
தங்களது கனிவான சேவைகளால், நோயாளிகளை குணம் பெறச் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 12 மணிநேரம் வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் இச்செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6000 முதல் 10,000 வரை தான் தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படுகிறது.
இதற்கு எதிராக, கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஜெகதிஷ் பிரசாத் கமிட்டியின் பரிந்துரையின் படி ஒரு செவிலியருக்கு குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.20,000 என நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி “ஐக்கிய செவிலியர் சங்கம்” மற்றும் “இந்திய செவிலியர் சங்கம்” ஆகிய அமைப்புகள் கேரளா முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவரும் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த ஜூலை 20ம் தேதி அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பினராயி விஜயன் அரசாங்கம் செவிலியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. அதாவது, 50க்கும் குறைவான படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.20,000-ஐ நிர்ணயித்துள்ளது.
பயிற்சிக்காக சேரும் செவிலியர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க தனி கமிட்டி ஒன்றை அமைக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளது அரசு. அந்தக் கமிட்டி ஒரு மாத காலத்திற்குள் தனது அறிக்கையை அரசிடம் முன் வைக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என தனியார் மருத்துவமனைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது அரசு. மேலும், செவிலியர்களின் இடைவிடாத, உறுதியான போராட்டத்தின் மூலம், தற்போது கேரளாவில் இருக்கும் 1282 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 80,000 செவிலியர்கள் பயனடைவர்.
தொடர்ச்சியான, போர்க்குணமிக்க போராட்டங்களால் தான் நம் உரிமைகளை வென்றெடுக்க முடியுமே ஒழிய மற்றவர்களின் பரிதாபத்தைக் கோரும் போராட்டங்களால் அல்ல என்பதை பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களும், கர்நாடக அங்கன்வாடிப் பணியாளர்களும், டில்லி துப்புரவுப் பணியாளர்களும், இதுவரை நடத்திய போராட்டங்கள் நிரூபித்துள்ளன. தற்போது கேரள செவிலியர்கள் போராட்டம் இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. இதை ‘ஜந்தர் மந்தர்’ அய்யாக்கண்ணு என்று உய்த்துணர்வாரோ?
செய்தி ஆதாரம்:
- Private nurse stir ends in Kerala after government promises to ensure Rs 20,000 minimum salary
- Kerala nurses strike: Here is all you need to know
_____________
இந்தப் போராட்டச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி