Monday, March 27, 2023
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்நெல்லை : விளைநிலத்தில் டாஸ்மாக்கை திறந்த அரசு - விவசாயிகள் போர்க்கோலம் !

நெல்லை : விளைநிலத்தில் டாஸ்மாக்கை திறந்த அரசு – விவசாயிகள் போர்க்கோலம் !

-

டாஸ்மாக் கிற்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் !

நெல்லை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் புதுப்பட்டி ஊர்களுக்கு இடையே விளை நிலங்களுக்கு மத்தியில் கடந்த 04.09.2017 அன்று புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட செய்தி தெரிந்ததும் புதுப்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு கடையை முற்றுகையிட்டு கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தினர்.

அதன் விளைவாக திறந்த அன்றே கடை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு மறுநாளே கடையை திறந்து விட்டார்கள். இதைக் கண்டு குமுறிய மக்கள் ஆலங்குளம் விவசாயிகள் திரண்டு கலெக்டர் தொடங்கி எம்.பி. வரையில் மனுக் கொடுத்துப் பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை. கடை மட்டும் கனஜோராக நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தான் மக்கள் அதிகாரம் தோழர்கள் தகவல் அறிந்து மக்களை சந்தித்துப் பேசினர். உடனடியாக டாஸ்மாக் எதிர்ப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு சுவரொட்டி அடித்து ஆலங்குளம் புதுப்பட்டி பகுதிகளில் ஒட்டப்பட்டது. தொடர்ந்து பிரசுரம் அடித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று வினியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சாராயக்கடை திறப்பதின் நோக்கம் குறித்தும், அரசின் தன்மை குறித்தும் பரப்புரை செய்யப்பட்டது. உறுதியான, சமரசமற்ற போராட்டமே தீர்வு என்பதை மக்கள் உணரத் தொடங்கினர்.

அடுத்ததாக, டாஸ்மாக் எதிர்ப்புக் குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் 12.10.2017 அன்று போராட்டம் நடத்துவது என்றும், டாஸ்மாக் கடையை மூடாமல் திரும்புவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி, 12.10.2017 அன்று காலை 11.00 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடங்கினர். காவல் துறையினரின் நைச்சியாமான சமாதானங்களை மீறி விண்ணதிரும் முழக்கங்களுடனும், விவாசாயிகள் தங்கள் அனுபவங்களை பேசுவதினூடாகவும் போராட்டம் வீரியத்துடன் தொடர்ந்தது.

நிலைமை சாதகமாக இல்லாததை உணர்ந்த காவல்துறையினர், மேலதிகாரிகளுடன் பேசி தாசில்தாரை வரவழைத்தனர். மதியம் 2.00 மணிக்கு வந்த தாசில்தார், மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஊருக்கு வெளியே தான் டாஸ்மாக் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, இது எங்கள் விவசாய நிலம் என்று பதிலடி கொடுத்தனர் விவசாயிகள். இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள் கடையை மூடி விடுகிறோம் என்றார்.

உடனே மக்கள், இது வரை கலெக்டர் தொடங்கி அனைத்து அரசு அதிகாரிகளிடமும் கொடுக்கப்பட்ட மனுக்களை சுட்டிக் காட்டி இதற்கு என்ன பதில் என்றனர். செய்வதறியாது திகைத்த தாசில்தார். இதற்கு மேல் நான் ஒன்றும் செய்ய இயலாது டி. எம் -மை (மண்டல மேலாளர்) அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு பறந்தோடினார்.

நேரம் கடந்ததே தவிர எந்த மேலதிகாரியும் மக்களை வந்து சந்திக்கவில்லை. மீண்டும் காவல் துறையினர், நேரம் இருட்டத் தொடங்கி விட்டது, பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் கடையை திறக்க விடமாட்டோம். நீங்கள் கலைந்து செல்லுங்கள். வேண்டுமானால் காலையில் உங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொள்ளலாம் என்று பேசிப் பார்த்தனர். மக்களின் கருத்தைக் கேட்டதில் அவர்கள் உறுதியாக இருந்து கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று திடமாக நின்றனர். விடிய விடிய போராட்டம் தொடர்கிறது.

ஊடகத்துறைகளிலிருந்து நிருபர்கள் வந்திருந்து மக்களிடம் பேட்டி எடுத்து புகைப்படம் எடுத்து செய்தி சேகரித்துச் சென்றனர். ஆனால் காலையில் அனைத்து செய்தித்தாள்களிலும் ஒரே மாதிரியாக தாசில்தார் வந்து பேசியதும் அதை ஏற்றுக் கொண்டு மக்கள் கலைந்து சென்றனர் என்று செய்தி வெளியிட்டு தாங்கள் யார் பக்கம் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.

இன்றும் இந்த நிமிடம் வரை போராட்டம் அதன் வீரியம் குன்றாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க