privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விமோடி ஆட்சியில் பறிபோகும் தொழிலாளர் உரிமை !

மோடி ஆட்சியில் பறிபோகும் தொழிலாளர் உரிமை !

-

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில், பெங்களூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தொழிற்புரட்சி ஏற்பட்டு ஐரோப்பா கண்டத்தில் ஆலைகள், சுரங்கங்கள், நெசவாலைகள் என எந்திரமயமாக்கப்பட்ட தொழில்கள் தொடங்கப்பட்டன.

இதன் காரணமாக சமூகம் முதலாளித்துவ வர்க்கம், உழைப்பாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்களாக பிரிக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் அதிக வேலை நேரம், குறைந்த கூலி என எந்தவித சலுகையுமில்லாத வாழ்க்கை வாழ்ந்தது. முதலாளித்துவ வர்க்கமோ, தொழிலாளிகளைச் சுரண்டி கொழுத்த இலாபத்தில் செழித்திருந்தது.

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, 1848-ம் ஆண்டு வெளிவந்த பின்னர் 1850 முதல் 1871 வரை உலகெங்கும் மிகப்பெரிய போராட்டங்களும் புரட்சிகளும், போர்கள் நடந்தன. இதில் 1851 சீனப்புரட்சி, தாய்ப்பின் விவசாயிகளின் எழுச்சி, 1857வது வருடம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1871 ஆம் ஆண்டு அல்ஜீரியாவின் எழுச்சி போராட்டம் ஆகியன குறிப்பிடத்தக்கவை.

இந்த காலகட்டத்தில் தான் பல தொழில்கள் தொடங்கப்பட்டு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டினர். ஆனால் தொழிலாளர்களோ தன்னுடைய பணி பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக போராடிக் கொண்டிருந்தனர். இந்த வகையிலே 1886 சிகாகோ வீதியிலே எட்டு மணி நேர வேலைக்காக 12,000 தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிகாகோ நகரில் மெக்கார்மிக்ஸ் என்ற தொழிற்சாலையில் 2,500 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, ஹேமார்க்கெட் ஸ்கொயர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு ஆல்பர்ட் ஸ்பைக், ஆல்பர்ட் பர்சன்ஸ், சாமுயல் பெல்ட்மேன் ஆகியோர் உரையாற்றுகையில் போலீஸ்காரர்களால் மூண்ட கலவரத்தில்  போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. 4 தொழிலாளர்கள் பலியானார்கள், 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 1887-ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டனர்.

இம்மாதிரியான தியாகத்தின் வாயிலாகத்தான் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு என்ற உரிமை கிடைத்தது. 1886-க்கு பிறகு 1905 முதல் 1917 வரை ரஷ்யாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1917 நவம்பரில் ஆலைகள், விவசாய நிலங்கள் என அனைத்தும் உழைப்பவருக்கே சொந்தம் என்று தோழர் லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது.

அந்த நவம்பர் புரட்சிக்குப்பின், ரஷ்யாவில் முதலாளித்துவம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. பண்ணை நிலங்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. படையாட்கள், சமாதானம் குறித்து பேசினார்கள். இது வரலாறு.

1917-க்கு பிறகு பல நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கம் கண்டு போராடினர். அதன் காரணமாக சிலி, கியூபா, அல்பேனியா என பல்வேறு நாடுகளில் இராணுவ சர்வாதிகாரிகள் ஒழிக்கப்பட்டு அங்கு குடியாட்சிகள் அமர்த்தப்பட்டன. அதே நேரத்தில் ஹங்கேரி, போலந்து, வியட்னாம், வட கொரியா போன்ற பல நாடுகளில் சோசியலிஸ்ட் அரசுகள் உருவாகின. இதன் காரணமாக 1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது.

அதன் விளைவாகத்தான் ஜான் மெனாட் கீன்ஸ் கோட்பாடு வந்தது. ரூஸ்வெல்ட் தலைமையில் முதலாளித்துவ நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்றவை தனது கோர முகத்தை மாற்றிக்கொண்டு, முதலாளித்துவ அரசுகள் அதன் மக்களுக்கு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, குடியிருப்பு என அனைத்து சலுகைகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தார்கள்.

அக்காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற காலனிய நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக 1926-ல் இந்தியாவில் தொழிற்சங்க சட்டம் வருகிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, போராடும் உரிமை என மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனுடைய மாபெரும் தியாகத்தினால் பாசிசம் வீழ்த்தப்பட்டது. உலகம் முழுவதும் சோசலிசத்தின் தாக்கம் உண்டாகிறது. இந்த பின்னணியில் தான் இந்தியாவில், 44 தொழிலாளர் சட்டங்கள் வருகின்றன. சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, குடியுரிமை, பணிப் பாதுகாப்பு, LTC, ESI, PF, தொழிற்தகராறு சட்டங்கள், தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர் துறை என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டன. அன்று தொழிலாளிக்கு, ESI, BASIC PAY, PF, பஞ்சப்படி, குடியிருப்பு என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் மத்திய அர்சின் தொழிற்சாலைகளிலும், தனியார் வங்கி, இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றிலும் கூட அனைத்து தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்கள். ஆனால், இந்த நிலைமை 1980 வரைதான் நீடித்தது.

1980-ல் சுமார் 20% தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள். 80% தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருந்தனர். இந்த நிலைமை 1990-ல் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் புகுத்தப்பட்ட பிறகு, 90% பாதுகாப்பற்ற தொழிலாளர்களாக மாறியது. தற்போது 97% தொழிலாளர்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.

1971-ல் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள் (CONTRACT REGULATION AND ABOLITION ACT) ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளியாக ஆக்கக்கூடிய சட்டம் அது. 1976-ல் மத்திய அரசின் அரசாணை ஒன்று வருகிறது. அந்த அரசாணையின் படி துப்புரவு, கேண்டீன், கார்டனிங், செக்கியூரிட்டி ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கூறியது அந்த அரசாணை.

இந்த சட்டத்தை முன்மாதிரியாக வைத்து நடந்த வழக்கில்தான் பல ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். 1997-ல் நடந்த ஏர் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால் அவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. சுமார் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாயினர்.

வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், 2002-ல் மந்திரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் துப்புரவு, கேண்டீன், கார்டனிங், டிரைவிங் முதலிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்க தேவையில்லை என்று தீர்மானம் போட்டார்கள். 2001-ல் செயில் (STEEL AUTHORITY OF INDIA) வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தகைய  நடவடிக்கையின் மூலம் இந்த நாட்டின் 100 கோடி கைகளும், கால்களும் இலவசம் என்று அறிவித்து விட்டார்கள். ஆகையால் தான் மோடி நாடு நாடாகச் சென்று எங்கள் நாட்டில் உள்ளதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூவி கூவி அழைக்கிறார். வந்தால் அவர்களுக்கு இந்த கைகளும் கால்களும் இலவசம், உறவுகள் குடும்பம் ஏதுமற்ற ஒரு எந்திரத்தைப்போல இவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாருதி தொழிற்சாலையில் 80% ஒப்பந்த தொழிலாளர்கள். ஹுண்டாய் கம்பெனியில் 82% ஒப்பந்த தொழிலாளர்கள். அரசு அலுவலகங்களிலும் பெரும்பான்மை ஒப்பந்தத் தொழிலாளர்கள்.  ஒப்பந்த தொழிலாளிக்கு ஊதியம் ரூ.7000 அல்லது ரூ.8000-ம் தான்.

மத்திய அரசும், மாநில அரசும், நீதிமன்றங்களும், தொழிலாளர் துறையும், காவல்துறையும் தொழிலாளர்களை கைகழுவி விட்டார்கள். நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர்களை நியமிப்பதில் HIRE AND FIRE (நினைத்தால் பணியில் அமர்த்து துறத்து) விதிமுறையையே கையாள்கின்றன.

பெங்களூரில் துப்பரவு தொழிலாளர்கள் துடைப்பம் கேட்டார்கள் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் செருப்பு கேட்டார்கள் என்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். சங்கம் வைத்தால், சங்கத்தில் பெயர் பதிவிட்டுள்ள அனைவரும் வீட்டிற்கு போகவேண்டியதுதான்.

இந்த மாதிரியான நிலைமையில்தான், இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் 3 கோடியே 22 லட்சம் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 4 கோடி தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும், பாதுகாப்பற்ற தொழிலாளர்களாகவும், குறைந்த பட்ச ஊதியம் இல்லாத தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

ஜெர்மனியில் குறைந்த பட்சக் கூலி ஒரு மணி நேரத்திற்கு 32 டாலர். அதேபோல், ஜப்பானில்  24 டாலர்,  அமெரிக்காவில் 17 டாலர், தைவானில் 8 டாலர், சீனாவில் 3 டாலர். உலகத்திலேயே குறைந்த கூலி இந்தியாவில்தான். இந்தியாவிலேயே குறைந்த கூலி மோடியின் குஜராத். இந்தியாவில் வெல்டர், டர்னர், ஃபிட்டர், டிரைவர், எலக்ட்ரிசியன், பிளம்பர், குக், கார்டனர், வீட்டு வேலை செய்வோர் ஆகியோருக்கு ஒரு மணி நேரத்துக்கான கூலி ஒரு டாலரில் கால் பங்கு கூட இல்லை.

மாதம் 8000 ரூபாய்க்குள் ஒரு தொழிலாளி அவருடைய குடும்பம், வீட்டு வாடகை, உடுத்த துணி, குழந்தைகளுக்கான கல்வி, நல்லது கெட்டது, நோய் வாய்ப்பட்டால் மருத்துவமனை என அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும். இவையெல்லாம் வெறும் ரூ.8000-த்தில் சாத்தியமாகாது என்று ஒரு சாதாரண தொழிலாளிக்கு கூட தெரியும். ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், எடப்பாடி, சித்தாராமையா, மோடி நிர்ணயித்த கூலி வெறும் 8000 ரூபாய்.

அப்படியென்றால், இந்த நூறு கோடி கைகள், நூறு கோடி கால்கள் நியாயம் கேட்டு எங்கே போவார்கள்? எங்கு போவது? யாரை கேட்பது? இந்த தொழிலாளர்கள் சட்டசபையிலே சென்று முறையிட்டால் நடக்குமா?. 70 ஆண்டு கால வரலாறு சட்டசபையிலே எதுவும் நடக்காது.

பாராளுமன்றத்தில் தொழிலாளியின் நலனை ஒட்டி பேசுவதற்கு ஒரு எம்.பி கூட கிடையாது. பிறகு நீதிமன்றத்திற்கு போகலாம். அங்கு சென்றால் உச்ச நீதிமன்றம் நீதி தரமுடியாது என்கிறது. அதுதான் கடந்த 2001-ம் ஆண்டில் செயில் (STEEL AUTHOURITY OF INDIA) வழக்கில் நடந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு உமாபாரதி வழக்கு, 2012-ம் ஆண்டு வர்த்தக வழக்கு, ஆகியவற்றில் உச்ச நீதிமன்றம் அவர்களை நிரந்தரத் தொழிலாளியாக்க முடியாது என்றது. இப்படி எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தனது 50 கோடி தொழிலாளர்களைக் கைகழுவி விட்டது. இனி தொழிலாளி போவதற்கு எந்த இடமுண்டு? போலீசு நிலையம், தொழிலாளர் துறை போன்ற மற்ற துறைகளுக்கு போகலாம், ஆனால் சங்கம் வைத்து போராடினால் போலீசோ லத்தியை தூக்கிகொண்டு வருகிறார்கள். நிறுவன முதலாளி காலை நக்கி பிழைக்கிறது போலீசு.

மாருதியில் என்ன நடந்தது? திரும்பக்கூட முடியாத அளவு பிழிந்தெடுக்கப்படும் வேலைப் பளு; தேநீர் இடைவேளை 15நிமிடம் தான்; கேண்டீன் வரை சென்று வரவே 10 நிமிடங்கள் கடந்துவிடும்; டீ குடிக்கவும், சிறுநீர் கழிக்கவும் 5 நிமிடம், தேநீர் கப்புடன் சிறுநீர் கழிக்கும் பல தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஊதியமோ, ரூ.7000-ம்தான்.

இவ்வளவு நெருக்கடியிலும் அவர்கள் கேட்ட ஊதிய உயர்வை சகித்துக்கொள்ள முடியாமல் குண்டர்களை ஏவி விட்டது மாருதி நிறுவனம். அந்த குண்டர்களுக்கு ஆதரவாக காவல் துறையும், பாரா மிலிட்டரி படைகளும் வந்தன. தொழிலாளிகளை அடித்து துவைத்தார்கள். குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்திற்காக 500 தொழிலாளிகள் மீது வழக்கு, 110 தொழிலாளிகள் நிரந்தரமாக 3 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர்.

டெல்லி நீதிமன்றம், இவர்களுக்கு பிணை வழங்கினால் ஜப்பான் மூலதனம் வராது என்று கூறி பிணை வழங்க மறுத்தது. உச்ச நீதிமன்றமும் அதையே கூறியது. ஆகவே தொழிலாளர்களுக்கு நீதிமன்றங்களில் தீர்வு இல்லை.

மூடியின் தரப்பட்டியலில் இந்தியா முன்னேறிய பெருமை மோடியைச் சேரும் என பாஜக பெருமை பீற்றுகிறது. ஆனால் அர்ஜீன் சென்குப்தா கமிட்டி, 77% இந்தியர்கள் அதாவது 84 கோடி இந்தியர்கள் தினமும் 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்து வாழ்கிறார்கள் எனக் கூறுகிறது. இந்தப் பெருமையும் மோடியையே சேரும்.

1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கிய போது ஜெர்மானிய முதலாளிகள் ஹிட்லரை தேர்ந்தெடுத்தார்கள். தொழிலாளர்கள் போராடினால் அவர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் என்பதால்தான் தேர்ந்தெடுத்தார்கள். அதுபோல், இந்திய பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய முதலாளிகள், மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர். அன்றைய ஹிட்லரின் 2014 முகம்தான் மோடி. ஹிட்லர் வீழ்த்தப்பட்டார், மோடியும் வீழ்த்தப்படுவார்.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 44 சட்டங்கள், கூலி பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, PF, 8,10,12 – Components of Wages, இதற்கான சட்டங்கள் அனைத்தையும் மூடிவிட்டு இன்று 4 தொழிலாளர் விதிகளை (Labour code) கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் தொழிலாளர் துறையில், தனக்கு வேண்டியவர்களை, ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் முதலாளிகளை அமரச் செய்யப் போகின்றனர்.

இவர்கள்தான் தொழிலாளர்களுக்காக பேசப்போகிறார்கள். செங்கொடி வைத்துக்கொண்டோ இல்லை பிற சங்கங்களோ போய் நின்று இனி பேசமுடியாது. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, அநேகமாக மோடி அடுத்த முறை வெற்றி பெற்றால் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் எல்லாம் ஊத்தி மூடப்பட்டு, இந்த சட்டம் நிறைவேற்றப்படலாம். இன்றைய தொழிலாளர்களின் நிலைமையாக 18,19ஆம் நூற்றாண்டிலே இருந்த அதே நிலைமைதான் நீடிக்கிறது.

ரவுன்டவுண் பாதிரி என்ற முதலாளி எழுதுகிறான், ”தொழிலாளிக்கு வயிறு நிறைய உணவளிக்கக்கூடாது” என்று, ”நாளைக்கு என்ன நிலைமை என்ற பயத்திலே அவர்கள் இருக்கவேண்டும்” என்கிறான் அவன். இது 18, 19-ஆம் நூற்றாண்டின் நிலைமை.

இன்று உலகம் முழுவதிலும் இந்த நிலைமைகள் மாற்றப்பட்டுவிட்டன, ஜெர்மன், அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டில் தொழில் தொடங்குவதில்லை. குறைவான கூலிக்காக இந்தியா போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

ரஷ்ய தொழிலாளி, முதலாளி வர்க்கத்தை தூக்கியெறிந்த பின்புதான் சுரண்டலிலிருந்து விடுபட்டான். இந்திய தொழிலாளிக்கு சுரண்டலில் இருந்து விடுபட வேறு எதாவது வழி உண்டா என்றால் கிடையாது. 50 கோடி தொழிலாளர்களும் ஒன்று திரண்டு இந்த முதலாளித்துவ அரசுக்கு எதிராக குரல் கொடுத்தால் தான் இதிலிருந்து விடுதலை பெற முடியும்.

இந்த முதலாளித்துவ அமைப்பு முறை, அரசு எந்திரம், அதிகார வர்க்கம் அனைத்தும் முடங்கி போய்விட்டது, செயலிழந்து போய்விட்டது, இந்த அமைப்பிலே தொழிலாளர்களுக்கான விடுதலை கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாண்டுகால மோடியரசின் ஆட்சியில் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய எந்த உரிமையும் பெறப்படவில்லை. மக்கள் நல அரசு என்ற தகுதியை மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் என அனைத்தும் இழந்துவிட்டன. இவர்கள் யாரும் தொழிலாளியின் பக்கமில்லை.

ஆகவே தீர்வு என்னவெனில், ரஷ்யப்புரட்சி போன்றதொரு புரட்சியே! சிகாகோ தொழிலாளர்களின் வழிதான் நமது வழி! சங்கமாக திரள்! போராடு! வெற்றி பெறு!

”உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர, ஆனால் அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மார்க்ஸ்.

முதலாளித்துவவாதிகள் இந்த அமைப்புக்கு மாற்று என்ற ஒன்று இல்லை என்கிறார்கள். நாம் கூறுகிறோம் “சோசலிசமே மாற்று, அதுவே மக்களுக்கானது” என்று !

தொழிலாளர்கள் போராட்டங்களினால் மட்டுமே வெற்றி பெற முடியும்! சோசலிசமே வெல்லும், கம்யூனிசமே வெல்லும்!

 


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க