Saturday, January 18, 2020
முகப்பு செய்தி விவசாயிகளை மரணக் குழியில் தள்ளும் அரசு - வெங்கட்ட ராமைய்யா உரை !

விவசாயிகளை மரணக் குழியில் தள்ளும் அரசு – வெங்கட்ட ராமைய்யா உரை !

-

ஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த அனைத்திந்திய கிசான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த வெங்கட்ட ராமய்யா அவர்கள்  ஆற்றிய  உரையின் சுருக்கம்

வெங்கட்ட ராமைய்யா

ந்த நாட்டை ஆளும் மத்திய – மாநில அரசுகள் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் கழுத்தை நெரித்து மரணக் குழியில் தள்ளுகின்றன.  கடந்த 25 ஆண்டுகளாக ’எங்களை வாழவிடு’ எனப் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள், தற்போது வாழ வழியில்லாமல் தற்கொலைப் பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

தஞ்சை – கீழ வெண்மணியில் விவசாயிகள் கூலி உயர்வுக்காகப் போராடி ஆதிக்க சாதி வெறியர்களால் எரித்து கொல்லப்பட்டது முதல், மத்திய பிரதேசத்தில் ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரை பல ஆண்டுகளாக விவசாயிகள் தங்களது உயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும்.

இன்று விவசாயம் செய்வது லாபம் இல்லாத தொழில் என்ற கருத்து உள்ளது. அது அப்பொழுதும் இருந்தது. அன்று, அது இயற்கையின் சீற்றத்தால் உண்டான அழிவு. அதற்கு எதிரான போராட்டத்தில் பயிர் செய்தான் விவசாயி. இன்று விவசாயத்தை அரசே அழிக்கிறது. அது தான் அரசின் கொள்கை.  தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தற்போது மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆண்டுக்கு 27,000 கோடி டன் தானியம் உற்பத்தி செய்யும் விவசாயியால், தமது விளைபொருளுக்கு விலையைத் தீர்மானிக்க முடியவில்லை. வறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும் போதும் அரசு விவசாயிக்கு ஆதரவாக இல்லை.

விவசாய உற்பத்தி அதிகமானதால் தேக்கம் அடைந்து விடுகிறது என்கிறார்கள்.  ஒரு வாரத்திற்கு முன்பு, தக்காளி, வெங்காயம், உருளை வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினார்கள்.   எல்லாம் மழையில் அழிந்து விட்டது. அப்படி அழிவதற்கு காரணம் அரசு தான். உணவு சேமிப்புக் கிடங்கு  கட்டித்தராமல் விவாயிகளை அழிவுக்குத் தள்ளியது. மற்றொருபுறம் இடைத்தரகர்களையும் அரசு ஊக்குவிக்கிறது.

விவசாயிக்கு ஆதாரம் விதை தான். அந்த விதைகளையும் பன்னாட்டு கம்பெனியிடம் ஒப்படைத்து விட்டது.  தரமான விதையைக் கேட்டு விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தியாகி விட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த கார்ப்பரேட் விதைகள் விளைச்சலை பாதிக்கின்றன. உற்பத்திச் செலவை அதிகமாக்கி விடுகின்றன.  அரசும் அதற்கு ஆதரவாக உள்ளது.

விவசாயத்தில்  தன்னிறைவு கொண்டது நம் நாடு. கோதுமை இறக்குமதிக்கு அவசியமே இல்லை. ஆனால், மோடி அரசு கோதுமையை இறக்குமதி செய்து விவசாயிகளை அழிவுக்கு தள்ளுகிறது. ஏற்கனவே 25%-ஆக இருந்த இறக்குமதி வரியை முதலாளிகளுக்கு ஆதரவாகத் தள்ளுபடி செய்து விட்டது அரசு. ஆனால் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.

விவசாயிகளின் உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு தீர்மானித்தது. அதுவும் பலனளிக்கவில்லை.  விலை நிர்ணயிப்பது சம்பந்தமாக அரசு பல்வேறு கமிட்டிகளை நிர்ணயித்தது. ரமேஷ்சந்த் கமிட்டியின் அறிக்கைகளைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. இந்த கமிட்டியின் பரிதுரையை நிறைவேற்ற முடியாது என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறிவிட்டது.

குறைந்த பட்ச ஆதார விலையாக கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.18-20 லட்சம் கோடி வரையில் விவசாயிகளுக்கு அரசு கொடுத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தரவில்லை என்பது மட்டும் தற்போதையப் பிரச்சினையல்ல. ஆனால் இந்த அரசிடம் விவசாயப் பிரச்னையைத் தீர்க்க எந்தத் திட்டமும் இல்லை என்பது தான் பிரச்சினை. இந்த அரசு அதனை தீர்க்காது. இந்த அரசு விவசாயிகளை இணைய வர்த்தகம் செய்ய சொல்லுகிறது. இது கிராம விவசாயிகளுக்கு சாத்தியமாகுமா?  விவசாயத்தை 58% லிருந்து 38%-ஆகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரசிடம் இருந்து விவசாயத்தைக் காக்க,  நாம் சாதிப் பிளவுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்று திரள வேண்டும்.

– வினவு செய்தியாளர்கள்

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க