Saturday, July 4, 2020
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தமிழகத்தின் கலங்கரை விளக்காக மக்கள் அதிகாரம் - தோழர் ராஜு உரை

தமிழகத்தின் கலங்கரை விளக்காக மக்கள் அதிகாரம் – தோழர் ராஜு உரை

-

“விவசாயியை வாழவிடு !” மக்கள் அதிகாரம் சார்பில் ஆகஸ்ட் 5, 2017 அன்று நடைபெற்ற மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரை.

இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள்,  ”நீங்கள் மாநாடு நடத்துங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் , அடுத்தது என்ன செய்ய வேண்டுமெனக் கூறுங்கள், ” எனஆதரவளித்தனர். கடந்த மூன்று மாத காலமாக தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்துள்ளோம். ஒரு  பிரசுரம் கூட மக்களால் கீழே போடப்படவில்லை.

இந்தக் கூட்டத்திற்கு “விவசாயியை வாழ விடு” என நாம் அறைகூவல் விடுத்ததால் மக்கள் வரவில்லை. மாறாக, அரசு தான் ”விவசாயியை  வாழவிட மாட்டோம்” என்று கூறி இந்த மக்கள் இங்கு திரள்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

”குடிக்கத் தண்ணி இல்லன்னு போராடினதுக்காக பேராசிரியர் ஜெயராமன் மீது கேசு போடுகிறீர்களே, இது நியாயமா?” என்று மக்கள் கேட்கிறார்கள், எதிரிகளால் பதில் சொல்ல திராணி இல்லை. ஆகையால் போலிசை வைத்து மக்களை அச்சுறுத்தப் பார்க்கிறது அரசு.  ஆனால் மக்கள் பயப்படுவதில்லை.  போலீசும், மோடியும், எடப்பாடியும் பயப்படுகிறார்கள். அதனால் தான் ஒரு பிரசுரம் கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். அதே போல, இந்த மாநாடு நடைபெறக் கூடாது என்று பயப்படுகிறார்கள். நாம் இங்கு மாநாடு நடத்துகிறோம். போட்டிக்கு, போலீசு செந்தமிழன் சீமானை வைத்து கும்பகோணத்தில் உழவர் மாநாடு, கருத்தரங்கம், பேரணி நடத்துகிறது.

சீமான், கமல், தனுஷ் , விசால் என யார் வேண்டுமானாலும்  பேசட்டும். ஆனால் என்ன பேசுகிறார்கள்? எடப்பாடியிடம் கோரிக்கை, மோடியிடம் கோரிக்கை, கடைசியாக தன்னை முதல்வராக்க மக்களிடம் கோரிக்கை.  இதே சிஸ்டத்திற்குள் இருந்து தான் தீர்வு காணக் கூறுகிறார்கள். இந்த சிஸ்டமே டயர் வெடித்த பேருந்து போல உபயோகமற்று நிற்கிறது. அதில் இனி யாரும் பயணம் செய்ய முடியாது.  ”என்னை ஓட்டுனராக்குங்கள். நான் ஓட்டிக் காட்டுகிறேன்” என்கிறார்கள் இவர்கள்.

எங்களால் அப்படி வெறும் வாய்ச்சவடால் அடித்து விட்டுப் போய்விட முடியாது. யார் எதிரி யார் நண்பன், யாரிடம் கோரிக்கை வைக்க முடியும் என்பதை நாங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். டாஸ்மாக் கடைகளை மூட மக்கள் எத்தனை வழக்குகள், தடியடிகளை சந்தித்தார்கள்? யார் தாலி அறுந்தாலும் டாஸ்மாக் நடத்தியே தீருவேன் என்று அரசு, நிற்கிறது. போலீசு அதன் அடியாளாகவே இருக்கிறது.

தொழிற்சாலையில்  புதிய இயந்திரங்களை புகுத்தி, ஆட்குறைப்பு செய்கிறார்கள்.  அதே போல் விவசாயத்தில் தற்போதைய உற்பத்திக்கு, இவ்வளவு ஆட்கள் தேவை இல்லை எனக் கூறி, விவசாயிகளை வெளியேற்றுகிறான். 1990 -களில் காட்  ஒப்பந்தம் போடப்படும் போதே 40 கோடி பேரை விவசாயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என வெளிப்படையாகச் சொல்கிறது. இன்று  விளை பொருளுக்கு உரிய விலை கிடையாது, கடன் சுமை என எல்லா வகையிலும் விவசாயியை நெருக்கி தள்ளுகிறது இந்த அரசு.

 

மோடி அரசு விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்கிறது. மோடி எதை சொன்னாலும் நாம் நம்பக்கூடாது. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதைப் போல மோடிப் புளுகு என்ற சொற்றொடரை இனி நாம் வைத்துக் கொள்ளலாம். மோடி, விவசாயிக்கு வேலை கொடுக்க வேண்டாம், விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டாம். ஆனால் நெடுவாசல், கதிராமங்கலம் திட்டத்தையாவது நிறுத்தலாமே.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று  அடுத்தடுத்த தாக்குதலைகளை நம் மீது தொடுக்கிறது மோடி அரசு.  எல்லாவற்றிற்கும் வரிக்கு மேல் வரி போட்டு மக்களைக் கொல்லுகிறார் மோடி. மக்கள் வாழ்வதற்கு வழி கிடையாது. ஆனால் அவர்களிடம் பிடுங்குவதற்கு மட்டும் இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

எல்லாம் தனியார்மயம். கார்ப்பரேட்மயம் ஆன பிறகு   நாம் தனித்தனியாக போராடுகிறோம்.  விசயங்களை நாம் இணைத்துப் பார்ப்பதில்லை. மோடியின் எடுபிடி எடப்பாடியிடம் போய் நாம் கோரிக்கை வைக்கலாமா? எத்தனை வகைப் போராட்டம் நடத்தினாலும்  மக்கள் சாகட்டும் என அமைதி காக்கிறது அரசு. இவருக்கு நம்மை ஆள என்ன தகுதி இருக்கிறது?

தண்ணீர், பள்ளிக்கூடம், மருத்துவம்,  உணவு உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கி நம்மைக் கார்ப்பரேட்டுகளிடம் பணிய வைக்க நினைக்கிறது மோடி அரசு.  நமது  தண்ணீரை எடுத்து நமக்கே லிட்டர் 22 ரூபாய்க்கு கார்ப்பரேட் விற்கிறான். இவன் கையில் அரிசி சென்றால்  நம் கதி என்ன? இவர்களால் ஒரு  கிலோ அரிசியை உற்பத்தி செய்ய முடியுமா? மன்னனோ, அரசோ விவசாயத்தை உருவாக்கவில்லை. விவசாயம் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சி. அதனை அழிக்கப் பார்க்கிறது மோடி அரசு.

காலனியாட்சிக் காலத்தில் இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயிக், தனது வீடு, வாசல், சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார். இன்று, ஐந்து மாவட்ட விவசாயிகள் அந்த அணையால் பயன்பெறுகிறார்கள். நம்மிடம் வரி பிடுங்கும்  இந்த அரசு விவசாயிகளுக்காக என்ன செய்துள்ளது?

கடந்த 5 வருடங்களாக காவிரி வரவில்லை. 20 ஆண்டுகாலமாக இவர்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை. வருடா வருடம் விவசாயிகள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். வழக்கு நடைபெறுகிறது. இது என்ன கிரிமினல் வழக்கா? மேல்முறையீடு செய்து பின்னர் விசாரிப்பதற்கு? இது விவசாயிகளின் உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை. இதனை பற்றி யாரும் டீவியிலோ வேறெங்குமோ பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மாறாக யார் முதல்வர், யார் பொதுச்செயலாளர் என்ற பிரச்னையை தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் தினந்தோறும் இதே கூத்து தான் நடக்கிறது.

தனியார் மயம் வேலை வாய்ப்பைப் பெருக்கும் என்று கூறினார்கள், இன்று பி.எஹ்ச்டி. (முனைவர் பட்டம்) படித்தவன் டாஸ்மாக்கில் சரக்கு ஊற்றிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான். இது தான் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு.

மண்ணோடு உறவாடும் விவசாயி மண்ணாகவே இருக்கிறான். மழை, வெயில், விலை பொருளுக்கு விலை இல்லை என்று எதனால் நஷ்டமடைந்தாலும் அரசு ஏதாவது தராதா என்று எதிர்பார்த்து விட்டுப் போய் விடுகிறார்கள். விவசாயிகள் கொஞ்சம் முன்முயற்சி எடுக்க வேண்டும், எதிர்த்துப் போராட வேண்டும். நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் முன்முயற்சி செய்தார்கள். இன்றைக்கு தமிழகமே அவர்களுக்கு அதரவு தருகிறது.

கடன் தள்ளுபடி செய்யச் சொல்லிப் போராடும் விவசாயிகளை  சொந்தக் காலில் நிற்க சொல்கிறது இந்த அரசு. அதனை முதலாளிகளிடம் சொல்வது தானே? அரசு விவசாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை கைவிட்டு விட்டது. விவசாயத்தை முன்னேற்ற அதனிடம் எதாவது திட்டம் உள்ளதா? அரசைப் பொறுத்தவரையில் நாம் அனைவரும் குடிமக்கள் இல்லை. நுகர்வோர். எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கும் ஒரு நுகர்வோர். மொழி, உரிமை, பண்பாடு என எதுவும் பேசாதே என்பது தான் அரசின் கொள்கை.

ஒ.பி.எஸ். முதல் எடப்பாடி வரை அனைவரும் ஏரியா ரவுடி போல் அரசியலில் உருவாகி விட்டனர். இவர்களுக்குள் இருக்கும் போட்டியே  பாஜக காலை நக்கிப் பிழைப்பதில் தான் இருக்கிறது. மக்களும் இவர்களுக்கு மாற்று, இன்னொரு மாற்று என தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னை முதல்வராக்கினால் பிரச்னையை தீர்ப்பேன் என வாய்ச்சவடால் அடிக்கிறவன், எப்படித் தீர்ப்பேன் எனச் சொல்ல வேண்டுமல்லவா ? இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள் ?

சரி உடனடிப் பிரச்சினைக்கு வருவோம். கடன் தள்ளுபடி இப்போது அவசியம். கந்துவட்டி முதல், மைக்ரோ பைனான்ஸ் வரை எல்லாக் கடன்களையும் கட்ட மறுப்போம். தஞ்சாவூர் மாநாட்டில் சொல்லிவிட்டார்கள் என கடன்களை நாமே தள்ளுபடி செய்து கொள்ளுவோம். கட்ட முடியாது என்றால் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம். கந்து வட்டிக்காரனோ, மைக்ரோ ஃபைனான்ஸ் காரனோ, வங்கிக் காரனோ யாராவது ஒருவர் வீட்டில் வந்து கடனைக் கேட்டு அவமானப்படுத்தினால் அனைவரும் ஒன்று கூடுங்கள்.

மக்கள் அதிகாரம் கூட்டம் நடத்துவதற்குப் போலீசு ஏன் பயப்படுகிறது? மக்கள் அதிகாரம் தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளை உடைக்கவில்லை. ஆனால் மக்களுக்கு அறைகூவல் விட்டது,. “ குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே.. தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே .. மூடு கடையை.. எவன் வருவான் பார்ப்போம்.. “ என்றோம். மக்கள் அதன் பின்னர் ஒவ்வொரு போராட்டத்திலும் கையில் கடப்பாறைகளோடு புறப்பட்டனர். தமிழகமே போர்க்கோலம் பூண்டது.

நீதிமன்றத்தில் இந்த மாநாடு நடத்த விடாமல் தடுப்பதற்கு பல வித காரணங்களைச் சொன்னது போலீசு. நாம் தஞ்சையில் மாநாடு நடத்துவது அவர்களுக்குப் பயத்தை அளிக்கிறது. கதிராமங்கலத்தில் இருந்தும் நெடுவாசலில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என அஞ்சி நடுங்குகிறது. அதனால் தான் கும்பகோணத்தில் சீமானை வைத்து விவசாயிகள் மாநாடு ஒன்றை நடத்துகிறது. அதனால் தான் மாநாட்டிற்கு வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது.

ஒரு நோட்டீசு கொடுத்ததற்கு கைது செய்கிறது.  ஆர்.கே.நகரில் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்த வழக்கில் ’ஏ1’ எடப்பாடி தான். அவரை ஏன் கைது செய்யவில்லை ? சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கில் மாட்டிய, மெத்தப்படித்த  IPS உயரதிகாரிகளை  ஏன் கைது செய்யவில்லை ? சகாயம், ரஜினி, கமல், சீமான் என எல்லாரும் சொல்கிறார்கள் சிஸ்டம் சரியில்லை என்று. ஆனால் இவர்கள் தங்களை இந்த சிஸ்டத்திற்குள்ளேயே அங்கீகரிக்கச் சொல்லுகிறார்கள். சரியில்லாத இந்த சிஸ்டத்திற்குள்ளேயே எப்படித் தீர்வு காண முடியும் ?

சேலம் இரயிலில்  5 கோடி பணம் கொள்ளை போனதற்குப் போலீசின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.  SVS கல்லூரி மோசடிக்கு உடந்தையாக இருந்த துணைவேந்தர் சீதாலட்சுமிக்கு பி.சி.ராய் விருது வழங்கியிருக்கிறார்கள். புதுச்சேரியில் தெய்வசிகாமணி என்றொரு எஸ்.பி., கூலிப்படைகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள அவருக்கு ஜனாதிபதி விருது கொடுக்கிறான்.   கோவை ஹவாலா பணத்தைப் போலீசே கடத்தியது வரை  எல்லாம் இந்த அதிகாரவர்க்க  கும்பல் தான் செய்கிறது. இவர்களால் எப்படி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தர முடியும்?

மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் அரசு, மக்களை வேட்டையாடுவதிலேயே குறியாக இருக்கிறது. ஊருக்குள் புகுந்த வெறிபிடித்த மிருகத்தை இடைவெளி கொடுக்காமல், சுற்றி வளைத்து நின்று அடிப்பது போல் இந்த வெறி பிடித்த அரசின், ஓ.என்.ஜி.சி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய பல்வேறு வடிவங்களில் வரும் கார்ப்பரேட் மயம் என்னும் மிருகத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடித்துக் கொல்ல வேண்டும்.

நாம் மக்கள் சக்தியை ஆக்கப் பூர்வமாக பார்க்கிறோம். விவசாயிகளை இச்சமூகத்தின் மூத்த குடிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அரசோ விவசாயிகளை ’செத்து ஒழி’ என்கிறது. விவசாயம் ஒழிந்தால், அதனைச் சார்ந்து உள்ள சிறு தொழில்களும் அதனை நம்பியுள்ள கோடிக்கணக்கான சிறு தொழில் வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். ஆக மாணவர்களும், சிறு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒன்றிணைந்து போராடும் போது தான் தீர்வு கிடைக்கும்.  இது ஒரு நாளில் தீரக்கூடிய பிரச்சினை அல்ல. அதனால் தான் “விவசாயியை வாழவிடு” என மக்கள் அதிகாரம் ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. மக்களாகிய நீங்கள் தலைமை தாங்குங்கள். உங்கள் பின்னே நாங்கள் அணிதிரள்கிறோம்.

ஜெயராமனை சிறையில் அடைத்துப் பிணை வழங்காமல் இருக்கும் நீதிமன்றத்தின் முன் நின்று போராட வேண்டும். ’வாழவிடு’ என நீதிமன்றம் முதல் ஆட்சியாளர்களின் வீடு வாசல் வரை அவர்களைத் தூங்கவிடாமல் செய்ய வேண்டும். இனி அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. போராடித் தான் ஆக வேண்டும். ஏனெனில் அறிவிக்கப்படாத ஒரு உள்நாட்டுப் போரை  நம் மீது பாஜக-கார்ப்பரேட் அரசு தொடுத்துள்ளது. இந்த மிருகத்தை நாம் அனைவரும் இணைந்து  அடித்து விரட்ட வேண்டும் !  விரட்டுவோம் !!

மக்கள் அதிகாரம் தமிழகத்திற்கு ஒரு கலங்கரை விளக்காக  மாறும். நெடுவாசல், கதிராமங்கலம் தொடங்கி வரவிருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் வரை, ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க அரசை  அனுமதிக்க முடியாது என அரணாக நாம் அனைவரும் நிற்கவேண்டும். மக்கள் அதிகாரம் என்ற இந்த அரசியல், இந்த அமைப்பு  தமிழகத்தில் தலைமை தாங்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் . அதற்கான தொடக்கமாக இந்த மாநாடு அமையும் !!

– வினவு செய்தியாளர்கள்

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. தோழா் ராஜீவின் பேச்சி கேட்டபோthu மாநாdu ஏன் நிறய்வடய்கிறthu என்ற ஏக்கமானthu. மாநாட்டில் என்னய் பெரிthuம் கவர்ந்த பதாகய் ஒன்dru.பாரத்மாதாகீ ஜே.தண்ணிய விduடா வெண்ணய்.மீகvuம் எளிமயாக சங்கிகளய் அதன் கேவலமான அரீசியலய் தோல்உரித்த தோழா்களக்kku வாழ்த்தக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க