திரிபுரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 21 அன்று பத்திரிகையாளர் ஒருவர் திரிபுரா மாநில ரைபிள் படையின் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். திரிபுராவில் கடந்த 3 மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் படுகொலைச் சம்பவம் இது.
திரிபுரா மாநிலத்தில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ எனும் நாளேடு வெளிவருகிறது. இந்நாளேட்டின் ஆசிரியர் சுபல் டேய். இங்கு நான்காண்டுகளுக்கு முன்னர் செய்தியாளராக சேர்ந்தவர் சுதீப் தத்தா பௌமிக். புலனாய்வுக் கட்டுரைகள் மற்றும் அம்பலப்படுத்தல்கள் போன்றவற்றில் திறன் மிக்கவர் சுதீப் தத்தா.
சுதீப் தத்தா மூன்று மாதங்களுக்கு முன்பு, திரிபுரா மாநில ரைபிள் படையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புலனாய்வு செய்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபரான கமாண்டர் தப்பான் டெபர்மாவை அம்பலப்படுத்தி எழுதியுள்ளார்.
இந்நிலையில் பொய்க்கணக்கு எழுதி சுமார் ரூ.10 கோடிக்கும் மேலாக முறைகேடு செய்திருந்த கமாண்டர் தப்பான் டெபர்மாவின் புதிய ஊழலை அம்பலப்படுத்தி கடந்த நவம்பர் 2 -ம் தேதியன்று ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார் சுதீப் தத்தா.
இதனையடுத்து கடந்த நவம்பர் 21 -ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் சுதீப் தத்தாவை தொலைபேசியில் அழைத்து, வெளியான கட்டுரை குறித்து தனது விளக்கத்தைக் கேட்க தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி கூறியுள்ளார் தப்பான் டெபர்மா. சுதீப் தத்தா, ஸ்யந்தன் பத்திரிகாவின் ஆசிரியரான சுபல் டே-க்கு அலைபேசியில் தகவலைத் தெரிவித்திருக்கிறார். சுபல் டே, ஒலிப்பதிவு செய்யும் கருவியை எடுத்துச் செல்லுமாறு சுதீப் தத்தாவிடம் கூறியுள்ளார்.
அகர்த்தலாவின் புறநகர்ப் பகுதியான ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள திரிபுரா மாநில ரைபிள் படையின் இரண்டாவது படையின் கமாண்டர் அலுவலகத்திற்கு காலை 10.30 மணிக்குச் சென்றுள்ளார் சுதீப் தத்தா. இதனை அங்கிருந்த பார்வையாளர் பதிவேடு உறுதி செய்திருக்கிறது.
பின்னர் 11 மணியளவில் பத்திரிக்கை ஆசிரியரின் அலைபேசிக்கு வந்த அழைப்பில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது . உடனடியாக சுதீப் தத்தாவின் உதவி நிருபரான திப்பு சுல்தானை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார் சுபல் டே.
அங்கு சென்ற திப்பு சுல்தானிடம் அப்படி யாரும் இங்கு வரவில்லை என வாயிற்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுதீப் தத்தாவின் வண்டி உள்ளே நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார் திப்பு. இதனைத் தொடர்ந்து மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் பரவ சுமார் 60 -க்கும் மேற்பட்டவர்கள் கமாண்டர் அலுவலகத்தின் முன்னர் திரண்டுள்ளனர்.
சுதீப் தத்தாவின் நிலை பற்றி அதிகாரப் பூர்வமாக யாருக்கும் எவ்வித தகவலும் தரப்படவில்லை. மதியம் 2.30 மணிக்கு அதிகாரப் பூர்வமாக சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.
சுதீப் தத்தா தனது அலுவலகத்தில் இருந்து கிளம்புகையில் சில ஆவணங்களைத் திருடிச் செல்ல முயன்றதாகவும், உடலைப் பரிசோதனை செய்ய வந்த காப்பாளர் நந்தா ரியங்-க்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் நந்தா ரியங், சுதீப் தத்தாவை சுட்டுக் கொன்றதாகவும் தப்பான் டெபர்மா போலீசிடம் தெரிவித்திருக்கிறார்.
போலீசும் பாதுகாவலருடன் ஏற்பட்ட தகராறில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்றே செய்தியாளர்களிடம் தெரிவித்தது. நந்தா ரீயங் உடனடியாக கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் அடைக்கப்பட்டார். இத்தோடு வழக்கை ஊற்றி மூட எத்தனித்தது போலீசு.
இந்நிலையில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ நாளேட்டின் ஆசிரியரான சுபல் டே, கமாண்டர் தப்பான் டெபர்மாவின் ஊழலை வெளிக் கொண்டு வந்ததற்காக, டெபர்மாவால் வரவழைக்கப்பட்ட சூழலில் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை அம்பலப்படுத்தினார்.
பத்திரிக்கையாளர் சங்கங்கள் போராடத் தொடங்கின. இச்சூழல் ஏற்படுத்திய நெருக்குதலின் காரணமாக படுகொலை நடத்தப்பட்ட மறுநாள் (நவம்பர் 22) தப்பான் டெபர்மா கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுதீப் தத்தாவின் அலைபேசி மற்றும் அவரது சட்டையில் இருந்த பொருட்களும் சம்பவ இடத்திலோ போலீசு வசமோ இல்லை. அவையும் கமாண்டர் தப்பான் டெபர்மாவால் எடுத்து மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர் சுபல் டே-யும் சுதீப் தத்தாவின் சக பத்திரிக்கை நண்பர்களும்.
பாசிச பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது நாடறிந்த விசயமே. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் கொல்லப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்.
தமக்கு எதிரான கருத்துக்களை அதிகாரவர்க்கம் எப்போதுமே விரும்புவதில்லை. அதுவும் தங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஒரு பாசிஸ்டின் ஆட்சியும், மாநிலத்தில் அதே பாசிசக் கட்சியின் ஆட்சி நீடிக்கும் போது, இது போன்ற இராணுவ ‘தப்பான் டெபர்மாக்கள்’ கொலை செய்வதற்கும் கவலைப்படுவதில்லை.
பாஜக-வையும், இராணுவத்தையும் எதிர்த்து எழுதினால் இதுதான் நிலைமை என்று அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கிறார்கள். மக்களும் – மக்கள் நலன் சார்ந்து செயல்படும் பத்திரிகையாளர்களும் என்ன செய்யப் போகின்றோம்?
மேலும் :
- Was Tripura reporter murdered over story accusing paramilitary force officer of corruption?
- Tripura commandant held, editor says reporter killed for exposing his corruption
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
குண்டு பாரதமாதாவோட.
துப்பாக்கி எங்களது இல்லை…