Thursday, November 14, 2024
முகப்புசெய்திநம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது ? சிறையிலிருந்து ஒரு கடிதம் !

நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது ? சிறையிலிருந்து ஒரு கடிதம் !

-

சிறையிலிருந்து பிறந்தநாள் வாழ்த்து!

அன்புள்ள வசந்தா,

பிறந்த நாள் வாழ்த்துக்களை உனக்கு சொல்லிக் கொள்கிறேன். பிறந்த நாளின் போது இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நாளில் உனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும். நான் இல்லாத இந்த நாள் குறித்து எப்படி வருந்துவாய் என நான் அறிவேன். இந்த அரசு நம்மை பிரிப்பதிலேயே தீர்மானமாய் இருந்தது; சொல்லப்போனால் நம்மை அழிக்கவும் திட்டமிட்டது. திருமணமான இந்த 26 வருடங்களில், நாம் ஒருபோதும் தனிப்பட்ட நலன்களுக்காகவோ வளர்ச்சிக்காவோ எதையும் எதிர்பார்த்ததில்லை.

பேராசிரியர் சாய்பாப மற்றும் அவரது மனைவி வசந்த குமாரி( A S Vasantha Kumari – முகநூல்பக்கம் )

நம்முடைய 36 ஆண்டுகால வாழ்க்கையில் இந்த சமூகத்துக்காக நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு இணைந்து உழைத்தோம். இதையொட்டி நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் இல்லாத இந்த சூழ்நிலையில், இதே நம்பிக்கையுடன் நீ மக்களுக்காக பணி செய்ய வேண்டும். என்னுடைய இல்லாமையும் சிறைதண்டனையும் உன்னை எந்தவிதத்திலும் அசுவாசப்படுத்திவிடக்கூடாது. உன்னுடைய பிறந்த நாளான இன்று, நீ ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டும்… இந்த துன்பத்தையும் நம் மீது ஏவப்பட்ட மிருகத்தனத்தையும் நம்மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை… இந்த தீர்ப்பும் சிறைச்சாலையில் நான் அடைக்கப்பட்டிருக்கும் விதமும் நமக்கு அவமானம் அல்ல! அரசின் இந்த நடவடிக்கைகள் உண்மையில் ஜனநாயகத்துக்குத்தான் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. நாம் ஒரு நல்ல சமூகத்துக்காக கனவு கண்டோம்; சமத்துவமின்மைக்கு முடிவு வரும் என நம்பினோம்.

மனித உரிமைக்கான சுதந்திரத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோரின் ஜனநாயக, பொது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தோம். ஒதுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து, இந்த சமூகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, நாம் இந்த மதிப்புகளை ஒருபோதும் கைவிடாது தொடர வேண்டும்.

அவர்கள் நமது கனவை, நம்பிக்கையை நசுக்க முயற்சிக்கலாம்; ஆனால், நாம் இன்னமும் கனவுகண்டுகொண்டிருப்பதையோ, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருப்பதையோ அவர்களால் தடுக்க முடியாது. பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட தீர்ப்பு, பொய்யான வழிகளில் என்னை சிறையில் வைத்திருப்பது உன்னுடைய ஊக்கத்தை குலைக்கக் கூடாது. நம்பிக்கையை ஒருபோதும் நீ இழக்கக்கூடாது. எனக்கு, உன்னுடைய பிறந்த நாள் எப்போதும் முக்கியமானது, எப்போதும் என்னை உற்சாகமூட்டக்கூடியது.

நீ இந்த நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது? நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்திருக்கிறோமா? நாம் யாரையாவது தாக்கி இருக்கிறோமா? ஏன் நம்முடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டது? நம்முடைய கனவுகள் ஏன் குற்றமாக்கப்பட்டன? நம்முடைய கனவு ஏன் நசுக்கப்பட்டது? நம் கனவுகள் மீதான, மனிதத்தன்மையற்ற தாக்குதலை எதிர்த்து, நம்முடைய சின்னஞ்சிறு கனவுலகில், நாம் நம்முடைய உலகத்தில் வாழ முடியுமா? இந்த மணித்துளியில் உனக்கும் எனக்கும் உந்துசக்தியாக இருப்பது எது?

இவ்வாண்டின் பிறந்த நாளில் நான் உனக்கு என்ன தருவேன்? நான் உனக்காக என்ன வைத்திருக்கிறேன்? அதே காதலைத்தான். பள்ளிக் காலத்தில் நாம் முதன்முதலாக சந்தித்த போது உண்டானதே அதே காதல்! உனக்கு நான் நம் வாழ்நாள் முழுக்க அளித்த அன்பை காட்டிலும் நீ அதிக அன்பை செலுத்தியிருக்கிறாய். பதின்பருவ காதல் காலத்தில் உனக்களித்த அதே கனவை இப்போதும் என்னால் அளிக்க முடியும்.

நீ இப்போது என்னுடைய சுதந்திரத்துக்காக தனித்து போரிடுகிறாய். உன் இதயத்தை வலுவிழுக்க விடாதே. இருள் நிரந்தரமாக வெளிச்சத்தை மறைத்துவிட முடியாது என்பதைப்போல இருள் சூழந்த இந்த நாட்களில் நீ நம்பிக்கையையும் கனவையும் இழந்துவிடாதே. இவை வெறுமையான சொற்கள் அல்லை. நமது நம்பிக்கை முட்டாள்தனமான சிந்தனையல்ல, நாம் வெற்றி பெறுவோம்.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு, இவ்வாண்டின் பிறந்த நாளின்போது, நான் எனது காதலை மறுபடியும் உனக்கு காணிக்கையாக்குகிறேன். என்னுடைய தைரியத்தை, நம்பிக்கையை, கனவுகளை உன் காதால்தான் நான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். வாழ்நாளில் இதுவரை என்னென்ன செய்தேனோ, அதற்கெல்லாம் காரணமாய் இருந்தது கலங்கரை விளக்காக நீ என் மீது பொழிந்த காதல்தான்.

இந்நாளில் அனைத்தும் திரும்ப வாழ்த்துகிறேன்

அளவில்லா காதலுடன்
உன்னுடைய
ஜி.என். சாய்பாபா

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மாவோயிஸ்டுகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, தன்னுடைய மனைவி வசந்தாவுக்கு எழுதிய கடிதம் இது. இந்தக் கடிதத்தை வசந்தா, அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழாக்கம் : மு.வி. நந்தினி
நன்றி : THE TIMES TAMIL

  1. இடானியா தன்னுடைய செல்லமகளுக்கு எழுதிய மடல் தான் நினைவிற்கு வருகிறது.
    கண் கலங்குகிறது.

  2. சொந்த வாழ்க்கை,சுயநலம் ஆகிய சேற்றில் சிக்கி மூச்சுத் திணறும் வாழ்க்கையில் காதல் விரைவில் சமாதியாகி விடுகிறது. சமூக வாழ்க்கையோடு இயைந்த காதலே காலம் கடந்து வாழ்கிறது !

  3. இவர்கள் இருவரும் காதல் கொள்வது தேசத்தின் மீதும் , மக்கள் மீதும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க