அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா?
தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன?
அன்பார்ந்த நண்பர்களே,
கேரள மாநிலம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆறு தலித்துகள் உட்பட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமனம் செய்திருப்பது அர்ச்சகர் பிரச்சனையில் மீண்டும் ஓர் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“சாதிப்பாகுபாடின்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கை முதன்முதலில் தந்தை பெரியாரால் எழுப்பப்பட்டு, அதன் தொடர்ச்சியாக திமுக அரசு, “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக்” கொண்டு வந்தது. மதுரை சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில் 1972 உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் (சேசம்மாள் தீர்ப்பு) இச்சட்டம் முடக்கப்பட்டது.” உச்ச நீதிமன்றம் நமது சாதி இழிவை பூதக்கண்ணாடி வைத்து பெருக்கிக் காட்டியிருக்கிறது” என்பது 1972 தீர்ப்பு குறித்த பெரியாரின் கருத்து.

“சேசம்மாள் தீர்ப்பு அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமை கோரமுடியாது என்று கூறிவிட்டதால், இத்தீர்ப்பின் அடிப்படையிலேயே தமிழக அரசு பார்ப்பனரல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க இயலும்” என்றவொரு மாற்றுக் கருத்தும் பேசப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின் வந்த எந்த அரசும் சேசம்மாள் தீர்ப்பின் அடிப்படையில் பார்ப்பனரல்லாதோரை நியமனம் செய்யவில்லை. மாறாக கடந்த 40 ஆண்டுகளில் பார்ப்பன அர்ச்சகர்களின் வாரிசுகள்தான் நூற்றுக்கணக்கில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
2006 ஆ-ம் ஆண்டில் திமுக அரசு ஒரு அரசாணை மூலம், ஆகமப்பயிற்சிப் பள்ளி தொடங்கி, அதில் பயின்ற தகுதி வாய்ந்த எல்லா சாதிகளையும் சேர்ந்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதாக அறிவித்தது. இந்த அரசாணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிய, மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்கள், பயிற்சி முடித்து சைவ, வைணவ தீட்சை பெற்ற 206 மாணவர்களை தெருவில் நிறுத்தினர். பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களை சங்கமாகத் திரட்டி, அவர்களை உச்சநீதிமன்ற வழக்கில் இணைத்து வாதாடினோம். 2015 -இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்தது.
“தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்கள் கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது” என்று தீண்டாமையை நியாயப்படுத்தியது இந்தத் தீர்ப்பு. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை என்பதையும் இத்தீர்ப்பு நிராகரித்துவிட்டது. “அரசியல் சட்ட சட்டப்பிரிவு 16 (5) இன் படி, குறிப்பிட்ட வகையறாவினர் பெற்றிருக்கும் மத உரிமையில், மற்றவர்கள் சம உரிமை கோர முடியாது” என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. தமிழக அரசு தீட்சை பெற்ற மாணவர்களில் ஒருவரை, ஒரு குறிப்பிட்ட கோயிலில் அர்ச்சகராக நியமனம் செய்யும் பட்சத்தில், அது “மரபுக்கு எதிரானது” என்று பார்ப்பன அர்ச்சகர்கள் கருதினால், அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.
மேற்கூறிய காரணங்களினால் இத்தீர்ப்பு 1972 தீர்ப்பைக் காட்டிலும் பிற்போக்கானது என்பது எமது மதிப்பீடு. இத்தீர்ப்பு அர்ச்சக மாணவர்களுக்கு சாதகமானது என்று விளக்கப்படுத்துவோரும் இருக்கிறார்கள்.
“அர்ச்சக மாணவர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது” என்று இத்தீர்ப்பு வெளிப்படையாகத் தடை விதிக்கவில்லை. “நியமனத்தில் மரபு மீறல் கூடாது” என்று கூறுகிறது. எனவே இத்தீர்ப்பை விளக்கப்படுத்துவதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், “206 மாணவர்களையும் பணி நியமனம் செய்” என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்து நாம் அனைவரும் போராடவேண்டும்.
அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக மீண்டும் அர்ச்சகர்கள் நீதிமன்றம் செல்வார்கள். “தமிழ் மக்களுக்கு சொந்தமான கோயில்களில் தமிழையும் தமிழனையும் தீண்டத்தகாவர்கள் என்று கூறும் சாதித்திமிர் பிடித்த இந்தக் கூட்டமும், அதற்குத் துணை நிற்கும் சட்டமும் நமது எதிரிகள்” என்று தமிழ்ச்சமூகத்தைத் தட்டி எழுப்பும் வண்ணம், நாமும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதற்கான போராட்டம், ஒரு சுயமரியாதைப் போராட்டம். பெரும்பான்மையான மக்கட் பிரிவினர் பிறப்பாலேயே இழிவானவர்கள் என்று கூறும் பார்ப்பனிய சநாதன தருமத்தை ஒழித்துக்கட்டி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று நிலைநாட்டுவதற்கான போராட்டம்.
கேரளத்தில் தந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள யதுகிருஷ்ணா என்ற தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு, பயிற்சியளித்த ஆசிரியரான அநிருத்தன் தந்திரி, “பண்பாடு, நடத்தை, உணவு ஆகிய அனைத்தின்படியும் இனிமேல் யதுகிருஷ்ணா ஒரு பிராமணன். பிறப்பால் யாரும் பிராமணன் ஆவதில்லை. தனது செயல்களாலும், அறிவினாலும்தான் ஒருவன் பிராமணன் ஆகிறான்” (Outlook, 7 oct, 2017) என்று கூறியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணா அர்ச்சகராகியிருக்கிறார் என்பதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம். “அவர் பிராமணன் ஆக்கப்பட்டிருக்கிறார்” என்பதுதான் இதன் பொருள் என்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும். இந்தக் கூற்று, யது கிருஷ்ணா போன்றவர்களின் பிறவி இழிவினை மறைமுகமாக ஒப்புக்கொள்வதே ஆகும்.
“பிறப்பால் யாரும் பிராமணன் ஆவதில்லை” என்ற சாமர்த்தியமான வாதம், சாதி ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துவதற்காக, காலம் காலமாக துக்ளக் சோ முதலானவர்கள் அவிழ்த்து விடுகின்ற புளுகுமூட்டையாகும். பிறப்பினால்தான் சாதி தீர்மானிக்கப்படுகிறது என்பதே உண்மை. தமது பிறப்பின் காரணமாகத்தான் 206 மாணவர்கள் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கிறார்களேயன்றி, கருமவினை காரணமாக அல்ல. மரபு என்ற பெயரில் இந்தப் பார்ப்பனிய அநீதியை உச்ச நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது. இதுதான் உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டுத்தான் பெரியார் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தினார்.

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு” என்ற கோரிக்கை, மற்ற அரசுப்பணிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை கேட்கும் கோரிக்கையைப் போன்றதல்ல. அரசியல் சட்டப்பிரிவுகள் 25, 26 ஆகியவையும், அவற்றுக்கு விளக்கமளிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், சாதி – தீண்டாமை முதல் பாலின ஒடுக்குமுறை வரையிலான பலவிதமான சமூக ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்துகின்றன என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதே இந்தக் கோரிக்கையின் முதன்மையான நோக்கம்.
கருவறைக்குள்ளே நுழைய முடியாமல் நிற்கிறார்கள் நமது மாணவர்கள். “கருவறை மட்டுமல்ல, கோயிலும் எங்களுக்குச் சொந்தம்” என்ற தங்களது அடுத்த கோரிக்கையை எழுப்பியிருக்கிறது சங்க பரிவாரம். “இந்து அறநிலையத்துறையையே அகற்ற வேண்டும்” என்ற சுப்பிரமணியசாமியின் மனு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அறநிலையத்துறையிடமிருந்து தமிழக கோயில்களை மீட்கும் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்யவும் தொடங்கியிருக்கிறது சங்க பரிவாரம்.
பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறிகொடுக்கும் நிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தையே தங்களுக்கு எழுதிக் கொடுக்கத் தயாராக இருக்கும் எட்டப்பர்கள் கையில் ஆட்சி இருப்பதால், காவிக் கும்பினி களிப்பில் மிதக்கிறது.
கதவைத் தட்டுகிறது காட்டு மிராண்டிக் கூட்டம். தமிழகமே, விழித்துக்கொள்!
கருத்தரங்கம்
02.12.2017
சனிக்கிழமை மாலை 5.00 மணி
இடம்:
தக்கர் பாபா வித்யாலயா சமிதி
வெங்கட நாராயணா சாலை
தி.நகர். சென்னை.
தலைமை:
வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள உரிமைப் பாதுகாப்பு மையம்
உரையாற்றுவோர்:
திரு. அரங்கநாதன், தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
திரு. சுருதிசாகர் யமுனன்
பத்திரிகையாளர், scroll.in, புது தில்லி
தோழர் மருதையன்
பொதுச் செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை – பேச : 90946 66320
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
அம்பலப்படுத்துவோம்: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் போதாமையை, மலட்டுத்தனத்தை , பிற்போக்கு தனத்தை அம்பலப்டுத்துவோம்.
இந்திய பிரிவு 16, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வேலைவாய்ப்பில் அமைவருக்கும் சம உரிமையை பற்றி பேசுகின்றது. அதில் உள்ள உட்பிரிவு 16(5) அந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராக குறிப்பிட்ட வகையறாவினர் (பார்பனர்கள்) பெற்றிருக்கும் மத உரிமையில், மற்றவர்கள் சம உரிமை கோர முடியாது என்று கூறுகின்றது என்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் யாருக்கானது ? என்ற கேள்வியை குறைந்தபட்ச மனசாட்சியும், இயற்க்கை நீதியினை விரும்புபவர்களும் பொதுவெளியில் எழுப்பவேண்டும்.
அதெல்லாம் இருக்கட்டும் உங்களை போன்ற ஆட்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே, கோவிலில் யார் மந்திரம் சொன்னால் உங்களுக்கு என்ன ?
போட்டோவை பார்த்தால் அர்ச்சகர்கள் போல் தெரியவில்லை உங்கள் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது
இதே கவலை எனக்கும் இருந்தது மணிகண்டன்,சில நண்பர்கள் தெளிவு படுத்தி விட்டனர்.
அதாகப்பட்டது, கல்லுக்கு மணி ஆட்டுவதா வேண்டாமா என்பதை நாங்க முடிவு செய்து கொள்கிறோம், நீங்க கெளம்புங்க காத்துவரட்டும் என்கிறார்கள், என்ன செய்ய?
எனக்கும் அதே கேள்விதான்
எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைதான் மணிகண்டன் சார்.ஆனால் முழு முதல் கடவுள் பற்றோடு தங்களை அர்ப்பணித்து பார்ப்பனர்களைப் போல் வேதமனைத்தும் கரைத்துக்குடித்ததுபோல் நடிக்காமல் அரசின் ஆகமப்பயிற்சிப் பள்ளியில் கற்றுத்தேர்ந்து சான்றிதழ் பெற்ற அர்ச்சகர்களை பணியமர்த்த மறுக்கும் சாதியத்தை பாதுகாக்கும் அயோக்கியத்தனத்தை கேள்விகேட்க கடவுள் நம்பிக்கை உள்ள நீங்கள்தான் முதலில் வரவேண்டும் மணி சார்.அது நடவாத போது நாங்கள்தானே வந்து உங்களின் சாதியபாதுகாப்பு சதியை முறியடிக்கவேண்டியுள்ளது?ஆகவே வருவோம். அடுத்து படத்தில் உள்ளவர்கள் காஞ்சிபுரம் “தேவநாதன்கள்”போல இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொடுமை மணி சார்!
என்னைப் பொறுத்தவரை எதற்கு இந்த அர்ச்சகர்கள் கூட்டம்? கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு ஏஜெண்ட் தேவையா என்ன? ஒருவன் தானே போய் நேராகக் கடவுளை வழிபட்டுத் தனது குறைகளையோ தேவைகளையோ சொல்லக்கூடாதா? அதற்கு ஒரு ஆள் மத்தியில் நின்று தண்ணீர் ஊற்றி அர்ச்சனை செய்து மணியாட்டி மந்திரமெல்லாம் சொல்லவேண்டுமா? கடவுளிடம் எனக்காக நானே முறையீடு செய்யக்கூடாது என்று சொல்லும் மதம் என்ன மதம்?