Monday, January 17, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் குஜராத் தேர்தல் : கட்சி மாறுவோர்க்கு கோடியில் கொடுக்கும் பாஜக !

குஜராத் தேர்தல் : கட்சி மாறுவோர்க்கு கோடியில் கொடுக்கும் பாஜக !

-

“அவர்கள் (பாஜக-வினர்) எனக்கு ரூ.1 கோடி அளிப்பதாகச் சொன்னார்கள். ரூ.1 கோடி என்ன?, ரிசர்வ் வங்கியையே எனக்குக் கொடுத்தாலும் நான் விலை போகமாட்டேன்” இது கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-10-2017) இரவு குஜராத்தின் படேல் சாதி சங்கத்தின் பிரமுகரான நரேந்திர படேல் என்பவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து.

எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், கணிசமான ஓட்டுக்களை வைத்துள்ள படேல் சாதியினரின் ஆதரவு எல்லா கட்சிகளுக்கும் முக்கியமானது. குஜராத்தில் படேல் சாதியினர், கடந்த 2015 -ம் ஆண்டு இடஒதுக்கீடு வேண்டி மிகப்பெரும் பேரணி நடத்தி அதில் கலவரம் ஏற்பட்டு போலீசு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது நினைவிருக்கலாம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நரேந்திர படேல்

குஜராத்தின் பனியா சாதிகளில் செல்வாக்கான படேல்கள்தான் இந்துமதவெறியர்களின் முதன்மையான சமூக அடிப்படை. காங்கிரசின் செல்வாக்கில் இருந்த குஜராத்தில் இன்று பா.ஜ.க -வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களும் பட்டேல்கள்தான். இந்துமதவெறியர்களின் கலவரங்களில் குறிப்பிடத்தக்க பங்கையும் இவர்கள் அளித்தனர். இசுலாமிய வணிகர்கள் மற்றும் குறு முதலாளிகளோடு தொழில் ரீதியான போட்டியும் இவர்களை இயல்பாக இந்துமதவெறியர் பக்கம் சேர வைத்தது. மேலும் குஜராத்தில் மட்டுமல்ல வட இந்தியாவில் நடந்த பல்வேறு இந்து-முஸ்லீம் ‘கலவரங்களின்’ இறுதியில் இசுலாமியர்கள் தமது பராம்பரிய வணிக உரிமைகளை சொத்துக்களை இழந்ததை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

குஜராத்தில் 2002 -ம் ஆண்டு கலவரத்தை நிகழ்த்திய மோடியை ஊடகங்கள் ஊதிப் பெருக்கியதைப் போல், படேல் சாதிக் கலவரத்திற்குக் காரணமான ஹர்திக் படேல் என்னும் 22 வயது இளைஞனையும் ஊடகங்கள் ஊதிப் பெருக்கியதும் நினைவிருக்கலாம்.  பாஜக -வால் ஊட்டி வளர்க்கப்பட்ட பட்டேல் சாதியின் பொதுக் கருத்து தற்போது சங்கிகளுக்கு எதிராக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படேல் சாதியினரின் ஓட்டு இந்த முறை பாஜக-விற்கு கிடையாது என அறிவித்தன, படேல் சாதி சங்கங்கள். சமீபத்தில் குஜராத் டியு நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 13 இடங்களில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மண்ணைக் கவ்வியது பாஜக. இது குஜராத் பாஜக -விற்கு கடும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் காங்கிரசின் அகமது பட்டேல் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக பாஜக நடத்திய குதிரைப் பேரம் உலகப் பிரசித்தம். வரிசையாக காங்கிரசு எம்.எல்.ஏ-க்கள் விலை போனதும் மிச்சமிருப்போரை காப்பாற்ற அவர்கள் கர்நாடக அனுப்பப்பட்டதும் நாமறிந்ததே. இதையும் தாண்டி பாஜக -வின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.

தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக -வினர் சதியாட்டம் ஆடி வருகின்றனர். உ.பி தேர்தலுக்கு வார்டு கவுன்சிலர் போல தெருத்தெருவாக சுற்றிய மோடி இப்போது குஜராத்தில் அலைகின்றனார். தேர்தல் கமிஷன் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால், தேர்தல் தேதி அறிவிப்பிதற்கு முன்பே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். சொந்த மாநிலத்தில் மண்ணைக் கவ்வினால் அது பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது மோடிக்கும் – அமித்ஷாவிற்கும் தெரியும். ஆகவே வெற்றியை எப்படியாவது வாங்கத் துடிக்கிறார்கள்.

இந்நிலையில் தனது எதிராளியின் கட்சியை உடைத்து பலவீனப்படுத்தி அதன் வாயிலாக வெற்றிபெரும் தனது வழக்கமான புறவாசல் யுத்தியை அங்கே பரவலாக ஆரம்பித்திருக்கிறது. பாஜக. முதல் நடவடிக்கையாக, படேல் சாதி சங்கத்தில் ஹர்திக்குக்கு ‘எடுப்பாக’ இருந்த வருண் படேல் என்பவரை, விலை கொடுத்து தனது கட்சியில் இணைத்துக் கொண்டது பாஜக. வருண் படேலை வைத்து படேல் சாதிச் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்களை பேரம் பேசித் தமது பக்கம் இழுக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தது.

இந்நிலையில் தான் படேல் சாதிச் சங்கத்தின் தலைவர்களின் ஒருவரான நரேந்திர படேல், அக்டோபர் 22, 2017 அன்று இரவு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் பாஜக -வில் சேர்ந்த வருண் படேல் தம்மைச் சந்தித்து, பாஜக -வில் இணைந்தால் ரூ.1 கோடி தருவதாகக் கூறினார் என்று அங்கே தெரிவித்துள்ளார்.

மேலும், தம்மை குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிட்டுபாய் வகானியிடம் வருண் படேல் அழைத்துச் சென்றதாகவும், அங்கு தமக்கு முன்பணமாக ரூ.10 இலட்சத்தை ஜிட்டுபாய் வகானி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மறுநாள் நடைபெறவிருக்கும் கட்சி நிகழ்ச்சியில் நரேந்திர படேல் கலந்து கொண்ட பின் மீதி பணமான 90 இலட்சத்தைக் கொடுப்பதாக ஜிட்டுபாய் உத்தரவாதமளித்ததாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நரேந்திர படேல் தமக்குத் தரப்பட்ட ரூ.10 இலட்சத்தை பத்திரிக்கையாளர் மத்தியில் காண்பித்தார்

அந்தப் பணம் எனக்குத் தேவையில்லை. நான் படேல்களின் நலனுக்காக வேலை செய்ய விரும்புகிறேன். அது நல்ல வழியில் சம்பாதித்த பணம் அல்ல. அது ஊழல் பணம்” என்றார் நரேந்திர படேல். மேலும் தமக்குத் தரப்பட்ட ரூ.10 இலட்சத்தை பத்திரிக்கையாளர் மத்தியில் காட்டினார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை வந்த போது இனி ஊழலே நடக்காது, வங்கி பதிவு இல்லாமல் இலட்சக்கணக்கில் கோடிக் கணக்கில் பணத்தை புரட்ட முடியாது என்றார்கள், பாஜக ஆதரவாளர்கள். தற்போது மோடியின் மண்ணிலேயே இவ்வளவு ஊழல் பணம் விளையாடுகிறது என்றால் டிஜிட்டல் பரிவர்த்தனையின் யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் காரணமாக மிகப்பெரிய அளவில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் உதிரித் தொழிலாளர்களும், சிறு வணிகர்களும் தான். குஜராத்தில் ஜி.எஸ்.டி.-க்கு எதிராக சூரத் சிறு வணிகர்கள் நடத்திய மிகப் பெரிய பேரணியும் ஆர்ப்பாட்டமும் மோடிக்கு எதிராக குஜராத் திரும்பியுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. ‘குஜராத் மாடல்’ என்றும் வளர்ச்சி என்றும் மோடியும் பாஜக கும்பலும் போட்ட கூப்பாடுகள் எல்லாம் குஜராத்திலேயே காலம் கடந்ததாகி விட்டிருக்கிறது!

பாஜக -வின் கோட்டையாக சித்தரிக்கப்பட்ட குஜராத்திலேயே பாஜக -விற்கு காசு கொடுத்து ஆளைப் பிடித்து ஓட்டைப் பெறும் இழிநிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் படேல் சாதி ஓட்டுக்களை நத்திப்பிழைத்து தான் இவ்வளவு காலமும் பாஜக கும்பல் குஜராத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க