privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்

கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்

-

குமரி மாவட்ட மீனவர்களின் உண்மை நிலை! விவரிக்க முடியாத கொடுந்துயரம்!

க்கி புயலால் குமரி மாவட்டம் முழுவதுமாக காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையாக வெறும் 62 பேரை மட்டும் கணக்கு காட்டியது தமிழக அரசு! உண்மையை அறிய மக்கள் அதிகாரம் சார்பாக கள ஆய்வுக்கு சென்றோம்.

தூத்தூரை சுற்றியுள்ள எட்டு கிராமங்கள்தான் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு பேர் போனவை. நாங்கள் மிடாலம் முதல் நீரோடித்துறை வரை உள்ள பல கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டோம். தமிழக எல்லை முடியும் இடத்திலுள்ள நீரோடித்துறையில் மட்டும் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். 55 பேரை காணவில்லை. அடுத்துள்ள மார்த்தாண்டன் துறையிலோ 3 பேர் இறந்துவிட 83 பேரை காணாமல் தவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு ஊரிலும் கணக்கெடுத்தால் இறப்பும், காணாமல் போனதும் நம்மை கலங்கடிக்கிறது. ஆனால் அரசோ 62 தான் என்கிறது.

அரசு என்ன செய்தது?

29.11.2017 இரவு 11:00 மணிஅளவில் இந்தியப் பெருங்கடலில் புயல் தொடங்கி விட்டது. மாலை 7:00 மணி அளவில் புயல் வருவதாக மீன்வளத் துறையிலிருந்து கோவிலுக்கு தகவல் தந்தது. பாதர் மூலம் ஊருக்கு அறிவிக்கப்பட்டது.

இப்படித்தான் சொல்வார்கள், ஆனால் வராது என்று பழைய அனுபத்திலிருந்து முடிவுக்கு வந்த சிலர் அதிகாலை 3.00 மணி அளவில் ஃபைபர் படகுடன் கடலில் இறங்கினர். உள்ளே காற்றின் வேகம் கடுமையாக இருப்பதை உணர்ந்து கரைக்கு திரும்பி விட்டனர். இது வள்ளவிளையில் நடந்தது. அதிகாலை 4.00 மணி அளவில் திரும்பி வந்த ஃபைபரைப் பார்த்து அடுத்து யாரும் கடலுக்கு செல்லவில்லை.

அரசின் அறிவிப்பால் 29.11.2017 இரவில் கடலுக்குள் செல்ல இருந்தவர்கள் தடுக்கப்பட்டனர். ஆனால் 20, 15,7 நாட்களுக்கு முன்னரே ஆழ்கடலுக்கு சென்றுவிட்ட விசைப்படகுகளுக்கு புயல் பற்றி எந்த தகவலும் சேரவில்லை. இப்படகுகள் 70 முதல் 1,000 நாட்டிகல் மைல் வரை ( 2,500 கி.மீ. வரை) கடலுக்குள் சென்று விட்டிருந்தன. இவைதான் புயலின் கோரத்தாண்டவத்தில் சிதறடிக்கப்பட்டு மூழ்கியவை.

ஒருவேளை முன்தினம் இரவு தரப்பட்ட தகவல் இவர்களை எட்டினாலும் பலன் இல்லை. ஒருமணி நேரத்திற்கு 8 நாட்டிகல் மைல் வரைதான் கடக்க முடியும். அதுவும் காற்றின் வேகம் கூடிவிட்டால் 2  நாட்டிகல் மைலை கடப்பதே சவாலாக இருக்கும். அதுவும் காற்று வீசும் திசையிலே சென்றால்தான் அலைகளை சமாளித்து மீள முடியும். வந்த புயலோ 160 முதல் 200 கி.மீ. வேகம் வரை சுழன்று அடித்துள்ளது. ஆனால் முன்தினம் இப்புயல் எத்திசை நோக்கி செல்கிறது, படகுகள்  எத்திசை நோக்கி நகர்ந்தால் பாதுகாப்பு என்று நவீன தொழில்நுட்பத்தால் தகவல் சென்றிருந்தால் இவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

மீட்புப்பணி நடந்ததா?

தொலைந்தது ஓர் இடம் தேடுவது ஓர் இடம். கடலோர காவல்படை, கடற்படை, வனத்துறை, சுங்கத்துறை எல்லாம் சேர்ந்து களம் இறங்கினார்களாம். 60 நாட்டிகல் மைல் தொலைவிற்குள்ளாகத்தான் தேடுதல் நடந்தது; நடக்கிறது.

GPS, ECCO SOUNDER மூலம் கடலில் எந்த இடத்தில் தேட வேண்டும் என்பதை துல்லியமாக குறித்துத்தந்து கடலோர காவல்படை, கடற்படை, மீன்வளத்துறையிடம் மன்றாடியுள்ளனர் குமரி மீனவ மக்கள். ஆனாலும் அந்த தொலைவுக்கு எப்படையும் செல்லவில்லை.
நடுக்கடலில் தத்தளித்தவர்கள் அவ்வழியே வந்த சரக்கு கப்பல்கள், மூழ்காமல் தப்பிய விசைப்படகுகள் மூலமும், 3 நாட்கள் நீந்தியும் கரைசேர்ந்தனர். இவர்கள் மூலம்தான் புயலின் தீவிரம் இப்பகுதி மக்களுக்கு புரிந்தது. கவிழ்ந்த படகினை பிடித்து மிதக்கும்போது அதில் ஒட்டியுள்ள சிப்பிகளால் உடல்முழுவதும் வெட்டுக்காயம் பட்டனர். இவர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் எப்படி துரோகம் செய்கின்றனர்?

பெரோன் மையம் என்ற பாதிரியார் தங்குமிடத்தில் வைத்து பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இங்கு மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவாக வந்தார். இவர் மக்களை பார்க்கவில்லை. ஞாயிறு காலை 11 மணி அளவில் கொல்லங்கோடு கன்னநாகம் ஜங்சனில் சாலைமறியல் நடந்தது. துணை ஆட்சியர் வந்து சமாளித்தார். மாலையே நிர்மலா சீதாராமன் வந்தார். ஸ்டாலின், வைகோவும் வந்தனர். இதனால் எந்த தீர்வும் வரவில்லை. நிவாரண உதவி கூட கிடைக்கவில்லை. அடுத்த நாள் IG வந்தார். ககன்தீப் சிங் பேடியும் வந்தார். உருப்படியாக யாரையும் மீட்கவில்லை.

இன்றுவரை கடலுக்கும் போகத்தடை; நிவாரண தொகையும் கிடைக்காது உள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக, குமரிமாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று (07.12.2017) போராட்டத் துவங்கியுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் கையாலாகத்தனத்தை கண்டித்து முழக்கமிட்டவாறு, பல்லாயிரம் மீனவர்கள் அணிதிரண்டு பேரணியாக போராட்டகளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

பேரணியில் மீனவமக்கள் எழுப்பும் முழக்கங்கள் :

 • மத்திய அரசே ! மாநில அரசே !
  அரசியல்வாதிகளே ! அதிகாரிகளே !
  உங்கள் வீட்டில் எழவு விழுந்தால்
  இப்படித்தான் இருப்பீர்களா…?
  சொரனை கெட்டு இருப்பீர்களா…?
 • எம்.ஜி.ஆர். விழாவுக்கு 200 கோடி…
  அம்பானிக்கு 1000 கோடி….
  மீனவன் என்றால் இளக்காரமா…?
 • ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவனை காத்து நின்றது
  யாரடா… யாரடா…
  மீனவர்கள் நாங்களடா…

மீனவர்களின் கோரிக்கைகள் :

 • தேசியப் பேரிடராக ஒக்கி புயலை அறிவிக்க வேண்டும் !
 • ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு வழங்குவதைப் போன்ற நிவாரணங்களை வழங்க வேண்டும் !
 • இந்திய கடற்படை தளங்களில் இருந்து கப்பல்கள் மற்றும் ஹெலிக்காப்டர்கள் மூலம் தேடுதல் நடத்த உத்தரவிட வேண்டும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.

***

கரை சேராத மீனவர்கள், கரை ஒதுங்கும் பிணங்கள் : கொன்றது ஒக்கி புயலா? கேடுகெட்ட இந்த அரசுக் கட்டமைப்பா?

புயலோ, மழைவெள்ளமோ கேடுகெட்ட அரசை நம்பாதே! மக்கள் அதிகாரத்தைக் கையில் எடு!

பெரியோர்களே! தாய்மார்களே!

2000 -க்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பவில்லை. கரை திரும்பிய மீனவர்கள் தங்களது சொந்த முயற்சியில் திரும்பியதாக கூறுகின்றனர்; கடற்பரப்பெங்கும் பிணங்கள் மிதப்பதாக கதறுகின்றனர். கடலோரக் காவல்படை, கடற்படை, பேரிடர் மீட்புப்படை என அரசின் எந்த அமைப்புகளும் மீனவர்களைக் காப்பாற்ற வரவில்லையே, ஏன் எனக் கேட்கின்றனர் மீனவர்கள்!

மழைக்காக விடுமுறை என்று அறிவித்தது மாவட்ட நிர்வாகம், புயல் என்று அறிவித்திருந்தால் கூட நாங்கள் பாதுகாப்பாக இருந்திருப்போம் என்கின்றனர் மீனவர்கள்!

மாதிரிப் படம்

அரசின் இந்த நடவடிக்கைகளை வெறும் அலட்சியம் என்று கருத முடியுமா?

ஒக்கி புயலால் தமிழகமே கதறிக்கொண்டிருக்கிறது, மீனவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்… இதைப்பற்றி சிறிதும் கவலை இன்றி எம்.ஜி.ஆர் விழா நடத்துவதன் பொருள் என்ன? புயல்வருவதைப் பற்றி அரசு நன்கு அறிந்திருந்தது. பேரிடர்மீட்புக் குழுக்கள் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் வரியில் கொழுத்த கடலோரக் காவல் படை கடற்கரை எங்கும் குவிந்துள்ளது இருப்பினும் இவை எவையும் மீனவர்களை மீட்க செல்லாதது தற்செயலானதா?

சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவரைச் சுட்டது இந்திய இராணுவம்…! இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அடித்து விரட்டிவருவதையும், கைது – சித்திரவதை செய்வதையும் படகுகளைச் சேதப்படுத்துவதையும், பல நூறு மீனவர்களைச் சுட்டுக் கொல்வதையும் மத்திய மாநில அரசுகள் இன்றுவரை தடுக்காததற்கு காரணம் கடல்பரப்பில் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கல்லவா?

விவசாயிகள் தற்கொலை, டெங்கு மரணங்கள், ஜி.எஸ்.டி. – நீட்- பணமதிப்பிழப்பு நடவடிக்கை – மழைவெள்ள மரணங்கள்… இது பிணங்களின் மீது நடக்கும் அரசு அதிகாரமல்லவா?

கார்டூனிஸ்ட் பாலா கைது – உரிமை கோரும் செவிலியர் மீது தடியடி, நீதிமன்ற மிரட்டல் – செயல்படாத கலெக்டரை எதிர்த்த காங்கிரசு எம்.எல்.ஏ.வுக்கு சிறை – நன்னிலம் ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்கு நாம் தமிழர் கட்சினர் சிறை. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு அனுமதி மறுப்பு –இது இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க பினாமிகள் கருத்துரிமைக்கு எதிராக நடத்தும் சர்வாதிகாரமல்லவா?

மக்களுக்கு எதிராக திரண்டு நிற்பது ஓக்கி புயலல்ல, இந்த அரசுக் கட்டமைப்பு…. என்ன செய்யப் போகிறீர்கள்?

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பாகலூர் – நாட்றாம்பாளையம்- அஞ்செட்டிப்பகுதிகள்
தொடர்புக்கு – 80152 69381- 99948 84923.


 

 1. Aggression of Srilankan Navy, forced our fishermen took west coast to face this tragedy. We witnessed the failure of forecasting of Meteorological Department coupled with the poor disaster management of Coast Guard, as usual.
  We Tamil society , especially who eat fish as their dish should come forward in protection of our brethren.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க