Tuesday, March 21, 2023
முகப்புசமூகம்வாழ்க்கைகணக்கில் வராத ஒரு தற்கொலை – ஒரு மரணம் !

கணக்கில் வராத ஒரு தற்கொலை – ஒரு மரணம் !

-

“வரப்பு உயர நீர் உயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயரக் குடி உயரும்.
குடி உயரக் கோன் உயரும்” – என்றார் ஔவையார்.

ஆனால் 2022–ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்கப் போவதாக மோடி அரசு அறிவித்திருக்கும் காலத்தில்தான் இருப்பதும் பறிபோயிக் கொண்டிருக்கிறது. சமீக காலமாக தற்கொலை செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிப்பே அதற்கான சாட்சி.

இது அரசின் கணக்கில் வராத ஒரு விவசாயியின் கதை. 

டெல்டா பகுதியின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணிக்கத்துக்கு நாலு ஏக்கர் நஞ்சை நிலம் இருந்தது. தண்ணீர் தடையின்றி பாயும் பள்ளத்தாக்கான கடைமடைப் பகுதியில்தான் அவரது நிலம் இருக்கிறது. கடும் உழைப்பாளியான மாணிக்கம் மற்றவர்களை விட ஏக்கருக்கு சில மூட்டைகள் கூடுதலாகத்தான் அறுவடை செய்வார். ஆற்றில் தண்ணீர் திறக்கும் தேதி அறிவித்தால் மாணிக்கம் அறுவடை தேதியையே முடிவு செய்யும் அளவுக்கு திறமையான உழைப்பாளி. மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என ஐந்து பேர் கொண்ட மாணிக்கத்தின் குடும்பத்துக்கு நல்லது கெட்டது அனைத்துக்குமான மூலாதாரம் இந்த நாலு ஏக்கர் நிலம்தான்.

2000 –ம் ஆண்டு வாக்கில் காவிரி பிரச்சனையால் கால நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு உருவானது. மண்ணின் தன்மைக்கேற்ப ஒரு போகம் இரு போகம் என இருந்த விவசாய நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அதி வேகமாக வரத் துவங்கியது.

மாணிக்கத்திற்கும் நான்கு வருடம் தொடர்ந்து நட்டத்தை ஏற்படுத்திய விவசாயம் “போர்” போடும் எண்ணத்தை தூண்டியது. ஆனால் ஊரைச் சுற்றி வாங்கி வைத்த கடனோ ஆசையை நிராகரித்தது. அடுத்து வரும் காலங்களிலாவது ஆற்றில் முறையாக தண்ணீர் வரும்போது விட்டதை பிடித்து விடலாம், பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு போர் போடும் எண்ணத்திற்கு தடை போட்டார்.

படிப்பு வராமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தான் மூத்த மகன். தண்ணீர் பிரச்சினையை போக்க ஆழ்துளைக் கிணறு போட வேண்டும் என்றான் மகன். ஏற்கனவே நான்கு வருடம் விவசாயம் பொய்த்ததால் கடனாளியாக இருக்கும் நமக்கு இது மேலும் சுமை என்றார் அப்பா.

மகனோ ஏற்கவில்லை. வங்கியில் நிலப்பட்டாவை வைத்து போர்வெல் கடனும், அதே நிலத்தை ஊர் பணக்காரரிடம் காண்பித்து வட்டிக் கடனும் வாங்கி போர்வெல் போடத் தொடங்கினார்கள். நான்கு லட்ச ரூபாய் செலவில் அனைத்து வேலைகளும் நிறைவேறி பூமிக்குள் இருந்து இரும்பு குழாய் வெளியில் தலைகாட்டி விட்டது. மின்சாரம் வர வேண்டியதுதான் பாக்கி.

மாணிக்கத்தின் வயல் அருகில் மின்சாரத்துக்கான வழி இல்லை. வயல்வெளிக்கு கொண்டு வர சாலையில் இருந்து தனி மின்தடம் அமைக்க வேண்டம். அதற்கு ஒரு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அந்த தொகைக்கு கடனை தேடியும் தேவைப்பட்ட காலத்துக்குள் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் மேலும் கடன் சுமை ஏறுவதால் பதற்றம் அடைந்த மாணிக்கம் வங்கி அல்லாத கடனுக்கு மட்டுமே மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டி கட்டவேண்டும். போர்வெல் நம் தகுதிக்கு தேவையற்ற வேலை என மகனிடம் வாதிட்டார்.

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி விவசாய முறையை மாற்றி கடன் சுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான் மகன். ஆனால் கைக்கு கிடைக்காத பணம், தடைபோடும் அப்பாவின் பேச்சு, இருக்கும் நிலையில் இது தேவையா என்ற சுற்றாத்தாரின் ஏளனம் தாங்கிக் கொள்ள முடியாமல் குழம்பிப் போனான். விளைவு அவன் போட்ட போர்வலின் தண்ணீரை பார்க்காமலே உயிரை மாய்த்துக் கொண்டான். பத்து ஆள் வேலையை ஒற்றை ஆளாக செய்யும் பலம் பொருந்திய 22 வயது நிறம்பிய அவன் உயிர் 50 மில்லி பூச்சி மருந்துக்கு பலியானது.

மகனின் மரணத்தால் மயான அமைதியோடு அக்குடும்பம் ஒருவருடத்தை கடந்தது. இந்த சூழலில் அரசுப் பள்ளியில் படித்து 1000–க்கு மேல் மதிப்பெண் பெற்ற இளைய மகன் பட்டப்படிப்புக்கு தயாரானான். பி.இ படிக்க ஆசையிருந்தாலும் டிப்ளமோதான் விதி என்றானது.

ஒரு வழியாக மாணிக்கத்துக்கு தாய்மாமன் சீராக வந்த வெளியூர் நிலத்தை விற்று மின்சாரம் வாங்கியதால் போர்வெல் ஓடத் தொடங்கியது. 4 வருடத்தில் பாதி கடனை அடைத்தார் மாணிக்கம். இளைய மகன் பி.இ படித்தே தீருவேன் என்றான். மகளும் பள்ளிப் படிப்பை முடித்தாள். மீண்டும் கடனாளி ஆனார் தந்தை. இளையமகன் பி.இ படித்து முடித்தும் கடனுக்கு ஒரு வழியும் பிறக்கவில்லை. கடன்காரர்களின் தொல்லையாலும், வட்டிக் கொடுத்து மீளமுடியாமலும் போர்வெல்லோடு சேர்த்து நிலத்தையும் 6 லட்சத்துக்கு அடகு வைத்தார்.

மாணிக்கத்தின் நிலத்தை அடகு வாங்கியவர் ஒரு அரசு ஊழியர். இவர் ஐந்து அண்ணன் தம்பிகளை கொண்ட கூட்டு குடும்பத்தைச் சேர்தவர். இந்த ஐந்துபேரின் பட்ட படிப்பிற்காக இவர்கள் பெற்றோர் பரம்பரை சொத்தான எட்டு ஏக்கர் நிலத்தை இழந்தனர். விவசாயத்தில் மிச்சம் ஏதுமில்லை, படித்தால் பெருங்குடி ஆகலாம் என சிறுக சிறுக நிலத்தை விற்றனர். இந்த ஐந்துபேரில் இருவருக்கு மட்டும் அரசு வேலை. மற்றவர்களுக்கு சொல்லும் அளவுக்கு வேலையோ சம்பளமோ கிடையாது.

நிலம் இழந்ததை நினைத்து நினைத்து வருத்தப்படும் பெற்றோரின் மனதறிந்தும் விவசாயத்தின் மேல் உள்ள மரியாதையினாலும் மாணிக்கத்தின் நிலத்தை அடகு வாங்கினார்கள் இந்த அண்ணன் தம்பிகள். வருடத்துக்கு இரண்டு போகம் என இரண்டு வருடம் விவசாயம் செய்தனர். அதற்குமே தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியினால் பாதி நிலம் மட்டும் விவசாயம் செய்தனர். இதுவரை விவசாயம் செய்வதற்கான முதலீட்டை கழித்து விட்டுப் பார்த்தால் அவர்கள் போட்ட முதலை இன்னும் எடுக்கவில்லை.

இந்த வருடம் கோடை நடவு செய்திருந்தனர். பயிரை விட்டு நெல் சூரியனை எட்டிப் பார்க்கும் தொண்டைக்கதிர் தெரியும் பக்குவமான காலம். போர் பழுதுபட்டு தண்ணீர் வரவில்லை. குடும்பமே பதட்டப்பட்டது. மெக்கானிக் தொழிலாளி வரவழைக்கப்பட்டார். பூமிக்குள் இருக்கும் போர்வெல் குழாய்க்குள் அதற்கான பிரத்தியோகக் கருவியும் அதற்கான கேமராவும் கொண்டு பரிசோதித்தார்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மோட்டாருக்கும் கீழே தண்ணீர் போய்விட்டதால் பூமிக்குள் இருக்கும் குழாய் உருகி அதன் வடிவம் சிதைந்து விட்டது.

வீட்டில் ஒருவருக்கு முடியாமல் போய் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் இருக்கும் பதட்டம் அனைவர் முகத்திலும் தெரிந்தது. 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் நகரத்து மருத்துவமனைக்கும் கிராமத்துக்குமாக நடையாய் நடந்தார்கள். மருத்துவரை கூட்டி வருவது போல் போர்வல் மெக்கானிக்கை இருசக்கர வாகனத்தில் வைத்து அவசரமாக அழைத்து வந்தார்கள். முடியாது என்றானதும் அதைவிட திறமையானவர் என்று மற்றவரை அழைத்துவந்தனர். எல்லாம் கொண்டை கதிராக இருக்கும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் வேண்டுமே என்ற கவலைதான்.

முற்றிலுமாக சிதைந்துவிட்டது. இனி போர்வல் பயன்பாட்டுக்கு உதவாது என்றனர். உயிருக்கு ஊசலாடும் பயிரைக் காப்பாற்ற பக்கத்து போர்வல் காரரிடம் தண்ணீருக்கு விலை பேசி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் நிலத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறைதான். இருந்தும் நெற்பயிரை பார்க்கையில் ஒரு விசாயியாக அவரால் மறுக்க முடியவில்லை. அவர் பயிர், கதிர் வரும் நிலையில் இல்லை என்பதாலும் கொஞ்சம் காய்ந்தால் கூட உயிர் பிழைத்துவிடும் என்ற நம்பிக்கையிலும் உதவி செய்ய முன்வந்தார்.

எப்படியோ பயிரை காப்பாற்ற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டதில் நிம்மதி. ஆனால் போர்வெல் கேள்விக்குறியானது. கொடுத்த பணத்துக்கான வருமானத்தை நிலத்திலிருந்து எடுக்காத நிலையில் புதுசாக போர்வெல் போட்டுத் தரவேண்டிய நிலை குறித்து அடகு வாங்கியவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஊர் பெரியவர்களிடம் முறையிட்டனர். ஆளுக்கு பாதி பணம் போட்டு மீண்டும் போர் போடலாம் என்று மாணிக்கத்திடம் பேசலாம் என முடிவு செய்யப்பட்டது.

மாணிக்கத்தின் உடல் நிலை போர்வெல் பழுதான சேதியை தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பையும் நிலத்தையும் மீட்டுவிடுவான் என்று நம்பியிருந்த இளையமகன் பி.இ படித்தும் வேலை இல்லாமல் மேலும் கடன் பட்டு ஏதோ ஒரு வேலைக்காக வெளிநாட்டு பயணத்துக்கு காத்திருக்கிறான். மகள் கல்யாணத்துக்கு காத்திருக்கிறாள். இந்நிலையில் மேலும் ஒரு கடன் அவர் சக்திக்கு அப்பாற்பட்டது.

அடகு வாங்கியவர்கள், மாணிக்கத்திடம் போர்வெல் போட பாதி பணம் தரவேண்டும் என்று வற்புறுத்தவும் இல்லை. மாணிக்கம் மறுக்கவும் இல்லை. ஆனால் பலவீனமான அவர் உடல் நிலை போர்வெல் நிலையறிந்த மறுநாளே உயிரை விட்டு விட்டது.

மாணிக்கத்தின் இறுதி சடங்கு கூட்டத்தில் அவர் மனைவி “நெலம் நெலமுன்னு எங்குடும்பமே அழிஞ்சுப் போச்சு. ஒத்த ஆளு படுத்தான்னா ஒரு வாய்க்கா(ல்) ஒடப்பு மண்ணடைவான் எம்புள்ள. பீமன் மாதிரி இருந்த எம்புள்ள போயி பத்து வருசம் ஆச்சு. எங்களால இன்னும் அவனை மறக்க முடியல. பிள்ளையும் போச்சு வயலும் போச்சுன்னு பொலம்பி பொலம்பி படுத்த படுக்கையானாரு இந்த மனுசன். ஒரு போகமாவது வெள்ளாமெ செய்யாம எவ்வுசுரு போகாதுன்னு சொன்னவரு இன்னைக்கி எங்கள அனாதையாக்கிட்டு போயிட்டாரு”

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அடகு வாங்கிய அரசு ஊழியரின் அம்மா “படிப்புதான் முக்கியமுன்னு நெலத்த எழந்தேன். ஆனா நெலமில்லையேன்னு நெனைக்கும் போது படுத்தா தூக்கம் வராது. தெருவுக்குள்ள நடந்தா அவமானமா இருக்கும். வெவசாயம் பாக்கனும் கொல்லை குடிக்கு போகனுமுன்னு அத்தன ஆசை. எனக்காகதான் எம்புள்ளைங்க இந்த நெலத்த அடகு புடிச்சாங்க. இன்னைக்கி என்ன செய்றதுன்னு தெரியாம நிக்கிறாங்க. எல்லாரும் வெவசாயத்த விட்டுட்டு போகயில நான் மட்டும் ஆசப்பட்டேம் பாரு எம்புத்திய சோட்டால(செருப்பு) அடிக்கணும்.”

இதையெல்லாம் பார்க்க சகிக்காமல் மாணிக்கமும் போய்ச் சேர்ந்து விட்டார். பாருங்கள், ஒரு நிலம், தண்ணீரில்லை, ஃபோர்வெல் போட்டார்கள் இறுதியில் ஒரு உயிர் தற்கொலை, ஒரு உயிர் மனம் வருந்தி மரணம், இருப்பவர்கள் என்ன செய்வதென்று திகைக்கிறார்கள்!

அரசாங்கத்தின் கணக்கில் வராத விவசாயிகளின் மரணம் ஒவ்வொன்றிலும் இதுதான் நிலைமை!

  • சரசம்மா

(உண்மைக் கதை. பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. வாசிக்கும் போதே மனசெல்லாம் வலிக்கிறது.பெரியதொரு போராடத்தில் ஈடுபடாதவரை இவற்றிற்கு தீர்வு வரப்போவதில்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க