Tuesday, July 7, 2020
முகப்பு உலகம் இதர நாடுகள் சவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா !

சவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா !

-

கிழக்கு சவுதி அரேபியாவில் வாழும் சிறுபான்மை ஷியா முசுலீம்களை கனடா தயாரிப்பு போர் ஊர்திகள் மூலம் குண்டு வீசி சவுதி அரேபியா தாக்கியிருப்பது காணொளிகளாகவும் புகைப்படங்களாகவும் முதன் முறையாக அம்பலமாகி இருக்கிறது.

கனடாவைச் சேர்ந்த டெராடைன் கவச ஊர்திகள் (Terradyne Armoured Vehicles) நிறுவனம் அந்த போர் ஊர்திகளை தயாரித்திருக்கிறது. கனடாவின் தி குளோப் அண்ட் மெயில்(the Globe and Mail) செய்தி நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. சொந்த மக்களுக்கு எதிரான சவுதியின் இந்த செயல்பாடுகள் மிகுந்த கவலையளிப்பதாக கனடா கூறியிருக்கிறது. தன்னுடைய தயாரிப்புகள் ஈடுபடுத்தப்பட்டது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் ஷியா முசுலீம்கள் மீது சவுதி அரேபியா நடத்தும் படுகொலைத் தாக்குதல்கள் கனடா அரசிற்கோ உலகிற்கோ ஒன்றும் புதிதல்ல. ஷியா முசுலீம்களில் பெரும்பாலோனோர் இருக்கும் கிழக்குப் பகுதியில்தான் எண்ணை வளம் அதிகம். ஆயினும் சுகாதார வசதிகளும் வேலை வாய்ப்புகளும் ஷியா பிரிவினருக்குக் கிடைக்கததால் 1970 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சவுதி அரசிற்கு எதிராகத் திரண்டு முழக்கமிட்டனர். அவர்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தது சவுதி அரசு. இதில் பலர் கொலை செய்யப்பட்டதுடன் ஆயிரக் கணக்கானோர் கைதும் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சி தான் இன்று வரை நீடிக்கிறது.

தொழிலாளர்களைச் சுரண்டுவதிலும், பெண்களை அடிமைகளாக வைத்திருப்பதிலும் உலகப் புகழ் பெற்றது சவுதி. இசுலாமிய மதமாக இருந்தாலும், மதத்தைத் தாம் விரும்பிய வழியில் பின்பற்றுவதற்குக் கூட சவுதியில் இடம் கிடையாது. மனிதத்தன்மையற்ற ஷரியத் சட்டத்தின் மூலம் எதிர்ப்பவர்களின் தலையை கொய்வதில் அமெரிக்காவின் சின்னப் பங்காளிக்கு ஈடு இணை உலகில் யாருமில்லை. தலைகளைப் பறி கொடுத்தவர்களில் கணிசமானோர் ஷியா முசுலீம்களே.

ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் உலகிலேயே முன்னிலையில் இருக்கும் சவுதிக்கு ஆயதங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவிற்கு இணை யாருமில்லை. அமெரிக்க அளவிற்கு இல்லையென்றாலும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு சவுதியுடன் 2016 -ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது கனடா அரசு.

இது ஏமன் உள்ளிட்ட மத்தியக் கிழக்காசிய நாடுகளின் மீது சவுதியின் தாக்குதல்களை அதிகப்படுத்தவே உதவுமென்ற குற்றச்சாட்டைக் கனடாவும் ஒப்புக் கொள்ளத்தான் செய்தது. ஏமன் மக்கள் இன்று சிந்தும் ஒவ்வொருத் துளிக் கண்ணீரிலும் உதிரத்திலும் கனடாவின் ரேகைகள் பதிந்துள்ளதை வரலாறு பதிவு செய்துள்ளது.

தன்னுடைய கவச ஊர்திகளை சவுதி பயன்படுத்தியது அம்பலமானது குறித்துக் கவலைப்படும் கனடாவிற்கு சவுதி அரேபியாவின் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்துக் கவலை ஒன்றுமில்லை. மனித உரிமை மீறல்களுக்கு ஊதுகுழலாக இருந்துவிட்டு கவலைப்படுவதாக இன்று நாடகமாடுகிறது கனடா. கனடா எனும் நாடு அமெரிக்கா எனும் வல்லரசின் செல்வாக்கில் இருப்பதால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையே கனடாவின் கொள்கையும் ஆகும்.

அமெரிக்காவை எதிர்க்கத் துப்பற்ற கனடா தன்னை அமைதி விரும்பியாகவும், உலகின் மகிழ்ச்சியான நாடாகவும் முன்னிறுத்துகிறது. இந்த போலி வேடத்தை திரை கிழிக்கிறது ஏமன் மக்கள் மீதான சவுதியின் படுகொலை.

செய்தி ஆதாரம் :

_____________

மத்தியக் கிழக்கின் அரசியலை எடுத்தியம்பும் இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. அமெரிக்காவை எதிர்க்க துப்பற்ற கனடா!!!….எதுக்கு எதிர்க்கனும்….தன் சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்த சவுதி தான் வெட்கபடனும்…இது முழுக்க இசுலாமிய மத பிரிவினை சண்டை..எதற்கெடுத்தாலும் எண்ணெய் வளம் சுரண்டல்!!! என்று பிற நாடுகளை குற்றம் சொல்லி இசுலாமிய தீவிரவாதம் என்னும் எச்சதனத்தை நியாயபடுத்துவதை நிறுத்துங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க