Saturday, September 18, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றி மீண்டும் வருகிறது டாஸ்மாக்

நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றி மீண்டும் வருகிறது டாஸ்மாக்

-

டந்த 2012 -ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தவிட்டது நினைவிருக்கலாம். இந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், “நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் சாராயக் கடைகளை அகற்ற வேண்டும்” என கடந்த 2016 டிசம்பர் 15 -ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று ஊடகங்கள் – கட்சிகள் கொண்டாடின.

இதையடுத்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவைத் தாண்டியே கடைகள் இருக்க வேண்டும் என்பதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீட்டிக்க வேண்டும். இந்தத் தடையால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும். எனவே தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசு மனு செய்திருந்தது.

அதேபோல், நட்சத்திர விடுதிகள், ’பார்’ போன்ற இடங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இவையும் 500 மீட்டர் தூரம் என்ற அளவீட்டில் அடங்குமா? என கேட்டு பல மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, ‘ஏப்ரல் 1 -ம் தேதி முதல் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் செயல்படக்கூடாது’ என்றும் ‘எல்லா வகையான மது விற்பனை நிலையங்கள், கடைகள், உணவகங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்’ என்றும் உத்தரவிட்டது.

அதேசமயம், தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, 500 மீட்டர் என்பது பெரிய நகரங்களுக்குப் பொருந்தும். அதுவே, 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகர்ப்புறமாக இருந்தால், அங்கு 220 மீட்டர் தூரத்துக்குக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விலக்கும் அளிக்கப்பட்டு தமிழக அரசுக்கு ஆறுதல் தந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்கள், தங்கள் பஞ்சாயத்துக் கூட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி, தங்களது கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடினர். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இந்த அரசியல் சாசனச் சட்டம் வழங்கியிருக்கும் அந்த எழுத்தளவிலான உரிமையையும் சென்னை உயர்நீதிமன்றம் பறித்தது. கடந்த ஜூன் மாதம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஏற்கெனவே வழங்கிய எல்லா தீர்ப்புகளையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

அதாவது, “சில்லறை மதுபானக்கடைகளை அமைப்பதற்கான விதிகளின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் எங்கு வேண்டுமானாலும் மதுக்கடை களை அமைத்துக் கொள்ளலாம் என்றும், கிராம சபைகளுடைய தீர்மானங்கள் கடைகள் அமைப்பதைக் கட்டுப்படுத்த முடியாது” என்றும் தீர்ப்பளித்து தனது உண்மையான முகத்தை காட்டியது. இந்திய நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க முயலும் முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்ட பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“மக்கள் நீதிமன்றங்களை வெகுவாக நம்பியிருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி பூரண மது விலக்கு வேண்டுமென்றால் நீதிமன்றங்களை நம்ப முடியாது” என்றார் சந்துரு.

அதனை உறுதிபடுத்தும் வகையில் தற்போது உச்ச நீதிமன்றம் புதிய விளக்கம் ஒன்றை அளிததுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, அளித்த அந்தப் புதிய விளக்கத்தின்படி இனி நகராட்சிகள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகள் எனப் பெயர் மாற்றம் செய்து மாநில அரசு சாராயக் கடைகளை திறந்து கொள்ள அனுமதிக்கலாம்.

ஏற்கனவே சத்தீஷ்கார் அரசு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக பெயர் மாற்றம் செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது” என தீர்ப்பை அப்போது வழங்கியது உச்சநீதிமன்றம்.

இதைதொடர்ந்து தமிழகத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றும் வகையில் அரசு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்ற தடை விதித்தது.

இந்த தடையை நீக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவில் சில விளக்கம் கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த வாரத்தில் கோரிக்கை விடுத்தார் தமிழக அரசு வழக்கறிஞர்.

அதை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அதில், “தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றியமைத்து டாஸ்மாக் கடைகளை திறக்கலாம். இந்த விவகாரத்தை பொறுத்த வரை சட்டிஸ்கர் மாநிலத்திற்கு உள்ள சட்ட விதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்” என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்த உத்தரவின் மூலம் சாராயக்கடைகளை அரசு விரும்பும் இடத்தில் தடையின்றி நடத்திக் கொள்ள வழி ஏற்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், சட்டம் மக்களுக்கானதல்ல, என்பதை இத்தீர்ப்பு மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சட்டரீதியான தீர்வு இருப்பதாகக் கூறி வந்த கனவான்கள் காண்பித்த ஒரே வழியையும் ஒங்கி அறைந்து மூடியிருக்கிறது.

இனி டாஸ்மாக் கடைகளை மூட நமக்கு விட்டுச் செல்லப்பட்டிருக்கும் ஒரே வழி போர்க்குணமிக்க போராட்டங்களே! இதைத்தான் இந்தத் தீர்ப்பு நமக்கு உறுதிபடக் கூறியிருக்கிறது!

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க