Sunday, November 28, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பாசனத்திற்கு 10 கோடி - ஜெயா நினைவிடத்திற்கு 15 கோடி - கலைவாணன் உரை

பாசனத்திற்கு 10 கோடி – ஜெயா நினைவிடத்திற்கு 15 கோடி – கலைவாணன் உரை

-

ஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் “அரசின் வேளாண் கொள்கையும், விவசாயத்தின் அழிவும்” என்ற தலைப்பில் திரு பி. கலைவாணன், (உதவி இயக்குநர் (ஓய்வு) வேளாண் துறை, தஞ்சாவூர்) ஆற்றிய  உரையின் சுருக்கம்.

டந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, தமிழகத்தில் 4 பேரில் ஒருவருக்கு உணவளிக்கும் தஞ்சை மாவட்டத்தில் இன்று காவிரிப்பிரச்சினை பிரதானமானதாக உள்ளது. எனவே அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லவேண்டிய சூழ்நிலையை நான் உணர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக எனது ஆலோசனைகளைச் சொல்லி வருகிறேன்.

120 வருடங்களுக்கு முன்பாக கர்நாடகத்தில் விவசாயம் பிரதானமான ஒன்றாக இல்லை. காவிரியில் அணைகளும் கட்டப்படவில்லை. இந்தக் காலகட்டங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும். விலங்குகள் உயிரிழத்தல், விளை நிலங்கள் சேதமாகுதல் என ஆதாயங்களை விட சேதாரங்களே அதிகமாக இருக்கும்.

1909-ல் காவிரியில் குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காக தண்ணீர் தேவை என்று ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் 11 டி.எம்.சி அளவிற்குத் தண்ணீர் சேகரிப்பது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி 42 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீரைத் தேக்குமளவுக்கு திட்டத்தை மாற்றினர். இதை எதிர்த்து சென்னை மாகாணம் சார்பாக ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றத்திலோ கர்நாடகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வெளிவந்தது.

இதுதான் காவிரிப்பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக விழுந்த முதல் அடி. எனவே இதையும் எதிர்த்து டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் ஆட்சி நடந்ததால் அவர்கள் இரு தரப்பையும் அழைத்து மறுபடியும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினர். அதன்படி கர்நாடகம் கண்ணம்பாடியிலே 42 டி.எம்.சி அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க ஒரு அணையைக் கட்டிக் கொள்வது. அதற்காக ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களை சாகுபடிக்கென புதிதாக ஏற்படுத்த வேண்டும். அதே போல தமிழ்நாட்டில் 93 டி.எம்.சி அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க ஒரு அணையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக 3,01,000 ஏக்கர் அளவுக்குப் புதிதாகப் பாசனப் பரப்பை ஏற்படுத்த வேண்டும். இதைத் தவிர ஒரே ஒரு நிபந்தனையாக கீழத்தஞ்சைப் பகுதியில் உள்ள கடைமடைப் பகுதிகளின் பாசன வசதிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. இது ஓரளவுக்கு நடைமுறையில் இருந்து வந்தது.

1956-ல் ஏற்பட்ட மாநிலப் பிரிவினையில் இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. இயற்கையை எல்லையாகக் கொண்ட பிரிவினை என்ற அடிப்படையே இல்லாமல், மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கென உள்ள 75% சதவீத நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்ற கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களோடு இணைக்கப்பட்டன.

இதன்பிறகு தமிழ்நாடு தொடர்ந்து இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. ஏறக்குறைய 75 முறைகளுக்கும் மேல் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும் எந்த முன்னேற்றமுமில்லை. 1980-க்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமாகவே திருச்சி மாவட்ட காவிரிப் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு இந்த அமைப்போடு தமிழ்நாடும் தன்னை இணைத்துக் கொண்டது. ஆனாலும் எந்தப் பலனும் கிட்டவில்லை. இப்படியாகக் காவிரி விஷயத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

பருவமழை நிலவரங்களைப் பொருத்தவரையில் தென்மேற்குப் பருவமழை மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாகப் பெய்து கர்நாடகம் உள்ளிட்ட அணைகளை நிரப்புகின்றன. அதன் மூலம் நமக்குத் தண்ணீர் வரும்; ஆனால் வடகிழக்குப் பருவமழை தான் நமக்கு நேரடியாகக் கிடைக்கின்றது. குறுவைச் சாகுபடிக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். நீர்ப்பங்கீட்டைப் பொருத்தவரையில் கர்நாடகம் தன்னுடைய அணைகள் நிரம்பியது போக மீதமுள்ள தண்ணீரை அனைத்து ஏரி குளங்களுக்கும் திருப்பி விடும்.

ஆக தென்மேற்குப் பருவமழைத் தண்ணீரை முழுவதும் தனக்குப் பயன்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை என்ற நிலையைக் காட்டி நம்மைத் தந்திரமாக ஏமாற்றி விடுகிறது. வடகிழக்குப் பருவமழையில் கிடைக்கும் உபரி நீரை தங்கள் அணைக்குப் பிரச்சினை நேராத வகையில் தமிழகத்திற்குத் திருப்பி விடுகிறது. இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் நமக்கு உள்ளன.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள வாய்க்கால்களின் பாசனத்திறனை எடுத்துக்கொண்டால் அவை 60% சதவீதம் மட்டுமே. இதை மேம்படுத்த வேண்டுமென்றால் குறைந்த பட்சமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 1.24 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 26,000 கிலோ மீட்டர் தொலைவுள்ள வாய்க்கால்களுக்காக ஏறக்குறைய 32,000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் அரசுகள் ஒதுக்குவதோ வெறும் 10 கோடி ரூபாய். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவருக்கு நினைவிடம் கட்ட 15 கோடிக்கு நிதி ஒதுக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வரைவுத்திட்டமென்றொ, எங்கே, எப்படி என்று எதுவும் குறிக்கப்படாமல் கண்ணை மூடிக்கொண்டு தமிழக அரசு 15 கோடியை ஒதுக்கியது. ஆனால் இத்தனை பாசன வாய்க்கால்களைப் பராமரிக்கவோ வெறும் 10 கோடியை மட்டுமே ஒதுக்குகிறது.

இதைத் தவிர மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தும் விதமாக 27 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 10, 20 ஆண்டுகளில் வெறும் 4 அணைகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்குப் பெருத்த இழப்பாகும்.

இதைத் தவிர காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்பட்டால் மட்டுமே மாநில அரசுகளின் தலையீடுகள் நிறுத்தப்பட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும். இவை அனைத்திற்காகவும் நாம் போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

– வினவு செய்தியாளர்கள்

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க