வேலையிழப்பு நல்லது – மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அதிரடி !

4
44

இளைஞர்கள் வேலையிழப்பது பொருளாதாரத்திற்கு நல்லது : மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கருத்து

ளைஞர்கள் வேலையிழப்பது இந்திய பொருளாதாரத்திற்கு நல்லது. ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கவே விரும்புகிறார்கள் என்று தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் இரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.

உலக பொருளாதார மன்றம் எனும் அமைப்பு தலைநகர் புதுடெல்லியில் அக்டோபர், 7 -ம் தேதி நடத்திய இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் தொழில்துறை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய 200 நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆட்குறைப்பு செய்துள்ளதாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார். மேலும் இந்நிறுவனங்கள் புதிய வேலைகளை உருவாக்கத் தவறினால் சமுதாயத்தை முன்னேற்ற ப்பாதையில் அழைத்துச் செல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன்படி பார்த்தால் ஏர்டெல் நிறுவனத்தில் மட்டும் ஆட்குறைப்பு நடக்கவில்லை என்று பொருள் கொள்ளலாமா? அப்படி இல்லை. ஏர்டெல் நிறுவனத்தின் நிரந்தரப் பணியாளர்களை விட தற்காலிக ஒப்பந்த முறையில் ஆன தொழிலாளர் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களே அந்நிறுவனத்தின் பணிகள் பலவற்றை செய்கின்றன. இனி விசயத்திற்கு வருவோம்.

நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வது ஒரு நல்ல அறிகுறி தான் எனக் கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வது ஒரு நல்ல அறிகுறி தான். இளைஞர்கள் வெறுமனே வேலையை மட்டுமே தேடிக்கொண்டிருக்க போவதில்லை. அவர்கள் புதிதாக வேலைகளை உருவாக்குபவர்களாக இருக்க விரும்புகிறார்கள் என்பதுதான் இன்றைய எதார்த்தம். இளைஞர்கள் மேலும் மேலும் தொழில் முனைவோர்களாக ஆவதற்கே விரும்புகிறார்கள் என்பதை இந்த நாடு பார்த்து கொண்டிருக்கிறது என்று சுனில் மிட்டலுக்கு கோயல் பதிலளித்தார்.

இப்படியொரு கருத்தைப் பொதுவாக முதலாளிதத்துவ அறிஞர்களும், முதலாளித்துவ பொருளாதாரத்தை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்களும் முன்வைக்கும். ஆனால் இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அமைச்சர் ஏன் இதை பேச வேண்டும்? மோடி அரியணை ஏறியவுடன் 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று அடித்த சவடாலுக்கு எதிராக நாட்டின் இண்டு இடுக்கெங்கிலும் காறித்துப்பப்படுகிறது. இதன் எதிர்வினை தான் அவரை இப்படி பேசத்தூண்டுகிறது.

இளைஞர்களை வேலையை விட்டு துரத்துவது இந்திய பொருளாதாரத்திற்கு நல்லது என்ற கோயலின் உளறலுக்கு இந்துத்துவ சங்கிகள் பல்வேறு வியாக்கியானங்களை சொல்லக் கூடும். ஆனால் கள எதார்த்தம் என்ன?

லார்சன் & டூப்ரோ 2016 -ம் ஆண்டில் தன்னுடைய ஒட்டுமொத்த பணியாளர்களில் 11.2 விழுக்காடு அதாவது 14,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இது அந்த ஆண்டின் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை. எச்.டி.எப்.சி. வங்கி, 2017  நிதியாண்டின் முதல் காலாண்டு மற்றும் 2016 நிதியாண்டின் கடைசி காலாண்டிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்திருக்கிறது. மற்ற தனியார் வங்கிகளிலும் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஆட்குறைப்பு நடந்திருக்கிறது. 2015 – 17 நிதியாண்டுகளில் மட்டும் மூடப்பட்ட 67 ஆடைத்துறை நிறுவனங்களில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 17,600.

மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கை அழித்தொழித்த முறைசாரா வேலைகளின் எண்ணிக்கைப் பற்றிய குறிப்பான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. எனினும் இது குறைந்தது இலட்சங்களில் இருக்கும் என்பது மட்டும் உறுதி. ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பிறகு பல்வேறு துறைகள் வேலை நிறுத்தம்  செய்தன. இப்போது அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த தொழில் முடக்கத்தால் வேலை இழந்தவர்களும் இலட்சக்கணக்கில் இருப்பது உறுதி.

கோயலின் கருத்துப்படி வேலையிழந்த இந்த இலட்சக்கணக்கானோர் இன்று தொழில் முனைவோராக மாறியிருக்க வேண்டும்.

ஆனால் நிலவரம் வேறுவிதமாக இருக்கிறது. அதவது 2016 -ம் ஆண்டில் மட்டும் 212 புதிய நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை 2015 -ம் ஆண்டை விட 50 விழுக்காடு அதிகம். இது கடுமையான வேலையிழப்பில் தான் முடிந்திருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. கிட்டத்தட்ட 6,000 புதிய நிறுவனங்கள் 2016 -ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஆனால் 2017 -ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தொடங்கப்பட்ட புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 800 மட்டுமே.

அப்படியெனில் கோயல் கூறும் தொழில் முனைவோர்கள் என்பவர்கள் யாவர்?

மோடி அரசின் நுண் கடன் திட்டமான “பிரதான் மந்திரி முத்ரா யோஜனா“ மூலம் சிலப் பத்தாயிரங்களைப் பெற்று பெரும் தொழில் ‘அதிபர்’களானவர்கள்(!) தான் கோயல் கூறும் அந்த தொழில் முனைவோர்கள்.

உடல் நலத்தைக் காட்டிலும் அழகிற்கே பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினைக் குறித்த கேள்வியொன்றிற்கு முன்னாள் குஜராத் முதல்வர் மோடி பதிலளித்திருந்தார். பற்றியெரியும் பிரச்சினைகளில் இந்துத்துவா பாசிஸ்டுகளின் அணுகுமுறை எப்படி ஒன்றுபோலவே இருக்கிறது என்பதற்கு கோயலின் கருத்து மற்றுமோர் சான்று. சுருங்கச் சொன்னால் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஏழைகளை கொன்றுவிடலாம் என்பதற்கும் பியூஷ் கோயல் சொல்வதற்கும் வேறுபாடு இல்லை.

மேலும் :

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா

4 மறுமொழிகள்

  1. இதைவிட ‘முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் தோழா விசய் , லாரன்சு பாணியில் ஒரு தன்னம்பிக்கை பாசிடிவ் திங்கிங் கப்சா பாடல் ஒன்றை அவர் பாடி வெளியிட்டிருக்கலாம். அப்படியே விரும்பியதை திங்க, படிக்க, சொல்ல முடியாத மு.முதலைகளின் வேட்டைக்காடாகவே உள்ள திருநாட்டில் என்ன மயித்த வச்சு என்னத்த ‘முனைவது’ எனவும் சொல்லலாம்.

  2. பியூஸ்(போன)கோயல்கள் இவ்வாறு பேசியது, பேசிவருவது,
    எதுவுமே தவறில்லை.அவர்கள் பேசப்பேசத்தானே அவர்களின் “குஜராத் கோட்”இந்திய மக்களால் சீக்கிரம் கிழித்து தொங்கவிடப்படும்.

  3. தற்பாேது வெயில் காலமும் இல்லை …வெயிலும் மண்டை சூடு ஏறும்படி அடிக்கல … அப்படியிருந்தும் …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க