Sunday, October 1, 2023
முகப்புசெய்திநூறு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 31 இலட்சம் கோடி ரூபாய் !

நூறு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 31 இலட்சம் கோடி ரூபாய் !

-

ரிலையன்ஸ் நிறுவனங்களின் முதலாளியான முகேஷ் அம்பானி தொடர்ந்து பத்தாவது முறையாக இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களின் பட்டியலின் முதலிடத்தில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதிலும் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 67 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அவர் மட்டுமல்ல, இந்தியாவின் 100 செல்வந்தர்களின் நிகர சொத்து மதிப்பு 2016-ம் ஆண்டை விட 26 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அந்த பத்திரிகை புகழாரம் சூட்டியிருக்கிறது.

இந்தியாவில் பொருளாதார மந்தம் நிலவிய போதும் இந்த 100 பணக்காரர்களுக்கும் பம்பர் பரிசு அடித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. இந்த வரிசையில் 2.48 இலட்சம் கோடி ($38 பில்லியன்) ரூபாயுடன் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். சென்ற ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் அவரது சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது.

கிட்டத்தட்ட 1.24 இலட்சம் கோடியுடன் ($19 பில்லியன்) அடுத்த இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி இருக்கிறார். சென்ற ஆண்டில் சுமார் 26 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அவரது சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது. அடுத்ததாக இருக்கும் இந்துஜா சகோதரர்களின் சொத்து மதிப்பு 1.2 இலட்சம் கோடிக்கும் ($18.4 பில்லியன்) அதிகம். கிட்டத்தட்ட 72 ஆயிரம் கோடியுடன்($11 பில்லியன்) கவுதம் அதானி 10 வது இடத்தில் இருக்கிறார். பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 43,000 கோடியுடன் 48 இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 31 இலட்சம் கோடிக்கும் ($479 பில்லியன்) அதிகமாக இருக்கிறது. இந்த 100 பேரில் ஒருவராக வேண்டுமென்றால் குறைந்தது 9.5 ஆயிரம் கோடிக்கும் ($1.46 பில்லியன்) அதிகமாக சொத்து மதிப்பு இருக்க வேண்டும். இந்த இலக்கானது 2016-ம் ஆண்டை விட 1,374 கோடி அதிகம்.

இந்தியாவின் பெரும் கடனாளியான முகேஷ் அம்பானி வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய மொத்த கடன் 1.96 இலட்சம் கோடி. 2016-ம் ஆண்டு முடிவில் சுமார் 1.5 இலட்சம் கொடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித்து வந்துள்ளது. மல்லையா கடன் வாங்கிய தொகையை சட்டவிரோதமாக மடைமாற்றினார் என்றால் அதையே அம்பானி சட்டபூர்வமாக செய்கிறாரா?  இல்லை ரிலையன்சின் கடன் என்பது முகேஷ் அம்பானியின் சொந்தக் கடனாக கணக்கில் வராது என்பார்களா? இது என்ன கணக்கு?

ஆனால் பெரும்பாலான ஏழை இந்திய மக்களுக்கு இந்தக் குழப்பமான நிதி நிலை அறிக்கை எல்லாம் இல்லை. உலக அளவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குழந்தைகளில் 31 விழுக்காட்டினருடன் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆக்ஸ்ஃபோர்ட் வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு முனைப்பு (OPHI) என்ற நிறுவனம் கூறுகிறது. நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டின்(Global Multidimensional Poverty Index) படி ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 52.8 கோடி மக்கள் ஏழ்மையில் உள்ளனர்.

ஒருபுறம் நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கும் அம்பானி உள்ளிட்ட பெரும்பணக்காரர்கள்; மறுபுறம் வெறும் 124 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய ஏழை மக்கள். இந்த பஞ்சபராரிகள் மீது பண மதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட அஸ்திரங்களை ஏவி எஞ்சியதையும் பறிக்கிறது கார்ப்பரேட் நலம்புரி மோடி அரசு.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க