Friday, March 31, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஹதியா - ஜி.எஸ்.டி. - தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?

ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?

-

“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா” – என்ற வசனம் இப்போது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, பத்திரிகையாளர் மாலனுக்குப் பொருந்தும். பொதுவாக ஊடக விவாதங்களில் மென்மையான குரலில் பா.ஜ.க.வுக்கு முட்டுக்கொடுக்கும் கலையை கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்ததில், ஒரு தொழில்முறை தேர்ச்சியை பெற்றுவிட்டார் மாலன்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது எந்த டி.வி.க்கு பேச போனாலும், தருமபுரி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த ஊர் முழுக்க, முழுக்க டிஜிட்டல் மயமாகிவிட்டது. பணமில்லா பரிவர்த்தனைக்குப் பழகிவிட்டது என்று மீண்டும், மீண்டும் உருப்போட்டுக் கொண்டிருந்தார்.

ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் போராட்டங்கள், இறைச்சிக்கு மாடு விற்கத் தடை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., அனிதா தற்கொலை என சப்ஜெக்ட் எதுவானாலும் இண்டு, இடுக்குகளில் புகுந்து பா.ஜ.க.வையோ, அவர்களின் பினாமியான எடப்பாடி ஆட்சியையோ ஆதரிப்பதில் மாலன் ஒரு துறைசார்ந்த வல்லுனராக காட்சி தருவார்.

ஆனால், ரொம்ப நேரம் ஒத்த காலில் நின்றதால் கால் வலித்ததோ என்னவோ, இப்போதெல்லாம் நேரடியாக உடைத்துப் பேசத் தொடங்கிவிடுகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு மாலன் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

எதிர்வினை

நாத்திகம் பேசினீர்கள்
பக்தி செழித்தது
ஜாதியை ஒழிக்கப் புறப்பட்டீர்கள்
சங்கங்கள் வலுத்தன
தமிழ் முழங்கினீர்கள்
ஆங்கிலம் மழலையர் மொழியாச்சு
கணினிமயத்தை எதிர்த்தீர்கள்
கைகள் தோறும் ஒரு கணினி
மார்க்சீயம் பேசினீர்கள்
தரணி எங்கும் தாராளமயம்

தேசபக்தியை இகழ்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது

இதில், நாத்திகம், சாதி ஒழிப்பு, தமிழ்ப் பற்று, மார்க்சியம், தேசவிரோதம்… – இதையெல்லாம் ஒரு பக்கம் நிறுத்துகிறார் மாலன். இவை அவருக்குப் பிடிக்காத அயிட்டங்கள். அவர் எதிர் வரிசையில் நிறுத்துகிற ஆத்திகம், சாதிப்பற்று, தமிழ் வெறுப்பு, தாராளமயம், தேசபக்தி… இவை எல்லாம் அவருக்குப் பிடித்த அயிட்டங்கள். பிடித்தவை நாட்டில் வளர்கின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

அதற்கான ‘உரிமை’ அவருக்கு உள்ளது. ஆனால் பிடித்தவை வளர்வதற்குக் காரணமே பிடிக்காதவைதான் என்கிறார். எனினும், இந்த கண்டுபிடிப்புக்கு மாலன் காப்புரிமை கோர முடியாது. ஏனென்றால் நாட்டில் இந்துத்துவ சக்திகள் இத்தனை பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு என்ன என்ற தலைப்பில் தமிழ் இந்துவில் பத்திரிகையாளர் சமஸ் இதே டைப் ஆராய்ச்சியை ஏற்கெனவே செய்துவிட்டார். அந்த வகையில் மாலன் வண்டியில் ஏறியது கொஞ்சம் லேட்டுதான்.

எனினும் இவர்கள் சொல்ல வருவது என்ன? ‘முற்போக்கு சக்திகள் தீவிரமாக செயல்படாததன் விளைவுதான் மதவாதம் இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது. உங்கள் செயலற்ற தன்மைதான் அவர்கள் வளர்வதற்குக் காரணம். அதாவது அவர்கள் வளர்ந்திருப்பதற்கு நீங்கள்தான் காரணம்’

மதவாதம் வளரவும், தமிழ்ப்பற்று மங்கவும், சாதியவாதம் தலைதூக்கவும் யார் காரணம் என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் யார் தரப்பில் இருந்து இந்த சிக்கலை அணுகுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ‘எல்லாம் உங்க நன்மைக்குதான் சார் சொல்றோம்’ என்று நைச்சியமாகப் பேசும் இவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியாதா?

தமிழ் அழிகிறது என்றால் அதற்குக் காரணம், ஆங்கில வழிக்கல்வி திணிக்கப்படுகிறது; அரசுப் பள்ளிகளில் தரமான தமிழ் வழிக்கல்வி வழங்கப்படவில்லை. முற்றுமுதலாக அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வியை வழங்கும் தனியார்ப் பள்ளிகள் எங்கும் நிறைந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை ஓர் இயல்புபோல மாற்றப்பட்டு மக்கள் மனங்கள் ஆங்கில வழிக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மாலன் இதை எல்லாம் ஏற்கவில்லை. ‘இங்கிலீஸ் வளர்ந்ததுக்கு காரணம் நீங்க தமிழ் வாழ்கனு சொன்னதுதான்’ என்கிறார்.

இப்படியே, பக்தி வளர்ந்ததுக்கு நாத்திகம் பேசினதுதான் காரணம். சாதி சங்கம் வளர்ந்ததுக்கு சாதி ஒழிகன்னு சொன்னதுதான் காரணம்… என்று முதுகுப்பக்கத்தில் இருந்து முணகுகிறார். இது பின்நவீனத்துவ அறிஞர்களே செய்திடாத கட்டுடைப்பு. நாத்திகம் பேசினால் பக்தி எப்படி சார் செழிக்கும்? ‘ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் புள்ளைப் பொறக்குமா? அய்யப்பன் பிறப்பு அறிவுக்கு எட்டுமா?’ன்னு திராவிடர் கழகம் கேட்டால், அதுக்குப் பதில் சொல்லுங்கள். ‘இன்னமும் எங்க ஊர்லயெல்லாம் ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும்தான் புள்ளைப் பொறக்குது’ என ஆதாரத்தைக் காட்டுங்கள். அதை விட்டுவிட்டு, இதெல்லாம் ஒரு பேச்சா?

டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் பக்தி என்னதான் டிஜிட்டல் வேடம் போட்டாலும், இராம. நாராயணன் வகை பக்திப் படங்களை இப்போது யாரும் எடுப்பதில்லை. பக்தி மணம் கமழும் பண்டிகை நாட்களில் கூட பட்டையைக் கிளப்பும் குத்துப் பாடல்களோ, படங்கள்தான் டிவி சானல்களின் டிஆர்பியை கூட்டுகிறது. இதுதான் திருவாளர் மாலன் வியந்தோதும் பக்தியின் உண்மை நிலை.

டீயை விட டீ கிளாஸ் சூடாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. உள்ளே இருக்கும் டீயின் சூட்டை டம்ளர் தனதாக்கிக்கொள்கிறது. மாலனும் அவ்வாறுதான். அவர் பா.ஜ.க.வுக்கோ, ஆளும் அ.தி.மு.க.வின் பா.ஜ.க. பிரிவுக்கோ ஓர் இன்னல் என்றால் உள்ளம் குமுறி மனதார பாதிக்கப்படுகிறார். அந்த வகையில் கேரளப் பெண் ஹதியா திருமண சிக்கலில் இப்போது மாலன் அதிரடி ஸ்டேட்மெண்ட் ஒன்றை எழுதியிருக்கிறார். அதையே ஊடக விவாதங்களிலும் பேசி வருகிறார்.

ஹதியா ஒரு 24 வயது பெண். அவருக்கு மதம் மாறும் உரிமையும், விரும்பிய துணையை தேர்வு செய்துகொள்ளும் உரிமையும் உண்டு. அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்தில் ஆஜராகி தான் விரும்பியே மதம் மாறினேன் என சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது இதில் கோர்ட் தலையிட்டு எப்படி திருமணத்தை ரத்து செய்ய முடியும்? எந்த சட்டப் புத்தகத்தின் உதவியுடன் இதை லவ் ஜிகாத் என நீதிமன்றம் அறிவிக்கிறது?

ஹதியாவின் கணவர் ஷபின் ஜஹான் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கு ஒரு சின்னஞ்சிறிய ஆதாரத்தைக் கூட இதுவரை காட்ட முடியவில்லை. அவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இருக்கிறார் என்பது எப்படி தீவிரவாத செயலாக இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரானவுடனேயே ஒரு ஆட்கொணர்வு மனு அதன் நோக்கத்தை பூர்த்தி செய்கிறது. ஆனால் இதில் நீதிமன்றம் வரம்பு மீறி தலையிட்டு ஷபின் ஜஹானின் ஃபேஸ்புக் பக்கத்தை எல்லாம் ஆராய்ச்சி செய்கிறது. இதை எல்லாம் கண்டுகொள்ளவே செய்யாத மாலன், ‘ஷபின் ஜஹான் சார்பாக கபில்சிபல் உள்ளிட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அவருக்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு பணம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?’ என்று கேட்கிறார்.

இந்த ஆபாசமான வாதத்தைதான் நீட் அனிதா விஷயத்திலும் கேட்டார்கள். மாலன் போன்றோர் தங்களைப் போன்றுதான் ஒட்டுமொத்த உலமும் குறுகலாக சிந்திக்கிறது என எண்ணிக் கொள்கின்றனர். ஜனநாயகம் மடிந்துவிடக்கூடாது என்று எண்ணுவோர் இன்னும் மிச்சமிருக்கின்றனர். ஹதியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகள் வக்கீல் ஃபீஸ் கொடுத்தால் இவருக்கு என்ன பிரச்னை? ஷபின் ஜஹான் சார்ந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி செலவு செய்து வக்கீல் அமர்த்தினால் மாலனுக்கு என்ன சிக்கல்?

‘கேபியஸ் கார்பஸ் மனு விசாரணையில் இருக்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு நீதிமன்றம்தான் கார்டியனாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஹதியா எப்படி நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் திருமணம் செய்துகொள்ளலாம்?’ எனக் கேட்கிறார் மாலன். நீதிமன்றத்துக்கு தகவல்தான் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டியது இல்லை. அப்படியே தகவல் சொல்லவில்லை என்றாலும், ‘எனக்கு ஒரு வார்த்தை சொல்லாம இப்படி பண்ணிட்டீங்களே’ என ஒரு பெரிய மனித தோரணையில் நீதிமன்றம் வருந்தலாம். ஆனால், கண்டிப்பதற்குக் கூட அதிகாரம் இல்லை. ஆனால் நீதிமன்றமோ திருமணத்தையே ரத்து செய்து, அதற்கு பயங்கரவாத உள்நோக்கம் கற்பிக்கிறது.

பார்ப்பனியத்தை விட்டுக்கொடுக்காமல் முற்போக்கு உடையையும் தரித்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு வயதாக, வயதாக அதுவரை தங்களின் இயல்பு குணத்துக்குப் பொருந்தாத; ஆனால் இறுக்கப் பிடித்துக்கொண்டு இழுத்து வந்த சில முற்போக்கு அம்சங்களையும் வலி தாங்காமல் கீழே போட்டுவிடுகின்றனர். மாலனும் இதற்கு விதிவிலக்கல்ல.

மாலனின் முகநூல் பக்கத்துக்குச் சென்றால் பல அம்சங்களுக்கும் பொங்கியிருக்கிறார். ஜி.எஸ்.டி.யால் நாடு சுபிட்சம் அடைந்துவிட்டது என எங்காவது யாராவது எழுதியிருந்தால் அங்கு பிரசன்னமாகிவிடுகிறார். அந்த இணைப்புகளை பகிர்ந்து, ‘நாடு எப்படி வளர்ந்துள்ளது. முதலீடுகள் எப்படி குவிகின்றன என்று பாருங்கள்’ என்று பெருமிதம் அடைகிறார். அவர் அப்படியே கிளம்பி திருப்பூருக்கு சென்று வர வேண்டும்.

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால், அந்த தொழில் நகரம் எப்படி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது என்பதை, திருப்பூரின் தொழிலாளர்கள் அல்ல… முதலாளிகளே சொல்வார்கள். திருப்பூர் என்ற ஒரு நகரம் உருவானதில் இருந்து இப்படி ஒரு வீழ்ச்சியை கண்டதில்லை என்று அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். திருப்பூர் மட்டுமல்ல… எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அடிமேல் அடி. சிறு வியாபாரிகள் முதுகொடிந்து கிடக்கின்றனர். ஆனால், மாலன் கண்களுக்கு மட்டும் வளர்ச்சி தெரிவது எப்படி?

அது காமாலை கண் அல்ல. அதிகாரத்தின் தாழ்வாரத்தை அண்டிப் பிழைக்கும் கண்கள். இவர்கள் பிரச்னைகளை மக்களின் கோணத்தில் இருந்து பார்க்க மாட்டார்கள். வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. அது இவர்களுக்கு இயல்பிலேயே வருவதில்லை. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இயற்கைக் கூட்டணியாக இருப்பதைப் போல, மாலன்கள் அதிகார வர்க்கத்துடனான இயற்கை கூட்டணியில் ஆயுட்கால உறுப்பினர்கள்.

கீரன்


 

 1. Allah is merciful. Why Allah will have a problem with name as ‘Akila’ . Why she has to become ‘Hadiya’

  In Islamic country if ‘Hadiya’ becomes ‘ Akila’ what will be the punishment ?

  Such a pseudo secular article.

 2. ரெங்கா.

  அல்லாவுக்கு ஒன்னும் பிரிச்சினி இல்லை.

  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு தான் பிரிச்சினினு நினைக்கிறன். இந்தியா ஒரு இந்து தேசம் னு சொல்லிட்டங்கனு வெச்சுடுங்க….அப்புறம் இந்த சோ கால்ட செக்யூலரிஸ்ட பத்தி நமக்கு கவலையே இல்லை. அப்புறம் சட்டத்தின் படி எல்லாரும் கோமாதா தான் கோமகன் தான்….

 3. திருநெல்வேலி நகரி ஜெயேந்திர வித்யாலயா பள்ளியின் முதலாளி மாலன் எனும் நாராயணன் இந்துத்துவா சேவை செய்வது இயல்புதானே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க