privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇது பணம் - பிரியாணி - குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை - அப்பாவு உரை

இது பணம் – பிரியாணி – குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை – அப்பாவு உரை

-

ஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் “பயிர்க்காப்பீடு – மானியம் – ஆதார விலை கடன் தள்ளுபடி தீர்வாகுமா?” என்ற தலைப்பில் திரு.மு.அப்பாவு – மாநில தணிக்கைக் குழு உறுப்பினர், திமுக, அவர்கள்  ஆற்றிய  உரையின் சுருக்கம்.

இங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது; இது சம்பளத்துக்கோ, பிரியாணிக்கோ இல்லை டாஸ்மாக் குவார்ட்டருக்காகவோ வந்த கூட்டமில்லை. சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வந்த கூட்டமிது. எனவே இங்கு பேசுவதில் பெருமைப்படுகிறேன்.

கதிராமங்கலத்தில் நோட்டீசு கொடுத்த வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. போட்டது யார்? எடப்பாடி அரசு. தமிழக அரசை நடத்துவது யார்? மோடி அரசு; ஆக இருவருமே கேடிகள் தான். குரங்கு வித்தையில் குரங்கை அங்குமிங்கும் கோலால் மிரட்டி தாவச்செய்வது போன்று மோடியும், எடப்பாடி அரசை குட்டிக்கரணம் போடவைத்து விளையாடுகிறார்.

பயிர்க்காப்பீடு என்றால் அது நமக்கு நன்மை விளைவிக்கும் என்று நம்புகிறார் விவசாயி. ஆனால் பயிர்க்காப்பீடு என்பது மோட்டார் வாகனங்களுக்கு செய்யும் காப்பீடு போன்றது தான். ஏதாவது விபத்து ஏற்பட்டுவிட்டால் அதற்கான முழுத்தொகையையும் ஈடுகட்ட மாட்டார்கள்; மாறாக பத்தில் ஒரு பகுதி தான் இழப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். பயிர்க்காப்பீடும் இதைப் போன்றது தான்.

விவசாயிக்கு விளை நிலத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இழப்பு ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு தரும் வகையில் உருவாக்கப்பட்டது தான் தேசிய பயிர் பாதுகாப்புத் திட்டம். உதாரணமாக ஒரு ஏக்கரில் 2000 வாழைகள் ஒரு விவசாயி பயிரிடுகிறார் என்றால் ஒரு வாழைக்கு பிரீமியம் தொகையாக ரூ. 15/- கட்ட வேண்டும்; இதில் விவசாயியின் பங்கு ரூ. 7.50/- மற்றும் அரசாங்கத்தின் பங்கு ரூ. 7.50/-. சூறைக்காற்று அடித்து 500 வாழைகள் பாதிக்கப்பட்டதென்று வைத்துக் கொள்வோம். இப்போது விவசாயிக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணம் எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ 2.50 தான். இது எப்படி உள்ளதென்றால் 60 பேர் பயணிக்கும் பேருந்து விபத்தில் சிக்கி அதில் ஒருவர் உயிரிழக்கின்றார் என்றால், மீதமுள்ள 59 பேரும் செத்தால் தான் முழு இழப்பீடும் கிடைக்கும் என்று கோருவதைப் போன்றதாகும்.

இப்போது மோடியின் புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. இதன்படி தனியார் நிறுவனங்களுக்கும் பயிர் காப்பீடு அளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்படி மோடி இந்தியா முழுவதும் தேசிய பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார். 100 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்புள்ள நிறுவனங்களாலேயே மானியம் தராமல் ஏமாற்றப்பட்டு வந்த விவசாயிகளுக்குத் தனியாரிடமிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? இப்படி பயிர்க்காப்பீட்டைத் தனியாரிடம் கொடுத்துவிட்ட நிலையில் ஏன் விவசாயிகள் நம்மிடம் கோரிக்கை வைக்கின்றனர் என்பது தான் மோடியின் கவலை போல.

ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் 69,000 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது; ஆனால் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவோ 8,800 டி.எம்.சி தண்ணீர் மட்டும் தான். அப்படி இந்த குறைந்த அளவில் நடக்கும் விவசாயத்தின் மூலம் விளையும் பொருட்களுக்குக் கூட சரியான விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கான கோதுமை, அரிசி, சர்க்கரை இவற்றின் கொள்முதல் விலை 30 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக உயர்த்தப்படவில்லை.

விளைபொருட்களின் விலை நிர்ணயத்தை மறுநிர்மாணம் செய்வதற்காக இது வரை பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; ஆனால்  இன்றைய நிலவரத்தில் நெல்லின் விலை கடந்த 40 ஆண்டுகளில் 14 மடங்கு தான் உயர்ந்துள்ளது; ஆனால் தங்கத்தின் விலையோ 250 மடங்கு உயர்ந்து விட்டது; அமைச்சர்களின் சம்பளமும் அதுதான்; மனசாட்சி இருக்கின்றதா இந்த அரசுகளுக்கு? விவசாயிகளின் கஷ்டம் தெரியுமா இவர்களுக்கு?

ராதா மோகன் என்பவர் “தற்கொலை செய்வது ஃபேஷனாகிவிட்டது” என்கிறார். துணை வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவோ “கடன் தள்ளுபடி செய்வது இப்போது ஃபேஷனாகி விட்டது” என்கிறார். செம்மரக்கட்டைகளைக் சட்டவிரோதமாகக் கடத்தி விற்ற வெங்கய்யாவுக்கு விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்?

பிரதமர் மோடிக்கோ கார்ப்பரேட்டுகளுக்கு ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதைத் தவிரவோ, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில்தான் நேரம் சரியாக இருக்கிறது. இன்னொரு புறத்தில் யாராவது மத்திய அரசை எதிர்த்துப் பேசினால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறது. எடப்பாடியை எதிர்த்துப் பேசினாலோ குண்டர் சட்டம் பாய்கிறது ( மாணவி வளர்மதியைப் போல ).

மக்கள் அதிகாரம் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் என்னுடைய முழு ஆதரவையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • வினவு செய்தியாளர்கள்

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி