Thursday, July 3, 2025
முகப்புசெய்திதஞ்சை மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி !

தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி !

-

“விவசாயியை வாழவிடு” என்ற முழக்கத்தின் கீழ் தஞ்சையில் வரும் ஆகஸ்டு 5 சனிக்கிழமை மாநாடு நடக்க இருக்கிறது. இந்தியாவெங்கும் விவசாயிகள் போராடி வரும் நிலையில், தமிழகத்திலும் விவசாயிகளிடையே தற்கொலைச் சாவுகள் பரவி வரும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மக்கள் அதிகாரம் இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆண்டு தோறும் நடத்திய “தமிழ் மக்கள் இசை விழா” நடக்கும் தஞ்சை திருவள்ளுவர் திடலில் (திலகர் திடல்) இம்மாநாட்டை நடத்த முடிவு செய்து விண்ணப்பம் அளிக்கப்பட்டது. கதிராமங்கலத்திலும், நெடுவாசலிலும் மக்கள் உறுதியுடன் போராடி வரும் நிலையில் அதை ஒடுக்குவதோடு தமிழகமெங்கும் எந்த போராட்டமும் நடக்க கூடாது என்பதில் போலீசு உறுதியாக இருக்கிறது. இதற்காகவே மெரினாவில் எப்போதும் பலநூறு போலீசுப் படையினர் முகாம்போட்டு சுற்றி வருகின்றனர். இது போக விவசாயிகள் பிரச்சினையை துண்டு பிரசுரமாக விநியோகித்த சேலம் மாணவி வளர்மதியை குண்டர்கள் சட்டத்தில் சிறை வைத்திருக்கிறது எடப்பாடி அரசு.

போராடத் தூண்டுபவர்கள் யாராயினும் இதுதான் கதி என்று சட்டமன்றத்திலேயே கொக்கரித்தார் பாஜகவின் அடிமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இச்சூழலில் தஞ்சை மாநாட்டிற்கு மட்டும் அனுமதி கிடைத்து விடுமா என்ன?

மக்கள் அரங்கில் தமிழகமெங்கும் சூறாவளியாய் சுற்றி பிரச்சாரம் செய்கின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்களும் உறுப்பினர்களும். தமிழகத்தின் நகரங்கள், கிராமங்கள், சாலை சந்திப்புக்கள், ஆலை வாயில்கள், பேருந்து நிலையங்கள், ஓடும் ரயில்கள் எங்கும் இம்மாநாட்டிற்கான பிரச்சாரம் தினம் நடை பெறுகிறது. செல்லுமிடங்களெல்லாம் மக்கள் நிதியை அள்ளி வழங்குவதோடு மாநாட்டிற்கு வருவதாகவும் கூறுகின்றனர்.

மாநாட்டிற்கு அனுமதி தராமல் இழுத்தடித்தனர் போலீசு அதிகாரிகள். சென்னை உயர்யநீதிமன்றத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் காளியப்பன் வழக்கு தொடுத்தார். மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள், மாநாட்டு உரைகள், ம.க.இ.க வின் பாடல்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னணித் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் என்று பல விதமான தரவுகளையும் காட்டி அனுமதி கொடுக்க கூடாது என்று வாதாடினார் அரசு வழக்கறிஞர். இவையெதையும் காட்டி கருத்துரிமையைப் பறிக்க முடியாது என்று அவ்வாதங்களை முறியடித்தனர் நமது வழக்கறிஞர்கள்.

“மாநாட்டுக்கு வருபவர்களுக்கு சிறுநீர் கழிக்க அங்கே இடமில்லை” என்றார் அரசு வழக்கறிஞர். “அதெல்லாம் மாநாடு நடத்துபவர்களின் கவலையல்லவா” என்றார் நீதிபதி. “மாநாட்டுக்கு வரும் கூட்டத்தால் தஞ்சைப் பெரிய கோவில் என்ற கலைப் பொக்கிஷத்துக்கு ஆபத்து” என்ற பிரம்மாஸ்திரத்தை கடைசியாக ஏவினார் அரசு வழக்கறிஞர். அடக்கமான சிரிப்பொலி நீதிமன்ற அறையில் பரவியது.

அனுமதி அளித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு.

தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க, தஞ்சை விவசாயத்தைப் பாதுகாக்க, தமிழக அரசு என்றழைக்கப்படும் தரகர் கூட்டத்திடமிருந்து பெரிய கோயிலையும் பாதுகாக்க – தஞ்சைக்கு வாருங்கள்!

அழைப்பிதழின் ஃபிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்ய அழுத்தவும்
_____________

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா!

  • விவசாயிகளது இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

 

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி