privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! தருமபுரி பொதுக்கூட்டம்...

அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! தருமபுரி பொதுக்கூட்டம் !

-

அரசியல்  அக்கிரமங்களுக்கு,  அராஜகங்களுக்கு  முடிவுக்கட்டும்  போராட்டம்  தேவை! தருமபுரி  பொதுக்கூட்டம் !

டெங்குவுக்கு  அன்றாடம்  15, 10  பேர் பலி, கந்துவட்டிக்கு  குடும்பமே  பலி என அன்றாடம்  மக்கள் இறந்து  கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர்-க்கு  நூற்றாண்டு விழா  எடுப்பது, அம்மா  எப்படி  செத்தார்  என  ஆய்வு  நடத்துவது  என்று   அன்றாடம்  அராஜங்களும், அக்கிரமங்களும்  அரங்கேறி  வருகின்றன,  இதனை  அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக, தருமபுரி  முழுவதும் தெருமுனைக்கூட்டம்,  ஆர்ப்பாட்டம் என  பல்வேறு  பிரச்சாரங்களை  மேற்கொண்டு  28.10.2017  அன்று  தருமபுரி  சந்தைப்பேட்டையில் பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தினை தோழர் ராஜா தலைமை தாங்கினார்.  அவர் பேசுகையில் ”நெல்லையில்  கந்துவட்டி கொடுமையால் 6 முறை மனுக்கொடுத்தும் கண்டுகொள்ளாத நிலையில் தீயில் கருகி  இறந்துள்ளனர். கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்தையும் அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறது. மர்ம காய்ச்சல் என்ற அராஜகங்களின் மூலம் மக்களை சாகடிக்கிறார்கள். எனவே மக்களை இந்த அரசு வாழ வைக்காது. எனவே    நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

அடுத்ததாக தோழர் காந்தராஜ் மக்கள் அதிகாரம் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர்  பேசுகையில், ”கடைகளில் பிளாஸ்டிக் இருக்கிறதா என்றும் கடைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்றும் சோதித்து அபராதம் விதிக்கின்றனர். இதனை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தாமல், பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும்  ஆலைகளை  மூடாமல், மக்களின்  வாழ்வாதாரத்தில்  மண்ணை  அள்ளி போடுகிறது.  இதுதான்  அராஜகம் இதுதான்  அக்கிரமம்.  எனவே  இதனை  வேடிக்கை  பார்க்காமல்  போராட வேண்டும்”  என்றார்.

மக்கள்  உரிமை  பாதுகாப்பு மையம்  வழக்கறிஞர்  ஜானகிராமன்  பேசுகையில், ”தமிழகம் மற்றும்  இந்தியா  முழுவதும்   அராஜகங்களும் அக்கிரமங்களும்  அரங்கேறி வருகிறது.  அட்லி   சொன்ன  கதையும், இங்கே  சீனிவாசன்  சொன்ன  இட்லி கதையும்  தான்  மிகப்பெரிய  அராஜகங்களுக்கு  உச்சகட்டமாக  இருக்கிறது. பொருளாதாரத்தை   தூக்கி நிறுத்தி விடுவேன்  என்று  பேசிய  மோடி, இன்றைக்கு  சர்வதேச  அளவில்  பொருளாதாரம்  மந்தம்   இதனால்  தூக்கி நிறுத்த முடியாது என்று  கூறுகிறார்கள். இதனை  மூடி மறைக்க  பசு பாதுகாப்பு  என்கிற  பெயரில் மக்களை  தாக்குவது,  கல்புர்கி போன்ற  முற்போக்காளர்களை  சுட்டுக்கொல்வது என  பிஜேபி, ஆர் எஸ்.எஸ்  அகண்ட  பாரத  கனவை நிறைவேற்ற  மக்களுக்கு  எதிரான  திட்டங்களை திட்டமிட்டே  செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம்  மக்கள்  பிரச்சினைகளை  விட்டுவிட்டு ஜெயலலிதா  இறப்புக்கு  விசாரணை  என்றும் கட்சியயையும்  பதவியையும்  பிடிக்கும்  வேலையையும்  பார்க்கிறார்கள்.   மக்களுக்கு  எதிரான  திட்டங்களை  எதிர்த்து  போராடினால்  அதற்கு  எதிராக வழக்கு போடுவது, அதுவும்  சட்டத்திற்கு  உட்பட்டு  போடுவதும் இல்லை. இதுதான்  இந்தியா  முழுவதுமான நிலைமை.  எனவே  நாற்றம் அடிக்கும் இந்த  அரசை  தூக்கி  எரியும்  போராட்டம் தான்  தேவை.  மாற்று  போராட்டம்  வெற்றி தராது” என்றார்.

மக்கள்  அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர் முத்துக்குமார்  பேசுகையில், ”அரசு மக்கள்  நலனில் அக்கறை கொண்டு சுகாதாரத்தை பேண   வேண்டும்.  ஆனால்  மனித  ஆரோக்கியத்தை  கெடுக்கும்  வகையில்  செயல்படுகிறது.  சிறப்பு மருத்துமனைகளுக்கு  அவார்டு கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால் இங்கு மக்களை  சாகடிக்கும் அதிகாரிகளுக்கு  என்ன  தண்டனை  கொடுப்பது. பல நாடுகளில் சுகாதார துறையில் 8% ஒதுக்குகிறார்கள்  ஆனால்  இந்தியாவில்  1% மட்டுமே  ஒதுக்குகின்றனர். அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை.

சவப்பெட்டியில் ஊழல் இருந்ததை போல மக்களை  சாகடிப்பதில்  போட்டிப்போட்டுக்கொண்டு  ஊழல் செய்கின்றனர். சாக்கடையில்  உற்பத்தியாகும்  ஏடிஎஸ்  கொசுவை விட  அரசியல் சாக்கடையில்  உற்பத்தியாகும் இபிஎஸ், ஒபிஎஸ்-யை  தூக்கியெறிவோம்” என்றார்.

தமிழக  விவசாயிகள் சங்கம் கடலூர்  மாவட்ட செயலாளர் திரு. ஆர்.நந்தகுமார்  சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், ”அயோக்கியர்  நெ.1  மோடி, அயோக்கியர் நெ.2  எடப்பாடி, இவர்களுக்காக நீதித்துறை, காவல்துறை, பத்திரிக்கை துறை என எல்லா துறைகளும் இவர்களை பற்றி பேசுவது, இவர்களுடைய  பிரச்சினையை பற்றி  விசாரிப்பது  தான்  இவர்களின்  வேலையாக  இருக்கிறது.  3 அடிதான்  மணல்  அள்ளவேண்டும்  என்றால்  30 அடி வரைக்கும்  அள்ளுகிறார்கள்.  கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை,  கதிராமங்களத்தில்  கொள்ளை என தொடருகின்றன கொள்ளைகள். இது அராஜகம் அக்கிரமம் இல்லையா?

டெங்குவால் தமிழகத்தில் 17  பேர்தான்  இறந்தாக  கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா  சிறைக்கு செல்லும் போது, 300 பேர்  இறந்தததாக  அறிக்கை  தாக்கல் செய்கிறார்கள். ஒவ்வொரு  அமைச்சருக்கும்  ஒரு மணல் குவாரி, மதுபான ஆலை என பிரித்து கொடுத்துள்ளார் எடப்பாடி, எனவே  அரசுக்கான  மணல்குவாரி  அல்ல , அமைச்சர்களின் கொள்ளைக்கான மணல்குவாரியாக ஆகிவிட்டது. இந்த கொள்ளைகள்  அனைத்திலும்  அதிகாரிகளுக்கு  பங்கு இருக்கிறது.

அம்மா  எப்படி செத்தார்  என்பதை  அவருடைய  செக்யூரிட்டியிடம் கேட்க வேண்டும், இல்லை உடன்பிறவா  சகோதரி  சின்னம்மாவிடம்  கேட்க வேண்டும்.  இல்லையா அமைச்சர்களை  தெருவில்  நிற்க வைத்தாவது விசாரணை செய்ய வேண்டும். ஆனால் விசாரணை கமிசன் என்று  ஊரை ஏமாற்றுகிறார்கள். இதனை பயன்படுத்தி  தமிழக பா.ஜ.க  தலைவர்  தமிழிசை “பாவிகள் ஆள்வதை  காட்டிலும்  காவிகள் ஆளலாம்” என்று கூறுகிறார். பெரியார்  பாரம்பரியத்தில்  வாழ்ந்த  தமிழகத்தில் ஒபிஎஸ், ஈபிஎஸ் போன்ற காட்டிக்கொடுக்கும் கைகைகூலிகளுக்கும் காவிக்கும்  இடம் இல்லை, நாங்கள் விடமாட்டோம்”  என்றார்.

மக்கள்  அதிகாரம்  தலைமை குழு  தோழர் மருது  பேசுகையில் ”இன்றைக்கு  4 பேர் இறந்து போன பிறகு தான் ஆய்வு? கலெக்டர் சரியாக  செயல்பட்டு இருந்தால்  இதுபோன்ற  சம்பவம்  நடந்திருக்காது  என்று  பேசுகிறார்கள்.  தமிழகம்  சரியாக  செயல்பட்டதால்தான்   கடந்த  7 ஆண்டுகளில்  823 பேர்  இறந்து போயிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். டெங்கு காய்ச்சலை ஒழிக்க  நிலவேம்பு  கசாயம்  குடியுங்கள் என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட  அறிவாளிகளும்  முட்டாள்களும்தான்  நம்மை  ஆட்சி செய்கிறார்கள்.

நீட், கெயில், நவோதய பள்ளி என்று  நம்முடைய  வாழ்க்கையே பறிக்கிறது. வேலைவாய்ப்பு  அலுவலகம் என்ற ஒன்று வேலையை கொடுக்காமல் இருக்கிறது. இதனை  முடிவுக்கு  கொண்டு வர வேண்டும். புயல், வெள்ளம், சுனாமி என்று வந்தபோதும்  மக்கள்தான்  காப்பாற்றினார்கள். எனவே  எதிரிக்கும், துரோகிகளுக்காகவும் செயல்படும்  இந்த அரசு, மக்களுக்கோ செயல்படாத அரசு. இதிலிருந்து  தப்பிக்க விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என தனித்தனியாக  போராடினால்  தீர்க்க முடியாது.  எல்லா பிரச்சினையும்  தீர்க்க  கரம் கோர்ப்போம், வீதிக்கு வருவோம் தோற்றுப்போன  கட்டமைப்பு இது என அம்பலப்படுத்துவோம். மக்கள் அதிகாரம்  படைப்போம்” அழைத்தார்.

இக்கூட்டத்தினை   நூற்றுக்கணக்கானோர்  கவனித்தனர்.  இன்றைக்கு  அரசியல் அக்கிரமங்களுக்கும், அராஜகத்திற்கும்  முடிவு கட்டாமல்  வாழ்வு  இல்லை  என்பதை  உணர்த்துவதாக  இக்கூட்டம்  அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள்  அதிகாரம்.
தருமபுரி. தொடர்புக்கு : 81485 73417.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க