறானது, பொய்யானது என்பதை அடுத்த சில மணி நேரங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கண்டுபிடித்தது. நாக்லா ஃபடேலா கிராமத்தில் மின்சார வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதையும், PMO டுவிட்டரில் வெளியிட்ட படம் தங்களது கிராமத்தின் படமல்ல என்பதையும் அங்குள்ள மக்கள் உறுதி செய்தனர்.

அம்பலப்பட்டவுடன் PMO வெளியிட்ட அந்த டுவிட்டரை கமுக்கமாக டெலிட் செய்து கொண்டது. ஆனால் அதற்குள் அந்த படம் capture செய்யப்பட்டு, இணையத்தில் மோடியின் அழுகுணியாட்டம் கப்பலேறி இருந்தது.

***

7. “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருந்தது. இப்போது ரூபாய் எங்கே டாலர் எங்கே?” 2013 ஜூலையில் அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி ஆவேசமாகக் கேட்டார்.

அதாவது அப்போது ரூபாயும், டாலரும் ஒரே மதிப்புடன் இருந்ததாம். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியால் ஏற்பட்ட பண வீக்கத்தால் ரூபாயின் மதிப்பு இழந்து விட்டதாம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அதைச் சொல்ல வருகிறாராமாம்.

ஆனால் அப்போது ரூபாயின் மதிப்பு 30 சென்ட்களாக இருந்தது என்பதே உண்மை.

ஊர்களில் தேர்தல் காலங்களில் திமுக, அதிமுக கட்சி கூட்டங்களில் முக்கிய தலைவர்கள் பேச வருவதற்கு முன்பு, மைக் கிடைத்தது என்று உள்ளூர் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுவார்கள். அவர்கள் கூட இப்படியெல்லாம் உளறிக்கொட்டுவதில்லை.

***

8. “யுத்த நினைவுச் சின்னங்கள் இல்லாமல் ஒரு நாடு கூட உலகத்தில் இல்லை. ஆனால் எத்தனையோ யுத்தங்களில் இந்தியா பங்கெடுத்தும், எவ்வளவோ இந்திய வீரர்கள் அந்த யுத்தங்களில் தங்கள் உயிரைக் கொடுத்திருந்தும், அவர்களின் தியாகங்களை போற்றும்படியாக ஒரு நினைவுச்சின்னம் கூட இந்தியாவில் இல்லை. நாம் அவர்களை நினைவு கூற வேண்டாமா? சில நல்ல காரியங்கள் என்னால் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது என உணர்கிறேன்.”

1961 -ல் எல்லைத்தகராறில் உருவான இந்தியா சீன யுத்தத்தில் இறந்த இந்திய வீரர்களின் நினைவாக லதா மங்கேஷ்கர் பாடிய ‘Aye Mere Watan Ke Logon’ என்னும் பாடலின் ஐம்பதாவது ஆண்டையொட்டி, ஜனவரி 27, 2014 அன்று மும்பையில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு புருடா மன்னன் சுற்றிய ரீல் இது.

நாமிருக்கும் இந்த நிலப்பரப்பு இந்தியா என்றொரு தேசமாக கட்டமைக்கப்பட்டது பிரிட்டிஷ் காலத்துக்குப் பிறகுதான். அதற்கு முன்பு பல சாம்ராஜ்ஜியங்களும் குட்டி அரசுகளும் அங்கங்கு பிரதேசங்களில் ஆட்சி செலுத்தி வந்திருக்கின்றன. யாரும் முழுமையாக இந்த நிலப்பரப்பின் மீது ஆட்சியதிகாரம் கொண்டதாக வரலாறு இல்லை. இந்த நிலப்பரப்பின் மீது வட இந்தியாவில் அலெக்ஸாண்டர், மங்கோலியர், முகம்மதியர் படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. தென் இந்தியாவில் இருந்த நாடுகளுக்கு அந்த படையெடுப்புகள் சம்பந்தமில்லாதவையாகவே இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த நிலப்பரப்புக்குள் இருந்த நாடுகளின் மன்னர்கள் ஒருவர் மீது ஒருவர் படையெடுப்புகளாலும், சூழ்ச்சிகளாலும், துரோகங்களாலும் ஆட்சி அதிகாரத்தை மாறி மாறி கைப்பற்றியதற்கு ஏராளமான சான்றுகளும் தகவல்களும் நிரம்பி இருக்கின்றன. இந்த அதிகாரச் சண்டைகளை பயன்படுத்தித்தான் வியாபாரம் செய்ய வந்த பிரிட்டிஷ்காரர்கள் ஒரு நூற்றாண்டு முயற்சியில் தன் சர்வ அதிகாரத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆக, இந்த நிலப்பரப்பு இந்தியாவெனும் நாடாக உருமாறி சில நூற்றாண்டுகளே ஆகி இருக்கின்றன.

பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயருக்கு சார்பாக இந்திய வீரர்கள் இரண்டு உலக யுத்தத்தில் பங்கெடுத்திருக்கின்றனர்.

பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, எல்லைகளை முன்வைத்து பாகிஸ்தானோடும், சீனாவோடும் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. இதுதான் வரலாறு.

ஆனால் எத்தனையோ யுத்தங்களில் இந்தியா பங்கெடுத்தது என்று கைகளை விரித்து ‘அகண்ட பொய்யை’ அளந்து விடுவது சும்மா இல்லை. இந்தியா என்னும் நாடு மகாபாரத காலத்திலிருந்தே இருந்து வருவது போல ஒரு ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்காகவே,

அதற்காக இந்தியாவில் யுத்த நினைவுச் சின்னங்களே இல்லை எனச் சொல்லலாமா? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? டெல்லிக்கு ஒருமுறை சென்றவர்கள் கூட ‘இந்தியா கேட்’ சென்று பார்த்திருப்பார்கள். அறிந்திருப்பார்கள். முதல் உலக யுத்தத்தில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டது அது. டெல்லியின் பீடத்தில் இருப்பவரின் கண்ணில் படவில்லை போலிருக்கிறது.

நாடு முழுவதும் இப்படி எத்தனையோ நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளிலேயே வசிப்பவருக்கு இந்த நினைவுச் சின்னங்களைப் பற்றியும், இந்திய வரலாறு குறித்தும் என்ன தெரியும்?

அவரது பேச்சின் கடைசி வரி ஆபத்தானது. எல்லையில் சீனாவோடும், பாகிஸ்தானோடும் யுத்த முஸ்தீபுகள் நடந்து வரும் இந்த தருணத்தோடு யோசிக்கும் வேளியில்….

***

9. அஸ்ஸாமுக்கு மத்திய அரசு 1.8 லட்சம் கோடி நிதி கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை செலவு செய்ததற்கு இன்று வரை சி.ஏ.ஜி. (Comptroller and Auditor General) –யிடம் கணக்கு காட்டவில்லை எனவும் கடந்த அஸ்ஸாம் சட்டசபை தேர்தலின் போது வான் வழியே வந்து மக்களிடையே ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் சொல்லிவிட்டு, மீண்டும் வான் ஏகினார் மோடி.

மத்திய அரசு அளித்த நிதியை மக்களுக்கு செலவழிக்காமல் அஸ்ஸாம் மாநில அரசு மோசடி செய்கிறது என்ற குற்றச்சாட்டு அதில் இருந்தது.

அஸ்ஸாம் முதல்வராயிருந்த தருண் கோகாய் ஊடகங்களிடம், “இப்படி பொய் மேல் பொய் சொல்லும் ஒரு பிரதமரை எங்காவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் உலகத்திலேயே பார்க்கவில்லை. அந்த உயர்ந்த பதவிக்குரிய மரியாதையை குலைத்துக் கொண்டு இருக்கிறார்” என ஆவேசமடைந்தார்.

“மோடி குறிப்பிட்ட 1.8 லட்சம் கோடி நிதியை ஒரு போதும் அஸ்ஸாமுக்கு மத்திய அரசு தந்திருக்கவில்லை” என்றும் “அப்படி கணக்கு கொடுக்கவில்லை என அஸ்ஸாமிடம் Comptroller and Auditor General கேட்கவில்லை” என்றும் தருண் கோகாய் தெளிவுபடுத்தினார். “பிரதமரின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது. இருந்தால் அதை மக்களிடம் சொல்லட்டும்” என கேட்டார்.

மோடி பொய் மட்டும்தான் சொல்வார். அதுகுறித்து யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். சகதியைத் அள்ளி எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்.

***

10. தொடர்ந்து நேரும் அவலங்களால், நினைவுகளின் ஆழத்தில் போயிருக்கக் கூடும். சென்ற நவம்பர் 20ம் தேதி, கான்பூரில் நிகழ்ந்த மோசமான அந்த ரெயில் விபத்து குறித்த செய்தியை அறிந்தவர்கள் இப்போது நினைத்தாலும் கதி கலங்கத்தான் நேரிடும். தண்டவாளத்தை விட்டு ஐந்தாறு பெட்டிகள் தடம் புரண்டதால் ரெயில் உருக்குக்லைந்து போனது. 150க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்து போனார்கள். உறவினர்களின் கதறலும், மீட்பு பணியினர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் தாங்க முடியாதவையாக இருந்தன, ரெயில்வேத் துறையும், தேசத்தின் பாதுகாப்புத்துறையும் ரெயில் விபத்து குறித்து விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் உத்திரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் வந்தது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி, நேபாள எல்லை அருகே இருக்கும் ஹோடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மோடியின் நாக்கு எப்படி தடம் புரண்டது என்பதை பார்ப்போம்.

”நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட கான்பூர் ரயில் விபத்து ஒரு சதிச் செயல். எல்லை தாண்டி இருக்கும் சதிகாரர்கள் செய்த பயங்கரமான காரியம். ஹோடாவுக்கு அதிகமான பாதுகாப்பும், கண்காணிப்பும் தேவையா இல்லையா? ஹோடாவுக்காகவும் இந்தியாவுக்காகவும் எதையும் செய்யத் துணிந்த தேசபக்தியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்”

எல்லை தாண்டிய சதி என பாகிஸ்தானையும், அண்டை நாடான நேபாளத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் பாகிஸ்தான் தீவீரவாதிகளையும் குறிப்பிட்டே மோடி மிகக் கவனமாக அந்தப் பொய்யைச் சொன்னார்.

பாகிஸ்தான் என்பது பாகிஸ்தான் மட்டும் அல்ல என்பதும் இந்துத்துவாவின் அரசியல் புரிந்தவர்களால் அறிய முடியும். மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் மக்களிடம் இதைப் பேசுவது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அறிய முடியும். ஆனால் தேர்தல் கமிஷன் இப்படியொரு ஆபத்தான பேச்சை வாய்மூடிக் கேட்டுக்கொண்டு மட்டும் இருந்தது.

உத்திரப்பிரதேச ரெயில்வே டிஜி குப்தா, மத்திய ரெயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கான்பூர் ரெயில் விபத்தில் எந்தச் சதியும் இல்லை என்பதையும், சதிக்கான எந்த அடையாளங்களோ, ஆதாரங்களோ இல்லை என்பதையும், ’களைப்படைந்த ரெயில்வே தண்டவாளங்களே’ காரணம் என்பதையும் எடுத்துரைத்தார்.

அந்நியச் சதி என்றால் நாட்டின் உளவுத்துறை என்ன செய்தது? அதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? என கேள்விகள் மட்டுமே எழுந்து விழுந்து கொண்டிருக்கின்றன. நல்லவேளை, கோத்ராவைத் தொடர்ந்த மாபாதகச் செயல்கள், கான்பூரிலும், உபியிலும் நிகழவில்லை.

நன்றி : மாதவராஜ்
_____________

மோடி அரசை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களின்
இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி