Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்விவசாயக் கடன் தள்ளுபடி - மருமகள் உடைத்தால் பொன்குடம் !!

விவசாயக் கடன் தள்ளுபடி – மருமகள் உடைத்தால் பொன்குடம் !!

-

காராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களையடுத்து, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மாநில அரசுகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தன. இப்போராட்டங்களுக்கு முன்பே தெலுங்கானாவும் ஆந்திராவும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருந்தன.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதையடுத்து, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றிருந்த கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தது, தமிழக அரசு. உத்திரப் பிரதேச பா.ஜ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் விவசாயக் கடன்களை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டங்களும், அதனைத் தொடர்ந்து வெளியான கடன் தள்ளுபடி அறிவிப்புகளும் நமது மதிப்பிற்குரிய முதலாளித்துவ அறிவுஜீவிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்திவிட்டது. நாடே குடிமூழ்கிவிட்டதைப் போல, அவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் விவசாயிகளுக்கு எதிரான வெறுப்பைக் கக்கினார்கள்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கூட்டத்தில் பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ”விவசாயக் கடன் தள்ளுபடி கடனைத் திரும்பச் செலுத்தும் ஒழுங்குமுறையைச் சிதைத்துவிடும்; ஒருமுறை கடன் தள்ளுபடியைப் பெறும் விவசாயிகள் அடுத்த தேர்தலில் மீண்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் காத்திருப்பார்கள்” என அபாண்டமான முறையில் பழிபோட்டுக் கண்டித்தார்.

கோதுமை, பருப்பு விலைகள் சரிந்து நட்டமடைந்ததால், கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில விவசாயிகள்

”விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, நிதிச்சரிவை ஏற்படுத்தி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விடும். விவசாயக் கடன் தள்ளுபடி நேர்மையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவோரையும் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும். இது தீங்கான செயல். இந்த செயல் வரி செலுத்துவோர்களின் பணத்தைத் தனியாருக்குக் கொடுப்பதற்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சாமியாடினார். இதன் வழியாக விவசாயிகளை மற்ற வர்க்கங்களுக்கு எதிராக நிறுத்தினார்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் பரசோத்தம ருபலா, ”விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் விசயத்தில், அது கடன் கொடுத்தல் மற்றும் திரும்பச் செலுத்துதலில் உள்ள ஒழுங்குமுறையை எதிர்மறையில் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுவதாக”ப் பட்டும் படாமல் கூறிவிட்டு, ”தற்போதைக்குக் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை” என்று கறார் காட்டினார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, ”மாநில அரசுகள் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான நிதியை மத்திய அரசிடம் எதிர்பார்க்க வேண்டாம்” என்று அறிவித்து, மாநில அரசுகளைத் திடுக்கிட வைத்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகள் பெற்றிருக்கும் அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்வது போலவும், இக்கடன் தள்ளுபடியால் அனைத்து விவசாயிகளும் பயனடைவது போலவும் பொதுவெளியில் சித்தரிக்கப்படுகிறது. இந்தச் சித்தரிப்பு பித்தலாட்டத்தனமானது, மோசடியானது.

டிராக்டர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், போலீசாரால் அடித்து அவமானப்படுத்தப்படும் விவசாயி பாலன். (கோப்புப் படம்)

முதலாவதாக, இந்தியாவிலுள்ள குறு, சிறு, நடுத்தர விவசாயிகள் அனைவருக்கும் பொதுத்துறை வங்கிகளிலோ, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களிலோ பயிர்க்கடன்கள் கிடைத்துவிடுவதில்லை. மைய அரசு புள்ளியல் துறை வெளியிட்டுள்ள ”அகில இந்தியக் கடன் முதலீட்டுக் கணக்கெடுப்பு 2012” என்ற அறிக்கையில்,  ”இந்திய விவசாயிகளில் 48 சதவீதம் பேருக்கு அரசு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை” என்ற உண்மை வெளிவந்திருக்கிறது.

இந்த அறிக்கை சொல்லாதுவிட்ட இன்னொரு உண்மை என்னவென்றால், அந்த 48 சதவீத விவசாயிகள் அனைவரும் பயிர்க்கடனுக்குக் கந்து வட்டிக்காரர்களை அல்லது தனியார் நிதி நிறுவனங்களைத்தான் நம்பியிருக்கின்றனர். மேலும், நகைக் கடன், உரம், பூச்சி மருந்து வியாபாரிகளிடம் கடன், தனியார் கொள்முதல் ஏஜெண்டுகளிடம் கடன் எனப் பல வகைகளில் கடன் வாங்கித்தான் இவர்கள் விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, அரசு அறிவிக்கும் கடன் தள்ளுபடி சலுகைகளால் இந்த 48 சதவீத விவசாயிகளுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கப் போவதில்லை. இது மட்டுமின்றி, தனியாரிடம் கடன் வாங்கும் இந்த 48 சதவீத விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு பலன்களும் கிடைப்பதில்லை.

இரண்டாவதாக, தமிழக அரசு அறிவித்திருக்கும் கடன் தள்ளுபடியின்படி, தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்றிருக்கும் பயிர்க் கடன்கள் மட்டும்தான் தள்ளுபடி செய்யப்படும். தமிழக விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியிருக்கும் பயிர்க்கடன்கள் தள்ளுபடியாகாது. மேலும், சாகுபடிக்காகத் தமிழக விவசாயிகள் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் பெற்றிருக்கும் நகைக் கடன் உள்ளிட்டவையும் தள்ளுபடியாகாது.

இதுவொருபுறமிருக்க, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி இல்லை என்றும் தமிழக அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த நிபந்தனை பெரும்பான்மையான நடுத்தர விவசாயிகளை, ஐந்து ஏக்கருக்கு மேல் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்துவரும் குத்தகை விவசாயிகளைக் கழித்துக்கட்டி விடுகிறது. இந்த நிபந்தனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது, தமிழக அரசு.

தமிழக அரசைப் போன்று ஒவ்வொரு மாநில அரசும் கடன் தள்ளுபடிக்கென விதவிதமான நிபந்தனைகளை விதித்து, விவசாயிகளை வடிகட்டியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால், உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கும் 36,000 கோடி ரூபாய் பெறுமான கடன் தள்ளுபடி இன்னும் காகித அறிவிப்பைத் தாண்டி நடைமுறைக்கே வரவில்லை. அக்கடன் தள்ளுபடி அறிவிப்பில் ஏகப்பட்ட உள்குத்துக்கள் இருப்பதை வயர் டாட். இன் என்ற இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆக, இந்திய விவசாயிகளுள் மிகப் பெரும்பாலோர் தமது சொந்தப் பணத்தைப் போட்டு அல்லது தமது எதிர்காலத்தையே அடகுவைத்துத்தான் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், இதற்கு நேர்மாறாகத் தனியார் முதலாளிகள் யாரும் தமது சொந்தக் கைக்காசைப் போட்டு எந்தவொரு காலத்திலும் தொழில் தொடங்கியதில்லை. வங்கிக் கடன், பங்குச் சந்தை மூலம் பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டுவது மற்றும் அரசு அறிவிக்கும் வரிச் சலுகைகள், மானியங்கள்  இவை அனைத்தையும் பெற்றுத்தான் தொழில் தொடங்குகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களோடு ஒப்பிடும்போது, அரசின் வழியாக சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பெறும் மானியங்கள் உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் மிகவும் அற்பமானது.

பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனை ஏப்பம் விட்டுவிட்டு, அரசின் ஒத்துழைப்போடு இலண்டனுக்கு ஓடிவிட்ட விஜய் மல்லையா.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்துக் கந்து வட்டிக்காரன் கணக்காகப் பேசும் பொருளாதார நிபுணர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் வாராக் கடன் பற்றிப் பேசும் போது மட்டும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கும் இரட்சகர்களாக மாறிவிடுகின்றனர்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைக் கடன் பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பது அரசின் கடமை எனக் கூறும் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ”முதலாளிகளின் கடன்களை நாம் தள்ளுபடி செய்துதான் தீர வேண்டும், ஏனென்றால், முதலாளித்துவம் இப்படித்தான் வேலை செய்கிறது. தவறு செய்வது மனித இயல்பு, அதனை நாம் ஓரளவிற்காவது மன்னிக்க வேண்டும்.” என வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

2015 மார்ச் இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்தது. இது 201516ல் ரூ.5.02 லட்சம் கோடியாக உயர்ந்தது. 201617ம் நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, ரூ.6.07 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இத்துடன் தனியார் வங்கிகளின் வாராக் கடன்களையும் சேர்த்தால் இந்தத் தொகை 7.4 லட்சம் கோடி ருபாய் ஆகும்.

இந்த வாராக் கடன் நிலுவையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே விவசாயிகளிடமிருந்து வரவேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் இதில் 73 சதவீதத்தை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளனர். உண்மை இவ்வாறிருக்க, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அளித்தால், இந்தியப் பொருளாதாரமே சீர்குலைந்து விடும் எனப் பூச்சாண்டி காட்டிவருகிறது, அதிகார வர்க்கம்.

2012 – 13 நிதியாண்டில் ரூ.27,231 கோடி ரூபாய், 201314ல் ரூ.34,409 கோடி ரூபாய், 201415ல் ரூ.52,542 கோடி ரூபாய் என 2012  – 2015 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மதிப்பு 1,14,000 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

கடந்த பத்தாண்டுகளில் முந்தைய காங்கிரசு கூட்டணி அரசும், பல்வேறு மாநில அரசுகளும் சேர்ந்து அளித்திருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடியின் மதிப்பு ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்தான். அதேசமயம், அப்பத்தாண்டுகளில் கையளவேயான கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கமுக்கமாக அளிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடிகளின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயைத் தொடுகிறது. இதுவும் போதாதென்று, மேலும் 4 லட்சம் கோடி ருபாய் வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள்  தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென ”இந்தியா ரேட்டிங்ஸ்” (CRISIL) என்ற கடன் மதிப்பீட்டு நிறுவனம் நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது.

விவசாயிகள் வங்கிக் கடனைப் பெற்று, சாகுபடி செய்து நட்டமடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, மானத்திற்குப் பயந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதே, சமூகத்தின் மனசாட்சியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டிருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளி வர்க்கமோ வங்கிகளில் பெற்ற கடன்களை வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்து, வங்கிகளைத் திட்டமிட்டு ஏமாற்றியிருப்பது விஜய் மல்லையாவின் இலண்டன் விஜயம் அம்பலப்படுத்திவிட்டது. விஜய் மல்லையா இலண்டனுக்குத் தப்பித்துப் போனதில் தனது கூட்டுக் களவாணித்தனம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதன் காரணமாகவே, கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை வசூலிக்கப் புதிய திவால் சட்டம் மற்றும் வாராக் கடன் வசூலிப்பது குறித்த அவசரச் சட்டங்களை இயற்றி உதார் காட்டிவருகிறது, மோடி அரசு.

புதிய திவால் சட்டம் வாராக் கடன் வசூலிப்பதை வங்கிகள் கையிலிருந்து பிடுங்கித் ”தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்” என்ற பெயரில் உருவாக்கப்படும் நிறுவனத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்துகிறது. இந்தப் புதிய நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பதில் துறைசார் வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள். அதாவது வங்கி அதிகாரிகளுக்கு பதில் துறைசார் வல்லுநர்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் கையில் கடனை வசூலிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் கீழ் கடன் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது,  அந்நிறுவனங்களின் மேல் வாராக் கடன் குறித்து ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும்.  கடன் வாங்கிய நிறுவனத்துக்கு முதலில் ஆறு மாதம், பின்னர் மூன்று மாதம் என ஒன்பது மாதம் அவகாசம் வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில் அந்த நிறுவனம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. இந்த ஒன்பது மாதங்களில் துறைசார் வல்லுநர் குழுவும் நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வளவு கடனை வசூலிக்க முடியும் என முடிவு செய்வர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லையென்றால் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்படும். அதாவது, மயிலே மயிலே இறகு போடு என்பதைத்தான் இப்படிச் சுற்றிவளைத்து அச்சட்டம் பேசுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாராக் கடனில் ஒரு பகுதியைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டால், மீதமுள்ள கடன் தொகை ரத்து செய்யப்படும். இத்தள்ளுபடியை அதிகார வர்க்கமும் பொருளாதார நிபுணர்களும் ஹேர்கட்டிங் என்று அழைக்கின்றனர். இந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு ”ஹேர்கட்டிங்” செய்யப்படவிருப்பதாக ”இந்தியா ரேட்டிங்ஸ்” கூறுகிறது.

இச்சட்டங்கள் ஒருபுறமிருக்க, பேட் பேங்க் (ஆச்ஞீ ஆச்ணடு), அதாவது, வாராக் கடன் வங்கி என்ற பெயரில் புது வங்கியொன்றைத் தொடங்குவதற்கும் மோடி அரசு தீவிரமாக முயன்று வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் நிலுவையிலுள்ள வாராக் கடன்களை இந்த பேட் பேங்கிற்கு மாற்றிவிட்டு,  பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் நோயிலிருந்து மீண்டுவிட்டதாகக் காட்டும் மோசடி நடவடிக்கை இது.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, விவாதப் பொருளாக மாற்றப்படுகிறது. அக்கடன் தள்ளுபடி ஓட்டு வங்கி அரசியல் எனக் குற்றஞ்சுமத்தப்படுகிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடியோ அரசியல் கலப்பில்லாத அவசியமான பொருளாதார நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் வாராக் கடன்களுக்குச் சந்தையில் நிலவும் தேக்கத்தைச் சுட்டிக்காட்டும் பொருளாதார நிபுணர்கள், சந்தையின் சூதாட்டத்தால் விவசாயிகள் போண்டியாகி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துப் போய் நிற்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சந்தையின் நெளிவுசுளிவுகளை விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டுமென உபதேசிக்கிறார்கள்.

விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் போது, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் பேனர் வைக்கிறார்கள். ஆடு மாடு முதற்கொண்டு வீட்டின் கதவு வரை அனைத்தையும் ஜப்தி செய்கிறார்கள். தஞ்சை விவசாயி பாலனை போலீசை வைத்து அடித்து இழுத்துச் செல்லும் வங்கி அதிகாரிகள், விஜய் மல்லையாவைத் தப்பிக்க வைக்கின்றனர்.

வங்கிக் கடனைத் திட்டமிட்டுத் திரும்பச் செலுத்த மறுக்கும் கார்ப்பரேட் முதலைகளின் பெயர்களைக் கூட வெளியிட மறுக்கிறார்கள். ”வாராக் கடன் வைத்துள்ள முதலாளித்துவ நிறுவனங்களின் பெயர்கள் வெளியிட்டால், முதலீட்டாளர்கள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்து நாட்டின் முதலீட்டுச் சூழலைப் பாழாக்கிவிடும்” என்று கூறி, பொதுப் பணத்தைச் சுருட்டிக் கொண்ட கார்ப்பரேட் கொள்ளையர்களைப் பாதுகாக்கின்றனர்.

ஒரு கண்ணில் வெண்ணெயையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவிவிட்டு, அரசும் சட்டமும் எல்லோருக்கும் பொதுவானது, பாரபட்சமற்றது என நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

-அழகு

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க