Saturday, August 24, 2019

சர்க்கரையின் அறிவியல்

-

லகம் முழுவதும் பெருகிவருகிற அதீத உடல் பருமன் பிரச்சினையை நிறுத்த விஞ்ஞானிகள் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். இப்பிரச்சினை கொழுப்பையும் தாண்டி மிக அபாயகரமாக இருப்பதை புதிய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அல்ஜசீராவின் தொழில்நுட்பத்தை அறிவோம் (Tech Know) குழு சர்க்கரையின் அறிவியலை ஆராய்கிறது.


ர்க்கரை, இது உலகெங்கெலும் உள்ள குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டுவரும் ஒரு பொருளாகும். இது மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில், ஆற்றல் மூலங்களில் முக்கிய பகுதியாகவும் உள்ளது. ஆனால், உலகளவிலான பெருகிவரும் உடல்நல நெருக்கடிக்கு முக்கிய குற்றவாளியாகவும் உள்ளது.

பெருமளவில் அதிகரித்து வரும் அதீத உடல் பருமனுக்கும், நீரிழிவு நோய்க்கும் காரணமாக சர்க்கரை, குறிப்பாக சர்க்கரைக் கரைசல் பானங்கள் (பாட்டில் குளிர்பானங்கள்) இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் 190 கோடிப் பேர் அதிக எடையுடனும், அதில் 60 கோடிப் பேர் அதீத உடல் பருமனுள்ளவர்களாகவும் உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் 2014-ம் ஆண்டுத் தரவுகளின் படி உலகில் பெரியவர்களில் மூன்றில் ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறார். 2015-ம் ஆண்டின் தரவுகளின் படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 4.2 கோடி பேர் அதிக எடையுடனும் அவர்களில் 48 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ளனர்.

மெக்சிக்கோவைப் பொறுத்தவரை, பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது. மெக்சிக்கோவின் தேசிய பொது சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி சுமார் 70 சதவீத பெரியவர்கள் அதிக எடையுடன் அல்லது அதீத உடல் பருமனுள்ளவர்களாக உள்ளனர். மெக்சிக்கர்கள் உலகிலுள்ள வேறு எவரையும் விட அதிக சோடா பானங்களை குடிக்கிறார்கள். ஒரு மெக்சிக்கர், ஆண்டுக்கு சுமார் 163 லிட்டர் பானத்தை குடிக்கிறார். இது ஒரு அமெரிக்கர் ஆண்டுக்கு நுகரும் 118 லிட்டரை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.

இதைக் கட்டுப்படுத்த மெக்சிக்கோ அரசு அந்த பானங்களுக்கு 10% சுங்கவரி விதித்துள்ளது. மெக்சிக்கோவை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும், ‘உலக சர்க்கரை வரி’ விதிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மெக்சிக்கோவை அடுத்து இன்றளவில் பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் சர்க்கரை பானங்களுக்கு வரிக் கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலித்து வருகின்றன.

இந்தியாவிலும், சோடாவின் விற்பனை 1998 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்து வருகிறது. ஒரு இந்தியருக்கு ஆண்டுக்கு 11 லிட்டர் சோடா என்றளவில் நுகர்வு உள்ளது. 1980-களில் இருந்து குப்பை உணவு எனப்படும் பொதியப்பட்ட உணவின் நுகர்வும் அதிகரித்து வந்துள்ளது. இதுவே இங்கு அதீத உடல்பருமன், நீரிழிவு மற்றும் இதயநோய் அதிகரிப்பிற்கான காரணமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதிக சர்க்கரை உணவு அதாவது அதிக கார்போ-ஹைட்ரேட் உணவு உடல் நலத்திற்கு தீங்கானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிக சர்க்கரை உணவுக்கும் இதய நோய்க்குமான தொடர்ப்பு பற்றிய 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சர்க்கரை, சோடா பானங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கார்போஹைட்ரேட் உணவுப் பழக்கங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவ்வாய்வில் இதய நோய் மற்றும் இறப்பிற்கான வாய்ப்புகள் கணிசமாக உயர்ந்தது கண்டறியப்பட்டது.

***

ர்க்கரை என்றவுடன் நம்மில் பெரும்பாலானோருக்கு வெள்ளை நிற கன படிகங்கள் (ஜீனி) தான்  நினைவுக்கு வரும். ஆனால், சர்க்கரை கார்போ-ஹைட்ரேட்டுகள் எனப்படும் கார்பன் (C), ஹைட்ரஜன் (H) மற்றும் ஆக்சிஜன் (O) அணுக்களின் வேதிப் பிணைப்பினால் உருவாகும் கரிம மூலக்கூறுகளின் ஒரு வகையாகும்.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் கார்போ-ஹைட்ரேட்டுகளை உருவாக்குகின்றன. பகலில் ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி அதை சூரிய ஆற்றலின் உதவியுடன் நீருடன் வினையாற்றச் செய்து கார்போ-ஹைரேட்டுகளையும், ஆக்சிஜனையும் உருவாக்குகின்றன.

குளுக்கோஸ், ஃப்ரக்ட்டோஸ், காலக்டோஸ் போன்ற எளிமையான மூலக்கூறுகள் ஒற்றை சர்க்கரைகள் (Monosaccharides: Mono – ஒற்றை; saccharides – சர்க்கரைகள்) என்றழைக்கப்படுகின்றன. சுக்ரோஸ், லாக்டோஸ், மால்டோஸ் இரண்டு மூலக்கூறுகள் கொண்ட சேர்மங்கள் இரட்டை சர்க்கரைகள் என்றழைக்கப்படுகின்றன.

சுக்ரோஸ் ஒரு குளுக்கோசும், ஒரு ஃப்ரக்டோசும் சேர்ந்த சேர்மமாகும். நாம் பயன்படுத்தும் வெள்ளை நிற கன படிகங்களாகட்டும், நாட்டுச் சர்க்கரை எனப்படும் மஞ்சள் நிற சர்க்கரை, வெல்லம் எதுவாயினும் அது சுக்ரோஸ் என்ற இரட்டை சர்க்கரைகள் (Disaccharides) வகையைச் சேர்ந்ததாகும். பாலில் இருக்கும் சர்க்கரை லாக்டோசாகும். இது ஒரு குளுக்கோசும், ஒரு காலக்டோசும் சேர்ந்த சேர்மம். அதே போல் பார்லி போன்ற தானியங்களில் இருந்து கிடைக்கும் மால்டோஸ் என்பது இரண்டு குளுக்கோஸ் மூலக்கூறுகள் சேர்ந்த இரட்டை சர்க்கரையாகும். இவை அனைத்தும் எளிமையான சர்க்கரைகள் அல்லது எளிமையான கார்போ-ஹைட்ரேடுகள் எனப்படுகின்றன.

தாவரங்கள் உருவாக்கும், மாச்சத்து (Starch-ஸ்டார்ச்), நார்ச்சத்து (Fibre-ஃபைபர்) போன்றவை ஆயிரக்கணக்கான ஒற்றை சர்க்கரைகள் இணைந்த சிக்கலான ஒரு மூலக்கூறு வகையைச் சேர்ந்தவை. அதனால் இவை சிக்கலான கார்போ-ஹைட்ரேடுகள் (Polysaccharides) எனப்படுகின்றன.

நாம் உண்ணும் கார்போ-ஹைட்ரேட்டுகள் செரிமானத்திற்கு முதலில் ஒற்றை சர்க்கரைகளாக உடைக்கப்பட வேண்டும். கார்போ-ஹைட்ரேட்டுகளின் செரிமான நிகழ்ச்சிப் போக்கு நமது வாயிலிருந்து துவங்கிறது. முதலில் உமிழ்நீரில் உள்ள நொதியில் அவை நீர்பகுப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. பின்னர் சிறுகுடலுக்கு சென்றபின் அங்கு கணையநீர் நொதியினால் ஒற்றை சர்க்கரைகளாக உடைத்து உறிஞ்சப்பட்டு அவை இரத்தத்தில் கலக்கின்றன.

இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸ் என்ற ஒற்றை சர்க்கரை உடலெங்குமுள்ள செல்களின் ஆற்றல் மூலங்களாக இருக்கிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் கலந்தவுடன், இன்சுலின் (Insulin) என்ற இயக்குநீரை (harmone) கணையம் சுரந்து இரத்தத்தில் கலக்கிறது. இன்சுலின் கல்லீரல் மற்றும் தசைகளுக்கு இரத்தத்திலுள்ள குளுக்கோசை எடுத்துக் கொள்ளும் படி சமிக்ஞை கொடுப்பதுடன், அதை ஆற்றலாக மாற்றவும் உதவிபுரிகிறது. செல்கள் அவற்றை எரித்து உடனடி ஆற்றல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

மீதமிருக்கும் சர்க்கரைகள் திசுக்களிலும், கல்லீரலிலும் க்ளைக்கோஜென்களாக (Glycogen) சேமிக்கப்படுகிறது. நாம் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொள்ளும் போது க்ளைக்கோஜென்களை சேமிக்கும் சேமிப்பிடங்கள் நிறைந்த பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இன்னும் மீந்திருக்கும். இப்போது இன்சுலின் கல்லீரலுக்கு சமிக்கை கொடுத்து அங்கு அவை கொழுப்பாக மாற்றப்படுகின்றன. இந்த செயல்முறைக்கு கொழுப்பாக்கல் (Lipogenesis) என்று பெயர். இந்தக் கொழுப்பு முதலில் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.

***

லிஃபோர்னியா, டேவிசில் (Davis) இருக்கும் ஆய்வகத்தில் நடத்தப்படும் ஆய்வு காரணம் – விளைவை முதன்முறையாக வெளிப்படுத்துவதாக உள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியியல் துறையும், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன.

இதில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் சர்க்கரையை (கார்போ-ஹைட்ரேட்) பத்து வாரங்களுக்கு உணவு முறையாகக் கொடுத்து, பின்னர் அதன் விளைவுகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அளவிடுகின்றனர். நல்ல உடல் நலத்துடன் 20-வயதுகளில் உள்ள இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

பேராசிரியர் கிம்பர் ஸ்டான்ஹோப்

பேராசிரியர் கிம்பர் ஸ்டான்ஹோப் (Kimber Stanhope) தலைமையில் நடக்கும் இவ்வாய்வில், பங்குகொள்ள கல்லூரி மாணவர்களின் சிறு குழு வந்துள்ளது. அவர்கள் இங்கு தங்கள் வகுப்புக்களுக்காக வரவில்லை; மாறாக தங்களையே ஆய்வில் உட்படுத்திக் கொள்ள தன்னார்வலர்களாக வந்துள்ளனர்.

இது ஒற்றை கண்மூடிய (Single Blinded) சோதனை. அதாவது யார் யார் என்னென்ன உட்கொள்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் மட்டுமே அறிவார்கள். ஆய்வு துவங்கிய முதல் நாளில் இருந்து மிகமிக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விஞ்ஞானிகள் கொடுக்கும் உணவை மட்டுமே பத்துவாரங்களுக்கு சாப்பிட வேண்டும். வெளி உணவுகளுக்கு அனுமதி இல்லை. மொத்தம் 60 பேரில், 15 பேர்களாக குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சர்க்கரை விகிதத்தில் உணவுகள் வழங்கப்பட்டன. சர்க்கரை உட்கொள்ளும் உணவுப் பழக்கம் மட்டுமே ஆய்வுக்குட்பட்ட பொருளென்பதால் உடற்பயிற்சி செய்வதற்கும் அனுமதியில்லை.

கல்லீரல் ட்ரைகிளிசரைட்களின் (triglycerides) அளவை ஒழுங்குபடுத்துகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு சேமிப்பு அதிகமான ட்ரைகிளிசரைட்களை உற்பத்தி செய்யும். இரத்தத்தில் ட்ரைகிளிசரைட்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அது இரத்த நாளங்களில் அடைப்புக்கான சாத்தியத்தை அதிகரித்து கொடிய இதய நோய் அபயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக ஃப்ரக்டோஸ், கல்லீரல் கொழுப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

அதனால் முதல் நாளில் இருந்து ஒழுங்கான இடைவெளிகளில் காந்த ஒத்திசைவு படமெடுத்தலின் (MRI) மூலம் அவர்களின் உடலுறுப்புகள், குறிப்பாக கல்லீரல் படமெடுக்கப்பட்டு ஒப்பீட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. கதிரியக்க நோய் கண்டறிதல் துறையில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஜான் மெக்கன் (John McGann) இதை மேற்பார்வையிடுகிறார்.

உணவுக்குப் பின் அவர்களின் மூச்சுக் காற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதாவது, ஒருவர் தனது மூச்சுக் காற்றில் எவ்வளவு ஆக்சிஜனை உறிஞ்சி நுகர்கிறார்; எவ்வளவு கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்து வெளியிடுகிறார் என்பது நவீன தொழில்நுட்பக் கருவியின் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் மூலம், அவருடைய உடல் எந்த விகிதத்தில் கொழுப்பை, எரிக்கிறது என்பதை அக்கருவி கணக்கீடு செய்யும். கல்லீரலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைந்து அதாவது எரிந்து ட்ரைகிளிசரைட்களை உற்பத்தி செய்கிறது.

அதே போல அவர்களது இரத்தம் சேகரிக்கப்பட்டு, அதிலுள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவு ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. டாக்டர் கேண்டஸ் ப்ரைஸ் (Candace price) இரத்தத்திலுள்ள கொழுப்பமிலங்களின் ஆய்வகத்தின் பொறுப்பாளராக இருக்கிறார்.

அதிகளவிலான கார்போ-ஹைட்ரேட் உணவுகள் ஒருவரின் உடல் பருமன் அதிகரிக்காவிட்டாலும் கூட கொடிய இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வந்தடைந்துள்ளனர்.

முடிவாக கார்போ-ஹைட்ரேட்டுகள் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அது வெள்ளை, மஞ்சள், பழுப்பு என எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் விளைவுகள் ஒன்று தான். அவற்றையும் செயற்கை இனிப்பூட்டிகளையும் அவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். உடலின் ஆற்றல் (கார்போ-ஹைட்ரேட்) தேவைக்கு அளவாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் டாக்டர் கிம்பர் ஸ்டான்ஹோப்.

***

கார்போ-ஹைட்ரேட்டுகளின் மூலாதாரங்களாக தாவரங்களே உள்ளன. மிகை கார்போ-ஹைட்ரேட் உணவுப் பழக்கம், உடல் நலத்திற்கும், உயிருக்கே கூட தீங்கானது என்கிறது அறிவியல்.

இயற்கை விவசாயம், இயற்கை உணவு போன்ற குழுமங்கள் “வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு, மஞ்சள், பழுப்பு, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினையில்லை” என்று பிரச்சாரம் செய்கின்றனர். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட, சுத்தமான ஆர்கானிக் சர்க்கரை அதிக விலையில் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து சந்தைப்படுத்தப்படுகிறது. அவர்களும் அதை நம்பி ஏமாறுகின்றனர்.

கடந்த 100, 150 ஆண்டு கால அறிவியலின் வருகைக்குப் பிறகு நமது பழமை சீரழிக்கப்பட்டதன் விழைவுகள் தான் அதீத உடல்பருமன், நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள். அதனால், அதுகாறும் இருந்த பழைய பண்பாடுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்கின்றனர் நாம் தமிழர் சீமான் போன்ற சிலர். இது அறிவியல் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துவதாகும். எல்லா கார்போ-ஹைட்ரேட்டுகளையுமே உடல் ஆற்றல் தேவையைவிட மிகையாக எடுத்துக் கொள்ளும் போது அது உடல்நலத்திற்கு கேடானதுதான்.

வெள்ளை சர்க்கரையில் இருக்கும் சுக்ரோசின் அளவை விட நாட்டுச் சர்க்கரையில் இருக்கும் சுக்ரோஸ் அளவு குறைவாக இருக்கலாம். அதாவது இனிப்புச் சுவைக்கு காரணமாக சுக்ரோஸ் இரண்டிலும் இருக்கிறது. இனிப்புச் சுவை அதிகம் வேண்டுவோர் நாட்டுச் சர்க்கரையை அதிகம் போட்டு பயன்படுத்துவர். குறைவாக இனிப்பு சாப்பிடுபவர் அது வெள்ளை சர்க்கரையாக இருந்தாலுமே அளவாக எடுத்துக் கொள்வார்.

மறுபுறம், நமது நாட்டில் புரதம் நிறைந்த இறைச்சி உணவு உடல் நலத்திற்கும், குணநலன்களுக்கும் தீங்கானது என்று அறிவியலுக்குப் புறம்பாக பொய்யைப் பரப்பிவைத்துள்ளது பார்ப்பனியம். அதோடில்லாமல், மாட்டுக்கறிக்கு தடை விதிப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் புரதத் தேவையை பூர்த்தி செய்யவிடாமல் தடுக்கவும் செய்கிறது.

இதனால் புரதம் சாப்பிட முடியாத மக்கள், எளிய கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்களை இதுவரை பெரிய அளவில் அவர்களுக்கில்லாத உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்குள் தள்ளியுள்ளது.

– நாசர்

செய்தி ஆதாரம் :

_____________

இந்த அறிவியல் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி