Sunday, May 4, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கபாஜக-வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள் !

பாஜக-வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள் !

-

காராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான இராஜஸ்தான், சத்தீஸ்கரிலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து தணிந்திருக்கின்றன.

இராஜஸ்தான் மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தின் தலைமையில் நடந்த போராட்டம், 20 மாவட்டங்களில் அரசை முற்றிலும் முடக்கி, குறிப்பிடத்தக்க வெற்றியைச் சாதித்திருக்கிறது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கடையடைப்பு போன்ற வழமையான போராட்ட வடிவங்களோடு நின்றுவிடாமல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுத் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றும் வரை 14 நாட்கள் தொடர்ந்து போராடினர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. அரசு செத்துப் போய்விட்டதென அறிவித்து, இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டத்தின் மையமாக இருந்த சிகார் மாவட்டத்தை மற்ற மாவட்டங்களோடு இணைக்கும் சாலைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான தடையரண்களை அமைத்து, அந்தப் பகுதியை மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்ததன் மூலம் போராடும் விவசாயிகள் மீது அரசு தனது படைகளை ஏவி தாக்குதல் தொடுக்க முடியாதபடி தடுத்தனர். இது மட்டுமன்றி, பா.ஜ.க. அரசை நிர்பந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இலட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, மாடு விற்கத் தடைச் சட்டத்தை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் இந்தப் போராட்டம்  நடைபெற்றது.

உரம், பூச்சிக் கொல்லி மருந்து, டீசல் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், “அச்செலவை ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களின் விலை அதிகரிப்பதில்லை” எனக் கூறுகிறார், உத்தாராம் தோர் என்ற விவசாயி,

வங்கியில் தான் வாங்கிய கடனைச் செலுத்த இயலாததால், தனது சொத்துக்களை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார், சேவாராம் என்ற விவசாயி.

முன்பெல்லாம் விவசாயிகள் பண நெருக்கடியில் இருந்தாலோ அல்லது வறட்சியின் காரணமாகப் பயிர்கள் கருகிப் போனாலோ, அவர்கள் முதலில் தங்களது மாடுகளை விற்றுப் பிரச்சினையைச் சமாளிப்பார்கள். ஆனால், இன்றோ மாடுகளை வாங்குவதற்கு வணிகர்கள் யாரும் முன்வருவதில்லை.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் திரண்டுள்ள இந்து மதவெறிக் குண்டர்கள் மாடுகளை வாங்கிச் செல்பவர்களைத் தாக்கிப் பணம் பறிப்பதோடு, அடித்துக் கொலையும் செய்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதால் மாட்டுத் தரகர்கள் யாரும் மாடுகளை வாங்கி விற்க முன்வருவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தமது பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

அது மட்டுமன்றி, பால் வற்றிப் போன மாடுகளைப் பராமரிக்க முடியாமல், அவற்றை விவசாயிகள் அவிழ்த்து விடுவதால், அவை வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை மேய்ந்துவிடுகின்றன. மாடுகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பகல், இரவு என எல்லா நேரத்திலும் ஒருவர் வயலில் காவல் காக்க வேண்டிய நிலைமை உருவாகி வருகிறது.

பால் வற்றிப் போன மாடுகளைப் பராமரிப்பதே விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறிப் போயிருக்கும் நிலையில், மாநில அரசோ, பராமரிக்கப்படாமல் திரியும் மாடுகளின் உரிமையாளர்களைக் கண்டறிந்து தண்டிக்கப் போவதாக மிரட்டுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, மாடு விற்பதைத் தடை செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இப்போராட்டத்தின் மையமாக இருந்தது.

சதிஷ்கர் மாநிலம் – காங்கேர் நகரில் நடந்த விவசாயிகளின் சாலை மறியல்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முதலில் செவி சாய்க்காத அரசு, போராட்டத்தை முடக்குவதற்கு போராட்டம் நடைபெற்ற மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அனைத்து வகையான போலீஸ் படைகளையும் குவித்து விவசாயிகளை அச்சுறுத்தியது. அதுமட்டுமன்றி, செல்போன் சிக்னல்களை முடக்கியதுடன், இணையதள சேவையை முடக்கியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல விவசாயிகளின் உறுதியான போராட்டத்திற்கு சமூகத்தின் மற்ற பிரிவு மக்களிடமிருந்தும் ஆதரவு பெருகத் தொடங்கியது.

மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., ஆகிய நடவடிக்கைகள் விவசாயிகளையும், வணிகர்களையும், சமூகத்தின் எல்லாப் பிரிவு மக்களையும் ஒருசேரப் பாதித்துள்ளதால், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் சமூகத்தின் அனைத்துத் தட்டுக்களைச் சேர்ந்த மக்களும் அவர்களோடு கைகோர்த்து அரசுக்கெதிராகக் களமிறங்கினர்.

வணிகர் சங்கங்கள், பால் விநியோகிப்பாளர்கள் சங்கம், நகர போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், டெம்போ உரிமையாளர்கள் சங்கம், சத்துணவுப் பணியாளர் சங்கம்  என 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் என அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அது மட்டுமன்றி, மாநிலம் தழுவிய அளவிற்குக் கடையடைப்பை நடத்தி, விவசாயிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தின் முன் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி, 20,000 கோடி ருபாய் அளவிற்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது.

சத்தீஸ்கரில் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக 2100 ருபாய் நிர்ணயிக்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் நடந்தது.

போராட்டத்தின் மையமாக இருந்த ராஜ்நந்கோன் மற்றும் கவர்தா மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, விவசாய சங்கத் தலைவர்களும்,  அம்மாநில முதல்வர் ராமன் சிங்கின் வீட்டை முற்றுகையிடச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர். போலீசின் தொடர் அடக்குமுறை, கைதுகளின் காரணமாக சத்தீஸ்கரில் விவசாயிகள் போராட்டம் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது.

விவசாயிகளின் கோரிக்கைகள், பகுதிப் பிரச்சினையாகவோ, மாநிலப் பிரச்சினையாகவோ இல்லாமல், நாடு தழுவிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை இப்போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், இராஜஸ்தான் விவசாயிகளின் போராட்டமும், அதில் கிடைத்த வெற்றியும், விவசாயிகள் அரசிடம் கெஞ்சிக் கொண்டிராமல், ஆளுங்கும்பலை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, அய்யாக்கண்ணு உள்ளிட்ட தமிழக விவசாய சங்கத் தலைவர்களும், அமைப்புகளும் தமது போராட்ட முறையை, வடிவங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துவிட்டதை இனி யாரும் மறுத்துவிட முடியாது. ஏனென்றால், பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக்கட்டி, விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் அரசுகளை எதிர்த்து, அதாவது விவசாயிகளின் பரம வைரிகளாக மாறிப்போன அரசுக் கட்டமைவை எதிர்த்து நாம் களத்தில் நிற்பதால், அதற்கு ஏற்ற வகையில் போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-கதிர்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி