Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்உணவுப் பொருள் இறக்குமதி : ஆதாயமடைவது யார் ?

உணவுப் பொருள் இறக்குமதி : ஆதாயமடைவது யார் ?

-

விவசாய விளைபொருள் உற்பத்தியில் தன்னிறைவு ஆற்றல் கொண்ட நாடு எனக் கூறப்படும் நிலையிலிருந்து, உணவுப் பொருட்களைப் பெருமளவு இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா தாழ்ந்துவிடும் என்கிற அச்சம் எழுந்து வருகிறது. கடந்த 2014 தொடங்கி தற்போது வரை இந்தியாவின் தானிய இறக்குமதியின் அளவு 110 மடங்கு அதிகரித்திருப்பதுதான் இந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

படிப்படியாக அதிகரித்துவரும் உணவுப் பொருள் இறக்குமதிக்கு நமது நாட்டு சிறு, நடுத்தர விவசாயிகள்தான் முதல் பலி. ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை,  இந்தியாவில் விளையும் கோதுமையைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும்பொழுது, அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரண பொருளாதார அறிவின் மூலமாகவே இந்த அபாயத்தை யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.

2014 – 15 -ல் கோதுமை, சோளம் மற்றும் அரிசி வகைகள் 134 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், 2016 – 17 -ல் இந்த உணவுப் பொருட்களின் இறக்குமதியின் மதிப்பு 9,009 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2014 – 15 -ல் 5,414 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட பழவகைகள், 2016 -17 -ல் 5,897 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களைக் காட்டிலும் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது எனச் சொல்லப்படும் அதே சமயத்தில்தான், விவசாயப் விளைபொருட்களின் இறக்குமதியும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகிறது.

உலகிலேயே கோதுமையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனினும், 2014 மற்றும் 2015 -ஆம் ஆண்டுகளில் வட இந்தியாவில் பருவமழை பொய்த்து கோதுமை உற்பத்தியும் குறைந்தது. ஆனாலும், உள்ளூர் தேவையை நிறைவு செய்ய முடியாத வகையில் கோதுமை உற்பத்தி குறைந்துவிடவில்லை.

எனினும், மோடி அரசு நொண்டிக் குதிரைக் குச் சறுக்கியதுதான் சாக்கு என்ற கதையாக, விளைச்சல் குறைந்து போனதைக் காரணமாகக் காட்டி, கோதுமைக்கான இறக்குமதி வரி விதிப்பை 25% -இல் இருந்து 10% -க்குத் தளர்த்தி, கோதுமை இறக்குமதிக்கு தாராள அனுமதி வழங்கியது. இந்த 10 சதவீத  இறக்குமதித் தீர்வையும் பின்னர் கைவிடப்பட்டு, தீர்வையே இல்லாமல் கோதுமை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்த தாராள அனுமதியின் காரணமாக இந்தியச் சந்தையை அந்நிய கோதுமை ஆக்கிரமித்தது. அந்நிய கோதுமை உள்ளூர்ச் சந்தைகளில் கிடைக்கும் கோதுமையைவிட விலை குறைவாக இருந்ததால், பெரும் தொழிற்சாலைகளும், மண்டி வியாபாரிகளும் இறக்குமதியான கோதுமையை மட்டுமே வாங்கினர். இது இரண்டு விதங்களில் இந்திய விவசாயிகளைப் பாதித்தது. ஒருபுறம் உற்பத்திக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், இன்னொருபுறம் விளைந்த கோதுமையை விலை குறைவான அந்நிய கோதுமையோடு போட்டியிட்டுச் சந்தையில் விற்க முடியாமல், வந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2016 -ல் பருவ மழை எதிர்பார்த்தபடி பெய்ததோடு, கோதுமை விளைச்சலும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்து, 96.6 மில்லியன் டன்னை எட்டியது. இப்படி விளைச்சல் அதிகமான சூழ்நிலையிலும் இறக்குமதியை ரத்து செய்ய மறுத்ததோடு,  இறக்குமதிக்கான தீர்வையையும் அதிகரிக்க மறுத்தது மைய அரசு. குறிப்பாக, உள்நாட்டில் கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்த 2016 – 17 ஆண்டில் மட்டும், ஆஸ்திரேலியா, உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதியான கோதுமை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து, 5.74 மில்லியன் டன்னை எட்டியது.

கோதுமை உற்பத்தி அதிகரித்த அதேசமயத்தில், மைய அரசோ அதற்கு நேர் எதிராக இந்திய உணவுக் கழகம் கோதுமை கொள்முதல் செய்யும் அளவை அதிரடியாகக் குறைத்தது. 2015 – 16 -ல் 28 மில்லியன் டன் கோதுமையைக் கொள்முதல் செய்த இந்திய உணவுக் கழகம், 2016 – 17 -ல் ஐந்து மில்லியன் டன் குறைவாக 23 மில்லியன் டன் கோதுமையை மட்டுமே கொள்முதல் செய்தது.

விளைச்சல் அதிகரித்து, அரசு கொள்முதல் குறைந்து போன சூழ்நிலையில், விவசாயிகளுக்கு விளைந்த கோதுமையை வெளிச்சந்தையில் விற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. வெளிச்சந்தையிலோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலிவான கோதுமையோடு போட்டியிட நேர்ந்தது.

இதன் காரணமாக வெளிச்சந்தையில் கோதுமையின் விலை, மைய அரசு நிர்ணயித்த ஆதார விலைக்கும் (ரூ.1,625) குறைவாக, 225 ரூபாய் நட்டத்தில், ரூ.1,400 -க்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். வட மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் வெடித்த பின்னணி இதுதான். விவசாயிகள் போராட்டம் வெடித்த பிறகும், மோடி அரசு கோதுமை இறக்குமதியை ரத்து செய்யவில்லை. மாறாக, இறக்குமதித் தீர்வையை 0%லிருந்து 10%ஆக மட்டும் அதிகரித்து, விவசாயிகளின் நண்பனைப் போலக் காட்டிக் கொண்டது.

”இவ்வாறு தடையில்லா இறக்குமதியைத் தொடர்வது விவசாயிகளை விவசாயத்திலிருந்து துரத்தியடிப்பதற்கு ஒப்பாகும்” எனச் சாடுகிறார் பஞ்சாப் மாநில பாரதிய கிசான் அமைப்பின் தலைவர் அஜ்மீர் சிங்.

கோதுமை மட்டுமல்ல, கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் சர்க்கரையின் உற்பத்தி உள்நாட்டுத்  தேவையைக் காட்டிலும்  அதிகமாக உள்ளது.  எனினும், 2014 – 15 -ஆம் ஆண்டில் 0.77 மில்லியன் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2015 – 16 -ஆம் ஆண்டில் உள்நாட்டு சர்க்கரையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கியைத் தராமல் இழுத்தடிப்பதற்கு இந்த விலை வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. இதன் காரணமாக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை 22,000 கோடி ரூபாயாக அதிகரித்தது.

எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பைப் பொருத்தமட்டில் உள்நாட்டுத் தேவையை ஈடு செய்யும் வண்ணம் அவற்றின் உற்பத்தி இல்லாததால், இறக்குமதியைச் சார்ந்துதான் இந்தியா இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கத் துணியும் ஆளும் கும்பல், எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க அக்கறை கொள்ளும் என யாரும் நம்பமுடியுமா?

ஆளுங்கும்பலின் இந்த அலட்சியம் காரணமாக, தற்பொழுதும் உள்நாட்டு சமையல் எண்ணெய்த் தேவையில் 70 சதவீதம் இறக்குமதியையே நமது நாடு நம்பியிருக்கிறது.  எண்ணெய் வித்துக்களின் இறக்குமதி அதிகரித்துக் கொண்டு போவதால், உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் 10%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

2015 – 16 -ஆம் ஆண்டில் நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகிய எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் ஓரளவு அதிகமாக இருந்தபோதும்,  அறுவடைக்கு முன்பாக அவற்றின் இறக்குமதி தீர்வையை 5% சதவீதமாகக் குறைத்தது அரசு. இதன் காரணமாக, உள்நாட்டில் விளைந்த எண்ணெய் வித்துக்களுக்குச் சந்தையில் ஆதார விலைகூடக் கிடைக்காமல் விவசாயிகள் பெருத்த நட்டமடைந்தனர்.

2008 – 09 -ஆம் ஆண்டுகளில் வெறும் 29,000 கோடி ரூபாயாக இருந்த உணவுப் பொருள் இறக்குமதியின் மதிப்பு, 2015 – 16 -ஆம் ஆண்டுகளில் 1.4 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. உணவுப் பொருள் இறக்குமதியை அரசின் சுதந்திரமான பொருளாதாரக் கொள்கை போல முதலாளித்துவ அறிவுஜீவிகள் சித்திரிக்கின்றனர். ஆனால், இச்சித்தரிப்பு ஒரு மோசடி.

உண்மையில், உணவுப் பொருள் இறக்குமதி குறித்த உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளை நிறைவேற்றும் அடியாளாகத்தான் மோடி அரசு நடந்து வருகிறது. மேலும், மொசாம்பிக் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாய விளைபொருள் உற்பத்தியில் இறங்கியிருக்கும் இந்திய தரகு முதலாளித்துவ  நிறுவனங்களின் இறக்குமதி வர்த்தகத்தின் பொருட்டும்  உள்நாட்டு விவசாயிகளின் நலனைப் பலிகொடுக்கிறது, மோடி அரசு.

-அன்பு

( இக்கட்டுரை டவுன் டு எர்த் என்ற ஆங்கில இதழில் ரூ.14,02,68,00,00,000 என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது. )

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க