Monday, March 27, 2023
முகப்புஅரசியல்ஊடகம்தஞ்சை : வீராங்கனை கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி !

தஞ்சை : வீராங்கனை கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி !

-

க்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை கிளை சார்பில் பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் -க்கு 18.08.2017 சனிக்கிழமை அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாகப் பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு மலர் அஞ்சலியும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கிய சிவப்பஞ்சலி கூட்டத்திற்கு ம.க.இ.க. தஞ்சை கிளை செயலர் தோழர். இராவணன் தலைமை தாங்கினார். “மரணங்கள் பொதுவாக இரண்டாக வகைப்படுத்திப் பார்க்கப்படுகிறது. ஒன்று சுயநலனில் வாழ்ந்து இறப்பது அடுத்தது பொதுநலனில் அக்கறை செலுத்தி வாழ்ந்து இறப்பது. பொது நலனில் அக்கறை செலுத்தி வாழ்பவர்கள் காலம் கடந்தும் மக்களால் நினைவுகூரப்படுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறையோடு அநீதிக்கு எதிராகப் போராடி இறப்பவர்களின் பிரிவு மலையைவிட கனமானது” என்று தோழர் மாவோ கூறுவார். அப்படி மலையைவிட கனமான ஓர் பிரிவுதான் கௌரி லங்கேஷ் அவர்களின் இறப்பு.

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. குருசேத்திரப் போர் முடிந்து வெற்றிவாகை சூடி அஸ்தினாபுரத்திற்குள் பஞ்சபாண்டவர்கள் நுழைகிறார்கள். “அநீதியான யுத்தத்தை நடத்திவிட்டு வந்த நீங்கள் அஸ்தினாபுரத்திற்குள் நுழையத் தகுதியற்றவர்கள்” என்று ஒருவன் தடுத்து நிறுத்துவான். சுற்றியுள்ள பார்ப்பனக்கூட்டம் இவன் சாருவாகன் என்று கூறி, அந்த எதிர்ப்பாளனை எரித்துக் கொன்றுவிடுவர். சாருவாகன், சம்புகன், நந்தன், பெத்தான்சாம்பான், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரிலங்கேஷ் என்று வேதமத சனாதனிகளால் அழித்தொழிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “சில தி.க.-காரர்கள் கருப்புச்சட்டை போட்டு நாத்திகம் பேசி வந்தார்கள். தற்போது கருப்புசட்டை போட்டு லட்சக்கணக்கில் சபரிமலை சென்று கொண்டிருக்கிறார்கள்” என்று பெருமைபட்டுக் கொண்டார். நேற்று செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாள். சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதிலும் பெரியாரை நினைவுகூற மக்கள் திரண்டிருந்ததை நான் பார்த்தேன். கழகங்கள் பெரியார் சிலைக்கு மாலைபோட்டனர் என்ற நிலைமாறி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் குறிப்பாக, இளைஞர்கள் பெரியாரை நினைவு கூர்ந்ததைப் பார்க்கும் போது நமக்கு நம்பிக்கை துளிர்விடுகிறது. இது ஒரு தொடக்கம்தான்.

காவி பயங்கரவாதிகள் தங்களது திட்டத்தை அமல்படுத்துகிறார்கள் என்பது ஒருபக்கம். காவி பயங்கரவாதமும், கார்பரேட் பயங்கரவாதமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளது. அத்வானி ரதயாத்திரை, பாபர்மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், கோவைக் கலவரம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னால் கார்ப்பரேட்களின் நலன்களை உள்ளடக்கிய திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

கோவை கலவரத்தின் போது தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவை ஜவுளித்தொழில் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கோவை கலவரத்தின் காரணமாக, தொழிலாளர் வெளியேற்றம் – கதவடைப்புக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் போராட முடியவில்லை, அனுமதிக்கப்படவில்லை.

காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த நாம் இதைப்பற்றி இன்னும் பாரதூரமாகச் சிந்திக்க வேண்டும். பெட்ரோலிய சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்படுவதும், காவிபயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பல் அதற்கு ஆதரவாக செயல்படுவதையும் நாம் சாதாரணமாகக் கருதக்கூடாது. கௌரி லங்கேஷ்  எதற்காகப் போராடினாரோ அதற்கான போராட்டத்தைத் தொடர்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி” என்று தலைமையுரையில் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ்குமார் “கௌரி லங்கேஷ் படுகொலை மூலம் கருத்துச் சுதந்திரம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. காட்டுமிராண்டிகாலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெற்றதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நவீனம், ஜனநாயகம் இவையெல்லாம் தெரியாத காலம் அது. நவீன காலத்தில் இதுபோல நடப்பதுதான் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றமே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது” என்பதைத் தனது அனுபவங்கள் மூலம் விளக்கிப் படுகொலையைக் கண்டித்து அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து உரையாற்றிய மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் வி.பாரி;  “கௌரி லங்கேஷ் போன்றவர்கள் அடங்கிப்போகும் சாமான்யர்கள் அல்ல. தீவிரவாதி, நக்சலைட், தேசவிரோதி என்ற அவதூறுகளைக் கிளப்பி அவர்களை ஒடுக்க முடிவதில்லை. அந்த எல்லைகளைக் கடந்து போராடும் போது தீர்த்துக்கட்டுவது என்று செயல்படுகிறார்கள்.

அவன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும்போது நாம் என்ன செய்வது. நல்லதைப் பார்க்காதே! நல்லதைக் கேட்காதே! நல்லதைப் பேசாதே! என்று காந்தி குரங்குகளாக நாம் இருக்கமுடியாது. சாரணர் இயக்கத்தேர்தலில் எச்.ராஜா பெற்றிருக்கும் தோல்வி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி-க்குச் சமீபத்தில் கிடைத்திருக்கும் ஒரு சவுக்கடி.

அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சியாக நடைபெற்றிருக்கும் இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக உள்ளது” என்று கூறி பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கெதிராக ஓர் அணியாகத் திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து உரையாற்றிய கவிஞர் வல்லம் தாஜுபால். “பெரியாருக்கெதிராக எழுதுவதும், பேசுவதும்தான் கருத்து சுதந்திரம் என்பதுதான் நடைமுறையாக உள்ளது. எதிர்ப்பாளர்களை மிரட்டுவது, அடங்கமறுத்தால் அழித்தொழிப்பது என்பது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய அநியாயம் தொடர்ந்து அரங்கேறுவதற்கான காரணங்களில் ஒன்று நல்லவர்கள், விவரமறிந்தவர்கள் என்று கருதப்படுபவர்களின் மௌனம்தான். தப்பித்துவிடலாம் என்று கருதிப் பலர் மௌனிகளாக இருக்கிறார்கள். மெளனிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பத்திரிகைகள் சமூகத்தின் மனசாட்சிகள் என்று நம்பப்படுகிறது. சமூகத்தின் மனசாட்சி கொல்லப்பட்டுவிட்டது.

கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு அவர்கள் கல் எறிகிறார்கள். கற்குவியல் அருகில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரவில்லை. உணர்த்த வேண்டும்” என்று கூறி ம.க.இ.க-வின் முன்முயற்சிக்கும், தனக்கு அளித்த வாய்ப்பிற்கும் நன்றி கூறி அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து பேசிய த.மு.எ.ச மாநில துணைசெயலர் தோழர் களப்பிரன் “கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் படுகொலைகள் ஒரே மாதிரி கொலையாக உள்ளது. கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. குஜராத் படுகொலை குற்றவாளிகள் அதிகாரத்தில் இருக்கும்போது நீதி கிடைக்காது. நேற்று சபாநாயகர் தனபாலின் ஜனநாயகப் படுகொலையைப் பார்த்தோம்.

சாரணர் இயக்கத் தேர்தலில் 52 ஓட்டுகளை எச்.ராஜா பெற்றார். அந்த 52 பேர் எப்படி வந்தார்கள்? சாரணர் இயக்கப் பேரவை கூட்டப்படவில்லை. போலி உறுப்பினர்களைச் சேர்த்து 52  ஓட்டுகளைப் பெற்றுள்ளார். 52 பேர் சாரணர் இயக்கத்தில் எச்.ராஜாவுக்கு ஓட்டு போட்டனர் என்பதை சாதாரணமாக நாம் கருதக்கூடாது. பல்வேறு இடங்களில் ஊடுருவி அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருந்து தொடர்ந்து போராட வேண்டும்” என்று தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

அடுத்து பேசிய பத்திரிகையாளர் கதிரவன் “ஆர்.எஸ்.எஸ்-க்கு தொங்கு சதை அமைப்புகள் ஏராளம். கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக விளங்கிய மும்பை, பூனே போன்ற பகுதிகள் தற்போது சிவசேனா ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பொறுக்கிக் கூட்டத்தைப் பொறுக்கியெடுத்து முன்னிலைப் படுத்துகின்றார்கள். இதனை எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் தாக்குதல் நிலையிருக்கிறார்கள், நாம் தற்காப்பு நிலையில் கூட இல்லை என்பதே உண்மை.

இந்தியச் சமூகம் பிற்போக்கான சமூகம் என்று சொல்லப்பட்டாலும், போராட்டங்களின் ஊடாக வளர்ந்து முன்னேறியது. நமது சமூகம், தத்துவப் போராட்டங்களில் உயர்ந்து நின்றுள்ளது. தற்போது எதிர்ப்புகள் சிதறடிக்ககப்பட்டுள்ளன. தத்துவப் போராட்டங்களை நடத்தும் அதே வேளையில் நடைமுறை போராட்டங்களையும் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும். அதன் தொடக்கமாக இந்நிகழ்ச்சி உள்ளதாகக் கருதுகிறேன். சமகால எழுத்தாளர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி நிகழ்த்த ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

பிறகு பேசிய தோழர் காளியப்பன் தனது உரையில் “எள் முனையளவு கூட சமரசமின்றி எழுதிய எழுத்தாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு இன்றி இருப்பதுதான் வருத்தத்திற்குரியது. ஊடக அறம் என்பது பின்னடைந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் அப்படித்தான் செயல்படும். ஊடகத்துறையில் முன் உதாரணமான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கௌரி லங்கேஷ். பெண் இவ்வளவு வேகமாக எழுதுவது கூடாது என்று எச்சரித்தார்கள். கௌரி லங்கேஷ் எழுத்தின் ஆழம் எதிரிகளுக்கு ஆத்திரம் ஊட்டியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையின் போது களத்தில் நின்று போராடிய போராளி கௌரி லங்கேஷ்.

சமூக ஊடகங்களில் கௌரி லங்கேஷ் பேசுவது போன்ற ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ‘எனது மரணம் பாதியைச் சாதித்தது. மீதியை நீங்கள் சாதிப்பீர்கள்’ என்று அந்தச் செய்தி கூறுகிறது.

கௌரி லங்கேஷ்-க்கு எதிராகப் பேசுபவர்கள் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் பேசுகிறார்கள். ‘கடவுளின் ஒரு திட்டம் நிறைவேறியது’ என்று ஒருவன் பேசுகிறான். ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது. இதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. ‘இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல; முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் கொலைவெறி ஆட்சிதான்’ என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

இஸ்லாமியர்களுக்கும். தலித்துகளுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொலை வெறிக்கு நீதிமன்றம் துணைபோகிறது. பெஹ்லுகான் மரணவாக்குமூலம் தெளிவாக இருக்கும் போதும் எதிரிகள் ஆறுபேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். நீதித்துறை பாசிசமயமாகி வருகிறது. மயில் பிரம்மசரியத்தைக் கடைபிடிக்கிறது. அதனால்தான் தேசியப்பறவையாக உள்ளது என்கிறார் ஒரு நீதிபதி. ஆசிரியர்கள் போராட்டத்தில் “நீங்கள் நீதிமன்றத்திற்கு கட்டுப்படவில்லை என்றால் உங்களது கோரிக்கை வழக்குகளை ஏற்கமாட்டேன்” என்று சிறுபிள்ளை போலப் பேசுகிறார் நீதிபதி.

நீதித்துறை இப்படி என்றால் ஊடகத்துறை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு விவாதத்தில் ‘திருப்பதியில் 18 தலித் அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்’ என்று ஒரு பி.ஜே.பி ஆதரவாளர் பொய் சொல்லுகிறார். மறுத்துப் பேச ஆள் இல்லை.

கௌரிலங்கேஷ் நடத்திய லங்கேஷ் இதழ் ஆர்.எஸ்.எஸ்–ஐ கடுமையாக அம்பலப்படுத்தியது. கௌரி லங்கேஷ்-ன் சகோதரர்  பி.ஜே.பிக்குச் சென்றுவிட்டார். சகோதரரைப் புறக்கணித்து லங்கேஷ் இதழை நடத்தினார் கௌரி லங்கேஷ். விளம்பரம் வெளியிடாத பத்திரிகை என்ற சிறப்பை அவரது பத்திரிகை பெற்றது.

இறுதிக்காலத்தில் தன்னைவிட்டு விவாகரத்து வாங்கிப் பிரிந்து வாழ்ந்த கௌரி லங்கேஷ் பிரிவிற்குப் பிறகும் காட்டிய பரிவை அவரது கணவர் பதிவு செய்திருக்கிறார். எவ்வளவு உயர்ந்த மனிதாபிமானி என்பதை எடுத்துக்காட்டும் எண்ணற்ற சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பெரும் மனிதாபிமானியும், பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிரான போராளியுமான கௌரி லங்கேஷ்-க்கு செலுத்தும் அஞ்சலி என்பது அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வதுதான்” என்றார்.

இறுதியாக நிறைவுரையாற்றிய மூத்தப்பத்திரிகையாளர் அருள் எழிலன் பேசியதாவது,

“பெண் ஒருவர் மீது மோட்டார் வாகனம் மோதி பெண் இறந்துவிடுகிறார். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் ‘மாட்டின் மீது மோதாமல் பெண்மீது மோதினேன். பெண் இறந்தற்காக ஏதாவது தண்டனை கிடைக்கலாம். மாட்டின் மீது மோதியிருந்தால் கொலை செய்யப்பட்ருப்பேன்” என்றார்.

முட்டவரும் மாட்டைக் கல் எறிந்து விரட்டியதற்காகப் பெண்ணை அடித்தார்கள் என்றால் எப்படிப்பட்ட நிலைமை என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

சக பத்திரிகையாளன் என்ற முறையில் இந்த அபாயத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன். உயிரைப் பறிப்பார்கள் என்பதை கௌரி லங்கேஷ் உணர்ந்திருக்கவில்லை. மதவெறியர்கள் செயல்பாடுகளை நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் கூடுதலாகவே நான் உணர்ந்திருக்கிறேன். உணர்ந்தே கடமையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

பார்ப்பனர்களுக்கெதிரான போராட்டம் நடத்தப்பட்ட தமிழகத்தில் மண்டைக்காடு கலவரம் நடந்ததை மறக்கமுடியாது. விவேகானந்தர் பாறைதான் அதன் தொடக்கம். ஒரு தாய் மக்களாகப் பழகிய மீனவர்கள், நாடார்கள் எதிரிகளாகப் பிளவுபட்டு மோதிக்கொண்டார்கள். ஆறு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். கோவை கலவரத்தை நடத்தினார்கள். அது எடுபடவில்லை.

போராட்டச் சூழலில் நடுநிலை என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் நடுநிலையானது என்று நான் நினைக்கிறேன்.

ஊடகங்களில் விவாதம் என்ற பெயரில் நான்கு பேரில் ஒருவர் பி.ஜே.பி, மற்றொருவர் மோடி ஆதரவாளர், மூன்றாவது நபர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் அவரும் பி.ஜே.பி மூன்று பேரும் சேர்ந்து நெறியாளரை மிரட்டுவார்கள். விவாதத்தில் மதிமாறனுக்கு எதிராகப் பேசிய ஆர்.எஸ்.எஸ் நாராயணன் “அதற்கான விலையைக்” கொடுக்க வேண்டும் என்றார். அவர் கூறும் விலை என்பது என்ன? ஜனநாயகமே இல்லாமல் ஜனநாயகவாதியாக நடிப்பதுதான் இன்றைய ஊடகத்தின் நிலை” என தனது உரையில் பேசினார்.

நிறைவாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது.கொட்டும் மழையிலும் 100 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

-வினவு செய்தியாளர்.

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடி வரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. RSS பார்ப்பன பாசிஸ்ட்களை சித்தாந்த தளத்தில் மட்டுமல்ல களத்திலும் அனைத்து மக்களும் இணைந்து ஒற்றுமையுடன் மோதி அழிக்க வேண்டிய தருணம் இது….

  2. இக்கட்டுரையின் தலைப்பு முதலில் ’விராங்கணை’ என எழுத்துப் பிழையோடு வெளியிடப்பட்டிருந்தது, திருத்தப்பட்டிருக்கிறது. தவறுக்கு வருந்துகிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க