privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !

ஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !

-

ங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் கடந்த நவம்பர் 1, 2017 முதல் நவம்பர் 7, 2017 வரை கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் சென்றனர்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 11,000 செவிலியர்களுக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். உடனடியாக காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செவிலியர்களைப் பணிநியமனம் செய்யும்போதே, நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஒப்பந்த முறை, தற்காலிக முறையில் செவிலியர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது. எட்டு மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்களின் நடத்திய இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 16.11.2017 முதல் சென்னை DMS அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் குறித்து, சமூக  சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத்  அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் கூறுகையில்,

“தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் பணிநியமன வாரியம் ( Medical Recruitment Board) மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 11,000 செவிலியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.   இந்த வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தர வரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பணி நியமனம் செய்யும் போதே, நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமித்துள்ளது. அவ்வாறு நியமித்ததன் மூலம் அவர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கான ஊதியம், சலுகை போன்றவை மறுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நிரந்தர செவிலியர்கள் பணியிடம் காலியாகும் போது மட்டும் தான் இச்செவிலியர்களுக்கு பணிநிரந்தரமும், காலமுறை ஊதியமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு இவர்கள் பணியமர்த்தப்பட வேண்டுமெனில் குறைந்தது  7 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலைதான் உள்ளது. அதுவரை இச்செவிலியர்களுக்கு ஆண்டுக்கு 500 ரூபாய் மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

மருத்துவப் பணியாளர் பணிநியமன வாரியத்தின் (எம்.ஆர்.பி) மூலம் மருத்துவர்களைப் பணி நியமனம் செய்யும்போதே, அவர்களுக்கு நிரந்தர மருத்துவர்களுக்கு உரிய ஊதியம், படிகள் உள்ளிட்டவற்றை அரசு வழங்குகிறது. அதேபோல் எம்.ஆர்.பி மூலம், நான்கு மாதங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட 2,800 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பணி நியமனத்தின் போதே காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த செவிலியர்களுக்கு அவ்வாறு காலமுறை ஊதியம் வழங்கப்படாதது, குறைந்த ஊதியத்தில், செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டும் உள்நோக்கம் கொண்டதாகும்” என்று கூறினார்.

அரசாணையை அரித்த தனியார்மயம் !

G.O 191 பிப்ரவரி 1, 1962 பொதுச் சேவைகள் (A) அரசாணைப்படி போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற விதி இருந்தும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களாக பணியில் அமர்த்தியுள்ளது தமிழக அரசு.

காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும் படியும் இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களை வஞ்சித்து வருகிறது.

பணி நிலைப்பு பெற்ற செவிலியர்களுக்கு தொடக்க நிலை ஊதியமாக சுமார் ரூ.25,000 வழங்கப்படும் நிலையில், அவர்களுக்கு இணையான கல்வித் தகுதி மற்றும் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தமுறை செவிலியர்களுக்கு வெறும் ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதிலிருந்தே, இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்து கொள்ள முடியும்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தனியார் விடுதிகளில் தங்கி வேலை செய்யும் நிலையில், இந்த ஊதியம் என்பது அவர்களின் அடிப்படை தேவைக்கு கூட போதுமானதாக இருக்காது என்பதற்கு தனி பட்டியல் போட வேண்டிய அவசியமில்லை. தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கோரும் கலந்தாய்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தாமல் உளவியல் ரீதியாகவும் அநீதியிழைத்து வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்களுக்கு தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து 2011 -ம் ஆண்டில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் (Training Nurses Association of India) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில்  கட்டாய ஒப்பந்த முறை மற்றும் பிணை முறையை  ஒழிக்கக் கோரியது.

கட்டாய ஒப்பந்த முறை மற்றும் பிணை முறை ஓழிக்கப்பட்டு விட்டதாக இந்திய நர்சிங் கவுன்சில் கூறியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இக்கோரிக்கையை தள்ளுபடி செய்தது. ஆனால் இம்முறை இன்றுவரை தொடர்கிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளிலும்  உள்ளது என்பதுதான் கேலிக்கூத்தானது.

கடந்த நவம்பர் 16 அன்று தொடங்கப்பட்ட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. நவம்பர் 22, 2017 அன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு கொடுத்த உறுதியை ஏற்றுக் கொண்டு அன்றைய போராட்டததை முடித்துக் கொண்டனர் செவிலியர்கள்.

கடந்த நவம்பர் 22 அன்று செவிலியர்களுடனான அரசுத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் இயக்குனர், மருத்துவக் கல்விக்கான இயக்குனர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் அரசுத் தரப்பில் பங்கேற்றனர். பணியிடமாற்றக் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நடைமுறைப் படுத்துவதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

எம்.ஆர்.பி. மூலம் தேர்வான செவிலியர்களுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்குவதற்கு மாநில ஆளுனருக்கும் இதர துறைகளுக்கு பரிந்துரை அனுப்பப்படும் என்று அரசுதரப்பில் கூறப்பட்டது. இதனை செய்து  முடிக்க 14 நாட்கள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. இதனையொட்டி செவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனியார்மயம், தாராளமயம் அமல்படுத்தப்பட்டதே பொதுத்துறை சேவைத்துறைகளான கல்வி மற்றும் மருத்துவத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் நோக்கம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. நிரந்தர தொழிலாளர்களை ஒழித்துவிட்டு  அனைவரையும் ஒப்பந்தக் கூலிகளாக மாற்ற வேண்டும் என்பது அதன் முக்கியமான சரத்து.

பணிநிரந்தரத்திற்கான போராட்டமாக இருந்தாலும், ஊதிய உயர்வுக்கான போராட்டமாக இருந்தாலும், அது தனியார்மயத்திற்கு எதிரான அனைத்து தொழிலாளர் – அரசு ஊழியர் – மாணவர் போராட்டமாக பரிணமிக்க வேண்டும். வாழ்வைப் பறிக்கும் அரசை எதிர்க்க நாம் இன்னும் வலுவான  கூட்டிணைவை உருவாக்க வேண்டியிருக்கிறது.

– வினவு செய்தியாளர்.


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி