Monday, January 17, 2022
முகப்பு கலை கவிதை புரட்சியை புரட்சியால் கொண்டாடு ! கவிதை !

புரட்சியை புரட்சியால் கொண்டாடு ! கவிதை !

-

ரசியப் புரட்சி நூறாம் ஆண்டு: புரட்சியை புரட்சியால் கொண்டாடு..!

பூக்களின் மென்மை
போதவில்லை,
பசுமை பத்தவில்லை,
மலைகளின் எழிலும்
மனநிறைவில்லை.

நதிகளின்
நெளிவு சுளிவிலும்
நயம்படவில்லை,
புயலின் வேகமும்
போதவில்லை,

தீயின் பயனிலும்
திருப்தியில்லை,
நீரின் தாகம்
நிறைவில்லை

புவியீர்ப்பு விசை
பூரிக்க…
மார்க்சிய ஒளியில்
ஆக்சிஜன் மகிழ…
இயற்கை சிலிர்க்க
உலகையே அழகாக்கிய
மானுட மலர்ச்சி
ரசியப் புரட்சி!

”தொழிலாளி வர்க்கம்
தன்னைத் தான் அறியுமாறு
தம்மைப் பற்றி
உணர்வு கொள்ளுமாறு
போதித்தார்கள்”
மார்க்சும் எங்கெல்சும்
அதை,
உலகுக்கே புரியும்படி
சாதித்தார்கள்
ரசியப் பாட்டாளிகள்.

ரசியாவுக்கு மட்டுமா?
உழைத்து வாழும் உலகின்
விசையாக
ஒடுக்கப்பட்டவர்களின்
விடுதலை  திசையாக
புவியின் இதயமாக
துடித்தது புரட்சி!
தான் அமைந்த
காரணம் கண்டதில்
பூமிக்கே மகிழ்ச்சி!

மனிதகுலத்தின்…
முன்முயற்சி
முழு நம்பிக்கை
முன்னேற்றம்
மனித இனம் கண்டிராத
மானுடப் பரிணாமம்
மகிழ்ச்சியின் இயற்பொருள்…
இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம்
சுருக்கமாக
சோசலிசப் புரட்சி
எனச் சொல்லலாம்.

திசையற்ற வர்க்கத்தின்
திசையாக மார்க்சியம்
விழியற்ற வர்க்கத்தின்
விழியாக லெனின்
விசையற்ற இதயத்தின்
விசையாக ஸ்டாலின்
உலகின் கிழக்கை
விடிய வைத்த கம்யூனிசம்.

மதம், இனம், சாதி
பாலினம், தோல், நிறம் – என
மக்களை பிரிப்பது முதலாளித்துவம்
மனிதகுலத்தை
சேர்ப்பது கம்யூனிசம்.

மூலதனத்தின் சுரண்டலில்
சுழல்வது முதலாளித்துவம்
முதலாளித்துவச் சுரண்டலை
முடிப்பது கம்யூனிசம்.

‘எல்லோர்க்கும் எல்லாமும்’
முடியுமா முதலாளித்துவத்தால்.
முப்பதாண்டுகளில்
சோசலிசம்
சிகரம் தொட்ட சாதனைகளை
மனிதகுலப் பயனை,
முன்னூறு ஆண்டுகள்
ஆனாலும்
முதலாளித்துவத்தால்
எட்ட முடிந்ததா?

நீ…  நாள்பட்ட விசம்
சோசலிசம்
நாளைக்கும் தேவைப்படும் தேன்!

சொந்த நாட்டு மக்களுக்கு
சோறு போடவே வக்கில்லை
தானியற்றிய சட்டங்களை
கடைபிடிக்கவே துப்பில்லை
ஜனநாயகம் உயிர்வாழ
உன் உடம்பிலேயே இடமில்லை
கடைசியில்
உன்னைத் தூக்கி நடக்க
உனக்கே தெம்பில்லை
இற்று விழக் காத்திருக்கும்
இந்த லட்சணத்தில்
கம்யூனிசம் தோற்றதாம்!

உன் முதலாளித்துவம்
வென்றதா?

திருடன் வாழ்வதா
ஊருக்கு பெருமை
திரும்பத் திரும்ப
சுரண்டலை ஒழிக்கும்
கம்யூனிசம் வெல்வதே
உலகின் அருமை!

முடிந்துபோன விசயமல்ல
சோசலிசம்,
முடித்துகாட்டியது சோசலிசம்.

‘வந்துவிடுமோ
என்ற பயம்’ முதலாளித்துவம்
‘வருவோம்’
என்ற துணிவு சோசலிசம்.

முதலாளித்துவம்
வரலாற்று வழியின் கல்லறை.
சோசலிசம்
வளரும் வரலாற்றின் கருவறை.

எனவே,
நூற்றாண்டுகள் ஆன பின்னும்
கம்யூனிசம் தான் புதுசு
இன்றைக்கு ஆண்டாலும்
முதலாளித்துவம் பழசு.
கம்யூனிசம் –
புழுக்கம் தேடும் காற்று!
முதலாளித்துவம் –
புடுங்கி எடுக்கும் கொசு!
எதை விரும்பும் மனசு.!

புதுமையும், பூரிப்பும்
அழகும், அரும்பண்பும்
பொருள் பொதிந்த வாழ்வும்
ததும்பும் கவிநயம் கம்யூனிசம்.

வெறுமையும், சலிப்பும்
வெறுப்பும், அருவருப்பும்
வாழ விடாத வன்மமும்
மீளவிடாத துயரமும்
துரத்தும் சாவு முதலாளித்துவம்.

மூச்சு விடவும் முடியாமல்
முழு வாழ்வின் இன்பமும் கிடைக்காமல்
முதலாளிகளுக்காகவே
முழு நேரமும் உயிர்வாழும்
கேவலம் ஒழித்தது கம்யூனிசம்.
சாதித்தது ரசியப் புரட்சி!

ஒரு சுரண்டலுமின்றி
உழைப்பவர்க்கு ஒரு வாழ்க்கை!
இது போல வேண்டுமென்ற
ஏக்கம் மட்டும் போதாது
இயக்கமாக போராடு
போராட்டமில்லாமல்
எதுவும் புதிதாக கிடைக்காது!

கட்சி – அமைப்பு பயமா?
கட்டியழும் முதலாளித்துவம் பயமா?
கம்யூனிசப் போராட்டம்
தடை  தாண்டும் செயலின் இனிமை!
முதலாளித்துவ இருத்தலில்  முடங்குவது
முடை நாறும் பிணத்தின் தனிமை.

நாளின்
ஒவ்வொரு  துளியும்
மூலதனத்தால் உறிஞ்சப்படுகிறது
நரம்பின்
ஒவ்வொரு  உயிர்ப்பும்
முதலாளிகளால் விழுங்கப்படுகிறது.

தெருவிலே எரிக்கிறது
கந்து வட்டி
கருவிலேயே எரிக்கிறது
கார்ப்பரேட்டு
மூலதனத்தின் வாசலெங்கும்
காத்திருக்கும் சவப்பெட்டி.

புரட்சி என்பது
எங்கோ நடப்பதல்ல,
ரசியப் புரட்சியின் நியாயங்கள்
உன் அன்றாட வாழ்க்கையின்
அருகேயும் உள்ளது,
வியர்த்திருக்கும் வர்க்கத்தின்
ஒரு  விசைக்காக
காத்திருக்கிறது புரட்சி!

இடம் பெயர்க்கப்படும்
வாழ்க்கை
நிலம் பெயர்க்கப்படும்
இயற்கை
அட்டைகளே வெறுக்கும்
அடிபணிதல் எதற்கு?
கரையான்களே வெறுக்கும்
மெளனங்கள் நொறுக்கு!

அமுதூட்டிய கைகள்
தீமூட்டிய போது
எப்படி அதிர்ச்சி அடைந்திருக்கும்
அந்தப் பிள்ளை…

முதலாளித்துவ கொள்ளி வழங்கிய
கொடூரமல்லவா
அந்த நெருப்பு!
எரிக்கப்பட வேண்டியது
வாழ்கிறது
எரிக்கும் வர்க்கம்
கருகுகிறது!

எதற்காக எரிக்கப்படுகிறோம்
என்ற விபரமே தெரியாமல்
கையில் உள்ள பிஸ்கட்டோடு
கருகிய குழந்தை…
தாய் தகப்பனே
தன் மேல்
தீ வைக்கும் போது
யாரை நம்பும்?
உழைக்கும் வர்க்கமே
உன்னை நம்பியே
அந்தச் சாம்பல் தகிக்கிறது
அந்த அன்னையிட்ட தீ
நம் அடிவயிற்றிலே..!

இதற்கும் மேல்
என்ன வேண்டும்
ஒரு புரட்சியைத் தவிர,

”பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை
பாட்டாளி வர்க்கத்தின்
பணியாகவே இருக்கவேண்டும்”
என்றார்கள் மார்க்சும் எங்கெல்சும்
இதைவிட வேறென்ன வேலை!

”பறிமுதல்காரர்களை
பறிமுதல் செய்கிறது புரட்சி”
என்ற மார்க்சின் குரல்
நம் வர்க்கத்தில் கலந்து
வெகு நாளாயிற்று.

ரசியப் புரட்சி
அதன் வரலாற்றுச் சாட்சி
மக்களே அதிகாரத்தை
கையில் எடுத்துக்கொள்வதுதான் புரட்சி!

புதுசு புதுசாய்
எதை எதையோ வேண்டும் மனம்
புரட்சியை வேண்டாதா என்ன!
புரட்சி வேண்டுமா
வா…
அதற்கு முயற்சி வேண்டும்
முன்னேற அமைப்பு வேண்டும்
யாருக்காகவோ வேலை செய்யும்
உழைக்கும் வர்க்கமே
உனக்கான ஒரே வேலை
புரட்சி மட்டுமே!

எல்லா தகுதிகளையும்
இழந்து
எந்த உத்திரவாதமும்
இல்லாமல்
ஒரு கார்ப்பரேட்
உலகுக்காக
இந்த வாழ்க்கை

உழைக்கும் வர்க்கம்
என்ற ஒரே தகுதியினால்
சுரண்டலற்ற
அமைதி வாழ்வை படைக்கும்
கம்யூனிசப் பாதையே
நாம் வாழ்வதன்  வேட்கை!

ரசியப் புரட்சி
நமக்கும் வேண்டுமா?
புரட்சிக்கு
நாமும் வேண்டும்!

புரட்சியை
புரட்சியால் கொண்டாடுவதுதான்
பொருத்தமானது
இது கம்யூனிசத்தின் காலம்
தவிர்க்கவியலாமல்
நீயும் கலப்பதுதான் நியாயம்!

-துரை. சண்முகம்


  1. அருமையான கவிதை..ரசியப் புரட்சியை ஏற்படுத்த முன்வருவோம்…மீண்டும் ஒரு புரட்சி படைப்போம்…

  2. புரட்சியைப் புரட்சியால் கொண்டாடுவோம்
    ஒவ்வொரு நாளும்!

  3. புரட்சியின் தேவையை உணர்த்தும் வகையில் மட்டுமின்றி கவித்துவ அழகியலோடும் உள்ள கவிதை.
    ஸ்டாலினை புரட்சி இதயத்தின் விசையாக கூறுவது சிறப்பிலும் சிறப்பு.ஆம் ஸ்டாலின் என்றும் மாபெரும் பாட்டாளிவர்க்கத்தின் விசையல்லவா!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க