Saturday, June 15, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !

விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !

-

ராம் ரகீம் விவகாரத்தையொட்டி, அகில பாரத அகாரா பரிசத் என்ற இந்து சாமியார்கள் சங்கம் 14 சாமியார்களின் பெயரை வெளியிட்டு அவர்களை போலிகள் என்று அறிவித்திருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு மேலும் 28 போலி சாமியார்களின் பட்டியலை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

இந்த பட்டியலை மத்திய, மாநில அரசுகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அனுப்ப இருப்பதாகவும், இத்தகைய போலி சாமியார்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றுமாறு கோரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார் அனைத்திந்திய சாமியார் சங்க தலைவர் சுவாமி நரேந்திர கிரி.

ராம் ரகீம் விவகாரத்தால் சாமியார்கள் எந்த அளவுக்கு தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை இந்த தீர்மானங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்த சாமியார் சங்க அறிக்கையை சீரியசாக அமல்படுத்துவதற்கு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் போராடவேண்டும் என்பதே நமது விருப்பம். இருந்த போதிலும் இது தொடர்பாக சில அடிப்படையான சந்தேகங்கள் இருப்பதால் அவற்றை சாமியார் சங்கத்திடம் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

முதலாவதாக சட்ட சிக்கல்

ராம் ரகீம் மீது விசாரணை முடிந்து “குற்றவாளி” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். எத்தனை சிறுமிகளை ரேப் செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், ஆசாராம் பாபு மீது விசாரணையே இன்னும் தொடங்கவில்லை.

அவ்வாறு இருக்கும்போது அவரைப் போலி சாமியார் என்று அறிவிப்பது நியாயமா? இது சட்டவிரோதமல்லவா? ராம் ரகீம் மீது ரேப் கேஸ்கள், கொலை கேஸ்கள் இருந்த நிலையிலும் மோடிஜி, அமித்ஷா ஜி, பகவத் ஜி போன்ற பல ஜி க்களும் அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் விவரம் தெரியாதவர்களா?
அதே நேரத்தில் நித்தியானந்தாவை போலி சாமியார் என்று அவசரப்பட்டு நீங்கள் அறிவிக்காதது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

தற்போது ராம் ரகீமுக்கு கீழ் கோர்ட் தான் தண்டனை விதித்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் ஒரு குமாரசாமி அவரை விடுதலை செய்து விட்டால், நீதிக்குத் தலை வணங்கி, ராம் ரகீம் சாமியாரை போலிகள் பட்டியலிலிருந்து எடுத்து விடுவீர்கள் அல்லவா?

இரண்டாவதாக இலக்கணச் சிக்கல்

நம் நாட்டில் இல்லறத்துக்கு இலக்கணம் உள்ளது. துறவறத்துக்குத்தான் இல்லை.

சாமியார் எனப்படுபவர் யார்? சாமியார் என்பவருக்கு மனைவி மக்கள் இருக்கலாமா? கூடாது என்பது உங்கள் கருத்தாக இருக்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்து அமோகமாக வாழ்க்கை நடத்தி வரும், சத்குரு ஜக்கி வாசுதேவ் பெயர் உங்களுடைய போலி சாமியார் பட்டியலில் இடம் பெறவில்லையே ஏன்?

கட்டிப்புடி வைத்தியம் “ராதே மா” வை போலி என்று அறிவித்திருக்கிறீர்கள், அதே காரியத்தை செய்து வரும் அமிருதானந்த மாயியை அவ்வாறு அறிவிக்கவில்லையே ஏன்?

சாமியார் கஞ்சா குடிக்கலாமா, சரக்கடிக்கலாமா? அடிக்கலாமெனில் எந்த அளவு அடிக்கலாம்? எத்தனை வேளை சாப்பிடலாம்? ஏ.சி ரூம், ஏ.சி காருக்கு அனுமதி உண்டா? உடை உண்டா, கிடையாதா? துணி என்ன நிறம்?
முதல்வர் பதவி வகிக்கும் யோகி ஆதித்யநாத் போன்றோர் துறவிகளாகத்தான் கருதப்படுவார்களா? இதற்கெல்லாம் விளக்கம் தேவை.

மூன்றாவதாக ஒரே தேசம், ஒரே சட்டம் என்ற பிரச்சினை

சாமியார் என்ற பட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால்,இனி யார் சாமியார் ஆக விரும்பினாலும், அவரை அனைத்திந்திய அகாரா பரிசத்தின் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகுதான் சாமியார் பட்டம் வழங்கப்படவேண்டும் என்று சாமியார்கள் சங்கம் கருதுவதாக, விசுவ இந்து பரிசத்தின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியிருக்கிறார்.

கல்வியிலாவது சி.பி.எஸ்.இ – ஸ்டேட் போர்டு என்று இரண்டு பிரிவுகள்தான் உள்ளன. அதில் நீட் கொண்டுவருவது சுலபம். ஹிந்து மதத்தைப் பொருத்தவரை பல கடவுள்கள், பல சம்பிரதாயங்கள் உள்ளன.
வைணவத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஸ்டாண்டு வைத்தவர்கள், வைக்காதவர்கள் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. ஜீயர் பதவி என்பது “போஸ்ட் ரிடையர்மென்ட் பெனிபிட்”டாக ஐயங்கார்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களெல்லாம் தேர்வை எதிர்கொள்ள வேண்டுமா?

சைவத்தை பொருத்தவரை, காஞ்சி, சிருங்கேரி, பூரி என்று பல ஜெகத்குருக்கள் இருக்கிறார்கள். இருப்பது ஒரு உலகம். இதற்கு பல ஜெகத்குருக்கள்! ரவிசங்கர்ஜியை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு ஆள், ரெண்டு ஸ்ரீ போட்டுக்கொள்கிறார். அந்த ஆள் பிராணாயாமத்துக்கு பேடன்ட் வாங்கி வைத்திருக்கிறார். ராம்தேவ் பலசரக்கு கடை நடத்துகிறார். இன்னொருத்தர் நாட்டு மருந்து விற்கிறார்.

நரமாமிசம் தின்னும் அகோரியும் சைவம், தயிர்சாத சங்கராச்சாரியாரும் சைவம், இப்படி சைவமே அசைவமாக இருக்கும் போது,  இவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக என்ன ’சிலபஸ்’ வைப்பது? என்ன மொழியில் கேள்வி கேட்பது? எழுதப்படிக்கவே தெரியாத சாமியார்களுக்கு எப்படி பரிட்சை வைப்பது? ஒரே குழப்பமாக இருக்கிறது.

“யூனிபார்ம் சிவில் கோடு” கொண்டுவந்து எல்லா மதத்துக் காரனுக்கும் கல்யாணம் முதல் கருமாதி வரை ஒரே சட்டம்தான் என்று சொல்லி விடலாம். பிரச்சினை வந்தாலும் அடித்து உதைத்து சமாளித்து விடலாம்.
முற்றும் துறந்தவர்கள் விசயம் அப்படிப்பட்டதல்ல. “ஒரே தேசம் – ஒரே ஹிந்து – ஒரே சாமியார்” என்று சட்டம் கொண்டு வந்தால் திரும்பிய பக்கமெல்லாம் லிங்காயத்து பிரச்சினை போல இது கிளம்பி விடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஹிந்து மதத்தின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக எடுக்கும் முயற்சியில், ஹிந்து மதமே துண்டு துண்டாக சிதறி விடும் அபாயமும் இருக்கிறது. தேசிய நீட் தேர்வு என்று அறிவித்த உடனேயே பிரச்சினை வந்து விடும் என்று பயமாக இருக்கிறது.

நான்காவதாக, சாமியார் மதிப்பு நீக்கம்

இனி புதிதாக சாமியார் ஆக விரும்புகிறவர்களுக்கு, அகில பாரத அகாரா பரிசத் நீட் தேர்வு நடத்தட்டும். இருப்பவர்களில் போலிகளை எப்படி அடையாளம் காண்பது, எப்படி களையெடுப்பது?

ஏற்கெனவே உள்ள சாமியார்களில் 14 பேரை போலிகள் என்று வெளியிட்டிருக்கிறீர்கள். தீபாவளிக்கு பிறகு ஒரு லிஸ்ட் வெளியிடுவதாக சொல்லியிருக்கிறீர்கள். இதெல்லாம் ஜுஜுபி. கும்பமேளா என்றால் பத்தாயிரக்கணக்கில் புற்றீசல் மாதிரி சாமியார் கூட்டம் வருகிறது.

இப்படி தவணை முறையில் செய்வதை விட, மோடிஜி செய்த டிமானிடைசேஷன் போல, வர இருக்கும் தீபாவளியன்றோ, விஜயதசமி அன்றோ இரவு 12 மணி முதல் தேசம் முழுவதும் உள்ள பழைய சாமியார்களெல்லாம் “செல்லாத சாமியார்கள்” என்று அறிவித்து விடலாம்.

ஒரு மாத காலத்துக்குள் அவர்களெல்லாம் அகாராவின் முன் ஆஜராக வேண்டும். தங்கள் சொத்து, மனைவி மக்கள் குறித்த விவரங்கள், நல்ல, கெட்ட பழக்கங்கள், சிஷ்யர்கள், சிஷ்யைகள் குறித்த விவரங்கள், தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் போன்ற எல்லா விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அவற்றையெல்லாம் போலீசு – உளவுத்துறை – இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டுகள் மூலம் பரிசீலித்து கருப்பு சாமியார்களை அடையாளம் கண்டு விடலாம். அவர்கள் செய்த தப்புக்கு உரிய வரியை அகாராவுக்கு கட்டினால், அவர்களுக்கு சாமியார் லைசன்ஸ் கொடுத்து வெள்ளை சாமியார் ஆக்கி விடலாம் !

– தொரட்டி


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. பத்ம விருதுகளை காெடுத்து சாமியார்களுக்கு சாமரம் வீசுகிற கேடுகெட்ட ஆளும் வர்க்கம் இருக்கும் வரை … பகலில் சாமி-இரவில் காமியாகவும் வாழ்க்கை நடத்தி, பாமர மக்களின் வாழ்வையும் அறிவையும் பாழாக்கி வருகின்ற- பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட முற்படுபவர்களை சட்டை செய்யாமல் ” நாத்திகவாதிகள் ” ….. என்ற முத்திரைக்குத்தி பகல்வேட சாமியார்களை தூக்கி நிறுத்தும்அவலம் தான் …வேடிக்கை மற்றும் வேதனை ….!!! எவனுக்கும் வெட்கமில்லை ….?

  2. இது மிகவும் அநியாயம்.

    முன்னோடி பிரேமானந்தாவை விட்டு விட்டு சாமியார்களைப் பற்றி இவாளவு பெரிய கட்டுரையா? சொர்க்கத்திலிருக்கும் சாய்பாபா என்ன நினைப்பார்?

    தொரட்டிக்கு இன்னும் எட்டவில்லை. சரி சரி இனிமேலாவது, சரியான தயாரிப்புகளுடன் கட்டுரை எழுதவும்.

    சாது மிரண்டால் வெப்சைட் கொள்ளாது என்பதை அறிக.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க