privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககளநிலவரம் - எரியக் காத்திருக்கும் கோவை... !

களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… !

-

டந்த 2016 செப்டம்பர் 23, 24 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கே தலைப்புச் செய்தி ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தன் வாழ்நாளில் மருத்துவமனைக்கே போகாத ஜெ. எப்படி அட்மிட் ஆனார்..? போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போகாமல் அப்போலோ ஏன் போனார்…? என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான பதில்களை ஊடகங்கள் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கோயம்புத்தூர் என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் தலைப்பு செய்தி வேறு ஒன்றாக அமைந்தது.

அது சசிக்குமார் என்ற இந்து முன்னணியை சேர்ந்த பொறுக்கி கொலை செய்யப்பட்ட செய்தி. பிற மாவட்டங்களில் இது ஒரு சாதாரண கொலையாக தெரியலாம். ஆனால் இந்து முஸ்லீம் கலவரம் நடந்த ஊர் தமிழ்நாட்டிலேயே பி‌ஜேபி வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு ஊர் என்ற நிலையிலிருக்கும் கோவை மாநகருக்கு இது ஒரு அபாய அறிகுறி. அதைத்தொடர்ந்து காவல்துறையின் முழு ஆசியோடு 18 கிலோமீட்டர் தூரம் நடந்த சவ ஊர்வலம், கலவரம் கடைகள் சூறை செல்போன் கடையில் திருட்டு கோமாதா பக்தர்களின் கோமாதா பிரியாணி திருட்டு போன்றவை அப்பட்டமாக அம்பலப்பட்டு சந்தி சிரித்த விவகாரங்கள்.

மேற்படி சசிக்குமார் கொலையில் இது வரை இரண்டு முஸ்லீம்களை பிடித்து விசாரித்துக் கொண்டுள்ளார்கள். முழு விவரம் ஒரு வருடமாகியும் வெளிவரவில்லை. ஆனால் இந்த ஒரு வருடத்தில் காவிப் புழுதி கோவையை எட்டு திசைகளிலும் வளைத்து நிற்கிறது. கோவை CPM அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் வி‌எச்‌பி என்ற குண்டர் படையை சேர்ந்த பொறுக்கி ஒருவன் பெட்ரோல் குண்டு வீசுகிறான். அடையாளம் தெரியாத நபர் என்று முதலில் டக்கால்டி விட்டுக் கொண்டிருந்த போலீஸ் பின்பு வேறு வழியில்லாமல் சிசிடிவி பதிவுகள் மூலம் அவனை கைது செய்கிறார்கள். வளர்மதிகளும், திருமுருகன்களும் குண்டர் சட்டத்தில் கைதாகுகையில் பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு குண்டர் சட்டம் இல்லை.

மோகன் பகவத்

கோவை எட்டிமடையில் கடந்த மார்ச் மாதம் அமிர்ந்தானந்த மயி அம்மா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயற்குழு கூட்டம் மோகன் பாகவத் தலைமையில் நடக்கிறது. இந்நிகழ்வுக்காக பல்கலைக் கழகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கிறார்கள். அம்மா அவர்கள் பாகவத் உடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் செய்கிறார்.

கடந்த ஜூலை மாதம் புதிய மாணவன் என்ற மாணவர் பத்திரிக்கையை விற்ற காரணத்திற்காக அதன் முகப்பில் மோடி படம் போட்டிருந்ததற்காக சட்டக்கல்லூரி மாணவர் வினோத் பாஜக வழக்கறிஞர் ஒருவனின் புகாரில் பெயரால் கைது செய்து சிறையிலடைக்கப்படுகிறார். மூன்று முறை ஜாமீன் மறுக்கப்பட்டு பின்னர் 17 நாட்கள் கழித்து கிடைக்கிறது.

கடந்த ஜூலை 10 அன்று ‘அக்கா’ வானதி வீடு இருக்கும் தொண்டாமுத்தூர் அருகே ஈழ அகதிகள் முகாமில் நடந்த சிறு தகராறில் ஒரு நபர் பஞ்சாயத்து பண்ணப் போகிறார். அதில் ஏதோ பிரச்சினை ஏற்பட அந்த நபரின் மகனும் இந்து முன்னணி பகுதி நிர்வாகியுமான பொறுக்கி ஒருவன் சக பொறுக்கிகளை கூட்டி வந்து அகதி முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறான். சாதாரண அடிதடி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடக்கிறது மோகன் பகவத் தலைமையில். கொங்குநாடு, குமரகுரு, அரசுக் கலைக் கல்லூரி போல இன்னும் பல கல்லூரிகளில் நிர்வாக ஒத்துழைப்புடன் காவல்துறை ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., கூட்டங்கள் ஷாகாக்கள் நடக்கின்றன.

பிள்ளையார் சிலை வைக்க சிபிஎம் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய இந்து முன்னணி மீது வழங்கப்பட்டுள்ள புகார்.

போன வாரம் கோவிந்தம்பாளையத்தில் விநாயகர் சிலை வைக்க இடம் இல்லை என்று சி.பி.ஐ.(எம்) கட்சி கொடிக் கம்பத்தை பிடுங்கி எறிந்து அராஜகம் செய்துள்ளார்கள் இந்து மத வெறியர்கள்.

இப்படி தொழில் நகரமான கோவை எந்நேரமும் கலவர நகராக மாற்றப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. மேயராகவோ அல்லது  MLA -வோ ஆகி ஸ்மார்ட் சிட்டி முதல் இன்ன பிற மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்ய நாடி நரம்பெல்லாம் துடிக்க துடிக்க அலைந்து கொண்டிருக்கிறார் வானதி ‘அக்கா’.

தமிழக உரிமை பிரச்சினைகளுக்கெல்லாம் பொங்காத, போராடாத இந்த ‘அக்கா’ ஸ்மார்ட் சிட்டி திட்ட CEO நியமனத்தில் அண்ணா திமுக அரசியல் செய்துவிட்டது என ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதிலும் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பயன்படுத்தி வங்கிகளிலும் இன்னும் பல வொயிட் காலர் ஊழல்கள் மூலம் பணம் சம்பாதித்து ருசி கண்டுள்ளார் வானதி. பாரதிய ஜனதா கிரிமினல் கும்பல் அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தின் மீது தனது அதிகாரத்தை அதன் செப்டிக் டாங்க் வழியே உள்ளே நுழைந்து நிறுவியுள்ள இந்த சூழ்நிலை இந்து முன்னணி பி‌ஜேபி பொறுக்கிகளுக்கு ஸ்டெட்ராய்ட் ஊசி போட்டுக் கொண்டதற்கு இணையான வெறியை அவர்களின் மூளையின் மூலையில் உற்பத்தி செய்துள்ளது.

ஜைலாக் ஊழல் புகழ் வானதி ‘அக்கா’

மிக அபாயகரமானது என்று தெரிந்தும் சசிகுமாரின் சவ ஊர்வலம் பதினெட்டு கிலோ மீட்டர் நடத்த அனுமதித்து இந்த கலவரத்திற்கு காரணமாயிருக்கும் கமிஷனர் அமல்ராஜ்தான்,SFI, DYFI, RSYF, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளை தேச விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கிறார்.  இப்படியான முறையில் அயோக்கியர்கள் + அரசு என்ற இந்த ஆபத்தான கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்நோக்கி இருக்கிறது கோவை.

இதோ விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. கடந்த வருட விநாயகர் சதுர்த்தியில் தடாகம் அருகே இந்து முன்னணி நடத்தும் விழாவில் வந்து மத்தளம் அடிக்க மறுத்ததற்காக கவுண்டர் சாதி இந்து முன்னணியினர் தாழ்த்தப்பட்ட சாதி இந்து முன்னணியினர் மீதே தாக்குதல் நடத்தினர்.

 

இந்த வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையின் மேட்டுப்பாளையம் ரோட்டில் மின்விளக்கு கம்பங்களின் மீது இந்து முன்னணி கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார்கள். பறப்பது கொடி மட்டுமல்ல கோவை காவல் துறையின் காவிக் கோமணமும் தான்.

கோவை முழுக்க இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பாரத் சேனா, இந்து மக்கள் முன்னணி, சிவ சேனா, ஸ்ரீராம் சேனா, விவேகானந்தா பேரவை, விவேகானந்தா மக்கள் இயக்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஏராளமான லெட்டர் பேட் கூலிப்படைகள் மூலம் நகர் முழுக்க 390 சிலைகளும் புறநகரில் சுமார் 1,400 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் தெரு ஓரத்தில் சாக்கடை மீதெல்லாம் மேடை போட்டு பிள்ளையாரை அமர வைத்து காக்கும் கடவுளான பிள்ளையாரை குடிகார பக்தர்களிடமிருந்தும் இன்ன பிற துஷ்ட சக்திகளிடமிருந்தும் துப்பாக்கி ஏந்திய காவல் துறை காவல் காத்துக் கொண்டிருக்கிறது. போலீஸ் மற்றும் பொறுக்கிகள் கூட்டணி உருவாவதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பந்தமாவதும் இரவும் பகலும் சிலையின் கீழே உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் மிதந்து கொண்டும் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான்.

சென்ற முறை விநாயகர் சதுர்த்தி வசூலின் போது துடியலூர் மகாலட்சுமி பேக்கரியிடம் வசூல் செய்துள்ளார்கள் காவிகள். ஆயிரக்கணக்கில் கொடுப்பார் என எதிர்பார்க்க அவரோ 300 கொடுத்து போதும் என அனுப்பியுள்ளார். கறுவிக் கொண்டே வெளியேறிய இந்து முன்னணியினர் சசிக்குமார் சாவு ஊர்வல கலவரத்தில் போலீஸ் துணையோடு ‘இந்துக்கடையான’ மகாலட்சுமி பேக்கரியை சூறையாடிவிட்டனர்.

இந்த முறை போஸ்டர் நோட்டீஸ் அனைத்திலும் மாவீரன் சசிக்குமார் என புகைப்படம் போட்டு நேரடி மிரட்டல் வசூலே நடைபெறுகிறது. போலீஸ் பொத்திக் கொண்டு அனுமதிக்கிறது.

போலீசின் பத்திரிக்கை அறிவிப்பிலேயே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது ; விசர்ஜன ஊர்வலம் என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்களை பார்க்கையில் கமிஷனர் ஆபீஸில் தயாரான அறிக்கையா காவிகள் ஆபீஸில் தயாரான அறிக்கையா என்றே சந்தேகம் வருகிறது.

புறநகரில் 1,000 போலீஸ் மாநகரில் 2,000 போலீஸ்,சிலைகளை கரைக்க தனி இடம், தண்ணீர் வசதி, ஆயிரக்கணக்கில் போலீஸ் பந்தோபஸ்து, தீயணைப்பு துறை என மக்களை முட்டாளாக்க மத வெறியர்களாக்க இயற்கை சுற்றுச்சூழலை மாசுபடுத்த மக்கள் பணத்தோடு நடைபெறும் இந்த அயோக்கியத்தனம் நாளுக்கு நாள் வளர்ந்தே வருகிறது.

பழனிக்கு தைப்பூச நடை, வெள்ளிங்கிரி ஆண்டவரை பார்க்க நடை, காரமடை பந்த சேவ நடை, பங்குனி உத்திரம், குமரன் குன்று, மாசாணி அம்மன் கோவில் நோன்பு என ஏராளமான நிகழ்வுகள் பல லட்சம் பக்தர்களோடு சிறு அசம்பாவிதம் என்ற பேச்சுக்கே இடமின்றி நடக்கிறது. ஆனால், நூறு பொறுக்கிகள் சேர்ந்து நடத்தும் நிகழ்வுக்கு மாநகரே பதட்டம் ஆகும் அளவு சிக்கலாகி வருகிறது.

பார்த்தீனிய செடி; யாரும் வெள்ளாமை செய்யாமல் பரவுவது போல பாசிச கும்பல் கோவை நகரெங்கும் பரவுகிறது. மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் கரம் கோர்த்து இந்த களைகளை வெட்டி வீச வேண்டும். கோவையை மீட்க வேண்டும்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை மாவட்டம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி